Mark on the forehead
நெற்றியில் வைக்கப்படும் பொட்டு குறித்த வேதாகமம் தரும் விளக்கம் !
நெற்றியில் வைக்கப்படும் பொட்டு குறித்த காரியம் வேதத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொட்டு ஏன் வைக்கவேண்டும் என்றும் பின்னாளில் அது ஏன் விலக்கப்பட்டது அல்லது பின்பற்றப்படவில்லை என்ற கருத்தை நாம் அறிந்துக்கொள்ளுவது அவசியமே. பொட்டிற்க்கான வரலாறு வேதத்தில் தான் காணப்படுகிறது. ஒருவேளை திலகமிடும் தாய்மாரை நாம் கேட்போமானால் அவர்கள் பதில் இது வழிவழியான வழக்கம் என்றோ அல்லது சுமங்கலிக்கான அடையாளம் என்றும் சொல்லுவார்கள். ஆனால் வேதாகமம் நமக்கு தெளிவான விளக்கத்தை தருகிறது.
கர்த்தர் எகிப்தியரை அதம் பண்ணுகிறதற்குக் கடந்து வருவார். நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சந்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம் பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்ப்படியை விலகிக் கடந்துப்போவார். யாத்திராகமம் : 12 : 23 இந்தச் சம்பவம் நம் அனைவருக்கும் நன்கு தெரியும். எகிப்திலே இஸ்ரவேலர்கள் இருந்தார்கள், அவர்களை விடுவிக்க மோசே கர்த்தரால் அனுப்பப்படுகிறார். மோசே இஸ்ரவேலர்களை விடுவிக்க பார்வோனோடு பல கட்ட பேச்சு வார்த்தை நடத்துவதையும் அதினால் பத்து வாதைகளை கர்த்தர் எகிப்திலே நடப்பிக்கிறார். அவைகளில் கடைசி வாதை தலைப்பிள்ளை சங்காரம்.
அப்பொழுது சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப் பெண்ணுடைய தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருக்கிற முதற்ப்பேரனைத்தும், மிருகஜிவன்களில் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி, அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும். ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர் முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை. யாத்திராகமம் : 11: 5 - 7 இந்த வித்தியாசத்தை உண்டாக்க இஸ்ரவேலர்களுக்குள் சங்காரம் வராதப்படிக்கு ஒருவயது ஆட்டுக்குட்டியின் இரத்தம் வீட்டில் பூசப்பட்டத்தின் அடையாளமாக பொட்டு வைக்கும் வழக்கம் வந்தது அதிலும் சிவப்பு நிற திலகத்தையே நெற்றியில் வைப்பதற்கான காரணம் இதுவே.
இதை மக்கள் எப்படி பயன்படுத்தவேண்டும் ? ஏன் பயன்படுத்தவேண்டும் என்றும் வேதம் நமக்கு தெளிவு படுத்துகிறது. கர்த்தர் எங்களைப் பலத்தக் கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன்கைகளில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபாகக் குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான். யாத்திராகமம் : 13 : 16 இதுவே நெற்றியில் இரத்த நிறத்தில் திலகமிடுவதற்க்கு காரணம், எனினும் பின்னாளில் இதை பாதுகாப்பின் கவசமாகவே ஆண்களும் பெண்களும் பயன்படுத்த துவங்கினார்கள். இந்த வழக்கமே பழக்கமாகிப் போனது.
சரி, வேதாகமத்திலேயே இது குறிப்பிடப்பட்டிருந்தும் ஏன் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் பயன்படுத்துவதில்லை அதிலும் குறிப்பாக பெண்கள் ஏன் நெற்றியில் திலகமிடுவதில்லை என்கிற கேள்வி அனைவருக்கும் வரும். அன்று இஸ்ரவேல் மக்களை பாதுகாக்க ஒரு ஆட்டுக்குட்டி குட்டியின் இரத்தம் தேவைப்பட்டது. எகிப்தியர்களின் மிறுதலினால் பாவம் வந்தது. அந்த பாவத்தினாலே அவர்களுக்கு அழிவு வந்தது. அந்த அழிவு இஸ்ரவேலர்களை பாதிக்காத வகையில் ஒரு ஆடு அடிக்கப்பட்டு அதின் இரத்தம் அந்நாளில் சிந்தப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டார்கள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனுக்குலம் அனைத்தின் பாவங்களுக்காகவும் தமது இரத்தத்தையே சிந்தி நம் பாவங்களை கழுவினதினால் நாம் அழிவிலிருந்து பாவத்தின் சம்பளமாகிய மரணத்திலிருந்து காக்கப்பட்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்றிருக்கிற இரத்தமே நம் அனைவரின் தலையின் மேல் இருப்பதினால் நமக்கு வேறு ஒன்றும் அதாவது சிவப்பு நிற திலகம் தேவையில்லை.
ஆகவேதான் கிறிஸ்துவை பின்பற்றுகிற நாம் அனைவரும் குறிப்பாக நம் வீட்டுப் பெண்கள் நெற்றியில் திலகமிடுவதில்லை. நாம் அனைவரும் கிறிஸ்து நமக்காக மரித்து, மூன்றாம் நாளில் உயிர்த்து ஜீவனோடு பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்து நமக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்றும் திரும்ப வரப்போகிறார் என்றும் விசுவாசித்து காத்திருக்கிறோம். ஆனால் இன்னும் ஏராளமான மற்றவர்களோ அந்த பழைய கால முறைமைகளை பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்காகவே நாம் அனைவரும் பூமியில் உள்ள யாவருக்கும் குறிப்பாக இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வந்து முப்பத்தி மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்து நம் யாவரையும் விலைக்கிரையமாக மீட்டிருக்கிறார் எனும் நற்செய்தியை அறியாதவர்களுக்கு அறிவிப்பது நம் யாவர் மீதும் விழுந்தக் கடமையாகும். ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், இராணிப்பேட்டை