Miracles will Happen
அற்புதங்கள் நடக்கும் - சுவி. பாபு T தாமஸ்
யோசுவா ஜனங்களை நோக்கி, உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள், நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களை செய்வார் என்றான். யோசுவா : 3 : 5
இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தில் இருந்து மோசேயினால் வானந்திர வழியாக நாற்பது ஆண்டு காலமாக வழிநடத்தப்பட்டு வந்த மக்கள் முதல் முறையாக சீத்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான் மட்டும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள். இத்தனை காலம் இஸ்ரவேல் மக்களை தேவனுடைய கட்டளைப்படி வழிநடத்திக்கொண்டு வந்தது தேவனுடைய தாசனாகிய மோசே தான். ஆனால் அவர் இன்று இல்லை, தன்னுடைய பூரண வயதில், மோசே மரிக்கிற போது நூற்றுருபது வயதாயிருந்தான். அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை.உபாகமம் : 34 : 7. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின் படியே மரித்துப் போனான். அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார். இதுவரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான். உபாகமம் : 34 : 5 - 6. இஸ்ரவேல் புத்திரார் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுக் கொண்டிருந்தார்கள். மோசேக்காக அழுது துக்கங் கொண்டாடின நாட்கள் முடிந்தது. உபாகமம் : 34 : 8
மோசே :
மோசே என்பவர் இஸ்ரவேலர்களுக்குள் மிகவும் பெரியவராய் இருந்தார். அவர் இஸ்ரவேலர்களுக்கு மாத்திரமல்ல எகிப்து தேசத்திலே பார்வோனுக்கும் அத்தேசத்தின் ஜனங்களுக்குமே பெரியவராய் இருந்தார். கர்த்தர் மோசேயை நோக்கி, பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன். உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கத்தரிசியாயிருப்பான். யாத்திராகமம் : 7 : 1 அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயை கிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும், ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனயிருந்தான். யாத்திராகமம் : 11 : 3 . அப்படியாக மோசே எனும் தேவ மனுஷன், மக்கள் மத்தியில் கனம் பெற்று போக்கும் வரத்துமாய் இருந்து தேவனுடைய வல்லமையினாலே மாப்பெரும் அற்புதங்களையும் அடையாளங்களையும் நடப்பித்து பயப்படத்தக்க விதமாய் மிகவும் பெரியவராய் இருந்தார். அப்படியானால் இவர் யார் ? இவர் வரலாறை அறிந்துக்கொள்ள நமக்கு ஆர்வம் மேலோங்குவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
சற்றேறக் குறைய 3500 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த எகிப்து தேசத்து பார்வோன் கோசேன் நாட்டில் வாழ்ந்து வந்த இஸ்ரவேல் மக்கள் ஏராளமாக பெருகுவதை எண்ணி அச்சமுற்றான். அவன் தன் ஜனங்களை நோக்கி, இதோ இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள். அவர்கள் பெருகாதப்படிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தை விட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கு, நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான். யாத்திராகமம் : 1 : 9 - 10. ஆகவே, எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள். யாத்திராகமம் : 1 : 13. ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து எரிச்சல் அடைந்தார்கள். யாத்திராகமம் : 1 : 12 அதுவுமன்றி, எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி, நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின் மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண் பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண் பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான். மருத்துவச்சிகளோ, தேவனுக்கு பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள். யாத்திராகமம் : 1 : 15 - 17. இந்த உபாயம் கைக் கூடாது போனப்படியினாலே அவரவர் தம் தம் ஆண்மக்களை கொன்று போட உத்தரவிட்டான். அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளை எல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண் பிள்ளைகளை எல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான். யாத்திராகமம் : 1 : 23.
