top of page

Greediness leads to curse

Let us all pray! ஆசையில் விளைந்த சாபம் - சுவி.பாபு T தாமஸ்

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு; நீ எங்கே இருக்கிறாய் என்றார். ஆதியாகமம் : 3 : 9

மீறுதல் தந்த விளைவு மாபெரும் இழப்பு. தேவனோடு சஞ்சரித்த அனுபவம் ஒரு பலம். அந்த பலத்தை ஆதாம் இழந்து வெகு நேரம் ஆயிற்று. குளிர்ச்சியான அந்த பகல் பொழுதில் வழக்கமாய் சந்திக்கும் வேளையில் தேவனாகிய கர்த்தர் ஆதாமை தேடுகிறார், ஆதாமும் ஏவாளும் அவர் சத்தம் கேட்டு ஒளிந்துக்கொண்டார்கள். அவர் அருகில் வருவதற்கோ அவர்களுக்கு துணிவில்லை. அவர்கள் செய்த மாபாதகச் செயல், அவர்களுக்கிருந்த உரிமையை பறித்து விட்டது. அவர்கள் வாழ்ந்த சொர்க்கபுரி இனி அவர்களுக்கு இல்லை. அதுவரை எல்லாம் ஆதாமின் சொல்படி தான், அவன் விருப்பத்திற்கு மாறாக எதுவும் இல்லை. இப்போதோ நிலைமை தலை கீழ், கீழ்ப் படியாமையால் வந்த வினை. தேவனாகிய கர்த்தர் ஆதாமிற்கும் ஏவாளுக்கும் விலாவரியாய் விவரித்து சொல்லியிருந்தார். அவர்களுக்கு அவர் எதையும் மறைக்கவில்லை, அவர்கள் தான் இன்று அவருக்கு முன்பாக வர முடியாமல் மறைந்து நிற்கிறார்கள். அவரை அண்டி வர அவர்களுக்கு தைரியம் இல்லை.

இது ஏவாளும் ஆதாமும் அறியாமல் செய்த தவறில்லை. அந்த சாத்தான் எனும் சர்ப்பமாகிய பாம்பு இவர்களை பகடை காயாய் பயன்படுத்திக்கொண்டது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு தேவனாகிய கர்த்தரை பார்ப்பது. பரிசுத்த தேவனை தரிசிக்க வேண்டுமானால் நமக்குள்ளும் பரிசுத்தம் வேண்டுமே. பரிசுத்தம் என்பது தூய எண்ணம், அதாவது கபடமில்லா மனம். அது இப்போது ஆதாம் ஏவாள் இருவரிடத்திலும் இல்லை, ஆகவே தான் ஆண்டவர் கூப்புடுகிறார், நீ எங்கே இருக்கிறாய். அதற்கு அவன், நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளிந்துக்கொண்டேன் என்றன். ஆதியாகமம் : 3 : 10

அப்பொழுது கர்த்தர், நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார் ? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விளக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். ஆதியாகமம் : 3 : 11 தேவனாகிய கர்த்தர் ஆதாமிடம், நீ வெறுமையானவன் என்று யார் உனக்குச் சொன்னது எல்லா அதிகாரத்தையும் அல்லவா கொடுத்து உன்னை உருவாக்கினேன். எந்த குறைவும் உனக்குள் காணப்படாமல் சகல சவ்பாக்கியதோடல்லவா நீ வாழ்ந்து வந்தாய். அப்படியிருந்தும் நீ நிர்வாணி என்று உணர்வதற்கு காரணமாய் இருந்தது எது? என்று படைத்தவர் கேட்கிறார். நம்மீது உரிமையுள்ளவர் கேட்கிறார். அன்று ஆதாமிடம் மாத்திரம் கேட்ட கேள்வியல்ல மாறாக இன்றும் தேவன் நம்மிடம் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வியும் இதுவே. சரி விஷயத்திற்கு வருவோம், இந்தப்பெரிய இடைவெளிக்குக் காரணம் விலக்கியிருக்க வேண்டிய பழம். அந்தப் பழம் உண்ணக்காரணமான முன்றாவதான மிருகம்.

