top of page

The Golden period

தென்னகத்தின் தாவீது ராஜா கலைஞர் மு. கருணாநிதி

பொற்கால சீமான்கள் :

பொற்கால மன்னன் தாவீது வாழ்ந்தார் என்று அறிவோம் கண்டதில்லை. ஆனால் நாம் கண்ட தமிழகத்தின் பொற்கால வேந்தன், தாவீதை நினைவில் நிறுத்தும் அளவிற்கு ஒப்புமை கொண்டவர். தமிழகத்தின் முடிசூடா மன்னர், தமிழ் அகமாக திகழ்ந்தவர், பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர் அவர்களே. தேவன் பகலை ஆள பெரிய சுடரை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார் காரணம் அப்பெரிய சுடர் பூமியின் மேல் பிரகாசிக்க உண்டாக்கப்பட்டது என்று வேதம் நமக்கு சொல்லுகிறது ஆதியாகமம் : 1 : 16-18, அனுதினமும் காலையில் கிழக்கில் தோன்றி மாலையில் மேற்கில் மறையும். தமிழகத்தில் ஒரு சூரியன் தெற்கில் தோன்றி அனைவர் உள்ளதையும் கொள்ளைகொண்டு அளப்பரிய ஆற்றலோடு ஓய்வின்றி உழைத்து தமிழையும் தமிழகத்தையும் செம்மைபடுத்தி தமிழகத்தையே கண்ணீரில் மிதக்கவிட்டு சமீபத்தில் கிழக்கில் மறைந்தது. இவருடைய வாழ்வு வேதத்தில் காணப்படுகின்ற பொற்கால அதிபதியாம் இஸ்ரவேலை நாற்பது ஆண்டுகாலம் ஆண்டு தன் மகனை அவருக்கு பின் அரியணைக்கு தந்த தாவீது ராஜாவை ஒத்திருப்பதை நாம் காணமுடியும்.

இஸ்ரவேல் நாடு :

இஸ்ரவேலர்கள் என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இன மக்களாவர். அவர்கள் கொண்ட தேசம் இஸ்ரவேல் நாடு எனப்படும். யாக்கோபு என்பவர் தான் இஸ்ரவேல் என்று அழைக்கபட்டார் காரணம் தேவனோடும் மனிதர்களோடும் போராடி வெற்றி கண்டவர், ஆதியாகமம் : 32 : 28. யாக்கோபு எனும் இஸ்ரவேலுக்கு பன்னிரண்டு பிள்ளைகள். இந்த பன்னிரண்டு பிள்ளைகளும் பன்னிரண்டு கோத்திரங்கள் எண்ணப்பட்டது. இவர்கள் அனைவரும் பன்னிரண்டு பகுதிகளில் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய மொழி எபிரேயம், ஆகவே அவர்கள் எபிரேயர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு ஒரு விசேஷம் என்னவென்றால் தேவன் இஸ்ரவேலர்களை தன்முடைய ஊழியர்களைக்கொண்டு நேரடியாக வழிநடத்திக்கொண்டு வந்தார். இவர்களில் விசேஷமானவர் சாமுவேல் தீர்க்கதரிசி. இஸ்ரவேலர்களுக்கு ராஜாங்கத்தின் முறைமைகளை வடித்தவர் இவர்தான் சாமுவேல் 10 : 25. இஸ்ரவேலருக்கு நீதிபோதனைகள் கூறி நீதி நியாயங்களை கடைபிடித்து நடக்கச் சொல்லி வந்தார். இஸ்ரவேலர்களின் முதல் அரசனாக சவுல் அபிஷேகிக்கப்பட்டார் சாமுவேல் : 10 : 1. சவுல், காரிய சமர்த்தனான இளம் பிராயத்து தாவீதை தன்னிடத்தில் சேர்த்துக்கொண்டார். தாவீது படிப்படியாக யுத்த வீரனாக, தளபதியாக, நம்பிக்கைக்குரியவராக வளர்ந்தார், உயர்ந்தார், சாமுவேல் : 18 :5. முன்றாம் இடத்தில் இருந்தவர், சவுலுக்குப்பின் இஸ்ரவேல் தேசத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தவர் தாவீது. தாவீதின் காலம் பொற்காலம்.

