top of page

We born to rule

ஆளப்பிறந்தவர்கள் நாம் சுவி.பாபு T தாமஸ்

பின்பு தேவன் : நமது சாயலாகவும் , நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக ; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் , ஆகாயத்துப் பறவை களையும் , மிருகஜீவன்களையும் , பூமியனைத்தையும் , பூமியின் மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். ஆதியாகமம் : 1 : 26

நாம் ஆளப்பிறந்தவர்கள் என்று வேதம் தெளிவாக கூறுகிறது. நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவும் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவும் இந்த வையகத்தில் பிறந்திருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் என்று நோக்கம் இருக்கிறது. நாம் அனைவரும் ஒரு திட்டத்தோடும் தீர்மானத்தோடும் அழகாக வடிவமைக்கப்பட்டு தாயின் கருவில் உருவானவர்கள். ஆகவே தான் நாம் அனைவரும் தேவ சாயலில் படைக்கப்பட்டவர்கள். மேலே கொடுக்கப்ப் பட்டுள்ள வசனத்தில் தெளிவாக ஒரு செய்தி காணப்படுகிறது என்பதை நாம் கவனிக்கவேண்டும். 1. சமுத்திரம் 2, ஆகாயம் 3. பூமி இம் மூன்றையும் ஆளக்கடவர்கள் என்பது தான் அந்த செய்தி. ஆளுகை நம்முடைய உரிமை, காரணம் நாம் அனைவரும் தேவனுடையவர்கள். அதற்கு அடையாளமாகத்தான் நாம் தேவச் சாயலிலும், அவருடைய ரூபத்திலும் படைக்கப்பட்டிருக்கிறோம். இது தான் அடிப்படை, இந்த அடிப்படையை நாம் உணரவேண்டும், இதை நம்பவும் வேண்டும். இந்த நம்பிக்கைதான் நமக்கு பல உண்மைகளை வெளிப்படுத்தும். அந்த வெளிப்பாடே நமக்கு நோக்கத்தையும், அதை நோக்கிய பயணத்தையும் உறுதிப்படுத்தும்.

சமுத்திரம் :

உலகம் பெரும் பகுதி தண்ணீரால் சூழப்பட்ட தீபகற்ப பகுதிகள் ஆகும். முழு அண்டமும் முன்று பெரும் பகுதிகளாக பிரிக்க முடியும். அவை 1. வானம் 2. பூமி 3. சமுத்திரம் , ஆக இந்த முன்றின் மீதுமான ஆளுகையை நம் கரங்களில் கொடுத்திருக்கிறார் கர்த்தர். சமுத்திரத்தின் மீதான ஆளுகை என்பது சமுத்திரமும் அதைச் சார்ந்த யாவற்றின் மீதான ஆளுகையைகுறிப்பதாகும். சமுத்திரம் பல்வேறு வளங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அவை யாவையும் மனித இனம் பயன்படுத்தி மேன்மையாய் பலுகி பெருகி விருத்தியடைய வேண்டும் என்று உணர்ந்த தேவன் மனித படைப்பாகிய பிரதானப் படைப்பிற்கு சமுத்திரமும் அதை சார்ந்தவைகளையும் கீழ்ப்படுத்தி ஆசீர்வதித்திருக்கிறார். சமுத்திரம் என்பதே ஒரு மிகப்பெரிய உலகத்தை போன்றது. சமுத்திரத்தின் ஆழத்தை யாரும் இதுவரை கண்டதில்லை. சமுத்திரத்தில் ஏராளமான செல்வங்கள் கொட்டிக்கிடக்கிறது. இந்த செல்வக் களஞ்சியத்தை மனிதன் பல்வேறு வடிவத்தில் பயன்படுத்தி வருகிறான்.

