Very Urgent
From the Desk of Tamil Nadu State President……….. CCI/TN/004/20 Date : 10-03-20
கவனிக்க : தலைமை மற்றும் மூத்த போதகர்கள், ஊழியர்கள், மூப்பர்கள், சகோதர சகோதரிகள், விசுவாசிகள்.
அன்பு சகோதர சகோதரிகளே,
உங்கள் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துதல்கள் அநேகம். உங்கள் அனைவரையும் இந்த மடலின் வாயிலாக சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மடலை அநேகம் ஜெபங்களோடும் மிகுந்த பாரத்தோடும் எழுதுகிறேன். சமீபக்காலமாக ஊழியர்களுக்கும், ஊழியங்களுக்கும், திருச்சபைகளுக்கும் எதிராக பல விரும்பத்தகாத செயல்களில் சமூக விரோதிகள் சிலர் ஈடுப்பட்டு வருகிறார்கள். இது காலா காலமாக நடக்கும் ஒன்றாயினும், இப்போது நடப்பது சற்று அதிகமாகவும் அதே நேரத்தில் அநாகரிகமாகவும் பிரிவினை வாதத்தை கட்டவிழ்க்கும் துவேஷப் போக்கோடு காணப்படுவதை நன்றாகவே உணர முடிகிறது. இதை இப்படியே கண்டும் காணாமலும் இருப்பது சரியல்ல என்ற உணர்வோடும், இதில் வேறு பல உண்மைகள் மறைந்திருப்பதை நாம் மறுப்பதற்கில்லை.
நன்மைச் செய்து பாடநுபவிப்பது ஆசீர்வாதத்தின் ஒரு வகை. இப்போது நடப்பவை இவ்வகையை சேருமானால் அது நல்லது தான், நன்மையையும் கூட என்று பொறுத்துக்கொள்ளலாம். ஆனாலும் பெருபான்மையாக நடப்பவையோ நாம் சீர்பொருந்துவதற்க்கான எச்சரிப்பாகவே காணப்படுகிறது. “ உன்னை ஆசீர்வதிப்பவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கிறவர்களை சபிப்பேன் என்று ஆதியாகமம் : 12 : 3 கூறுகிறது. அது மாத்திரமல்ல ஆண்டவரின் ஊழியர்கள் அக்கினி ஜுவாலைகளாக செய்கிறார் என்று எபிரெயர் : 1 : 7 ல் சொல்லியிருக்க ஒருவன் லாவகமாக இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த ஆராதனையில் தேவலயதிற்குள் வந்து குண்டு வைக்கிறான். தேவதைகளாய் பாவித்து வளர்க்கப்பட்ட பிள்ளைகள், பெரியவர்கள் என்று ஏராளமானோர் மரித்தும் கொலையுயிரும் குற்றுயிருமாய் மருத்துவமனைகளில் கிடத்தப்பட்டார்களே. இந்த துயரத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.
திருச்சபைகளை இடிப்பது இப்போது சர்வசாதாரணம். ஊழியர்களை அவமதிப்பது, ஊழியத்தில் உடன்நிருப்பவர்களை வசைப்பாடுவதும், மிரட்டுவதும் லேசானக் காரியமென்றால் ஆண்டவர் நமக்கு எதையோ உணர்த்த நினைக்கிறார் என்றே பொருள். ஆண்டவரின் அனுமதி இல்லாமல் ஒரு அணுவும் அசைவதில்லை. எனவே ஆண்டவரின் சிட்சையை அற்பமாய் எண்ணாமல் மனம் திரும்புவதற்கான கனிகளை கொடுப்பதே கண்ணியம்.
