Hearing word famine
ஒலிக்காத ஆலய மணி................ சுவி. பாபு T தாமஸ்
இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக தேவாலய மணிகளுக்கு ஒய்வு தந்த நாள் என்றால், 22-03-2020 ஞாயிறு என்ற இந்த நாளாக தான் இருக்கு முடியும். உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவிவரும் சூழல் காரணமாக இந்தியாவில் அதன் தாக்கத்தை குறைக்கும் முகமாக 14 மணிநேர பொது ஊரடங்குக்கு ‘ஜனதா கர்ப்பியு’ இந்திய அரசால் திட்டமிட்டப் பட்டது. இதன் வழியாக மக்கள் பொது வெளியில் அதிக அளவில் மிக நெருக்கமாக கூடுவதை தவிர்த்தால் வைரஸ் தொற்றை தடுக்க முடியும் என்பது ஒரு பிரதான நோக்கம். இதற்காக அரசு துரித கதியில் செயல்பட்டு ஞாயிற்று கிழமை ஊரடங்கு நாளாக அறிவித்து காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை மக்கள் நடமாட்டம் தடை செய்தது. இதற்கு வசதியாக அனைத்து போக்குவரத்தும், வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டது. பொதுவாக மக்கள் அதிக அளவில் நெருக்கமாக காணப்படும் இடங்களாக திரைஅரங்குகள், விமானம் - ரெயில் – பேருந்து நிலையங்கள், சந்தை வெளிகள், மால்கள், வழிப்பாட்டுத்தலங்கள், தொழிற்ச்சாலைகள், பாடச்சாலைகள் என பல அடங்கும். வழிப்பாட்டு தலங்கள் என்பதால் தேவாலயங்களும், பெரிய மற்றும் சிறிய திருசபைகளில் நடைப்பெற இருந்த அனைத்து வழிபாடுகளும் மார்ச் 31 வரை நிறுத்தப்படவேண்டும் என்று மாநில அரசு மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.
பெருவாரியான திருச்சபைகளில் ஞாயிற்றுக்கிழமையே பிரதானமான ஆராதனை நாளாகும். இது லேந்து காலமாக வேறு இருப்பதால் பல்வேறு ஜெபக்கூட்டங்கள், எழுப்புதல் கூட்டங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கும். இன்னும் சிறப்பாக ஏப்ரல் முதல் வாரமும் இரண்டாவது வாரமும் மிக விசேஷித்த நாட்களாக கருதப்படும் குருத்தோலை ஞாயிறு, பரிசுத்த வாரம், பெரிய வியாழன், பெரிய வெள்ளி, ஆயத்த நாள் மற்றும் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு என்று அடுத்ததுத்து வரும் விசேஷிமாக ஆராதிக்கும் நாட்களாகும். இவையனைத்தும் தற்போது கரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. பொதுவான கண்ணோட்டத்தில் இது சரியான முடிவே, காரணம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று பரவல் சர்வசாதாரணமாக இருக்கும். இதன்முலம் பொது ஜன பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அச்சுறுத்தல் இருப்பதால் கவனமாக கையாள வேண்டியது மிக அவசியம் என்பது உண்மை தான். இந்த அச்சுறுத்தலை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியது மிக முக்கியம்.