தமிழ் நாடு :

நமது மொழி தமிழ் ஆகவே நாம் அனைவரும் தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறோம் . தமிழர்கள் சமுகம் , தமிழ் இனம் என்று தழைத்து வளர்ந்தவர்கள் நாம். நமது பாரம்பரியம் திராவிடம் ஆகும். திராவிடப்பாரம்பரியத்தை வீறுக்கொண்டு எழச் செய்தவர் தந்தைப் பெரியார் அவர்கள். தந்தைப்பெரியார் அவர்களின் சீர்திருத்த சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு வளர்ந்தவர்கள் அண்ணா அவர்களும் கருணாநிதி அவர்களும் ஆவர். திராவிட முன்னேற்ற கழகம் உருவானப்போது அண்ணா அவர்களுக்கு உறுதுணையாய் இருந்து அவர் நம்பிக்கைக்கு பாத்திரமாய் மாறி, தம்பியாய் உயர்ந்தவர் கருணாநிதி அவர்கள். தமிழகத்தின் திராவிட பாரம்பரியத்தின் முதல் ஆட்சியின் முதலமைச்சராக அண்ணாதுரை அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். அண்ணா அவர்களின் அமைச்சரவையில் மூன்றாம் நிலையில் இருந்தவர், பின்னாளில் அண்ணா அவர்களின் மறைவிற்குப்பின் தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையை எட்டி பிடித்தவர் கலைஞர் அவர்கள்.

தாவீது ராஜாவும் கலைஞர் கருணாநிதியும் :

தாவிதும் கருணாநிதியும் பிறவி போராளிகள். இருவரும் அவரவர் துறையில் வல்லவர்கள். தாவீது வாத்தியகருவி வாசிப்பதில் வல்லவர், I சாமுவேல் 16 : 18, கருணாநிதி அவர்கள் எழுத்தில் வல்லவர். தனது பேச்சால் மக்களை கட்டிப்போட்டவர் கருணாநிதி அவர்கள், தாவீது தன் இசை ஆற்றலால் மனம் வசீகரிக்கும் திறன் பெற்றிருந்தார், Iசாமுவேல்16 : 23. இருவரும் தங்கள் இளம் பிராயத்திலேயே தங்கள் துறை திறமைகளை வளர்த்துக்கொண்டவர்கள். தாவீது இளம் பிராயத்தில் அரசியலுக்கு வந்தவர், I சாமுவேல் 16 : 13. கருணாநிதி அவர்கள் பதினான்கு வயதில் இந்தி எதிர்ப்புக்காக தம் தோழர்களை ‘போருக்கு போவோம் வாருங்கள் என்று ஒன்று திரட்டியவர்’. தாவீதுக்கு கல்லும் ஆயுதம் என்றால் கருணாநிதிக்கு சொல் ஆயுதம். தாவீது ஒரு யுத்த சமர்த்தன், வியுகம் அமைப்பதில் வல்லவன் தந்திரவாதியும் ஆவார். கருணாநிதி அவர்கள் ஒரு சிறந்த அரசியல் சாணக்கியர் என்று பேர் பெற்றவர்.

தாவீதுக்கு வாள் கருணாநிதிக்கு பேனா. அவர் இஸ்ரவேல் மக்களை ஆண்டார், இவர் தமிழர்களை ஆண்டார். இருவருக்கும் போராட்டமே வாழ்க்கை. போராடி வெல்வது இவர்களுக்கு வாடிக்கை. தோல்விகளை காணாதவர்கள். மனவலிமை மிக்கவர்கள். இளம் பருவத்தில் தாவீதுக்கு சவுல் ராஜா தன் குமாரத்தியை மணம்முடித்து கொடுப்பதாகச் சொல்லி கடைசியில் அவள் வேறொருவனுக்கு மனைவியான அனுபவம் உண்டு. கருணாநிதிக்கு சீர்திருத்த திருமணத்தை காரணம் காட்டி இளமையில் வாழ்க்கை தோல்வி கண்ட அனுபவம் உண்டு. தாவீது தன் குடும்பத்தில் எட்டாவதாக பிறந்து கடைக்குட்டி, கருணாநிதி அவர்கள் தன் குடும்பத்தில் முன்றாவதாக பிறந்த கடைக்குட்டி. இருவரும் நட்பை போற்றி வாழ்ந்தவர்கள்.

