Do's and Don'ts
Let us all pray! செய்யத்தக்கவை செய்யத்தகாதவை - சுவி.பாபு T தாமஸ் நான் உபத்திரவப்பட்டது நல்லது, அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். சங்கிதம் : 119 : 72
உபத்திரவம் நல்லது, ஏன் அதினால் நாம் சரியாய் செய்ய வேண்டியதை கற்றுக்கொள்ளுகிறோம் என்ற உண்மையைத்தான் மேலே குறிக்கப்பட்ட வசனம் அல்லது வார்த்தைகள் நமக்கு உணர்த்துகிறது. இன்னுமொரு உண்மையையும் நாம் விளங்கிக்கொள்ள முடியும் அதாவது நாம் சரியாய் செய்ய வேண்டியதை செய்ய மறுத்ததாலோ அல்லது செய்யத் தவறியதாலோ மட்டுமே நாம் உபத்திரவப் பட்டோம் என்னும் உண்மையை நன்கு உணரமுடிகிறது.
அப்படியானால் நாம் நம் வாழ்க்கைப் பயணத்தில் அநேக தோல்விகளை சந்தித்திருப்போம். அவைகள் அன்றாடம் நம்மை கடந்துக்கொண்டே இருக்கும். தோல்விக்கு மறுபெயர் துன்பம்.தோல்விகள் எப்போதும் நமக்கு கசந்து தான் காணப்படும். தோல்விகளை யாரும் விரும்புவதில்லை. தோல்விகளை கண்டு துவண்டவர்களும், வாழ்கையை தொலைதவர்களும் ஏராளம். தோல்வியின் விரக்தியில் வாழ்கையை முடித்துக்கொண்டவர்களும் அதிகம். வாழ்கையை வாழ்வதற்க்கே நாம் அனைவரும் இந்த பூமியில் பிறந்தோம். ஆனால் தோல்வியை காரணம் காட்டி வாழ்க்கையை வெறுத்து மரணத்தை விரும்புகிறவர்கள் தொகை அதிகம்..
தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பதை ஏனோ ஏராளமானோர் ஏற்க்க மறுக்கிறார்கள். மண் புழுவை நாம் யாவரும் அறிவோம். மண் புழு பார்வைக்கு அருவருப்பானது. கையால் தொட பலருக்கு பயம். அநேகர் அதை தொட கூட விரும்ப மாட்டார்கள். ஆனால் உண்மை யாதெனில் மண் புழு விவசாயிகளின் உற்ற நண்பனாக போற்றப்படுகிறது. இதை போலத்தான் தோல்விகள் நம் ஒவ்வொருவருக்கும் பேருதவியாக இருக்கிறது. அது நம் ஒவ்வொருவரின் உற்ற நண்பன் என்றால் மிகையல்ல. வைரம் பட்டைத் தீட்ட தீட்ட மதிப்பு கூடுவதுபோல் தோல்விகள் தான் நம்மை மேலும் கூர்மையாக்கி மெருகேற்றுகிறது.
பொதுவாக தோல்வியடைந்தவர்கள் தங்கள் தோல்விகளுக்கு அவர்கள் கற்பிக்கும் காரணம் அவன், அவள், அது எனும் ரீதியில் புறம்பானவைகளையே முன்னிறுத்துவது வாடிக்கை. வேடிக்கை என்ன வென்றால் அவர்கள் தோல்விக்கு தாங்களே காரணம் என்ற உண்மையை மனம் ஒருநாளும் ஒப்புக்கொள்ள முன் வருவதே இல்லை. இன்றைக்கு பெரும் பாலான மரணங்களுக்கு வாழ்கையில் ஏற்பட்ட தோல்விகளே காரணமாக சொல்லுகிறோம். ஆனால் எல்லா மரணங்களுக்கும் காரணம், நம்பிக்கையின்மையே அடிப்படை காரணியாகும். நம்பிக்கைன்மை என்பது யார் மீது என்ற கேள்வி நமக்கு எழுவது இயல்பு. முதலாவது நம்மை நாம் நம்பவேண்டும். அதற்குப் பெயர் தான் தன்னம்பிக்கை. இந்த தன்னம்பிக்கை தான் ஒவ்வொருவருக்கும் மிக அவசியமான ஒன்று.
நாம் மேலே குறிப்பிட்டது போல ஒருவரின் தோல்விக்கு மற்றொருவரை அல்லது மற்றொன்றை குறிப்பிடுவது, பழி கூறுவது மனித இயல்பு. ஆகவே எந்த தோல்வியாளருக்கும் தனிநபர் மீதோ, சூழ்நிலை மீதோ அல்லது சமூகத்தின் மீதோ ஏற்படும் அந்த எண்ணமே கசப்புணர்வுவை உண்டாக்கும். அதுவே அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கைன்மையை பிறப்பிக்கும், காரணம் தற்போதைய சூழ்நிலைக்கு காரணமானவர்கள் அது யாராக இருந்தாலும் எப்போதும் தனக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புவார்கள். இந்த எண்ணம் தான் ஒருவரின் தற்கொலை முயற்சிக்கு காரணமாக அமைகிறது.