உலகத்தை குறிப்பாக இந்தியாவை பீடித்து இருக்கும் கொள்ளை நோய்க்கு தீர்வு நோய் தொற்று தடுப்பு மற்றும் மருத்துவ சுகாதார முறைமைகள் என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் மிகவும் அவசியமே. ஆனால் இவைகளுக்கும் முதன்மையானது மிக அவசியமானது ஒழுக்கம். இந்த ஒழுக்கம் உடலுக்கும் உள்ளத்துக்கும் மிகவும் அத்தியாவசியம். ஒரு தனி மனித வாழ்வில் காணப்படும் ஒழுக்கமின்மையின் கூட்டு வெளிப்பாடே கொள்ளை நோய் போன்ற பிரளையங்களுக்கும், பேரழிவிற்கும் காரணமாக அமைகிறது. அப்படியானால் நம்முடைய ஒவ்வொருவரின் தனி மனித ஒழுக்கம் நம் உயர்விற்கும், பாதுகாப்பிற்கும் அத்தியாவசியமானது. இதை நாம் எல்லா நிலையிலும் பேணிக்காக்கும் போது நாம் சகல சௌபாக்கியத்தையும் பெற்று சகல சௌகரியத்துடனும் வாழ்வோம் என்பது திண்ணம். இந்த ஒழுக்கமான வாழ்க்கைக்கு சத்திய வேதாகமம் தரும் பதில் என்னவென்றால், “நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” I பேதுரு : 2 : 3 அதோடு நில்லாமல் கர்த்தர் சொல்லுகிறார், “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” லேவியராகமம் : 19 : 2 எனும் வசனத்திற் கேற்ப நம்மை பண்படுத்திக் கொள்ளுவது மிகவும் முக்கியம். ஒழுக்கம் உயிருக்கும் மேலானது.
நம் அனைவரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு தேவை நம்முடைய பரிசுத்தமான வாழ்க்கை. இந்த பரிசுத்தமான வாழ்க்கைக்கு தேவை சத்தியத்தை அறியும் அறிவு. இந்த அறிவை நாம் பெற வேண்டுமானால், கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம், நீதிமொழிகள் : 1 : 7 கர்த்தர் ஞானத்தை தருகிறார், அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும், நீதிமொழிகள் : 2 : 6 ஆக கர்த்தருக்கு பயப்படுதல் என்பது அவரை ஆராதிப்பதும், துதிப்பதுமேயாகும். இந்த ஆராதனையும் துதியும் அவரை அறிவதினால் வளருவதாகும். பொதுவாக இவ் வளர்ச்சி சபை கூடிவருதலிலும், வசனத்தை கேட்பதிலுமே பெருகும். இத்துணை அவசியமான ஆராதனை ரத்து என்பது சாதாரானமானது அல்ல. நாம் அனைவரும் அறிந்த வண்ணம் கர்த்தருடைய அனுமதி இல்லாமல் எதுவும் நிகழ்ந்து விடுவதில்லை. சகலமும் அவர் முலமாகவே அதற்கான காரண காரியத்தோடு நடைபெறுகிறது என்று அறிவதும் உணருவதும் உத்தமம். “இதோ, நான் தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும், ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக் குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். ஆமோஸ் : 8 : 11
நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருப்பது வசனப் பஞ்சம். இந்த வசனப் பஞ்சமாகப் பட்டது எதோ தற்செயலானதோ தற்காலிகமானதோ அல்ல. பொதுவாக பஞ்சம் என்பது சர்வசாதாரனமாக வருவதில்லை. பல்வேறு காரணக் காரியங்களினால் பற் பல சூழ்நிலைகளை கடந்து பஞ்சம் தேசத்தின் மேல் வருகிறது. அது தேசத்தில் பல துயரத்தை, வலியை, வடுக்களை, பாடங்களை கற்றுத்தரும். அதுப்போலவே இப்போது தேசத்தில் வந்திருப்பது ஒரு கொடிய வசனப் பஞ்சம். இது கடந்த ஆண்டே உலகத்தில் தலைக்காட்டத் துவங்கியது. ஆனால் அதை ஒருவரும் உணரவில்லை. ஸ்ரீலங்காவில் கடந்த ஆண்டு இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் ஆராதனையில் தேவாலயத்தில் தீவிரவாதிகளால் குண்டுகள் வெடிக்கச் செய்து பல உயிர்கள் பலியானது. அதை தொடர்ந்து தீவிர வாதிகளின் தாக்குதல்கள் தொடரும் என்று அஞ்சி ஆராதனை நிறுத்தப்பட்டது. இப்போது இந்தியாவில் மற்றும் பல தேசங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி ஆராதனை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