இருவருக்கும் உள்ள பொருத்தங்கள் பட்டியல் இன்னும் நீள்வதை நாம் பார்க்கமுடியும். இருவருடைய வாழ்க்கையும் ஒரு சீராய் இருந்ததில்லை. மேடு பள்ளங்கள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாழ்க்கையோடு வனாந்திர வாழ்க்கையும் அனுபவித்தவர்கள். துரோகங்கள், ஏமாற்றங்கள், கண்ணீர் கவலை, வேதனைகள், துயரங்கள், போராட்டங்கள், தோல்விகள் என்று இவை அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிக்கண்டவர்கள். இவர்கள் வாழ்கையில் விரோதிகளுக்கு பஞ்சம் என்பதற்கு பஞ்சமில்லை. தனிவாழ்க்கை, குடும்பவாழ்க்கை, குடும்ப சுழல் மற்றும் பிள்ளைகள் அனைத்தும் இருவர் வாழ்க்கையிலும் அனேகமாக பொருந்தி வருவதை நாம் காணமுடியும். இருவருடைய இறுதி காலமும், அவர்கள் மறைவும் ஒன்று போல் அமைந்தது ஓர் அதிசயம் தான், ஆனால் உண்மை.

பொற்காலத்தின் மிச்சமும் தமிழகத்தின் எழுச்சியும் :

மாத்திரமல்ல இதற்குள்ளே ஒரு சூட்சமமும் மறைந்திருக்கிறது என்பதையும் நாம் அறிந்துக்கொள்ளமுடியும். வேதம் நமக்கு தெளிவாகச் சொல்லுகிறது தாவீது ராஜாவின் காலம் இஸ்ரவேலர்களுக்கு பொற்காலம் என்றும், அவரை தொடர்ந்து அவருடைய மகன் அரியணை ஏறினார் என்பதும் ஓர் சரித்திர சான்றாகும். தாவீதின் மகனாகிய சாலமோனின் ஆட்சியில், யுதா இஸ்ரவேலில் இளைப்பாறுதலும், சமாதானமும் இருந்தது ( I இராஜாக்கள் : 4 : 25 ). சாலமோன் அரசர் the Great King Solomon என்று போற்றப் பட்டவரின் காலம் சமாதானம் நிறைந்த காலமாக கருதப்பட்டது. இஸ்ரவேல் மக்கள் வாழ்க்கையில் சாலமோனின் நாற்பதாண்டு கால ஆட்சியில் சமாதானம் நிலவியது என்று வேதம் நமக்கு சொல்லுகிறது, என்றாலும் சாலமோனின் இறுதி காலத்திலேயே விழ்ச்சி ஆரம்பமானதை என்பதையும் பார்க்கமுடியும், அதற்கு காரணம் சாலமோனின் நிலைபட்டால் வந்த வினை என்பதும் வேதம் நமக்கு தெளிவுப் படுத்துகிறது.

இவை அனைத்தும் நமக்கு கற்றுத்தரும் படிப்பினைகளாகும். தாவீது தவறிழைத்தார் 2 சாமுவேல் 12 : 14. ஆகவே தன் ராஜாங்கத்தை இழந்து அதனால் பயந்து வனாந்திரத்திற்கு ஓடினார் என்பது நிஜம், 2 சாமுவேல் : 15 : 30. ஆனால் பின்னாளில் தாவீது தன் வாழ்க்கையை சீராக்கி தவறுகளை தவிர்த்து வாழ்ந்தார். அதன் காரணமாக தாவீதும் அவர் ராஜ்யமும் தழைக்க ஆரம்பித்தது. தழைத்த தாவீதின் ராஜ்யம் தலைமுறைகளை காணும் என்னும் உத்தரவாதத்தையும் பெறக்கூடியதாக மாறியது, Iசாமுவேல்: 7 : 12. இந்த உத்தரவாதத்தின் படி சாலமோன் தன் தந்தைக்குப்பின் அரியணையை பெற்றார்.

காரியம் இப்படி இருக்க செய்ய வேண்டுவது இன்னது என்பது அறிந்து செயல் படுவது நமக்கு வெளியாராங்கமாய் இருக்க, செய்ய தக்கவை எவைகளோ அவைகளை நாம் செய்வோம். குறிப்பாக செய்ய தகாதவைகளை தவிர்ப்போம், தேவன் நன்மையானவைகளை நமக்கு தருவதற்கு சித்தமுள்ளவராய் இருக்கிறார். அறியாமல் இழந்த நன்மைகள் ஏராளம். ஆகவே இனியும் இழப்பது நன்றன்று,

நன்றி, தேவனுக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்.

சுவி.பாபு தா தாமஸ்.

­­­Evg.Babu.T.Thomas, Founder President, Our Shepherd’s Voice Foundation, 5/43, Teachers Colony, Ammoor Road, Ranipet, Vellore Dist,Tamil Nadu, India https://ourshepherdsvoice.wixsite.com/mysite +91 9842323428, 8056700213, 9486863428, Email Id : ourshepherdsvoice@gmail.com.

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page