Nation wide Lock out - Churches closed
ஊரடங்கு – சபை கூடுகைக்கு தடை ............... சுவி.பாபு T தாமஸ்
இன்று ஏப்ரல் மாதத்தின் முதல் நாள், வழக்கமான காலமாய் இருந்திருக்குமானால் திருசபைகளில் முதல் நாள் ஆராதனை வழக்கம் போல் திருவிருந்துடன் கலகலப்போடு இந்த ஏப்ரல் மாதம் துவங்கியிருக்கும். சபை கூடிவருதல் என்பது தேவனை ஆராதிப்பது மட்டுமல்லவே. சபையாரை, உறவுகளை, நண்பர்களை பார்ப்பதும் நலம் பொலம் விசாரிப்பதும் தானே. பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் புன்முறுவலோடு கை குலுக்கி, தோளில் தட்டி, எட்டி இருப்பவர்களை பார்த்து கையசைத்து, நலம் விசாரித்து அப்பப்பா ஒரு யுகம் ஆனது போலவே தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் பேசுவதற்கா நம்மிடத்தில் செய்தி இல்லை. இப்போது பரவாயில்லை, இதே ஊரடங்கு ஒரு பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் வந்திருந்தால் தெரிந்துக்கும் சேதி. மக்கள் வைரஸுக்கு பலியானதை விட பேசாமல் அடைப்பட்டு இருந்து மரித்தவர்கள் எண்ணிக்கையையே அதிகம் என்று பத்திரிக்கைகளின் முதல் பக்க தலைப்பு செய்தியாகியிருக்கும்.
நம் ஊரில் உள்ள பல சபைகள் கடைசியாக கூடியது மார்ச் 15, ஒரு சில சபைகளே மார்ச் 20 வரை ஆராதனை நடத்தியவர்கள். எப்படி பார்த்தாலும் ஐந்து ஆராதனைகள் இன்றுவரை மிஸ்ஸிங். இன்னும் சில திருசபைகள் வெள்ளி சனிக்கிழமைகள் சேர்த்து மூன்று நாள் எழுப்புதல் கூடுகைகள் நடத்தியிருக்க வாய்ப்பு உண்டு. அதையும் சேர்த்தால் ஏழு – எட்டு ஆராதனைகளை ஒவ்வொரு திருசபைகளாகிய நாம் இழந்திருக்கிறோம் என்பது மலைப்பான வேதனைகளே. ஒருவேளை பெரும்பாலோருக்கு அதிலும் குறிப்பாக இன்றிய கால தலைமுறையினருக்கு இது ஒரு பெரும் இழப்பாக தெரியாமல் கூட இருக்கலாம். காரணம் பெரும்பான்மையான மக்கள் சற்றேறக் குறைய 60% திருசபை மக்கள் பண்டிகை மற்றும் விசேஷங்களின் கிறிஸ்தவர்களாய் இருப்பதே ஆகும். மற்றவர்களுக்கோ இது மிகப்பெரிய இழப்பு. அந்தப் பெரிய இழப்பை சந்திப்பவர்களை கேட்டால் தான் சொல்லுவார்கள் அவர்கள் அனுபவங்களை. ஒருவேளை இந்த இழப்பு சிலருக்கு அப்பக்குறைவின் வருத்தம் போலவோ அல்லது சரீர பெலவீன குறைவு போலவோ அல்லது சுவாச காற்று குறைவுகள் போன்ற இழப்புக்கு நிகராகவோ உணருவதை கேட்க முடியும்.
சங்கீதக்காரன் சொல்லுகிறான், கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னப்போது மகிழ்ச்சியாயிருந்தேன். சங்கீதம் : 122 : 1 காரணம் என்ன? உம்முடைய பிரகாரங்களில் வசமாயிருக்கும்படி நீர் தெரிந்துக்கொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது விட்டின் நன்மையால் திருப்தியாவோம். சங்கீதம் : 65 : 4 என்பது வேத வசனம் நமக்கு உணர்த்தும் உண்மை. இதற்கு ஆதாரமாக ஓரு சம்பவத்தை பார்க்கலாம் வாருங்கள். அந்த சம்பவத்தை 2 இராஜாக்கள் புஸ்தகம் 20 ஆம் அதிகாரத்தில் இப்படியாய் ஆவியானவர் பதிவு செய்திருப்பார், அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான். அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி; நீர் உமது வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி : ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான்.