மோசேயின் பிறப்பும் வளர்ப்பும் :
இக்கொடிய கால கட்டத்தில், லேவியின் குடும்பத்தாரில் ஒருவனாகிய அம்ராம், லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியாகிய யோகேபேத்தை விவாகம் பண்ணினான். அந்த ஸ்திரீ கர்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். அவள் அதை அப்புறம் ஒளித்து வைக்கக் கூடாமல், ஒரு நாணற் பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள் வைத்தாள். பின், அதற்கு என்ன சம்பவிக்குமோ என்பதை அறியும்படி அதின் தமக்கை துரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம் பண்ண வந்தாள். அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள். அவன் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதை திறந்தப் போது பிள்ளையைக் கண்டாள், பிள்ளை அழுதது. அவள் அதின் மேல் இரக்கமுற்று, இது எபிரெய பிள்ளைகளில் ஒன்று என்றாள். அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி, உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். அதற்கு பார்வோனுடைய குமாரத்தி, அழைத்துக் கொண்டு வா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி, நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். பிள்ளை பெரிதான போது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டு போய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள் அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு 'மோசே' என்று பேரிட்டாள். யாத்திராகமம் : 2 : 2 - 10.
மோசேக்கு தேவனாகிய கர்த்தரின் அழைப்பு :
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவப்பர்வதமாகிய ஓரேப் மட்டும் வந்தான். அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜுவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப் பார்த்தான், முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்து போகாமல் இருந்தது. அப்பொழுது மோசே, இந்த முட்செடி வெந்து போகாதிருக்கிறது என்ன? நான் கிட்டப் போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான். அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி, மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன் இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர், இங்கே கிட்டிச் சேராயாக. உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப் போடு. நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். பின்னும் அவர், நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். அப்பொழுது கர்த்தர் எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும், எத்தியாரும், எமோரியரும் பெரிசியரும், ஏவியரும், எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுப்போய்ச் சேர்க்கவும் இறங்கினேன். இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது, எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். யாத்திராகமம் : 3 : 1 - 10.
மோசே எகிப்தில் நடப்பித்த அடையாளங்கள் :
தேவனாகிய கர்த்தர் இட்ட கட்டளையை ஏற்று இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து விடுவிப்பதற்காக பார்வோனை சந்திப்பதற்காக மோசேயும், மோசேக்கு துணையாக ஆரோனும் புறப்பட்டார்கள். அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு என்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்து மூன்று வயதுமாயிருந்தது. கர்த்தர் பார்வோனோடே சொல்லச் சொன்ன வார்த்தைகளாவது, " அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்ட புத்திரன். எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன். அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்ட புத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார். யாத்திராகமம் : 4 : 22-23. ஆனாலும் எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன். ஆகையால், நான் என் கையை நீட்டி எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன். அதற்கு பின் அவன் உங்களைப் போகவிடுவான். யாத்திராகமம் : 3 : 19-20. ஆகவே கர்த்தர் சொன்னப்படியே நடந்தது. அதற்குப் பார்வோன், நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார் ? நான் கர்த்தரை அறியேன், நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான். யாத்திராகமம் : 5 : 2
எனவே பார்வோனின் கடினத்தின் நிமித்தம் தேவனாகிய கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசே மூலமாக பத்து வாதைகளை நடப்பித்தார். அவைகள் ஒன்றிலும் இஸ்ரவேல் மக்கள் பாதிக்கப் படாதப்படிக்கு அவர்கள் இருந்த கோசேன் நாட்டிலும் வராதப்படிக்கு அவர்களையும் அவர்கள் பகுதிகளையும் விசேஷப்படுத்தினார்.
வாதை 1 : நதியின் தண்ணீர் இரத்தமாய் மாறிற்று : யாத்திராகமம் : 7 ; 20 - 21
கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசேயும் ஆரோனும் செய்தார்கள். பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று. நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப் போயிற்று. நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்கு கூடாமற் போயிற்று. எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது.
வாதை 2 : எகிப்து எங்கும் தவளைகள் : யாத்திராகமம் : 8 : 5 - 6
மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி, நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்கால்கள் மேலும் குளங்கள் மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார். அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள் மேல் நீட்டினான். அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.
