Vote is so powerful - Don't sell it
போதும் ! இனியும் பூமி தாங்காது !!
பணத்திற்கு ஓட்டு, காலகாலமாக தொன்று தொட்டு பரவி வரும் ஒரு கொள்ளை நோய். இந்த நோய் குடியாட்சிக்கு ஒரு சவால். பேய்க்கு தப்பி நாய்க்கு இரையான கதையாய் அடக்குமுறை அடிமைதனத்திலிருந்து விலகி கவுரவ அடிமை வாழ்விற்கு இந்தியா தன்னை பழக்கிக்கொண்டது. முடியாட்சியின் கீழ் அடிமை பட்டுக் கிடந்த இந்தியாவை பல்வேறு அடக்குமுறைகளையும் கடந்து, சொல்லொன்னா துயரங்களையும் தாங்கி பல தியாகங்கள் புரிந்து பெற்றது தான் சுதந்திரம். நம் தியாக செம்மல்கள் தியாகத்தை பறைசாற்றி நிற்கிறது அந்தமானில் இருக்கும் சிறைசாலை.
இவைகளையெல்லாம் மறந்து, நோக்கத்தை துறந்து நோட்டுக்கு ஓட்டு கலாச்சாரத்தால் பணம் படைத்தவன் குடும்ப சொத்தாக ஆட்சி கைமாறி மாறிவரும் அவலநிலை இன்று. ஒருகாலத்தில் வறுமைக்கு கைநீட்டிய நிலையிலிருந்து வழுவி கொடுக்கிறார்கள் வாங்குகிறோம் என்று வெட்கம் இல்லாமல் பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதற்கும் ஒரு படி மேலே போய் மக்கள் பணம் தானே கொடுக்கிறார்கள் என்று ஒரு சாரரும், கோடிகோடியாய் கொள்ளை போகப்போகிறது வந்தவரைக்கும் லாபம் என்னும் நொண்டி சாக்கு சொல்லி ஒரு சாரரும் தங்கள் தவற்றை நியாயப்படுத்தும் போக்கு பெருகிவிட்டது.
ஆனால் இந்த சமூகம் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதை யாரும் உணராதது பெரிய வேதனை. காசின் மீது குறி வைத்ததால் சுயம் இழந்து, சிந்தனை இழந்து, உணர்வு இழந்து தனக்கு தானே அடிமை சாசனம் எழுதி கொடுத்த சூழலில் நம் சமூகம் சிக்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு நாம் ஆங்கிலேயர்களிடமே அடிமையாக இருந்திருக்கலாமே. இதற்காகவா நம் சுகந்திரப் போராட்டத் தியாகிகள் பாடுபட்டார்கள். அவர்கள் பாடுபட்டு வாங்கி கொடுத்த சுதந்திரத்தை சில காகிதங்களுக்காக தாரை வார்ப்பது தியாகிகளுக்கு நாம் செய்யும் துரோகம் இல்லையா?
நோட்டுக்காக ஓட்டை விற்ப்பது குற்றமானால் நோட்டுக்காக ஓட்டை விலை பேசுவதும், வாங்குவது துரோகமில்லையா? வேட்பாளர்கள் மீது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? பணம் பறிமுதல், தேர்தல் ஒத்திவைப்பு இவைகளே. ஆனால் அதே வேட்பாளர் மறு தேர்தல் வாக்கு பதிவில் களம் காண்பார், புது உக்திகளை கையாள்வார், வெற்றிப்பெறுவார், ஆட்சி, அதிகாரம் வாரிசு அரியணை இதுவே தொடர்கதை. லஞ்சம், ஊழல் என்னும் புதுக்கதை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலுக்காக நாட்டு மக்களின் உரிமைகளை மறுத்து, வரிபணத்தை ஏய்த்து நாட்டை சுரண்டி, துண்டாடும் அவலக்கதை.
தேர்வு எழுதும் மாணவனின் தவறான அணுகுமுறை அவன் மறு தேர்வெழுத முடியாமல் தன் வாழ்வை இழக்க வரிந்துகட்டும் அரசியலமைப்பு சட்டம், FIR பதியப்பட்ட ஒருவரால் அரசு வேலை வாய்ப்பை தடுக்கும் அரசியலமைப்பு சட்டம், வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா காரணமாக தேர்தல் தள்ளிவைப்பு வரைக்கும் காரணமான வேட்பாளர் மீது வேட்பாளர் மறுப்பு நடவடிக்கை இல்லை, மாறாக அவர் தொடர்ந்து களத்தில் நிற்க முடிகிறது வெற்றியும் பெறுகிறார் ஆட்சி அதிகாரமும் கைவசமாகிறது இது இப்படி? ஓட்டுக்காக பணம் வாங்கினால் வாக்காளர்கள் மீது கடும் நடவடிக்கை என்கிறது தேர்தல் ஆணையத்தின் விளம்பரம், ஆனால் ஓட்டுக்காக பணம் கொடுத்தால் வேட்பாளர் மீது கடும்நடவடிக்கை எனும் விளம்பரம் மட்டும் இல்லை.
போதும், பூமி தங்காது. பூமி வெகுண்டாள் நாம் தாங்கமாட்டோம்.
நன்றி,
சுவி. பாபு T. தாமஸ்