ஏசாயா பாதி முற்றத்தை விட்டு அப்புறம் போகிறதற்கு முன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது : நீ திரும்பிபோய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நான் உன்னைக் குணமாக்குவேன், மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவாய். 2 இராஜாக்கள் : 1 – 5 இங்கே மரணத்திற்கு ஏதுவான வியாதியோடு இருந்த எசேக்கியா ராஜாவிற்கு சுகச் செய்தி வருகிறது அதில் நீ மூன்றாம் நாளில் ஆலயத்திற்கு போவாய் என்ற செய்தியே மரணத்தோடு போராடிக்கொண்டிருந்த எசேக்கியாவை விரைவாக குணப்படுத்தியிருக்கும் என்பதே உண்மையாகும். ஒருவேளை எசேக்கியா வியாதியின் நிமித்தமாக ஆலயத்திற்கு போக முடியாமல் படுக்கையில் வருந்தி இருக்கக் கூடும். அந்த வார்த்தையே ராஜாவிற்கு நம்பிக்கையை கொடுத்திருக்கும் என்று சொன்னால் மிகையாகாது. இவ்வளவு அதீத ஆசீர்வாதத்திற்கான திருச்சபை கூடுகைகள் தற்போது கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி அரசு தடை செய்திருக்கிறது. தற்போது அமலில் இருக்கும் ஆராதனை தடைக்கு காரணம் எதுவாக இருந்தாலும் முழுக்க முழுக்க நாமே பொறுப்பு என்பது தான் முற்றிலும் உண்மை. இது கர்த்தரின் அனுமதியோடு நாம் உணர்வடையவே இந்த தடை அமுலுக்கு வந்திருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளுவோம்.
அப்படியானால் உண்மையான காரணம் தான் என்ன? என்னுடைய “வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாகினீர்கள்” என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். மாற்கு : 11 : 17 இதோடு நில்லாமல் அவர் மேலும் கூறுகையில் “ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்”. மத்தேயு : 21 : 43 இவ்வளவையும் வேதாகமம் நமக்கு எச்சரிப்பாக முழக்கமிட நாமோ இன்னும் உணராமல் இருப்பது தான் விந்தை. கர்த்தருடைய குற்றச்சாட்டை கவனிப்போமானால் நம்முடைய திருச்சபைகள் இன்று கள்ளர் குகைகளாக மாற்றம் பெற்றிருப்பதாக பொருள்படுகிறது. அப்படியானால் இதற்கு நம்முடைய பதில் தான் என்ன? அல்லது ஒரு வேளை இந்தக் குற்றச்சாட்டை ஆமோதிக்கும் பட்சத்தில் நம்முடைய நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது மற்றுமொரு கேள்வியாகும். ஏனென்று சொன்னால் தேவனுக்கேற்றப்படி கனி கொடாதப்படியினால் தேவனுடைய ராஜ்யம் நம்மை விட்டு நீக்கப்படும் அபாயமும் நம் முன் இருக்கிறது என்பதை உணரவேண்டும். ஆகையால் நமக்கு இப்போது உடனடி தேவை சுயப்பரிசோதனை.
உண்மையில் இந்த சுயப்பரிசோதனையை நாம் முன்பே மேற்கொண்டிருந்திருப்போமானால் சபைகள் அடைப்பட்ட காலமாகிய இந்த இக்கட்டான காலத்திற்குள் நாம் வந்திருக்கவே மாட்டோம். ஆனால் இன்று இந்த கொடிய சூழலில் இருந்துக்கொண்டும் நாம் நம்மை சுயப்பரிசோதனை செய்யவோ தீர்வு கண்டு மனம்மாறவோ எத்தனிக்காமல் இருப்பது எத்தனை கொடுமை என்பதை சிந்திப்போம். வெளி நாடுகளில் பழமையான ஆயிரக்கணக்கான பெரிய திருச்சபைகள் இன்று கேளிக்கை விடுதிகளாகவும் இன்னும் பல்வேறு வகையில் மாற்றுருவம் பெற்று வருமானம் ஈட்டும் நிலையங்களாக மாறிய பட்டியல் நீளம் பெரியது. நாம் ஏன் வெளிநாடுகளை பார்க்கவேண்டும். நம் உள்ளூர் நிலவரம் நம் உள்ளங்கையில் இருக்கிறதல்லவா. சகோதரத்துவத்தை வலியுறுத்தும் நம் திருசபையில் எத்தனை கோஷ்டிகள், பிரிவினைகள். பதவிக்காக ஆயுத பலத்தையும், பண பலத்தையும், ஆதிகாரம், ஜாதி இத்தியாதிகளை பயன் படுத்தாத கோஷ்டிகள் நம் திருசபையில் எத்தனை? ஊழல் இல்லாத திருச்சபையோ அதன் நிறுவனமோ இல்லை என்று நம்மால் உறுதியாக சொல்லமுடியுமா? அல்லது ஒரு வரியில் கிறிஸ்துவின் சரிரமாகிய திருச்சபை – நிறுவனம் என்று தான் நம்மால் சொல்ல முடியுமா?
