top of page

Pinji Lake - Ranipet

இராணிப்பேட்டை பிஞ்சி ஏரியின் அவலம் ?

பருவ மழை பொய்த்து வருகிறது, நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்தை தொட்டுவிடும் தொலைவை எட்டிக்கொண்டிருக்கிறது. அத்தியாவசியமான நீர், கழிவோடு கலந்து நிலமும் பாழ்பட்டு போனதால் இராணிப்பேட்டை எனும் சரித்திரப் பின்னணி கொண்ட நகரம் வாழ்வதற்கு தகுதியற்ற நகரப்பட்டியலில் இடம் பிடித்து அழிவின் விளிம்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது.

எச்சரிக்கை மணியடித்தும் மாற்றத்திற்கான தேடலில் கவனத்தை செலுத்துவதற்கு நகர வாழ் மக்களுக்கு ஏனோ நாட்டமில்லை. வழக்கம், பழக்கமாகி போன காரணத்தாலோ ஏனோ நீராதாரத்தை பெருக்கிக் கொள்வதில் முனைப்புக்காட்டாமல், மேலும் பாழ் படுவதை தடுக்கும் எந்த முயற்சியும் நகரத்தில் இல்லாதது வருத்தமளிக்கிறது.

பெருமை மிகு நம் இராணிப்பேட்டை :

இராணிப்பேட்டை முன்னணி தொழில் நகரங்களில் ஒன்று என்றாலும் மற்ற தொழில் நகரங்களுக்கில்லாத பல சிறப்புக்களை கொண்ட நகரமாக இந் நகரம் இன்றளவும் திகழ்ந்து வருகிறது. 1906 ல் தொழில் பேட்டையாக உருவெடுக்க துவங்கியது முதல், பல்வேறு பிரபல முன்னணி தொழில் நிறுவனங்கள் இராணிப்பேட்டைத் தொழிற்ப்பேட்டையில் அமைந்திருக்கின்றன. எனவே அந்நிய செலவாணி வருவாயில் பெரும் பங்களிப்பை வழங்குவதோடு வெளி நாட்டவர், வெளிமாநிலத்தவர் பலர் விஜயம் செய்யும் நகரமாகவும் திகழ்ந்து வருகிறது.

இராணிப்பேட்டையின் இரு கரங்களாக பாவிக்கப்படும் ஆற்காடு மற்றும் வாலாஜாப்பேட்டை ஆகிய முன்றும் இணைந்த முத்தான முன்று நகரங்களும் சரித்திரப் புகழ் பெற்றவையாகும். தென் இந்தியாவின் முதல் புகைவண்டி வழி தடம் அமைத்து இயக்கிய பெருமை கொண்ட நகரம். மாத்திரமல்ல இன்றைக்கு மருத்துவத்தின் சிகரமாக திகழும் C M C மருத்துவமனை இராணிப்பேட்டைக்கு அருகாமையில் இருக்கும் மாவட்டத்தின் தலைநகராம் வேலூர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதற்கான வித்து முதலில் 1851 ல் வாலாஜாப்பேட்டையிலும் பின்னர் 1853 ல் இராணிப்பேட்டையிலும் துவங்கப் பெற்றது என்பது ஒரு சிறப்பு. அதே நேரத்தில் கல்விக்கான வித்தும் 1855 ல் இராணிப்பேட்டையில் விதைக்கப்பட்டதால் கல்வியில் தமிழகத்தில் மாத்திரமல்லாது இந்தியாவிலும் நில்லாது உலக அரங்கில் சிறப்பான இடத்தை வேலூர் மாவட்டம் பெற்றிருக்கிறது.

அரசியல் பின்பலம் கொண்ட நகரம் :

அரசியல் பின் பலம் கொண்ட நகரங்களில் மிக சிறப்பான இடத்தை பிடித்த நகரமாக இராணிப்பேட்டை விளங்கிவருகிறது. சிறந்த பெரும் தலைவர்கள் வலம் வந்த நகரமும் இது தான். அதேநேரத்தில் பெரிய தலைவர்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கும் நகரமும் இதுதான். ஆளுநர் ஒருவரை பெற்றெடுத்த நகரம். இன்றைய தேதியில் மண்ணின் மைந்தர்களில் ஒருவரை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருவரை பாராளுமன்ற மேல்சபை உறுப்பினரையும் கொண்ட பெருமைமிகு நகரமாக திகழ்ந்து வருகிறது.