வாதை 3 : புழுதிகள் எல்லாம் பேன்களாயிற்று : யாத்திராகமம் : 8 : 16 - 17
அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில், நீ ஆரோனை நோக்கி : உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி, அப்பொழுது அது எகிப்து தேசம் எங்கும் பேன் களாய்ப் போம் என்று சொல் என்றார். அப்படியே செய்தார்கள். ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான். அப்பொழுது அது மனிதர்கள் மேலும் மிருகஜீவன்கள் மேலும் பேன்களாய் எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று.
வாதை : 4 : கோசேன் நாட்டை தவிர எகிப்து தேசம் எங்கும் பலவித வண்டுகள் : யாத்திராகமம் : 8 : 21 - 24
என் ஜனங்களை போகவிடாயாகில், நான் உன் மேலும், உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள் மேலும், உன் வீடுகள் மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன். எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும். பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும் படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதப்படிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி, என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன். இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். அப்படியே கர்த்தர் செய்தார். மகா திரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது. வண்டுகளினாலே தேசம் கெட்டுப் போயிற்று.
வாதை : 5 : கொள்ளை நோயினால் எகிப்தியரின் மிருகஜீவன்கள் மரணம் : யாத்திராகமம் : 9 : 3 - 7
கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின் மேலும் கழுதைகளின் மேலும் ஒட்டகங்களின் மேலும் ஆடுமாடுகளின் மேலும் இருக்கும். மகா கொடிதான கொள்ளை நோய் உண்டாகும். கர்த்தர் இஸ்ரவேலரின் மிருக ஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருக ஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார். இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார். மேலும் நாளைக்கு கர்த்தர் இந்தக்காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார். மறு நாளில் கர்த்தர் அந்த காரியத்தைச் செய்தார். எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப் போயிற்று. இஸ்ரவேல் புத்திரரின் மிருக ஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை. பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருக ஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது. அவன் ஜனங்களைப் போகவிடவில்லை.
வாதை : 6 : மனிதர்கள் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்பளங்கள் : யாத்திராகமம் : 9 : 8 - 11
அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள். மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்கு முன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன். அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும், மிருகஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்பளங்களையும் எழும்பப்பண்ணும் என்றார். அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான். அப்பொழுது மனிதர் மேலும் மிருகஜீவன்கள் மேலும் எரிபந்தமான கொப்பளங்கள் எழும்பிற்று. அந்தக் கொப்பளங்கள் மந்திரவாதிகள் மேலும் எகிப்தியர் எல்லார் மேலும் உண்டானதினால், அந்த கொப்பளங்கள் நிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக் கூடாதிருந்தது.
வாதை : 7 : இடிமுழக்கங்களையும், கல்மழையும், கல்மழையோடே கலந்த அக்கினியும் : யாத்திராகமம் : 9 : 22 - 26
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, எகிப்து தேசம் எங்கும் மனிதர் மேலும், மிருகஜீவன்கள் மேலும் எகிப்து தேசத்தில் இருக்கிற சகலவிதமான பயிர்வகைகள் மேலும் கல்மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையும் அனுப்பினார். அக்கினி தரையின் மேல் வேகமாய் ஓடிற்று. எகிப்து தேசத்தின் மேல் கர்த்தர் கல்மழையை பெய்யப்பண்ணினார். கல்மழையும், கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது. எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள் முதல் அதில் அப்படி ஒரு போதும் உண்டானதில்லை. எகிப்து தேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியில் இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப் போட்டது. அது வெளியின் பயிர்வகைகளை எல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப் போட்டது. இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலே மாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.
வாதை : 8 : வெட்டுக்கிளிகள் : யாத்திராகமம் : 10 : 12 - 15
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின் மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளை எல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின் மேல் உன் கையை நீட்டு என்றார். அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின் மேல் நீட்டினான். அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இராமுழுதும் கீழ் காற்றைத் தேசத்தின் மேல் வீசப்பண்ணினார். விடியற்காலத்திலே கீழ் காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது. வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று. அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்கு முன் இருந்ததும் இல்லை, அதற்குப்பின் இருப்பதும் இல்லை. அவைகள் பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று. தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது. கல்மழைக்கு தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும், மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது. எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல் வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.