மனிதன் தேவனின் திட்டத்தை மறந்து சர்பத்தின் சொல்லுக்கு மயங்கினதினால் தன் வாழ்வாதாரத்தையே இழந்துப்போனான். ஆதிமனிதன் வாழ்ந்துவந்த அந்த மகிழ்ச்சி என்னும் ஏதேன் தோட்டம் இனி அவனுக்கு சொந்தமில்லை. தோட்டத்தில் வாழ்ந்த அந்த சொர்க்க வாழ்க்கை இனி ஆதி மனிதனுக்கு சொந்தமில்லை. ஆதி மனிதன் தன் மீது சாபத்தை வருவித்துக்கொண்டான். தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்பார்த்து நீ இதை செய்தப்படியால் சகல நாட்டு மிருகங்களிலும், சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய். நீ உன் வயிற்றினால் நகர்ந்து உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய். உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன். அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ஆதியாகமம் : 3 : 14 - 15. சர்ப்பம் தன் தந்திர புத்தியால் மனிதனை பாழுங் கிணற்றில் தள்ளிவிட்டது. மனிதனும் அதல பாதாளத்தில் விழுந்துப் போனான், இப்படித் தான் மனிதன் படும் அவஸ்தை இருக்கிறது. வேதம் சொல்லுகிறது போல, "என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்", என்று ஓசியா தீர்க்கனின் கூற்றுப் படி மக்களின் அழிவைக் கண்டு கர்த்தர் பரிதபிக்கிறார்.

அன்று ஆதாம் மற்றும் ஏவாளின் நிலை கண்டு தேவன் பரிதபித்தார் என்றாலும் வேறு வழியில்லை. அவன் விதைத்த வினையின் பலன். அவன் வாழ்ந்துவந்த அந்த சொர்க்கம் இன்று அடைக்கப்பட்டு விட்டது. இது அறியாமையினால் நடந்தத் தவறல்ல, அவர்கள் தெரிந்தே தவறு செய்தார்கள் காரணம் அவர்கள் வஞ்சிக்கப்பட்டார்கள். சர்ப்பம் அவர்களை தந்திரமாய் தன் வலையில் விழ வைத்தது. சர்ப்பம் நேரடியாக ஆதாமிடம் பேசவில்லை மாறாக அது ஏவாளையே பகடைக் காயாய் மாற்றியது. சர்ப்பம் தந்திரமுள்ளது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அது ஒரு வேளை ஆதாமினிடத்தில் தன் வித்தையை காட்டியிருக்குமானால் தோல்விதான் மிஞ்சி இருக்கும். ஆனால் சர்ப்பம் இக்காரியத்திற்கு ஏவாள் தான் சரி என்று உணர்ந்திருந்தது. இது தான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது என்பது நமக்கு நன்கு தெரியும். வேதம் இவர்களுடைய சம்பாஷணையை பதிவு செய்திருக்கிறது. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாய் இருந்தது. இல்லாத ஒன்றை இருப்பதுப் போல் சித்தரித்து, அது ஸ்திரீயை நோக்கி, நீங்கள் தோட்டத்தில் உள்ள சகல விருட்சங்களின் கனியை புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஆதியாகமம் : 3 : 1

இப்படி தான் மனிதன் காலா காலமாய் வழுவிப் போவதை நாம் உணரமுடியும். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கர்த்தர் சொன்னது, நீங்கள் தோட்டத்தில் உள்ள சகல விருட்சத்தின் கனிகளையும் புசிக்கவே புசிக்கலாம், ஆனாலும் தோட்டத்தில் உள்ள நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கவேண்டாம், அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று தான் கட்டளை இட்டிருந்தார். ஆனால் சர்ப்பமோ திரித்து வேறு விதமாக ஸ்திரீயை பார்த்து, நீங்கள் தோட்டத்தில் உள்ள சகல விருட்சங்களின் கனியை புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்று பட்சாதாப தொனியில் கேட்டது. இங்கே ஏவாள் சர்ப்பத்திற்கு மறுமொழியாக, ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து, நாங்கள் தோட்டத்தில் உள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம். ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன் நீங்கள் சாகாதப்படிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். ஆதியாகமம் : 3 : 2-3. ஆனால் சர்ப்பமோ விடாமல், அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி ; நீங்கள் சாகவே சாவதில்லை, நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நம்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பிர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. ஆதியாகமம் : 3 : 4 - 5.

