The Servants of God and the ministry
ஊழியமும் ஊழியர்களும் சுவி. பாபு T தாமஸ்
தேவ ஊழியமும் ஊழியர்களும் இன்றைய காலக் கட்டத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதை நாம் சீர்த்தூக்கி பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் அனைவரும் கடைசி காலங்களில் வாழ்ந்து வருகிறவர்கள். ஆகவே கடைசி காலங்களில் ஊழியர்களும் அவர்தம் பணிகளும் எப்படி இருக்கும் என்பதைக் குறித்த வெளிச்சத்தை தேவனாகிய கர்த்தர் ஆவியானவர் மூலமாக தெளிவாக வேதாகமத்தின் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார். எனவே நாம் ஜாக்கிரதையாக தெளிந்து உணர்ந்து செயல்ப் படுவது நல்லது அவசியமும் ஆகும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையும் அவர் செய்த ஊழியங்களுமே நமக்கு மாதிரிகள். “ நான் உங்களுக்குச் செய்தது போல நீங்களும் செய்யும்படிக்கு உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்”. யோவான் : 13 : 15 அதே நேரத்தில் இன்னுமொரு உண்மையையும் நமக்கு சொல்லிப்போயிருக்கிறார் அது என்னவென்றால், “நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்”. யோவான் : 13 : 15
ஆரம்பக்கால ஊழியங்களும் ஊழியர்களும் வேறு இப்போது இருப்பவையோ முற்றிலும் வேறானவை. இப்போதிருக்கும் ஊழியங்களும் ஊழியர்களும் எப்படி இருக்கக்கூடாதென்பதற்கு வேண்டுமானால் சான்றாக கொள்ளுமளவிற்கு இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிலைமைகள் மோசம் என்று சொல்லுவது மிகையல்ல. எல்லா ஊழியங்களும் ஊழியர்களும் அப்படியா என்றால் இல்லை, ஆனால் 90% என்பது சற்றே குறைவான மதிப்பீடு என்று சொல்லும் அளவிற்கு மோசமே. உண்மை நேர்மை தியாகம் உழைப்பு அர்ப்பணிப்பு என்பவையெல்லாம் காலாவதியான சொற்றொடர்கள். ஊழியர்களின் நிலையே இதுவானால் சபை விசுவாசிகளின் நிலை அந்தோ பரிதாபம். ஒரு உண்மையை மறுப்பதற்கியலாது, சரியான மேய்ச்சல் இல்லாமல் தடுமாறுவோர் 90% என்பது அநேகமாக சரியான கணக்கீடாக இருக்கும்.
இப்போதிருக்கும் ஊழியர்கள் மூன்று வகை, 1 . அழைப்பு நிமித்தம் ஊழியர் 2. ஆர்வத்தின் நிமித்தம் ஊழியர் 3. ஆதாயத்தின் நிமித்தம் ஊழியர். இந்த மூன்று வகை ஊழியர்களில் அழைப்பு மற்றும் ஆர்வத்தின் நிமித்தமாக வந்த ஊழியர்கள் 10% மட்டுமே. அதிலும் ஆர்வத்தின் நிமித்தமாக ஊழியத்திற்கு வந்தவர்களுடைய விதிகாசாரம் சற்றே அதிகம் என்பது நிதர்சனமான உண்மையாகும். மீதமுள்ள 90% ஊழியர்கள் ஆதாயத்தின் நிமித்தமாக ஊழியத்திற்கு வந்தவர்களாகத்தான் இருக்கமுடியும். இதில் ஆரம்பத்தில் ஆர்வத்தின் நிமித்தம் ஊழியத்தில் இணைந்து பின் ஊரோடு ஒத்து போன கதையாக ஆதாயத்திற்கு என்று தங்களை மாற்றிக்கொண்டவர்களும் அடங்குவர். இது தான் இன்றைய ஊழியமும் ஊழியர்களின் நிலையும் ஆகும்.