கடல் வழிப் போக்குவரத்து :

கடல் வழி போக்குவரத்து என்பது சர்வதேச வாணிபத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கிவருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சர்வதேச மொத்த வாணிபத்தில் கடல் வழி வாணிபம் 90% ஆகும். இதற்கு காரணம் மிக குறைவான பொருட் செலவில் இலட்ச கணக்கான மெட்ரிக் டன் களில் உற்பத்தி பொருட்களையோ, மூலப்பொருள்களையோ பல ஆயிர கணக்கான மைல்களுக்கப்பால் உள்ள தேசங்களுக்கோ, பகுதிகளுக்கோ கடல் மார்க்கமாக கொண்டு சேர்க்க முடியும். தேசங்களை இணைப்பதிலும், அவ்வாறு தேசங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் கடல் வழி சாதகமாக விளங்குகிறது. ஆக சமுத்திரம் கடல் போக்குவரத்திற்கு மட்டும் உதவுவது என்று நின்று விடாமல், கடல் வாழ் உயிரினம் மற்றும் கடல் சார்ந்த அனைத்தும் மக்களுக்கு பேருதவி புரிகிறதென்றால் மிகையல்ல. வேதாகமத்தில் ஒரு அழகான சம்பவம் ஒன்று காணப்படுகிறது. அது மீனவர்களான பேதுருவும், மற்றவர்களும் 153 பெரிய மீன்கள் பிடித்த அறிய சம்பவம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மீன் வளம் :

இயேசு கிறிஸ்துவானவர் கெனேசரேத்க் கடலருகே நின்றப் போது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையில் நின்ற இரண்டு படகுகளைக் கண்டார். மீன் பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக் கொண்டிருந்தார்கள். லூக்கா : 5 :1 -2 அவர் போதகம் பண்ணி முடிந்த பின்பு சிமோனை நோக்கி ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்கு சீமோன் : ஐயரே இராமுழுதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை, ஆகிலும் உம்முடைய வார்த்தையின் படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். லூக்கா 5 : 4 -6

இந்த சம்பவம் நமக்கு ஒரு செய்தி சொல்லுகிறது. அவர்கள் பிறவி மீனவர்கள், கடல் பகுதிக்கு அருகாமையில் வாழ்வதால் அவர்கள் தொழிலாக இருக்கலாம். ஆகவே அவர்கள் மீன் பிடிப்புத் தொழிலின் நுட்பம், தொழில் சூட்சமங்கள் அனைத்திலும் நிச்சயமாக அத்துப்படியாக தான் இருக்கவேண்டும். அப்படி இருந்தும் இராமுழுதும் பிரயாசம் செய்தும் ஒன்றும் அவர்களுக்கு அகப்படவில்லை. ஆண்டவர் அவர்களைப்பார்த்து சொல்லுகிறார் : சோர்ந்து போகாதே, கடல் உங்களுக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது ஆகவே ஆழத்தில் தள்ளிக்கொண்டு போய் மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளை போடுங்கள் என்றார். அவர்கள் செய்தது என்ன ? கீழ்ப்படிந்தார்கள் அவ்வளவு தான், பலன் வெற்றி. பெரும்பாலான கடல் சார்ந்த நாடுகளின் பொருளாதாராம் கடல் சார்ந்ததாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக மீன் பிடி தொழிலே முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் மிகையல்ல. ஒரு கணக்கின்படி 2016 ஆம் ஆண்டில் உலகளாவிய மொத்த பிடிப்பு மீன் உற்பத்தி 90.9 மில்லியன் டன்களாகும்.

உப்பு :

அதே போல் 2016 ஆம் ஆண்டில் மட்டும் உலகளாவிய மொத்த உப்பு உற்பத்தி 255 மில்லியன் டன்கள் என்றும் ஆய்வுகள் கூறுகிறது. இந்த உப்பும் நமக்கு கடலே கொடுக்கிறது. உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பது வழக்கச் சொல். அப்படிப்பட்ட அறிய அத்தியாவசிய உப்பு கடல் தரும் பொக்கிஷம். இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு "NaCl" என வேதியலில் குறிக்கப்படுகிறது. இந்த உப்பு ருசிக்காக மட்டும் பயன்படுவதல்ல அதோடு பொருளை பதப்படுத்தவும் பாதுகாக்கவும் பயன் படுகிறது. கடல் நீரில் உப்பு மிக அதிக அளவில் காணப்படுகிறது. திறந்தவெளி கடலில் உள்ள கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது.

மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும்.பொதுவாக உப்பு உயிர்வாழ்வதற்கு மிகவும் முக்கியமான ஒரு கனிமம் ஆகும். உப்பு என்பது அடிப்படை மனித சுவைகளில் ஒன்றாகும். விலங்குகளின் திசுக்கள் தாவர திசுக்களை விட அதிகமான உப்பைக் கொண்டுள்ளன. உப்பு என்பது பழமையான மற்றும் எங்கும் நிறைந்த உணவுகளில் பயன்படுத்திய ஒன்றாகும், மற்றும் உப்பேற்றம் என்பது உணவுப் பாதுகாப்பின் ஒரு முக்கிய வழிமுறையாகும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்தும் பழக்கம் மக்களின் வழக்கமாக இருந்து வந்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன. உருமேனியா நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஊற்று நீரை கொதிக்க வைத்து உப்பை பிரித்தெடுத்துள்ளனர். சீனாவிலும் இதே காலகட்டத்தில் உப்பு-உற்பத்திப் பணிகள் நிகழ்ந்திருக்கின்றன. பண்டைய எபிரெயர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், பைசானியர்கள், எகிப்தியர்கள், மற்றும் இந்தியர்கள் போன்ற நாட்டினர் உப்பை பரிசளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். திருமண சீரோடு உப்பை முதன்மைப் படுத்தி வழங்கும் வழக்கம் தொன்று தொட்டு வந்த பழக்கமாகவும் வழக்கத்தில் காணமுடியும். வணிகத்தில் உப்பு முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருந்தது. பரிசுத்த வேதாகமமும் " நீங்கள் பூமிக்கு உப்பயிருக்கிறீர்கள் " மத்தேயு : 5 : 1 3 என்று கூறுகிறது.

கடல்நீர் குடிநீர் :

கடல் நீரை சுத்திகரிப்பு செய்து குடிநீராக பயன் படுத்துவதில் பல தேசங்கள் முனைப்புக் காட்டிவருகிறது. இது மற்றுமொரு மகத்தான பயன் தரும் வழி யாக கடல் நமக்கு காட்சி தருகிறது. குடிநீர் தட்டுப்பாடு பரவலாக அதிகரித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அடிப்படையில் ஜனத்தொகைப் பெருக்கம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. பருவ மழை தொடர்ந்து பொய்த்து வருவதால் நீர் பிடிப்பு ஆதாரமாக திகழும் ஆறுகள், குளங்கள், குட்டைகள், கண்மாய்கள் போன்றவை பெரும்பாலும் எல்லாக் காலங்களிலும் வறண்டே காணப்படுவதால் சரிவர கவனிக்கப்படாமலும் பராமரிப்பு என்பது அறவே நிறுத்தப்பட்டதை காரணம் காட்டி பெரும்பாலான நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு எனும் பெயரால் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டது. மழைக் காலங்களில் பெய்யும் மொத்த மழையின் பெரும் பகுதி கடலைத் தான் சென்று சேருகிறது. ஆகவே குடிநீர் தேவையை அங்கிருந்தே பூர்த்தி செய்யும் கட்டாயம். என்ன செலவு தான் சற்று அதிகம், உப்பு நீரை குடிநீராக மாற்றவேண்டுமல்லவா.

அலை மின் ஆற்றல் :

அலை ஆற்றல் ( Tidal Power ) முலமாக மின் உற்பத்தி செய்ய முடியும் எனும் உக்தியின் வழியாக மக்களின் வாழ்வாதாரத் தேவையை பூர்த்திச் செய்வதின் மூலம் கடலின் பன்முகத்தன்மை விளங்குகிறது. அனல் மின் நிலையங்களை குளிருட்ட பெருமளவு நீர் தேவைபடுவதால் கடல் நீரை க் கொண்டு அத் தேவை முழுவதும் பூர்த்திச் செய்ய முடிகிறது. ஆகவே கடல் நீர் மின் உற்பத்தி சேவையில் தன் பங்களிப்பை வழுங்கி வருகிறது.