இத்துணை சிறப்புக்கள், பதிவிட்டவையோ சில பதிவிடாதவயோ ஏராளமாக இருந்தாலும் இராணிப்பேட்டை மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது. இங்கே குறிப்பிட ஏராளம் இருந்தாலும் முதலாவது பிஞ்சி ஏரியின் அவலத்தை கவன ஈர்ப்பாக்குவதற்க்கு காரணமில்லாமல் இல்லை. அது நகரத்தின் இருதயப்பகுதியில் அமைந்திருக்கும் புவியியல் அமைப்பே முதற்காரணம். அதேநேரத்தில் இந்த பிஞ்சி எரி நிலத்தடி நீராதாரத்தை பெருக்குவதற்கு பெரும்பங்காற்றக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்த ஏரியின் அமைப்பைக்கொண்டு இராணிப்பேட்டை நகருக்கு எழிலை கொடுக்கும் வண்ணமாக மக்களுக்கு நடமாடவும், இளைப்பாறவும் ஏற்ற விதமாக ஏரியை சுற்றி பூங்கா அமைவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு பஞ்சமில்லை. ஒருவேளை இந்த எரி சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நகர ஆளுமைகளின் வசமிருந்திருந்தால் இந்த ஏரியின் வனப்பே வேறாகயிருக்கும் என்பது யாவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மையே.

ஆனால் பிஞ்சி ஏரியின் நிலையோ அந்தோ பரிதாபம். பூங்காப் போன்ற எழில் மாற்றங்கள் முன்றாம், நான்காம் பட்சமிருப்பினும். மிக மிக அவசியமானது இரண்டு. 1 . சுத்தம் சுகாதாரம் 2. நீராதப்பெருக்கம். இவை இரண்டும் தான் இன்றைய மிக அவசியமான தேவை. ஆனால் இன்றைய பிஞ்சி ஏரியின் நிலையோ குப்பை கொட்டும் இடமாகவும் நிலத்தை கெடுக்கும் புதர்கள் நிறைந்த பகுதியாகவும், சரக்கு வாகனங்களின் இருப்பிடமாகவும் மாறியிருக்கிறது.

மழை வருவது, தாமதிப்பதும், வாரதிருப்பதும் நம் கரங்களுக்குட்பட்டதல்ல. ஆனால் வரும் எனும் எதிர்பார்போடு செயல் படுவது நம் கரங்களில் இருக்கிறது. வரும் என்று நம்புகிறவர்கள் ஆயத்தமாக காத்திருப்பார்கள். வரும் என்ற நம்பிக்கை இல்லாதவர்களே ஆயத்தமில்லாமலிருப்பார்கள். மழை பூமிக்கும், மனுகுலத்திற்கும் அத்தியாவசியமானது. ஆகவே ஆயத்தமாய் காத்திருப்பதும் அவசியமே.

தண்ணீருக்காக மாநிலத்தின் பலப்பகுதிகள் குறிப்பாக சென்னை அல்லாடுவதை நாம் நன்கு அறிவோம். இன்னும் சொல்லப்போனால் ஜோலார்ப்பேட்டையிலிருந்து இரயில் மூலம் தண்ணீர் சென்னை போன்ற பெரு நகருக்கு கொண்டுப்போகப்படுகிறது என்று அறிந்திருந்தும், நீராதாரமாக திகழும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் பராமரிக்கவும் தவறுவது ஏன் ?

மேற்க் குறிப்பிட்டது போல இராணிப்பேட்டை மிகப்பழமையான நகரம், முன்னோடியான நகரம். இன்றைய சுழலில் அரசியல் செல்வாக்கு மிக்க நகரம். பெரும் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவம் மற்றும் கல்வி ஸ்தாபனங்கள், பெரும் தலைவர்கள், முன்னணி தொண்டு நிறுவனங்கள், சமுக தன்னார்வலர்கள் என்று பல பெருமுகங்களை கொண்ட இராணி மாநகரில் இனியாவது மாற்றங்களை எதிர்பார்ப்போம்.

வாழ்க இந்தியா ! வளர்க இராணிப்பேட்டை !!

நன்றி,

சுவி. பாபு T தாமஸ்

இராணிப்பேட்டை

இணைப்பு : பிஞ்சி ஏரியின் இன்றைய புகைப்படங்கள்

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page