இப்படி தான் மனிதனுக்குள் பாவம் நுழைந்தது, அந்த பாவத்தின் பலனே அழிவாகிய மரணம். மரணத்தை மனிதன் தழுவக் காரணம் இதுவே. இது தான் இன்றளவும் மனித வாழ்வில் தொடர்கதையாய் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. இதை மனிதன் உணரும் நாளிலே விடுதலை அடைவான். இதற்காகவே இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு ஒளியாக வந்தார். இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் என்று ஏசாயா தீர்க்கனால் முன்னறிவிக்கப்பட்ட அந்த மெய்யான ஒளியே அவர்தான். இல்லாதது பொல்லாதது சொல்லி ஒருவரை தம் வலையில் விழ்த்துவதை கேள்வி பட்டிருப்போம், இதை அன்றே சர்ப்பம் செய்ததற்கு சான்று இங்கே தெளிவாய் இருக்கிறது. எதையுமே சாப்பிடக்கூடாதென்றா சொல்லிவிட்டார் என்று தொனில் தம் பரிதாபத்தை காட்டி ஏவாளை தன் பக்கம் ஈர்த்த சர்ப்பம் இப்போது ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டது. பொதுவாக நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் அல்லது மிகச் சிறப்பாக இருந்தது என்றாலே ஒரு கிறக்கம் வருவது வழக்கம் தான், அதிலும் பெண்களிடத்தில் என்றால் சொல்லத்தான் வேண்டுமோ? இந்த யுக்தியை தான் அன்று சர்ப்பம் கையாண்டு, அந்த பழத்தை சாப்பிட்டால் நீங்கள் தேவர்களைப் போலாவீர்கள் என்று சொல்லவே ஏவாள் மனம் மாறியது. பார்க்கவேண்டாம், தொடவேண்டாம் , புசிக்கவேண்டாம் என்ற விருட்சத்தின் கனியை முதல் முதலாக ஏவாள் பார்த்ததாக வேதம் பதிவு செய்கிறது.

அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள் , அவனும் புசித்தான். ஆதியாகமம் : 3 : 6 அவர்கள் இருவரும் புசித்ததற்க்கு முக்கியக் காரணம் தேவர்களைப் போலவே மாறுவோம் எனும் ஆசையில் என்பது தான் வேதனை. எத்தனை நிறுவனங்களில் இன்று இது போன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடந்தேறி வருகிறது என்பதை யாவரும் அறிவோம் . ஏன் எத்தனை திருச் சபைகளில் இது சாதாரண செய்தியாக வலம் வருவதை நாம் கண் கூடாக பார்த்தும் இருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆதாமையும் ஏவாளையும் தேவச்சாயலிலும் அவருடைய ரூபத்திலும் அல்லவோ படைத்திருந்தார். தேவன் அவர்களை ஆளுகிறவர்களாக அல்லவோ வைத்திருந்தார். சகலமும் அவர்களுக்கு கீழ்ப் பட்டல்லவா இருந்தது என்றாலும் ஆசை யாரை விட்டது. ஆசையே துன்பத்திற்கு காரனமாய் அமைந்தது என்பதற்கு இவர்களுக்கு நேர்ந்த கதியே சான்று. ஆனால் தேவனோ நம்மை தேவர்களாகவே பார்க்கிறார், அதனால் தான் நாம் அவர் சாயலில் இருக்கிறோம். அவருக்குரிய அதே அதிகாரத்தோடு நாம் வாழ வகை செய்கிறார் அப்படியே வாழ்கிறோம். நீங்கள் தேவர்கள் என்றும், நீங்கள் எல்லோரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். சங்கிதம் : 82 : 6 அதோடு நில்லாமல், தேவ தூதர்களையும் நியாயந் தீர்ப்போம் என்று அறியீர்களா? என்று கொரிந்தியருக்கு எழுதின நிருபத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே.

இத்தனை சான்றுகள் நமக்கு முன் இருந்தாலும் மனிதன் இன்னமும் தன்னை சீர்ப் பொருந்த செய்ததாகவே இல்லை. மேலும் மேலும் வழித்தவறிய பாதையையே தேடி ஓட மனித கால்கள் தீவீரிக்கிறது, சாபம் தொடர்கிறது.

சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page