வாதை : 9 : மூன்று நாள் காரிருள் : யாத்திராகமம் : 10 : 21 - 23
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, தடவிக்கொண்டிருக்கத் தக்கதான இருள் எகிப்து தேசத்தின் மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்று நாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. மூன்று நாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தை விட்டு, எழுந்திருக்கவும் இல்லை. இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கு மோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது.
வாதை : 10 : தலைப் பிள்ளை சங்காரம் : யாத்திராகமம் : 12 : 28 - 32, 35 - 36
இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள். கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டப்படியே செய்தார்கள். நடு ராத்திரியிலே சிங்காசனத்தின் மேல் விற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளை வரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருக ஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார். அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள். மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று. சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை. இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து, நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களை விட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னப்படியே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள். நீங்கள் சொன்னப்படியே உங்கள் ஆடு மாடுகளையும் ஓட்டிக்கொண்டு போங்கள், என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான். மோசே சொல்லியிருந்தப்படி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்கு கொடுத்தார்கள். இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள்.
இங்கே நமக்கு பல கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதில் பிரதானமான கேள்வி என்னவென்றால், ஏன் எகிப்தியரை தேவன் இத்தனை அதிகமாக வாதிக்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கமுடியும். சற்று மேலோட்டமாக நாம் பார்த்தாலே ஒரு பெரிய உண்மை வெளிப்படும். அதென்னவென்றால் இஸ்ரவேல் மக்கள் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் எனும் செய்தி யாத்திராகமம்: 3 ; 7 - 8 எனும் வசனங்களில்,எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை பார்த்தேன், ஆளோட்டிகளின் நிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன் என்றும் அதினால் அவர்கள் படுகிற வேதனைகளை அறிந்திருக்கிறேன் என்று தேவன் இஸ்ரவேல் மக்களுக்காக பரிதபிக்கிறதை பார்க்க முடிகிறது. ஆகவே அவர்களை அவர்களுடைய உபத்திரவத்திலிருந்து விடுவிக்க இறங்கினேன் என்று தேவன் சொல்லுகிறார். அப்படி இறங்கினாவர் அந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக மோசேயை தெரிந்துக்கொண்டார். அவருக்கு உதவியாக ஆரோனையும் சேர்த்து இருவரையும் தெரிந்துக் கொண்டார் என்பது இங்கே நமக்கு தெளிவாகிறது. தேவன் மோசேயையும், ஆரோனையும் எகிப்திற்கு அனுப்பி பார்வோனிடத்தில் இஸ்ரவேலர்களை விடுவிக்க வேண்டி பேசும்படி பணிக்க. பார்வோனோ இதற்கு இசைவு கொடுக்காமல் தன் இருதயத்தை கடினப் படுத்தினதினாலே இந்தப்பெரிய வாதைகளை எகிப்து தேசமே சந்திக்க நேர்ந்தது. ஒருவேளை பார்வோன் தேவனுடைய வார்த்தைக்கு செவிக் கொடுத்திருந்தால் இந்த உபத்திரவங்கள், சேதங்கள் எகிப்திய மக்களுக்கு வந்திருக்கவே வந்திருக்காது. இது தான் நாம் இன்றளவும் சந்திக்கும் போராட்டங்களுக்கு காரணமாகும்.
இத்துணை கடினமானப் போராட்டங்களை பார்வோனோடு போராடி மீட்ட இஸ்ரவேல் மக்களோ தேவனுடைய அன்பையும், அவர் தம்முடைய பலத்த கையினாலே நடத்திய அவருடைய வல்லமையையும் மகத்துவத்தையும் மறந்தார்கள். "கர்த்தராகிய உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துக்கொள்ளும் படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்திரத்தில் நடத்தினேன். உங்கள் மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலில் இருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை. உபாகமம் ; 29 ; 5 என்றாலும் வனாந்திரப் பயணத்தில் நாற்பது ஆண்டுகளாக தேவனுக்கும் அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் முரட்டாடமாக நடந்து அதினால் வந்த மீறுதல்களுக்காக தேவனோடும் போராடி மேற்கொண்ட மோசே அவர்களோடு இல்லை. ஆனால் கர்த்தர் மோசேக்கு பதிலாக அவர் இடத்தை பூர்த்திச் செய்யும் வகையில் தேவன் மோசேயின் ஊழியக்காரனாகிய யோசுவாவையே தெரிந்துக் கொண்டார். கர்த்தர் செய்த சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், கண்ணாரக் கண்டீர்களே. அகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள் வரைக்கும் கொடுக்கவில்லை. உபாகமம் : 29 : 3 - 4. என்று எச்சரித்த மோசேயின் வார்த்தைகளை உணராதே போனார்கள்.
