Disobedience
Let us all pray! மீறுதல் தந்த விளைவு ...... சுவி. பாபு T தாமஸ்
என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள் ; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன். எரேமியா : 11:3
ஆதி மனிதன் ஆதாம் தேவனால் தமது சாயலின்படியும், ரூபத்தின்படியும் பூமியில் படைக்கப்பட்ட முதல் மனிதன். தேவன் ஆதாமிற்கு வேண்டிய அனைத்தையும் கொடுத்திருந்தார். இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஆதாம் கேட்காமலே அவனுக்கு தேவையான அனைத்தையும் தந்தார் என்று சொல்வதே பொருத்தமாய் இருக்கும்.
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். தோட்டத்திற்கு த் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கே இருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. ஆதியாகமம் : 2 : 8-10
தேவன் ஆதாமை பூமியில் உருவாகுவதற்கு முன்பாகவே அவன் வாழ்வதற்கான இடம், அதாவது தோட்டத்தை உண்டாக்கினார். அந்த தோட்டத்திற்கு ஏதேன் என்று பெயர், ஏதேன் என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள். அந்த தோட்டத்தில் ஆதாமுக்கான உணவு தரும் கனிவிருட்சங்கள் யாவையும் உருவாக்கி, அவைகள் பலன் கொடுக்கத்தக்கதான நிலையில் அவைகளை வைத்திருந்தார். அந்த கனிகள் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமானதாகவும் இருக்கும்படியாக உருவாக்கி ஆயத்தமாய் வைத்திருந்தார். மாத்திரமல்ல அந்த தோட்டம் உயிரோட்டத்துடன் இருக்கவேண்டி நீர் வளத்தை நதிக்கொண்டு நிரப்பி ஆறுகள் மூலமாக பிரித்து சுற்றி ஓடவிடுவதன் மூலம் வருடம் முழுவதும் பசுமை வனப்பு செழிப்பு என தோட்டத்தில் வாசம் செய்யப்போகிற ஆதாமின் ரம்மியமான தேவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைத்தார்.
ஏதேன் என்பதற்கு மகிழ்ச்சி என்று சொன்னோம் அல்லவா. மகிழ்ச்சி என்றால் நிச்சயம் அங்கே ரம்மியமான சூழல் இருந்திருக்கவேண்டும். அழகு, குளிர்ச்சி, மெல்லிய தென்றலில் கலந்த நருமன் கமழும் காற்று, காற்றில் தவழும் சாரல் இடையிடையே சூரியக்கதிர்களின் உஷ்ணம், இன்னிசை எனும் இனிய இசை தரும் ஓசை இவை அனைத்தும் தரும் சுகமே மகிழ்ச்சி. சுவாசிக்க நல்லக் காற்று, பசிக்கு புசிக்க சத்தான பதார்த்தங்கள், அசதிக்கு நல்ல உறக்கம், உறக்கத்திற்கான குளிர்ச்சியான சூழல். தோட்டம் என்றாலே மரம்கள், செடிகள், கொடிகள், புல், வண்ண வண்ண நறுமண பூகள், நீர்நிலைகள், ஓடைகள் இவைகள் தான் நினைவுக்கு வரும்.
மரங்கள் என்றாலே பறவைகள், கொடிகளுக்கு குரங்கினங்கள், செடிகள் பூக்கள் என்றால் வண்டினம் வண்ணத்து பூச்சிகளின் இனங்கள், புல் என்றால் மான்கள் மற்றும் பிற கால்நடை காட்டுவகை விலங்கினங்கள், நீர் நிலைகளில் அழகிய மீன்கள், நீந்தும் பறவை இனங்கள், அனைத்தும் சேர்ந்த தோட்டம் என்றால் சொல்லவேண்டுமா என்ன. இவை அனைத்தும் கொண்ட சொர்க்க பூமிதான் ஆதாம் வாழ தேவனால் உருவாக்கப்பட்ட ஏதேன் தோட்டம். தோட்டத்தில் ஆதாமுக்கு தேவையான எல்லாம் இருந்தும் அவன் தனிமையாய் இருப்பது மகிழ்ச்சியை தராதென்று எண்ணி ஒரு ஏற்ற துணையாகிய ஏவாளையும் உருவாக்கி தந்தார். இத்தனையும் தேவன் ஆதாமுக்காக உண்டாக்கினர். தாம் உருவாக்கின அனைத்தையும் ஆதாமுக்கு காண்பித்து நூதனமான ஒரு காரியத்தையும் செய்தார். அது என்ன வென்றால் தேவன் படைத்த அனைத்து ஜீவ ஜந்துக்களுக்கும் ஆதாம் பெயர் சூட்டிய அற்புத செயல் தான் அது.
தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டு வந்தார்; அந்தந்த ஜீவ ஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. ஆதியாகமம் 2 :18 பொதுவாக பெயர்கள் அனைத்தும் காரணப்பெயர்கள் என்பது நமக்குத் தெரியும். இதற்கு சான்றுகள் வேதாகமத்தில் உண்டு. வேதத்தில் உள்ள பெயர்கள் அனைத்தும் காரணப்பெர்யர்களே, குறிப்பாக, "இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினப்படியால், உன் பேர் ஆபிரகாம் எனப்படும்". ஆதியாகமம் : 17:5. அதேப்போல் ஒரு ஊருக்கான காரணப்பெயரும் காணமுடியும், அந்நாளில் தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். அதற்கு சேபா என்று பேரிட்டான். ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள் வரைக்கும் பெயர்செபா என்னப்படுகிறது. ஆதியாகமம்: 26 : 32-33. அது போலவே நம் வழக்கத்தில், நமது முன்னோர்கள் தங்கள் வசிப்பிடப்பகுதிகளுக்கு இட்டப்பெயர்களும் அப்படியாக நம் ஊர்களுக்கு அவர்கள் இட்ட காரணப்பெயர்கள் இன்றளவும் பிரசித்தம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த முறையில் தான் ஆதாமும் பெயரிட்டிருக்கமுடியும் காரணம் தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது என்று கண்டு அதற்கு சர்ப்பம் என்று பெயரிட்டிருக்கவேண்டும்.
ஆதாம் சகல ஜீவ ராசிகளுக்கும் பெயர் வைத்ததாக வேதம் சாட்சி பகருகிறது, மாத்திரமல்ல அந்த உரிமையை தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு வழங்கினார் என்றும் அறிகிறோம். அப்படியானால் ஒன்று நமக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் அது ஆதாமின் பண்பட்ட அறிவுத்திறன் பெற்ற மனிதனாக விளங்கினான் என்பதாகும். ஆதாம் ஒரு முழு ஆற்றல் பெற்ற மனிதன். பொதுவாக மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வளர வளர உடல் வளர்ச்சியோடு அறிவும் கூடவே வளர்கிறதை நாம் உணர்ந்திருக்கிறோம். அந்த அறிவு சூழ்நிலை சார்ந்த தான பொது அறிவு, கல்வி அறிவு, அனுபவ அறிவு எனும் இவைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆனால் ஆதாமோ இந்த சூழலில் இல்லாதப்போதும் அவை அனைத்தையும் ஒருங்கே பெற்ற பூரண புருஷனாக ஆதாம் காணப்பட்டான். அதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு உயிரினத்தையும் அதன் தன்மையையும் ஆதாம் நான்கு ஆராய்ந்து அறிந்திருக்கவேண்டும் அப்போதுதான் அவைகளின் தன்மைகளுக்கேற்ப பெயர் வைத்திருக்க சாத்தியமாகும். இதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. நாம் முன்பே பார்த்தது போல மனுஷனை தேவன் படைத்தது ஆளுகைக்காக என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே தான் மேற்சொன்ன அனைத்தையும் தேவன் நடைமுறை படுத்தினார்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். ஆதியாகமம் : 2 : 15 அப்படியானால் பூமியானது மனிதனின் பாதுக்காப்பில் இருந்தது மாத்திரமல்ல பூமியை பண்படுத்தி தன் தேவையை பூர்த்திச் செய்துக் கொள்ளும் அதிகாரமும் பெற்றவனாக மனிதன் விளங்கினான். அதே நேரத்தில் மனிதன், தேவன் வகுத்த விதிக்கு உட்பட்டு செயல்படுவது மிக அவசியம்.
இத்துணை இருந்தும், எல்லாம் அறிந்திருந்தும் மீறுதல் எனும் பாவம் மனுஷன் விழ்ச்சிக்கு வித்திட்டது. பாவத்தின் சம்பளம் மரணம். ரோமர் : 6:23 இங்கே தான் மரணம் எனும் அழிவு மனுகுலதிற்குள் வந்தது. தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு எல்லா சவுகரியத்தையும் உருவாக்கிக் கொடுத்தார். எல்லாம் அவனுக்கு நன்மைகேதுவாகவே இருந்தது. அங்கே மரணம் எனும் அழிவு இல்லை. ஆனால் ஆதாம் ஏவாளின் மீறுதல் பாவத்தை பிறப்பித்தது, அந்த பாவம் மரணத்தை மனுஷனுக்குள்ளாக ஜெநிப்பித்தது. செய்யத் தக்கவை இன்னது என்றும் செய்யத் தகாதவை இன்னது என்று தாம் படைத்த மனுவுக்கு வெளிப்படுத்தியிருந்தார். அதன்படி தோட்டத்தில் உள்ள அனைத்தையும் ஆண்டுக்கொள்ளவும் அனுபவிக்கவும் கையளித்திருந்தார். இதில் வாழ்வின் மையமாய் விளங்கும் இரண்டில் ஒன்றை மனிதன் தேர்ந்தெடுக்கும் உரிமையை அவனிடமே விட்டு வைத்தார்.
