City of Refuge
ராஜ ராஜ சோழன் காலத்து கல்வெட்டில் குற்றச் சேரி பகுதி குறித்த தகவலும் – பரிசுத்த வேதாகமத்தின் விளக்கமும்.
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்று போட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப் பட்டிணங்களாகச் சில பட்டிணங்களைக் குறிக்கக் கடவீர்கள். எண்ணாகமம் 35 : 11
ராஜ ராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுக்களில் காணப்பட்ட சேரிப் பகுதிகளில் குற்றச் சேரி பகுதி என்றொரு பகுதியும் இருந்ததாக கூறப்படுகிறது. அதில் குற்றச் செயலில் ஈடுப்பட்டவர்கள் என்று கூறி கொடுமைப் படுத்தப் பட்டார்கள் என்று ஒரு சாரர் கூறி வருவதை அறிந்தோம். உண்மையில் அக்காலக் கட்டத்தில் நடந்தவற்றை துல்லியமாக கணிப்பது கடினம் என்றாலும் கிடைக்கும் சான்றுகள் மூலம் சற்றேறக்குறைய அக்கால வழக்க முறைகளை கணித்து ஒரு முடிவுக்கு வர முடியும். அல்லவென்றால் அனுமானங்களின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுக்க நேரிடும்.
பொதுவாக சோழர்கள், உலக சாம்ராஜ்யங்களில் முன்னணி ராஜ்யங்களில் ஒன்றாக கருதப்படுபவர்கள், காரணம் அவர்கள் ஆட்சிமுறை. ஆகவே தான் நீண்ட நெடிய காலமாக சுமார் 1940 ஆண்டுகளையும் கடந்து பல தலைமுறைகளாக தொடர்ந்து தமிழ் மண்ணை ஆண்டது மட்டுமல்லாது கடல் பல கடந்தும், இமயம் தொட்டும் அவர்கள் ஆட்சி பரந்து விரிந்திருந்தது. சோழர்கள் 400 BC க்கு பிந்தைய காலக்கட்டத்தில் ஆட்சிப்புரிந்தவர்கள் என்பது வரலாற்றுச் சான்று. ஆகவே சோழர்களுக்கு முன் சுமார் 1000 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் அதாவது 1447 BC வாக்கில் தேவனால் மோசே முலமாக அறிவிக்கப்பட்டு 1400 BC காலக்கட்டத்தில் இஸ்ரேல் மக்களால் வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டதான அடைக்கலப்பட்டிணங்களின் நோக்கமே சோழர்கள் கால வழக்கத்தில் இருந்த குற்றச் சேரி பகுதிகளாக இருக்கமுடியும்.
இஸ்ரேல் மக்கள் எகிப்து தேசத்தில் அடிமைகளாக மாறி இருந்தார்கள், காரணம் அவர்கள் தேவனை மறந்து வாழ்ந்து வந்தார்கள். நெருக்கத்தின் உச்சத்தை எட்டினபோதோ தேவனிடத்தில் முறையிடத் துவங்கினார்கள். தேவன் இஸ்ரேல் மக்களின் கூக்குரலுக்கு செவி மடுக்கினார், அவர்களை மீட்க ஒரு இரட்சகன் மோசேவை தேவன் எகிப்திற்கு அனுப்பினார்.
அவ்வாறு மோசே மூலமாக விடுவிக்கப்பட்ட இஸ்ரேல் மக்கள் எகிப்து தேசத்தை விட்டு புறப்பட்டார்கள். தேவன் அவர்கள் முன்னோர்கள் சஞ்சரித்த யோர்தானுக்கு இப்புறத்திலும் யோர்தானுக்கு அப்புறமான கானன் தேசமாகிய இன்றைய பாலஸ்தீனா பகுதிகள் மற்றும் இன்றைய இஸ்ரேல் தேசத்தையும் சொந்த தேசமாக இஸ்ரேல் மக்களுக்கு கொடுக்க வனாந்திர வழியாய் வழிநடத்திச் சென்றார். அப்போது தேவனால் அருளப்பட்ட கட்டளைகளும் முறைமைகளும் பிராமாணங்களும் மோசே மூலமாக இஸ்ரேல் மக்களுக்கு வழங்கப்பட்டது. அப்படி இஸ்ரேல் மக்களாகிய பன்னிரண்டு கோத்திரத்தார் அப்பட்டிணங்களை சுதந்தரிக்கையில் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களில் ஒன்றான அடைக்கலப்பட்டிணங்களை குறித்த கட்டளும் உண்டு. அதென்னவென்றால்,
யோர்தானுக்கு இப்புறத்தில் முன்று பட்டிணங்களையும், கானன் தேசத்தில் முன்று பட்டிணங்களையும் கொடுக்கவேண்டும் அவைகள் அடைக்கலப்பட்டிணங்களாம். எண்ணாகமம் 35 : 14
கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டிணங்களும் இஸ்ரேல் புத்திரருக்கும் மற்றும் அந்நிய மக்களுக்கும் அடைக்கலப் பட்டிணங்களாக இருக்க ஒதுக்கப்பட்டவை. காரணம் பகை இல்லாமல் அல்லது எந்த ஒரு முகாந்தாரமோ, நோக்கமும் இல்லாமல் தவறுதலாக ஒருவர் உயிருக்கு ஆபத்தை விளைவித்தவர்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டவை தான் இந்த அடைகலப்பட்டிணங்கள் என்பவைகள். ஆகவே இந்த அடிப்படையிலேயே குற்றச் சேரி பகுதிகளும் அமைந்திருக்கவேண்டும். தவறிழைக்காத்தவர்களை காக்கும் ஒரு உயரிய எண்ணங்களோடு உருவாக்கப்பட்ட திட்டகளுக்கு காரணமானவர்களை நிதானித்து ஆராயாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவுக்கு வராமல் சரியாய் நிதானிப்பதே சாலவும் நன்று. எனவே குற்றச்சேரி பகுதியின் பின்னணியை ஆராய்வதற்கு ஏதுவாக பரிசுத்த வேதாகமத்தில் காணப்பட்ட ஆதாரத்தை முன்வைப்பது நலம் என்று கருதியே இந்த தகவலை வெளியிடுகிறோம், நன்றி.
சுவி. பாபு T தாமஸ்