மாறாக அதே நபர் தன் விழ்ச்சிக்கு தானே காரணம் என்று நம்புவாரானால், தன் தவறுக்கு காரணத்தை தேடுவார். அந்த குறையை நிவிர்த்தி செய்வதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும் எனும் வேட்கை அவருக்குள் பிறக்கும். அதுவே தன்னம்பிக்கையை கொடுக்கும். அவருக்கு யாரும் தடையில்லை. ஒருவரும் இடையூறும் இல்லை. தனக்கு, தானே காரணம் என்று நம்பும் ஒருவரை மிக எளிதில் உற்சாகப்படுத்துவது சாதிப்பவராக மாற்றுவது சாத்தியமே.
தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். ஆதியாகமம் : 2 : 8 - 9
மனுஷனை உண்டாக்கின கர்த்தர் அவனை தம் சாயலில் உருவாக்கினார். மாத்திரமல்ல அவனுக்கு ஆளுகையை கொடுத்து அதிகாரத்தையும் கொடுத்தார். அதேநேரத்தில் மனுஷனின் தேவைகளை அறிந்து அவனுக்கு தேவையான சௌகரியங்களையும் ஏற்படுத்தி தருவதையும் மேற்சொன்ன வசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது. அதாவது மனுஷனின் வசிப்பிடத்தையும், அவன் உணவு தேவையை பூர்த்திச் செய்யும் வண்ணமாக ஒரு தோட்டத்தை உண்டாக்கி அதில் சகல கனி விருட்சங்களையும் ஏற்படுத்தி அதிலே மனுஷனை வைத்தார். தோட்டத்தில் மனுஷனை வைத்த ஆண்டவர் அவனுக்கு சொன்னது ஒன்று தான் அது தான் செய்யத்தக்கவை செய்யத்தாகாதவை.
சகலத்தையும் படைத்த ஆண்டவர் அவை அனைத்தையும் மனுஷனுக்கு கீழ்ப்படுத்தி ஆண்டுக்கொள் என்று சொன்னார், இதுவே மனுஷன் செய்யத்தக்கவை. செய்யத்தகாதவையோ என்னவென்றால், எல்லாம் மனுஷனுக்கு கீழ் பட்டிருந்தாலும் மனுஷனோ தேவனுக்கு கீழ்ப்பட்டவன் என்பதாகும். ஒரு நிறுவனம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம், அந்த நிறுவனத்தின் தலைவர் அந்த நிறுவனத்தை பராமரிக்க ஒரு அதிகாரியை நியமித்து அனைத்தையும் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்து பராமரிக்கச் செய்கிறார் என்று வைத்துக்கொண்டால் அந்த அதிகாரியோ நிறுவனருக்கு கீழ்ப்பட்டவர் என்று தானே பொருள். அது போலவே மனிதன் தேவனுக்கு கீழ்ப்பட்டவன் என்பது மிகத் தெளிவு. ஆகவே செய்யத்தகாதவை யாதெனில் மனிதன் தன் சுய புத்தியின் மேல் சாராமல் தேவனை சார்ந்து வாழ்வதாகும்.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி ; நீ தோட்டத்தில் உள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம், ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை ப் புசிக்கவேண்டாம், அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் : 2:16-17. எனவே செய்யத்தகாதவையின் விளைவு மரணம், அழிவு என்பதை பரிசுத்த வேதாகமம் தெளிவு படுத்துவதை காணலாம்.
நோக்கம் :
தேவன் உலகத்தைப் படைத்தார் மனுவுக்காக, மனுஷனைப் படைத்தார் தனை வணங்க எனும் கூற்றுக்கு இணங்க எல்லா படைப்பிற்கும் ஒரு நோக்கம் உண்டு. நோக்கம் இல்லாமல் எதுவும் இல்லை. ஆகவே மனிதர்களாகிய நம் அனைவர்க்கும் வாழ்வில் நோக்கம் உண்டு. அந்த நோக்கத்தை படைத்த தேவன் மாத்திரம் அறிவார். பெற்றோர் பிள்ளைகளுக்கு அதிகாரி. பிள்ளைகளுக்கான நோக்கத்தையும் அவரவர் பெற்றோரே அறிவார். அது போலவே நம்மை உண்டாக்கின கர்த்தர் நமக்கான நோக்கத்தையும் அறிந்திருக்கிறார். நாம் நம் நோக்கத்தை அறியாமல் எடுக்கும் எந்த பிரயாசமும் விருதாவே. எனவே முதலாவது நாம் நம் நோக்கத்தை அறிவதே அனைவரின் பிரதானப் பணியாகும்.
சுவி. பாபு T தாமஸ், Our Shepherd's Voice Foundation, Ranipet.