மேலே குறிப்பிட்ட நிலைபாடு என்பது இன்றைய ஊழியத்தின் தன்மையை நமக்கு பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அழைப்பின் நிமித்தம் ஊழியர் என்பவர் அவரும் அவர் சார்ந்த ஊழியமும் என்று ஒரு வட்டத்திற்குள்ளேயே நின்று விடுகிறது. அவரின் ஊழிய எல்லைக்கு வெளியே பெரிதாக நன்மை இருக்கிறதோ இல்லையோ தீமை நிச்சயம் இல்லை. ஆர்வத்தின் நிமித்தம் ஊழியத்திற்கு வந்தவரின் நிலையும் பரவாயில்லை என்றே சொல்லமுடியும், காரணம் தேவனுடைய நாமம் தூஷிக்கக் கூடாது என்பதில் அவர் நிச்சயம் கவனமாக இருப்பார். அதற்காக தன்னையும் தன் ஊழியத்தையும் தகுதி படுத்துவதன் மூலம் ஆயத்த படுத்துவதில் அவர் கவனம் இருக்கும். எனவே இவரும் சமுதாயத்திற்கும் ஊழியத்திற்கும் ஆதாயமே.
ஆனால் ஆதாயத்தின் நிமித்தம் ஊழியத்திற்கு வந்தவர்களின் நிலையால் தான் சபையும் சமுதாயமும் தள்ளாடுகிறது. பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். I தீமோத்தேயு : 6 : 10 ஆதாயத்தின் பலனை நம்பி வந்தவர்களின் வாழ்க்கையும் அவர்களின் செயல் பாடுகளையும் இவ் வசனத்தை அப்படியே பிரதிப்பலிக்கிறது மாத்திரமல்ல ஒரு படி மேலே போய் அவரால் சபையும் சமுதாயமும் சீரழிந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் இரண்டு வகையுண்டு ஒன்று அதிகாரக் கூட்டம் மற்றொன்று அதிகார வர்க்கத்தை அண்டியே வாழும் கூட்டம். ஒருவருக்கு பேரு புகழுமே பிரதானம் மற்றவருக்கு வயிறே பிரதானம்.
இப்படிப்பட்டவர்களை குறித்து பேதுரு எழுதின இரண்டாம் நிருபத்தில், கள்ள போதகர்கள் இருப்பார்கள், அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுக்களைக் தந்திரமாய் நுழையப்பண்ணி, அவர்களுடைய கெட்ட நடவடிக்கைகளை அநேகர் பின்பற்ற செய்வதன் மூலம் சத்திய மார்க்கம் துஷிக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறே பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் நிருபத்தில், மேலும் கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக, எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காராராயும், அகந்தையுள்ளவர்களாயும், துஷிக்கிறவர்களாயும், தாய்தந்தைமாருக்குக் கிழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல், சுகபோகப்பிரியராயும் தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள் ; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 2 திமோத்தேயு : 3 : 1 – 5
இத் தீர்க்கமான வார்த்தைகளில் ஒன்றும் குறையாமல் இன்றைய ஊழியர்கள் இருப்பதை எண்ணி மனம் வலிக்கிறது. இப்படிப்பட்டவர்களை கொண்ட சபையும் சமுதாயமும் விழி பிதுங்கி கிடக்கிறது. மாற்றத்திற்கான வழி இயேசு கிறிஸ்துவே. அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு. அறுவடைக்கான பணியில் கையளிப்போர் விரைந்து இணைந்து செயல் படும் தருணம் இதுவே. காலம் தாழ்த்தும் ஒவ்வொரு ஷணமும் அழிவின் விளிம்பிற்கு காலம் நம்மை இட்டு செல்லுகிறது என்பதை மறவாதிருப்போம். திக்கு தெரியாமல் திணறி தவிக்கும் சமுதாயம் ஒருபுறம், அழிவின் விளிம்பை நோக்கிய காலத்தின் வேகம் மறுபுறம் இவைகளுக்கு மத்தியில் நம்மை மீட்பதற்கான நீட்டப்பட்ட மீட்பரின் கரம்........
நன்றி
சுவி. பாபு T தாமஸ், இராணிப்பேட்டை