Mother Tongue a mankind's birth right
இந்தி திணிப்பு என்பது ஒரு மாயை !!!
உண்மையில் இந்தி திணிப்பு என்பது ஒரு மாயையே. இது வேலையத்தவர்கள் செய்யும் வேலை, புரியாதவர்களின் கபளீகரம். முதலாவது மொழி என்றால் என்ன ? ஒருவர் உணர்வை மற்றவர் அறிய உதவும் வழியே மொழி. சைகை, சமிக்சை போன்ற வழிகளாலும் ஒருவர் உணர்வை மற்றவர் உணர செய்ய முடியும். ஆனால் மொழி அளவிற்கு அத்துணை துல்லியமாக, அழகாக, ரம்மியமாக ஒருவருக்கு உணர்த்த வேண்டியதை தெரிவிப்பது மாத்திரமல்ல அவர் அக்காரியத்தை அல்லது சொல்ல நினைத்ததை, உணர்த்த விரும்பியதை அவர் அறிந்துக்கொண்டார், புரிந்துக்கொண்டார் எனும் இருவழி செயலை ஒரு மொழியால் மாத்திரமே செய்து முடிக்க முடியும்.
அப்படிப்பட்ட மொழிக்கு நடக்கும் அக்கப்போரை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. தாய்மொழி என்பது அவரவர் பிறப்புரிமை. ஒருவரின் புரிதல் என்பது தாய்மொழியை சார்ந்ததாகவே இருக்கும், காரணம் தான் பிறந்ததிலிருந்து கேட்டு, பேசி வளர்ந்ததால் ஆனப்பயன். ஆகவே அவருக்கு அம்மொழி தந்த பரிச்சயம் மிக இயல்பாக ஒன்றை புரிந்துக்கொள்ளவும் இலகுவாக அறிந்துக்கொள்ளவும் முடியும். எனவே தாய்மொழி கல்வி ஒருவரின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஒரு சமுதாயம் 100% கல்வி அறிவு பெற்றதாக மாறுவதற்கு தாய்மொழி வழி கல்வியால் மட்டுமே முடியும். ஒருவர் எண்ணத்தை அடுத்தவர் தெரிந்துக்கொள்ளுவதற்கு மொழி இன்றியமையாதது போல சமுதாய மேம்பாட்டிற்கு கல்வி அவசியமாகிறது. இந்த அவசியமான இன்றியமையாத கல்வியை அனைவரும் பெறவேண்டுமானால் தாய்மொழி வழியே சிறந்தது.
இப்படி மேம்பட்ட சமுதாயம், வளர்ந்த சமுதாயமாக மாற வேண்டுமானால் எல்லைகளை கடந்த அறிவும் ஞானமும் மிக அவசியம். இன்றைக்கு உலகளாவிய மொழியாக இருப்பது ஆங்கிலம். பட்டி தொட்டிகளிலும் ஆங்கிலத்தின் தாக்கம் இருப்பதை பார்க்கமுடியும். இதற்க்கு என்ன காரணம் என்றால் அவர்களது பறந்து விரிந்த ஆட்சி என்று நாம் சட்டென்று சொல்லிவிடுவோம். ஆனால் உண்மை அதுவன்று. நாம் நம் தமிழகத்தை எடுத்துக்கொள்ளுவோமானால் ஆங்கிலேயர்கள் தமிழகத்தில் அடியெடுத்து வைத்த உடன் செய்த முதல் காரியம் அவர்கள் தமிழை கற்க எடுத்த முயற்சி. அவர்கள் தமிழை நேசித்த விதம், தமிழுக்கு ஆற்றிய தொண்டு, தமிழை வளர்க செய்த அனைத்தும் வரலாறு சான்று பகருகிறது. இந்த அரிய செயலே தமிழகத்தில் எதிர் வினையற்றியது. ஒரு ஆங்கிலேயர் தமிழை கற்க முடியுமானால் ஏன் ஒரு தமிழனால் ஆங்கிலம் பயில முடியாது எனும் எழுச்சியே ஆங்கிலம் தழைக்க காரணமாயிற்று.
இன்றைய சூழலில் தாய்மொழிக்கு அடுத்த நிலையில் பொது மொழியாக ஆங்கிலம் என்றானபிறகு முன்றாம் மொழி ஒருவரின் தேவை சார்ந்ததாகவே இருக்கமுடியும். இதற்கு ஈடுகொடுக்கவே மத்திய கல்வி பாடத்திட்டத்தில் முன்றாம் விருப்ப மொழியாக இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,பிரான்சு, ஸ்பானிஷ், சீனா, ஜப்பானிய என்று பிற பல மொழிகளில் எதாகிலும் ஒன்றை விருப்ப பாடமாக தெரிவு செய்து படிக்கும் வழக்கம் வெகு காலமாக உண்டு. ஒருவேளை மேற்படிப்பிற்காகவோ, வேலை வாய்ப்பு முன்னிட்டோ இந்த முன்றாம் மொழி தெரிவு அவருக்கு பயனுள்ளதாக அமையும்.
இப்படிதான் மொழி கொள்கை அமையவேண்டுமே தவிர தான்தோன்றி தனமாக எதையோ ஒன்றை அறிவிப்பாக வெளியிடுவதும், பின் மறுப்பதும், மறைமுகமாக திணிப்பதும் என்கிற வீண் வேலைகளை தவிர்த்து மக்களுக்கான ஆட்சியாக செயல் படுவதில் கவனம் வைத்தால் நாட்டிற்கும் நல்லது, ஆட்சியாளர்களுக்கும் நல்லது. ஒரு குடும்பத்தில் ஐந்து அல்லது ஆறு பிள்ளைகளிருந்தால் அத்துணை பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களை உணர்ந்து செயல் பட்டால் தான் குடும்பம் நன்றாக இருக்கும். அப்படி இல்லாமல் எவர்விருப்பதையும் சாராத சர்வதிகாரி போக்காகவோ அல்லது ஒருசிலரை சார்ந்து செயல் படுவதால் பாராபட்சமான போக்காக எண்ணி குடும்பம் தான் தன் நிம்மதியை இழந்து சிதறிவிடும்.
உயிர் பிரச்னை பல இன்றைக்கு தீர்வுக்காக காத்திருக்க தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் வழிவகைகளையே மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். இந்தியா வல்லரசாக திகழ வேண்டுமானால் பிரிவினை வாதத்திற்கும் பிரித்தாலும் சூழ்ச்சிகளை கைவிட்டால் மாத்திரமே முடியும். ஒன்று படுவோம் ஒற்றுமைக்கு வழி காண்போம்.
வாழ்க தமிழ் ! வளர்க இந்தியா !! ஓங்குக நம் ஒற்றுமை !!!
சுவி. பாபு T தாமஸ்