யோர்தானை கடந்த இஸ்ரவேலர் :
கர்த்தர் யோசுவாவை நோக்கி, நான் மோசேயோடே இருந்தது போல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்ல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைபடுத்துவேன். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து, நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரடத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். யோசுவா : 3 : 7 - 8. பின்பு யோசுவா, ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும், ஏத்தியரையும், ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபுசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துக் கொள்ளுவதற்கு அடையாளமாக, இதோ சர்வ பூமிக்கும் ஆண்டவராய் இருக்கிறவருடைய உண்டன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானில் போகிறது. சம்பவிப்பது என்ன வென்றால், சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான். யோசுவா : 3 : 10 - 13
ஜனங்கள் யோர்தானை கடந்துப் போகத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள். ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்துக்கொண்டுப் போய், யோர்தான் மட்டும் வந்தார்கள். யோர்தான் அறுப்புக் காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர் வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது. உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று. அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துப் போனார்கள். யோசுவா : 3 : 14 - 16. கர்த்தர் யோசுவாவை நோக்கி, சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார். யோசுவா : யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்கு கட்டளையிட்டான். அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தான் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றின போது, யோர்தானின் தண்ணீர்கள் தங்க்ளிடத்திக்குத் திரும்பி, முன்போல் அதின் கரையெங்கும் புரண்டது. யோசுவா : 3 : 15 - 18. இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப் போகப் பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரும் சகல ராஜாக்களும் கேட்டது முதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கரைந்து போனார்கள். யோசுவா : 5 : 1
யோசுவாவின் தலைமையில் முதல் வெற்றி : எரிகோ
எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. கர்த்தர் யோசுவாவை நோக்கி, இதோ எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.யோசுவா : 6 : 1-2 ஆனால், சாபத் தீடானதில் எதாகிலும் எடுத்துக் கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப் பண்ணதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள். யோசுவா : 6 ; 18. அப்படியே, யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றி வாருங்கள். இப்படி ஆறு நாள் செய்யக்கடவீர்கள். ஏழு ஆசாரியர்கள் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும். ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழு தரம் சுற்றி வரக் கடவர்கள், ஆசாரியர் எக்காளம் ஊதவேண்டும். அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும் போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும் போதும், ஜனங்கள் எல்லோரும் மகா ஆரவாரத்தோடே ஆர்பரிக்கக்கடவர்கள். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்து விழும். உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார். யோசுவா : 6 ; 3 - 5.
யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள். கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்குப் பின் சென்றது. யோசுவா : 6 : 8. யோசுவா ஜனங்களை நோக்கி, நான் சொல்லும் நாள் மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும், உங்கள் வாயினால் சத்தம் காட்டாமலும் இருங்கள். உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம். ஆர்ப்பரியுங்கள் என்று நான் உங்களுக்கு சொல்லும் நாளிலே ஆப்பரிபீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான். யோசுவா : 6 : 10. அவ்வாறு ஆறு நாள் எரிகோவை நாள் ஒன்றுக்கு ஒரு முறை வீதம் சுற்றியவர்கள், ஏழாம் நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும் போது, எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழு தரம் சுற்றி வந்தார்கள். அன்றைய தினத்தில் மாத்திரம் பட்டணத்தை ஏழு தரம் சுற்றி வந்தார்கள். ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி, ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். யோசுவா : 6 ; 15 - 16. எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள், எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்து. உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தைப் பிடித்து, யோசுவா : 6 : 20. பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். வெள்ளியும், பொன்னையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பத்திரங்களை மாத்திரம் கர்த்தரின் ஆலயப் பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். யோசுவா : 6 : 24. அவ்வாறு கர்த்தர் எரிகோவை இஸ்ரவேலர்கள் இலகுவாக பிடிக்கச் செய்தார். ஆனால் இஸ்ரவேலர்களோ கர்த்தரின் அதிசயமான வழிநடத்துதலை தொடர்ந்து ருசித்தும் அவர் வார்த்தைக்கு செவிக்கொடாமல் பாவத்தில் விழுந்தார்கள்.
