top of page

Death the cause for Sin

Let us all pray! பாவத்தின் பலன் மரணம் - சுவி. பாபு T தாமஸ்

பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். ரோமர் : 6 : 23

பாவம் என்றால் என்ன ? மீறுதலே பாவமாகும். அப்படியானால் தேவனுடைய வார்த்தையை அதாவது, அவருடைய கட்டளையை நாம் மீறுவதே பாவம் ஆகும். தேவன் நம் ஒவ்வொருவரையும் அவருடைய பிரதானமான திட்டத்திற்காக ஒரு பெரிய நோக்கத்தோடு நம்மை படைத்திருக்கிறார். அதற்காகவே நம்மை அவர் ஆயத்தப்படுத்துகிறார். நாம் இதை ஆழந்து கவனித்தால் இந்த உண்மை நமக்கு புரியும். இதைதான் வேதம் நமக்கு தெளிவு படுத்துகிறது. எப்படி நாம் அரசாங்கத்தின் கட்டளையை மீறுவது குற்றமாகுமோ அல்லது ஒரு நிறுவனம் தன் தொழிலாளியை தன்னக்கான பணிகளை செய்வதற்காக உருவாக்குகிறார்களோ அது போலவே தேவன் நம்மை தயார்செய்கிறார். அதற்காக நம்மை அவர் அடிமையாக நடத்தாமல், சுயாதின முறைமையிலே தேவன் மனிதனை தயார்படுத்துகிறார். ஆனால் நாமோ அவர் சத்தத்தை உதாசீனப்படுத்துகிறோம், சுயாதின உரிமையோடு அவர் கட்டளையை மீறி அவரவர் விருப்பத்திற் கேற்ப வாழவே மனிதன் விரும்புகிறப்படியால் பாவம் பிறக்கிறது. இதன் காரணமாகவே, பூமியானது சீர்கெட்டதாயிருந்தது, பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார், இதோ அது சீர்கெட்டதாயிருந்தது, மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியை கெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆதியாகமம் :6;11-12 இதை ஆதியிலே தேவனாகிய கர்த்தர் நோவாக் காலத்து பிரளயத்திற்கு முன்பாகவே வருந்தின வார்த்தைகளாக வேதத்தில் பதிவுச் செய்யப்பட்டிருக்கிறது மாத்திரமல்லாமல் உலகம் பேரழிவைச் சந்திக்க காரணமும் இதுவே என்பதை வேதம் நமக்கு உணர்த்துகிறது.

மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனிஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. ஆதியாகமம் : 6 : 5 - 6. இதற்கு ஆதாரமாக எப்போது நாம் சாலை விதிகளையும், மனித நேயத்தையும், பிறர் நலத்தையும் நாம் நம் பயணங்களில் மதிக்கத் தவறுகிறோமோ அப்போதெல்லாம் விபத்துக்களும் அழிவுகளும் ஏற்படுகிறது போலவே நாம் நம் தேவ சித்தத்தை அறிந்து நடக்கத் தவறும் போதெல்லாம் பாவம் செய்கிறோம். அந்தப் பாவமே நம்மை அழிவாகிய மரணத்திற்கு நேராக நடத்துகிறது. தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் இறுதி காலத்தில் அவர் சுமார் நூற்றிருபது வயதாயிருக்கையில் மோவாபின் சமனான வெளியிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறுவதற்கு முன்பாக இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் கூடி வரச் செய்து சொன்னது, "நான் உன் கலகக் குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன். இன்று நான் இன்னும் உங்களுடன் உயரோடிருக்கையில், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம் பண்ணினீர்களே, என் மரணத்திற்குப் பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம் பண்ணுவீர்கள்". உபாகமம் : 31 : 27 என்று சொன்னதுமல்லாமல்,

"என் மரணத்திற்குப் பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியை விட்டு விலகுவீர்கள். ஆகையால், கடைசி நாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும், உங்கள் கைக் கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும் படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி, உபாகமம் : 31 : 29 இப்படியாக மோசேயின் வார்த்தைகள் இஸ்ரவேலர்களை குறித்து சொல்லியிருக்க, இன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை நிதானிக்க வேண்டியது அவசியமாய் இருக்கிறது. யாவரும் வழிவிலகி ஏகமாய் கெட்டுப்போனார்கள் எனும் வேதாகமக் கூற்றுப் படி நாம் அனைவரும் எந்த நிலையில் இருக்கிறோம். உலகமானது எத்துணை பயங்கரமான சூழ்நிலைக்குள் இருக்கிறது என்பதையும் அதன் பின்னணி யாது என்பதையும் நாம் உணராதிருப்பது எத்துணை மடமை என்பதை அறிவது அவசியம். ஆனால் பொதுவான அபிப்பிராயம் யாதெனில், இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலையே பெருவாரியாக மேலோங்கி இருப்பதை காண முடிகிறது.

இந்த நம்பிக்கைத் தரும் மனநிலை நமக்கிருப்பது சரியானதே, அதேநேரத்தில் நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்லுவதுப் போல் காரணம் இல்லாமல் காரியம் இல்லை எனும் நியதியை உணர்வது முக்கியம். அப்பொழுது தான் காரணத்தை கண்டுபிடிக்க முடியும் மட்டுமல்லாமல் காரணத்திற்கான சரியான தீர்வையும் தீர்மானிக்க முடியும். ஆனால் நிலைமையோ இங்கு முழுக்க முழுக்க வேறாக இருக்கிறது என்பது தான் நிதரிசனமான உண்மை. For every action, there is an equal and opposite reaction எனும் Newton's Third Law of Motion விதிப்படி நாம் தேவனுடைய கட்டளைக்கு மாறாக செயல் பாடும்போது அதற்கான பலா பலன்கள் ஆபத்தானதாகவும் பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதை மக்கள் உணராதது தான் பரிதாபம். " உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின, இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத் தானே . எரேமியா : 4 : 18 அதே நேரத்தில், " என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை. பொல்லாப்புச் செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மை செய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள். எரேமியா : 4 : 22

இவைகளை நாம் உணர்வது மிகவும் அவசியம். மனமாற்றத்திற்க்கான செயல்பாடுகளை தேவன் விரும்புகிறார் என்பதை அறிவோம். பேராபத்து எதுவாயினும் நாம் விடு படுவது சாத்தியமே. ஆனால் மனமாற்றம் ஒன்றே மருந்து. பாவத்தை விட்டு விலகும்போது, பாவத்தால் வரவிருந்த மரணமும் நம்மை விட்டு விலகும் என்பது திண்ணம். இந்த உண்மையை நாம் உணர்ந்து செயல் படுவோமாயின் நம்முன் மையமிட்டிருக்கும் ஆபத்துக்கள் அத்தனையும் பனிபோல் விலகும். யாவரும் வாழ்கையில் ஜெயிப்போம் என்பது உறுதி. இதற்கு ஒரே வழி இயேசு கிறிஸ்துவே. வழியும், சத்தியமும் ஜீவனுமான அவரையே சேர்வது தான் நம் முன் இருக்கும் அல்லது செய்யத்தக்க பிராயச்சித்தம். ஆமென்.

சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பனின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page