மருத்துவம் மற்றும் பிற தொழில் மூலப்பொருள்கள் :

பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாக மனுக்குலத்திற்கு பயன் தருவது போல் கடல் தாவரங்களும் குறிப்பாக கடல் பாசிகள்மருந்தாக பயன்படுகிறது. இன்னும் மருத்துவத்திற்கு தேவையான மூலப்பொருள்கள் கடல் பெருமளவில் நமக்கு தருகிறது. இஸ்ரேல் தேசத்திற்கு சவக்கடல் ஒரு வரப்பிரசாதம். தேசத்தின் மொத்த வருவாயில் சுற்றுலா மூலமான வருவாய் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலும் குறிப்பாக சவக்கடல் மைய மாக கொண்ட சுற்றுலா வருகை முலமாக வருவாய் அதிகம். அதோடு சவக்கடல் மண் அழகு சாதன களிம்பு மற்றும் பொருட்களின் மூலமான வருவாய் இஸ்ரேல் தேச ப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் பிடிக்கிறது. இன்னும் பிற தாதுக்களும் கடல் முலமாக கிடைப்பதால் நம் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு சமுத்திரம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக திகழ்கிறது. இதோடு மாத்திரம் நில்லாமல் முத்து, பவளம் போன்ற ஆபரண கற்களும் பல்வேறு வகையான கனிமங்களும் மனுக்குலத்திற்கு அரிய ஈவாக வழங்கிவருகிறது சமுத்திரம்.

வேதம் நமக்குத் தந்த அந்த ஆசீர்வாதத்தின் அடிப்படையிலே மனிதன் சமுத்திரத்தையும் அதின் பலனையும் ஆளுகிறான் என்பது உண்மையே. தேவன் மனிதனை பார்த்து சமுத்திரத்தின் மச்சங்களை ஆண்டுக்கொள்ளுவாய் என்றார். ஆகவே மனிதன் சமுத்திரத்தில் மச்சங்களை தேடிப்போனான் மேற்க் கூரிய அத்துணை செல்வங்களையும் ஒருங்கே கூடுதலாகப் பெற்று அவையனைத்தையும் ஆண்டு வருகிறான். இப்படி சமுத்திரத்தின் மீது மனிதன் தன் ஆளுகையை செலுத்துவதற்கு அதிகாரம் பெற்றான் என்பது உறுதியாகிறது. மனிதன் கடலின் ஆழங்களில் தடம் பதிக்கத் துவங்கி வெற்றியும் பெற்று வருகிறான். இது தேவன் அவனுக்கு தந்த ஆளுகையின் வரப்பிரசாதம்.

ஆகாயம் :

பறவையை கண்டான் விமானம் படைத்தான். அந்த பறவையை ஆதாரமாக கொண்டு தான் இன்று செவ்வாய் கிரகத்தை கடந்து அதற்கப்பாலும் வலை விரிகிறதை பார்க்கிறோம். ஆகாயம் எனும் அகண்ட வானம் தொலைதொடர்பு தொழில் நுட்பத்தில் மனிதன் கொடிகட்டி பறப்பதற்கு ஆகாயமே ஆதாரம். வானமே எல்லை என்று கேள்விபட்டிருப்போம், ஆனால் வானத்தில் சிறகடிக்க துவங்கிய பின்போ தானோ என்னவோ மனிதனின் கற்பனை எல்லை மீறத் துவங்கவிட்டது. வானத்தில் கூடு கட்டி வசிக்கவே மனித மனம் யாசிக்கிறது. அன்று நிலவை பார்த்து அசைபோட்ட மனம், வயது வந்தப்பின் நிலாவொளியில் காலாற நடந்து கவிதை படித்த மனிதனுக்கு நிலவில் குடி புகவே ஆசை. நிலவைத் தொடர்ந்து செவ்வாய் என்று பட்டியல் நீள, சூரியனையே ஒரு கை பார்க்க துடிக்கிறான் மனிதன். அதி தொலைவில் உள்ள நட்சத்திரங்களுக்கும் விலக்கு இல்லை. மனிதனின் ஆசைக்கு தான் எல்லை ஏது !

வான் வழி :

வான் வழி பயணங்கள் என்பது அதிவிரைவு பயணங்களாக மாறி மனிதன் எட்டு திக்கும் சென்று திரும்புவதற்கு வழிவகை செய்கிறது. உலகத்தை வலம் வருவது என்பது அதிலும் மிக குறுகிய கால அளவில் சாத்தியப்படுத்தியது வான்வழி பயணங்களே. நினைத்தும் பார்க்கமுடியாத தூரத்தை மிக எளிதாக கடக்கக் கூடிய சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியது வான் வழி பயண யுக்திகள். மக்களின் பயணங்களோடு வான் வழி பயணம் நில்லாமல் அத்தியாவசிய பொருட்கள் துவங்கி, சிறிய - பெரிய மற்றும் கனரக பொருட்களையும் வான் வழி முலம் துரித கதியில் இடம் பெயரும் வித்தையில் தேர்ந்தவனாக விளங்குகிறான் மனிதன்.

செயற்கை கோள் :

வானத்தில் உள்ள கோள்களுக்கு பதிலாக செயற்கை கோள்களை அண்ட வெளி வானில் வட்டமடிக்கச் செய்து விட்டான் மனிதன். செயற்கைக்கோள்கள் பல்வேறு துறைகளின் செயல்பாடுக்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ராணுவக் கண்காணிப்பு, உளவு வேலைகள், பூமியை கண்காணிக்கும் வேலைகள், வானியல், பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள், தகவல் பரிமாற்றம், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதில் செல்லுதல் ஆகிய எல்லாவற்றிற்கும் செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கோளப்பாதையில் இருக்கும் விண்வெளி நிலையங்களும் செயற்கைக்கோள்கள் ஆகும். செயற்கைக் கோள்கள் எப்படியான நோக்கங்களுக்காக ஏவப்படுகின்றன என்பவற்றைப் பொறுத்து, செயற்கைக்கோள்களின் கோளப்பாதைகள் அமைக்கப்படுகின்றன. செயற்கைக்கோள்கள் கணினியின் உதவியை கொண்டு, பெரும்பாலும் தாமாகவே சுதந்திரமாகச் செயல்படுகின்றன. செயற்கைக்கோள்களில் பொருத்தப்பட்டுள்ள சிறிய மின்சார உற்பத்தி, வெப்ப கட்டுப்பாடு, தொலைக்கணிப்பு , கோளப்பாதை கட்டுப்பாடு, நடத்தை கட்டுப்பாடு போன்ற சிறு சிறு பணிகளைத் தன்னியக்கமாகச் செய்து விடுகின்றன. இவ்வாறு மனிதன் வேதாகமம் சொல்லுகிறப்படி ஆகாயம் மனிதனால் ஆளப்படுகிறது. இதன் மூலம் மனிதன் பரிணாமித்து வருகிறான் என்பது உண்மையே.

கர்த்தர் மனிதனை ஆசிர்வதிக்கையில், அவனை நோக்கி நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லி ஆசீர்வதித்தார் என்று வேதாகமம் நமக்கு தெளிவாக கூறுகிறது.

"நான் பூமியை உண்டு பண்ணி, நானே அதின் மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன். என் கரங்கள் வானங்களை விரித்தன ; அவைகளின் சர்வ சேனையையும் நான் கட்டளையிட்டேன்". ஏசாயா : 45 : 12 "வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதை குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேர்ப்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது ; நானே கர்த்தர் வேறொருவர் இல்லை". ஏசாயா : 45 : 18

ஆக வேதாகமம் சொல்லுகிறப்படி பூமியை மனிதனின் குடியிருப்புக்காக கொடுத்து அவன் வாழ்விற்கு ஆதரவாக ஆதாரமாக சகலத்தையும் கீழ்ப்படுத்தினார். குறிப்பாக ஒரு சாதாரண மண் புழு என்பது விவசாயிக்கு நண்பன் என்று சொல்லப்படுவதை யாவரும் அறிந்திருக்கிறோம். அதுப்போல பூமியின் சகல ஜீவ ராசிகள் அனைத்தும் மனிதனின் தேவைக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகள் யாவற்றையும் தன் தேவைக்கேற்ப பயன்படுத்தி வாழ்வாங்கு வாழவே தேவன் மனிதனுக்கு தந்த ஆளுகையே ஈவு.

சுவி. பாபு T தாமஸ், Our Shepherd's Voice Foundation, Ranipet.

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page