இது இப்படி இருக்க சபை கூடி வருதலை சற்று கவனிப்போம். தவறாமல் ஆராதனையில் கலந்துக்கொள்ளுவோர் எண்ணிக்கையை நாம் மேலே பார்த்தோம். குடும்பமாக ஆராதனையில் கலந்துக்கொள்ளுவோர் சற்றேறக் குறைய 20% என்பது ஒரு வருத்தமான கணக்கு. ஒரு சில நகர் புற பெரிய சபைகளை தவிர மற்ற திருச்சபைகளின் நிலைகளை சொல்லித்தெரியவேண்டியதில்லை. இன்று வளர்ச்சி என்பது கட்டிடங்களில் மதிப்பீடுகள் பொருத்து என்று பலர் நம்புகிறார்கள். திருச்சபைகளில் பணமே நடு நாயகம். பணமே பத்தும் செய்கிறது திருசபையில். ஒருவருக்கு அவசரம் என்றால் முதல் பலி சபை ஆராதனை தான். உண்மையான ஆராதனையின் அவசியம் எத்தனை பேருக்கு தெரியும். அது மாத்திரமல்ல இங்கு தான் கேட்பார் எவருமில்லை. பொதுவான வழக்கச் சொல்லொன்று உண்டு அது பூக்கடைக்கு விளம்பரம் அவசியம் இல்லை என்பார்கள். அதுபோல் ஆலயம் தவறாமை ஒரு உன்னத அனுபவம். அதை உருவாக்குவது திருச்சபையின் கடமை. குடிநீருக்காக ஞாயிறு ஆராதனை கட், குடும்ப விசேஷங்கள் என்றால் ஆராதனை கட் ஆனால் ஆராதனைக்காக எதுவும் இன்றளவில் எதுவும் கட் ஆனது இல்லை. ஆனால் நம் அனைவருக்கும் அதிகம் நினைவில் இருக்கும் வசனம் “முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் கூடக்கொடுக்கப்படும்”. மத்தேயு : 6 : 33 இந்த வசனத்தின் அர்த்தத்தை புரிந்தவர்கள் ஆலயத்தை தவறவிடமாட்டார்கள்.
ஆகவே வஞ்சிக்கப் படாதிருப்போம், வார்த்தையை கவனிப்போம். ஜெபம் ஜெயம் தரும், அதில் மாற்று கருத்தில்லை. ஆனால் ஜெயம் எப்போது வரும் என்ற கேள்வி நமக்குள் எழவேண்டும். வெறுமனே கர்த்தாவே, கர்த்தாவே என்பவர்களைப் பார்த்து நான் உங்களை அறியேன் என்பார், ஜாக்கிரதை. நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையையும் செம்மையும்மானத்தைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும் படிக்கு, நான் உனக்கு கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள். உபாகமம் : 12 : 28 என்று அவர் தம் வார்த்தைகளை நமக்கு சுட்டிக்காட்டுகிறார். அப்படியே, “ நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு, நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.உபாகமம் : 12 : 32
எனவே, நாம் என்ன செய்யப்போகிறோம். இன்றைய சூழ்நிலையை மனதில் கொண்டு வெகுண்டெழப் போகிறோமா? அல்லது இதுவும் கடந்து போகும் என்றே இருக்கப்போகிறோமா? இன்று அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளின் நிலைகளை கருத்தில் கொள்ளுவது நமக்கு நல்லது. ஏனென்றால், ஆப்படியல்ல வென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப் போவீர்கள் என்றார். லூக்கா : 13 : 5
ஜெபம் : கிருபையும் மாகா பரிசுத்தமுள்ள எங்கள் அன்பின் ஆண்டவரே, உம்மை உயர்த்துகிறோம், மகிமைப் படுத்துகிறோம், ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். எங்களை கண்ணின் மணிபோல் காத்து வருபவரே உம்மை துதிக்கிறோம். உலகம் ஓரு பேரழிவை சந்தித்து அதில் மக்கள் அனைவரும் தத்தளிக்கிறோம் என்பதை நினைத்தருளும். மரணக் கண்ணியிலிருந்து எங்களை விடுவித்தருளும். தேசத்திற்கு ஷேமத்தை சமாதானத்தையும் தந்தருளும். உமது வழிகளை அறிந்து, அவைகளின் படி நடக்க உதவிபுரியும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம் எங்கள் பிதாவே, ஆமென்.
சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பனின் குரல் ஊழியங்கள்,இராணிப்பேட்டை