ஏதேன் தோட்டத்தின் நடுவில் இரண்டு விருட்சங்கள் இருந்ததாக பரிசுத்த வேதாகமம் நமக்கு சொல்லுகிறது. ஒன்று ஜீவ விருட்சம் மற்றொன்று நன்மை தீமை அறியத்தக்க விருட்சம். இவ் விரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதால் வரும் பின் விளைவுகளையும் தெளிவுப்படுத்தி இருந்தார். மனுஷன் ஜீவ விருட்சத்தை தேர்ந்தெடுப்பானாகில் மரணமே இல்லா நித்திய நித்திய வாழ்வு, மாத்திரமல்ல தேவன் மனுஷனுக்கு ஏதேன் எனும் சொர்க்கத்தை கொடுத்திருந்தார். அதில் உள்ள அனைத்தும் அவனுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. அவனுக்கு சேவகம் செய்ய வானத்திலும், சமுத்திரத்திலும், பூமியில் வாழும் சகல ஜீவ ஜந்துக்களும் இருந்தது. ஆதாமும் ஏவாளும் ஒரு ராஜாங்கமே நடத்திக்கொண்டிருந்தார்கள். தேவனாகிய கர்த்தர் அவர்கள் நடுவில் உறவாடி, உலாவிக்கொண்டிருந்தார்.
பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். ஆதியாகமம் : 3 : 8
ஒருவேளை ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை தேர்வு செய்யும் பட்சத்தில் விளையும் விளைவுகளை தேவன் அவர்கள் அறியச் செய்திருந்தார். அதுதான் மரணம் எனும் பயங்கரம். மரணம் என்றால் அழிவு, போராட்டம். நன்மை இன்னது என்றும் தீமை இன்னது எனும் அறிவைக்கொடுக்கும் விருட்சம் ஆதலால், இதில் சுயமாய் சிந்திக்கும் நிலைப்பாடு அதினால் வரும் பலா பலன் அனைத்திற்கும் பொறுப்பாக வேண்டும் என்பதை அறிய தவறினான் மனிதன். இது ஒரு நிறுவன உயர் அதிகாரிக்கும், நிறுவனருக்கும் உள்ள வேறுபாடுகள் போன்றது. ஒரு நிறுவனம் அதன் தலைவரால் எடுக்கப்படும் முடிவுகளால் நன்மையையும் தீமையும் நேரலாம் அதன் தாக்கம் நிறுவனரையே சாரும் ஆனால் நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கோ அவருக்கு உரியது ஒருநாளும் தவறாது என்பது போல ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தோட்டத்தில் அவர்கள் தேவைகள் அனைத்தும் ஏற்ற வேளையில் அவர்கள் தேவைகளுக்கு ஏற்ப கிடைத்து வந்தது. ஆனால் நன்மை தீமை அறியத்தக்கவர்களான படியால் அதனால் விளையும் விளைவுகளை எதிர் கொள்ளக்கூடியவர்களாக கருதப்படுபவர்களானார்கள்.
இதைத் தான் வேதாகமும் உறுதிச் செய்கிறது. பின்பு தேவனாகிய கர்த்தர் ; இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவனைப் போல் ஆனான். ஆதியாகமம் : 3 : 22 அப்படியானால் மனிதன் சுயமாய் சிந்தித்து செயல் நிலைக்கு தள்ளப்பட்டப்படியினாலே மனிதன் தான் வாழ்ந்து வந்த தோட்டத்திலிருந்தும் தள்ளப்பட்டான். இதுவே மீறுதலினால் விளைந்த விளைவாகும். அவர் மனிதனைத் துரத்தி விட்டு, ஜீவ விருட்சத்திற்குப் போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார். ஆதியாகமம் : 3 : 24 தேவன் மனிதனுக்கு கொடுத்திருந்த உரிமையை அவன் துஷ்பிரயோகம் பிரயோகம் செய்தான். தேவன் மனிதனுக்கு ஆளும் உரிமையை கொடுத்திருந்தார். சகலமும் அவனுக்கு கீழ்ப் பட்டிருந்தது. ஆனால் மனிதனோ சர்ப்பத்தின் நயவஞ்சகமான பேச்சில் மதி மயங்கி, மனிதனின் ஆளுமைக்கு கீழ்ப் பட்டிருந்த ஜந்துவின் ஆலோசனைக்கு செவி சாய்த்தப் படியினால் மனிதன் தன் மேன்மையை இழந்தான். அழியாத சாபத்தை சுவிகரித்துக்கொண்டான்.
"அவர் ஸ்திரீயை நோக்கி, நீ கர்பவதியாயிருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருகப் பண்ணுவேன், வேதனையோடே பிள்ளை பெறுவாய். உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுக்கொள்ளுவான் என்றார். பின்பு அவர் ஆதாமை நோக்கி, நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிக் கொடுத்து, புசிக்க வேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும். வெளியின் பயிர் வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். ஆதியாகமம் : 3 : 16-19
மனிதனின் இந்த ஆகாத முடிவிற்கு மனிதனே காரணம். அவன் படைக்கப்பட்டப்போது சகல சௌகரியமும், சௌபாக்கியமும் ஒருங்கே பெற்றவனாக ஆளுமையோடு உண்டாக்கப்பட்டான். தன் நிலை தடுமாறி விதிகளை மீறினப்படியினால் சகலத்தையும் இழந்து மண்ணோடு ஒப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுப் போனான். மரணமில்லா நிலையான வாழ்வை பெற்று வந்தவன் நிலையற்ற வாழ்வோடு அலைகிறவனானான்.
சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை .