Political Game
சட்டம் ஒரு விளையாட்டு பொம்மை !
சட்டம் சட்டை பையில். சட்டம் வளையும், எப்படியும் வளைக்கலாம். சட்டம் முகத்துக்கு முகம் மாறும், பச்சோந்தி போன்றது. சட்டத்திற்கு பேதம் உண்டு. சட்டம் வறியவனுக்கு எதிரி, உள்ளவனுக்கு தோழன். இது சட்டம் நமக்கு தந்த சமீபகால அனுபவத்தின் வெளிப்பாடு.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு 18 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணம், அரசியல் அதிகாரம் என்று அனைத்தையும் கடந்து பயணித்த ஒரு பெரிய வழக்கு. ஆட்சி அதிகாரம், நீதிக்கு பங்கம் அளிக்கும் என்று வேறு மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு நடத்தப்பட்டது, என்றாலும் அதையும் சாதகமாக்கி காலம் கடத்த பல்வேறு பிரயத்தனங்கள் செய்யப்பட்டதையும் தாண்டி தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை, நுறு கோடி அபராதம் என்று தீர்ப்பு கூறி சம்பந்தப்பட்டவரை சிறையில் அடைத்தது. அப்போது அவர் மாநிலத்தின் வலிமையான முதல்வர்.
இந்த தீர்ப்பு ஜனநாயகத்தின் மேலும் நீதி துறை மீது மிகப்பெரிய நம்பிக்கையையும் மரியாதையையும் அளித்தது. ஆனால் இது வெகுகாலம் நீடிக்கவில்லை. நீதிக்கு தலை வணங்கு எனும் வழக்கத்தை விலக்கி நீதிக்கு தலை குனிவு தீர்ப்பை வழங்க முன்வந்தார் ஓய்வு பெரும் நீதிக்கு அதிபதி. தன்னுடைய வாழ்வின் கடைசி தீர்ப்பாக குற்றவாளியை விடுவித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பின் விளைவு குற்றவாளி மீண்டும் மாநில முதல்வர் அரியணை ஏறினார்.
சட்டப்போராட்டம் கர்நாடக மாநிலத்தில் நடப்பதால் தார்மீக அடிப்படையில் எதிர்பார்த்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசித்தபோது பலர் எதிர்த்தனர். சிலர் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்றும் ஆலோசனை வழங்கினர். இங்கேதான் அரசியல் சித்து விளையாட்டை பார்க்கமுடியும். பெரும் முதலைகளின் ஆதிக்கம் இங்கே பட்டவர்த்தனமாக பார்க்கமுடியும். உச்சநீதி மன்றம் நேற்று சொன்னதை அன்றே நிறைவேற்றி இருக்கமுடியும். அப்படி செய்திருந்தால் வழக்கும் அதின் பலனும் வழக்கு சம்பந்தப்பட்டவரோடு முடிந்திருக்கும்.
ஆனால் அரசியல் ஆதாயம் கருதி மேல்முறையீடுக்கு உச்சநீதிமன்றம் மன்றம் அணுக அனுமதிக்கப்பட்டது. உச்சநீதி மன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. பேரம் படியாமல் போகவே தீர்ப்பின் தீவிரம் தெரிந்து நிலை குலைந்து உயிர் விட்டார் முக்கிய குற்ற்றவாளி. அரசியல் சதுரங்கத்தில் காய்கள் நகர்த்தப்பட்டன. கட்சியும் ஆட்சியும் கைமாறும் போக்கை உணர்ந்த மேலிடம் தீர்ப்பை வெளியிட்டு ஆதிக்கம் கைமாறாமல் பார்த்துக்கொண்டது.
இப்போது ஆட்சியும் கட்சியும் சிந்தாமல் சிதறாமல் விழுங்க வேண்டி சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார் எனும் உச்சநீதி மன்ற தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. இது மட்டுமல்ல ஊழல் எதிர்ப்பாளர் என்ற பிம்மத்திற்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ளுவதும் தான் இந்த தீர்ப்பு நமக்கு சொல்லும் செய்தி. ஆக மக்கள் வரி பணத்தை மீட்பது நோக்கமல்ல மாறாக அரசியல் சூதாட்டம் தான் பிரதானம். ஜெயலலிதாவின் சொத்துகள் பறிமுதல் செய்வதை தடுப்பத்தின் முலம் பெரும் கொள்ளையர்கள், ஊழல் வாதிகள் ஆதாயம் அடைவதோடு சிறு திருடர்கள் பெரிய அளவில் தங்கள் லீலைகளை காட்ட வழிவகுப்பதே நோக்கம்.
எல்லாம் சரி இத்துணை ஆட்டமும் இதற்கு தானா? இந்த தர்ம யுத்தம் நடக்க காரணம் வேறு ஒன்றும் இல்லை, மக்களுக்கு வேலை கொடுக்கவேண்டும், மக்களுக்கு பொழுது போக்கு அம்சம் வேண்டும் என்பதற்காக தான் இத்துணை பெரிய நாடகம் நடத்தப்பட்டதே ஒழிய வேறல்ல. உலகம் ஒரு நாடக மேடை அதில் இவர்களெல்லாம் நடிகர்கள் கதை வசனகர்த்தாக்கள். நாமெல்லாம் ரசிகர்கள். வேஷம் கலைத்து வேறு பத்திரங்களுக்கு தயாராகிவிட்டார்கள் நாமும் தயாராகிவிடுவோம் வேறு நாடகம் பார்க்க. விதி வலியது. சுபம்,
சுவி.பாபு தா தாமஸ்