ஆராதனையின் முக்கியத்துவத்தை தேசத்தின் தலைவர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஒருவேளை அறியாமலிருக்கலாம். சபைத் தலைவர்கள், நிர்வாக பொறுப்பில் இருக்கும் மூத்த போதகர்கள் அறியாமல் போனது எப்படி. இன்னும் சொல்லப்போனால் நீண்ட நெடிய பாரம்பரிய வரலாறு கொண்ட சபை தலைவர்கள் அரசாங்கத்திற்கு வழி வழியாக ஆராதனையின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்க வேண்டும். ஆராதனை நிறுத்தம் என்பது பொத்தாம் பொதுவாக அறிவிக்கப்படும் ஒரு சாதாரணக்காரியமாக மாறிப்போனதற்கு யார் காரணம். குறைந்தப்பட்சம் சபை தலைவர்களை அழைத்து ஆலோசித்து முடிவெடுத்திருக்கவேண்டிய முக்கியமான காரியம் என்பதை நாம் உணர்த்த தவறி இருக்கிறோம் என்பதே இதன் வெளிச்சம். இத்தனைக்கும் கல்வியை சேவையாகவே பட்டி தொட்டிகளுக்கும் கொண்டு சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. அதற்காகத் தான் ஆண்டவர் போதகர்களைச் சாடுவதை வசனத்தில் காணமுடிகிறது. “என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள். நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்து விடுவேன். நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். ஓசியா : 4 : 6
என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள். அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள். வேசித்தன ஆவி அவர்களை வழித் தப்பித் திரியப் பண்ணிற்று. அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிறாமல் சோரமார்க்கம் போனார்கள். ஓசியா: 4 : 12 எனவே இந்தக் கொடுமையின் காரியத்தை நாம் உணரத் தவறுவது சரியாகாது. இன்றைய இந்தப்போக்கை பலர் மேம்போக்காக அசட்டைபண்ணுவதையும் காண முடிகிறது. இச் சூழலை குறித்த அச்சமோ நடுக்கமோ இல்லாமல் மிகச் சாதாரணமான கண்ணோட்டம் பல முன்னணி ஊழியர்களிடமே காணப்படுகிறது. வார்த்தை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணரத்தவறியதே இதன் காரியம். வார்த்தையைக் கொண்டுதான் சகலமும் படைக்கப் பட்டது. அந்த வார்த்தையானவரை தான் நாம் ஆராதிக்கிறோம். உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும், உம்முடைய வசனமே சத்தியம். யோவான் : 17 : 17 வசனப்பஞ்சம் என்பது சத்தியதிற்கான பஞ்சமாகும். சத்தியத்தை வாங்கு அதை விற்காதே, அப்படியே ஞானத்தையும், உபதேசத்தையும், புத்தியையும் வாங்கு. நீதிமொழிகள்: 23 : 23 அப்படியானால் சத்தியத்தை நாம் ஏன் வாங்க வேண்டும் அல்லது சேமிக்க வேண்டுமானால் சத்தியம் தான் ஒருவனை பரிசுத்தமாக்கும். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால் தானே. சங்கீதம் : 119 : 9
இந்தப்பெரிய விலையே இல்லாத வசனப் பஞ்சம் என்பது மிகப்பெரிய வலி நிறைந்தது என்பதை உணருவோம். கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள், நம்மைப் பீறினார், அவரே நம்மை குணமாக்குவார். நம்மை அடித்தார் அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். ஓசியா : 6 : 1 அரசனுக்காக புருஷன விட்ட கதையாக கொரோனா வைரஸ்க்காக சபை ஆராதனையை தவிர்ப்பது நல்லதல்ல. அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்போம். நம்முடைய பொல்லாத வழிகளை விலக்கி நம்மைத் தாழ்த்துவோம், அவரை நோக்கி ஜெபிப்போம் அப்பொழுது நம்முடைய தேசத்திற்கு கர்த்தர் ஆரோக்கியத்தையும், ஆசீர்வாதத்தையும் அருளிச்செய்வார், ஆமென்.
சுவி. பாபு T தாமஸ் , இராணிப்பேட்டை