Set right the ministry path !
அவருடைய நாமத்தின் மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே,
மத்தேயு : 12 : 21
ஜாதிகள் விசாரித்து கேட்பார்கள், அவருடைய வேதத்திற்கு தீவுகள் காத்திருக்கும் என்றும் அவருடைய நாமத்தின் மேல் நம்பிக்கையாய் இருப்பார்கள் என்றும் வேதம் நமக்கு சாட்சி பகறுகிறது. ஆனால் நாம் வாழும் உலகில் சூழ்நிலை வேறாக இருப்பதை அன்றாடம் பார்த்துவருகிறோம். அநேக நேரங்களில் ஊழியர்களாகிய நாம் விரக்தி அடைகிறோம், சோர்ந்து போகிறோம். தேவனுடைய ஊழியம் அறியாத மக்களை சென்றடையவில்லை என்றும் ஏங்குகிறோம். மாத்திரம் அல்ல எதிர்ப்பும் பரவலாக பெருகிவிட்டது என்கிற அங்கலாய்ப்பும் நம்மை பெருமளவில் அலைகழிக்கிறது என்பதும் நாம் அறிந்ததே. தேவனுடைய வார்த்தையை விதைக்க வேண்டிய நாம் சூழ்ந்திருக்கும் காலச் சுழல் நம்மை பெருமளவில் தடுப்பதாகவே உணருகிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல என்பதுதான் நிதர்சனம். தேவ ஆவியானவர் நமக்கு உதவி செய்துக்கொண்டு இருக்கிறார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையும் பக்தியும் மக்கள் மத்தியில் வளரவும் விரிவடையவும் செய்கிறது என்பதற்கான சான்று சமீபத்தில் வெளியான உரையாடலின் ஊடாக அறிந்துக்கொண்டோம். அப்பொழுது வேத வாக்கியங்களின் ஒரு உறுப்பாகிலும் அழிந்துபோவதில்லை எனும் வேதவாக்கியத்தை நினைவு கூர்ந்து தேவனை ஸ்தோத்தரித்தேன்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்கள் தன்னுடைய உரையாடலில் இப்படி கூறினார் “ இயேசு நாதரைப் போல் நல்லவர் உலகில் ஒருவர் இல்லை”. மேலும் அவர் கூறுகையில், “ இயேசு நாதரை எந்த காலத்தில் இந்துக்கள், தமிழர்கள் ஏற்க்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
ஆக இதன் மூலம் நாம் அறியும் செய்தி என்னவெனில் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை யாரும் ஏற்க்க மறுக்கவுமில்லை அவரை எதிர்க்கவுமில்லை என்பது தெளிவு. அப்படியானால் நாம் செய்ய வேண்டுவது இன்னது என்பதை உணரும் தருணம் இது. நாம் நம் பயணத்தை சரியாக திட்டமிடுவோம் இலக்கை விரைவில் எட்டி பிடிப்போம்.
நன்றி, தேவன் தாமே நம் யாவரையும், ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக, ஆமென்.
சுவி. பாபு T தாமஸ்