இன்றைய காலக்கட்டத்தில் ஊழியர்களும், திருச்சபைகளும் பெருகின அளவிற்கு சத்தியம் விதைக்கப்படவில்லை. சத்தியத்தில் மக்கள் ஊன்றக்கட்டப்படவில்லை இதில் சபை ஊழியர்களும் அடக்கம் என்பதையும் மறுப்பதற்கில்லை என்பது வருத்தமான உண்மை. இம்மாப்பெரும் இடர்ப்பாட்டை நாம் சரி செய்ய தவறும் பட்சத்தில் ஆண்டவரின் வேதனையான எச்சரிப்பின் வார்த்தையாகிய “மனுஷ குமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தை காண்பாரோ” லூக்கா : 18 : 8 என்ற முன்னறிப்பை உணராதவர்களாக மாறிவிடுவோம்.
அதே வேளையில் ஏசாயா தீர்க்கனின் கூற்றுப்படி மனம் பொருந்தி செவிக் கொடுத்தால், தேசத்தின் நன்மையை நாம் புசிப்பது உறுதி எனும் மாபெரும் வாக்குத்தத்தம் நம் முன் இருக்கிறது என்பதையும் உணரவேண்டும். இன்றைக்கு ஊழியர் கூடுகைகள் அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் நல்ல முறையில் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது. இதில் குறைந்த பட்சமாக ஐம்பது ஊழியர்களும் அதிகபட்சமாக இருநூறுக்கும் அதிகமான ஊழியர்கள் பங்கு பெரும் கூடுகைகளாகும். ஆனால் அவைகள் தரிசனப் பகிர்வு கூடுகைகளாக இருக்கிறதா? என்பதை சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது, காரணம் தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்க்கெட்டுப்போவார்கள். வேதத்தை காக்கிறவனோ பாக்கியவான். நீதி : 29:18 என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஆகவே இந்த காரியத்தில் நாம் கவனம் செலுத்தும் போது வசனத்தில் வேருன்றி பலப்பட்டு செழிக்க முடியும். பெரும் பாலான ஊழியர்கள் குடும்பச் சூழல் காரணமாகவும் இதரப் பிற தவிர்க்கமுடியாத காரணங்களால் வசனத்தில் வேருன்ற முடியாத நிலையும் மாறும்.
மற்ற்றொரு மிக முக்கியமான கூற்று யாதெனில் வெளி யுலகம் நம்மை ஒரு வித அச்ச உணர்வோடு பார்ப்பதை காண முடிகிறது. சமுதாய அக்கறையாளர், சமுதாய பங்காளர் என்ற பழைய கால நிலைப்பாடு சிதைந்துப்போய் வெகு காலமாகி விட்டது. நமக்கும் சமுதாயத்திற்குமான இடைவெளி வெகுவாக பெருகி விட்டதை நாம் உணரத்தவறி விட்டோம். இயேசு கிறிஸ்துவின் அன்பு நம்மிடத்தில் காணப்படவில்லை என்பதை சமுதாயம் நன்கு உணர்ந்திருக்கிறது. இவைகளுக்கு அடையாளமாக நம்முடைய செயல்பாடும், நம்முடைய குடும்பச் சுழலும், திருச்சபையில் காணப்படும் நிலைப்பாடுகளுமே போதுமான சான்றுகளாகும்.
முதலில் நம் கண்களில் இருக்கும் உத்திரத்தை எடுத்துப்போட முயல்வோம். இது தான் இன்றைய முதலும் முக்கியமான தேவையாக இருக்கிறது. இதற்கு நமக்குத் தேவை சத்தியம். சத்தியம் மனசுக்குள் ஒளிரும் போது கிறிஸ்துவின் அன்பு வெளிப்படும். அந்த அன்பே சமுதாயத்திற்கு நம்பிக்கையை கொடுக்கும். இந்த கிரியையே ஆத்துமா ஆதாயத்தைத் தரும். ஆத்தும ஆதாயமே திருசபைகளின் வளர்ச்சி, அதுவே நாட்டின் எழுச்சி. ஆமென் .
நன்றி ,
சுவி. பாபு T தாமஸ், இராணிப்பேட்டை.