Christianity is the way of Life
கிறிஸ்தவம் மதமா ? மார்க்கமா ?
கிறிஸ்தவம் மதமா ? மார்க்கமா ? என்கிற கேள்வி அநேகர் மனதில் இன்னும் பதில் தெரியாமல் தளும்பிக்கொண்டு த் தான் இருக்கிறது. அரை குடம் தான் தளும்பும் என்பார்கள். இம் முதுமொழிக்கேற்ப இன்று வரை இச்சமுகம் மேற்கூறிய கேள்விக்கு பதில் தெரியாமல் தவிக்கிறதை உணர முடிகிறது. இது தவறில்லை என்றாலும் காலத்தை கணக்கில் வைக்கும் போது மனதின் வலியை மறைக்க முடியவில்லை. இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் கிறிஸ்தவ மார்க்கத்தை போதிக்கிறவர்களுக்கே பதில் தெரிய வில்லை என்பது வருத்தமளிக்கிறது. கவலை அளிக்கிறது.
சமீபத்தில் நடந்த மதச்சார்பற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட ECI திருசபைகளின் பிரதம பேராயர் மதிப்பிற்குரிய எஸ்ரா சற்குணம் ஐயா அவர்கள் தான் ஒரு மதத்தை சார்ந்தவர் என்பதை மிக சர்வ சாதரணமாகவே பதிவு செய்தார்கள் என்றால் அவர் சார்ந்திருக்கும் மற்றும் அவர் போதிக்கும் ஏன் அவர் மேய்ப்பனாயிருக்கும் கிறிஸ்தவம் ஒரு மதம் என்று அவர் நம்புகிறார் என்பது வேதனைக்குரியது மாத்திரமல்ல கண்டனதிற்குரியதும் ஆகும்.
இப்படி கிருஸ்துவ மார்க்கத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ஒருவர் கிறிஸ்தவம் மதம் என்று நம்புவாரானால் அடித்தள விசுவாசியின் நிலை மற்றும் நாம் சார்ந்திருக்கும் சமுகத்தின் பார்வை சொல்லி தெரிய வேண்டுவதில்லை. இப் பரிதாபகரமான சூழ்நிலையில் ஐயா அவர்கள் மாத்திரமல்ல பெரும்பாலானவர்கள் சிக்கி இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும். அப்படியானால் அவர்களுக்குள் இருக்கும் வார்த்தையும் அந்த வார்த்தையை போதிக்கும் விதமும் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் கிறிஸ்து இப் பூமிக்கு வந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இந்திய மண்ணில் கிறிஸ்தவம் வேரூன்றாமல் போனதற்கு இதை விட வேறு காரணம் என்ன இருக்க முடியுமா ?
நம் புரிதலில் தெளிவு பிறக்கவில்லை என்றால் நாம் சமூதாயத்தில் சிக்கி கரைந்து மறைந்து போய் விடுவோம் என்பதே உண்மை. நாம் சத்தியத்தை அறிவதும் சத்தியத்தையே போதிப்பதுமே சமூக மறுமலர்ச்சிக்கு வித்தாக அமையும். நாம் உணர்வற்றவர்களாக மேலும் தொடர்வோமானால் கிறிஸ்துவின் வருகையில் தாலந்தை புதைத்து வைத்தவன் அடைத்த பங்கை அடைவோம் என்பது திண்ணம். மாத்திரம் அல்ல கிறிஸ்துவை சமுதாயம் ஏற்க்க மறுப்பதற்கு நாமே காரணம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். ஆக நாம் மாறுவோம் அப்போது மாற்றம் நிச்சயம் வரும். ஆமென்.
சுவி. பாபு T தாமஸ்