ஆயி பட்டணம் கற்று தந்தப் பாடம் :
இஸ்ரவேல் புத்திரர் சாபத் தீடானதிலே துரோகம் பண்ணினார்கள். எப்படி யெனில், யூதா கோத்திரத்து சேராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான். ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயி பட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி, நீங்கள் போய் அந்த நாட்டை வேவு பாருங்கள் என்றான். அந்த மனுஷர் போய், ஆயியை வேவு பார்த்து, யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி ஜனங்கள் எல்லோரும் போக வேண்டியதில்லை. ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம் பேர் போய், ஆயியை முறி அடிக்கலாம். எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்த வேண்டியதில்லை. அவர்கள் கொஞ்சம் பேர் தான் என்றார்கள். அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவ்விடத்திற்கு போனார்கள். ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள். ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறு பேரை வெட்டிப் போட்டார்கள். பட்டண வாசலின் வெளி துவங்கிச் செபாரீம் மட்டும் அவர்களை துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள். ஜனங்களின் இருதயம் தண்ணீராய் கரைந்து போயிற்று. அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலம் மட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலையின் மேல் புழுதியைப் போட்டுக் கொண்டுக் கிடந்தார்கள். யோசுவா : 7 : 1 - 6
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி, எழுந்திரு நீ இப்படி முகங்குப்புற விழுந்து கிடக்கிறது என்ன? இஸ்ரவேலர் பாவஞ் செய்தார்கள். நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள். சாபத் தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவு செய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே. ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள். அவர்கள் சாபத்தீடானார்கள். நீங்கள் சாபத்தீடானத்தை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம் பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன். எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம் பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால், நாளைய தினத்துக்கு உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள். இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது. நீங்கள் சாபத்தீடானத்தை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்கும் மட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். யோசுவா : 7 : 10 - 13. அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூட சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன் பாளத்தையும், அவன் குமாரரையும், குமாரத்திகளையும், அவன் மாடுகளையும், கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டு போனார்கள். அங்கே யோசுவா : நீ எங்களைக் கலங்கப்பண்ணின தென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப் பண்ணுவார் என்றான். அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன் மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து கற்களினால் முடி, அவன் மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள். இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார். ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும். யோசுவா : 7 : 24 - 26. இதை தொடர்ந்து இஸ்ரவேலர்கள் தங்களை சுத்திகரித்ததின் நிமித்தம் அவர்கள் இராஜ்ஜியங்களை பிடிக்க உதவி செய்தார்.
அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி, நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு. நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயி பட்டிணத்தின் மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையில் ஒப்புக் கொடுத்தேன். யோசுவா : 8 : 1. இதை தொடர்ந்து பல்வேறு யுத்தங்கள் செய்து முப்பத்தொரு ராஜாக்களையும் அவர்கள் பட்டணங்களையும், அவர்கள் நாட்டையும் பிடித்தார்கள். தேவனின் சொல் கேட்டு நடக்கும் போது அனைத்தும் அணுகுலமாகவும் இலகுவாகவும் அனைத்தும் நடந்தேறும் என்பதே இதன் மூலம் நாம் கற்கும் செய்தி ஆகும். வேதம் நமக்கு சொல்லுகிறது, கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார், நீங்கள் சும்மாயிருப்பீர்கள், யாத்திராகமம் : 14 : 14 , ஆமென்.
சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.