Protection Shield
பாதுகாப்புக் கவசம் - சுவி.பாபு T தாமஸ்
நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபைக் கிடைத்தது. ஆதியாகமம் : 6 : 8
மனிதனை நேர்மையும், உண்மையும், பணிவும் பாதுகாக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் தான் நோவாவும் அவருடைய வாழ்க்கை முறைமையும் ஆகும். உண்மைக்கும் நேர்மைக்கும் பெரிய விலை உண்டு என்பதை அவர் வாழ்வில் கிடைத்த பலாபலனே நமக்கு பெரிய சான்று. இந்த அற்புதமான தேவ மனுஷனாகிய நோவாவின் காலம் தோராயாமாக 4700 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கலாம் என சில தொல்பொருள் ஆராயிச்சிகள் தெரிவிக்கின்றன. ஆனால் நோவைக் குறித்தும், அவர் வரலாற்றைக் குறித்தும், வாழக்கையைக் குறித்தும் மிகத்தெளிவாக வேதாகமம் நமக்குத் தெரிவிக்கிறது. மனுஷர் பூமியின் மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தப்போது, தேவக்குமாரர் மனுஷக்குமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்கள் என்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துக்கொண்டார்கள். ஆதியாகமம் : 6 : 1 - 2. இதன் காரணமாக, மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப் பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர், நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின் மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம் பண்ணுவேன். நான் அவர்களை உண்டாகினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். ஆதியாகமம் : 6 : 5 - 7. தேவன் மனிதனின் பொல்லாத வழிகளினாலே கோபம் கொண்டு பூமியையும் மனுக்குலத்தையும் ஜலப் பிரளயத்தினாலே அழித்துப்போட்டார்.
மனுஷப்பிறவியின் நோக்கம் :
தேவனாகிய கர்த்தர், மனிதனை இப் பூமியில் உண்டாக்கக் காரணம், சத்திய வேதாகமம் சொல்லுகிறது : இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன். இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். ஏசாயா : 43 : 21. அப்படியே நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துக்கொள்ளப்பட்ட சந்ததியையும் ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருடையச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். I பேதுரு 2 : 9 . அப்படியானால் மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருடைய பிரதானமான நோக்கமே, நம்மை உண்டாக்கிப் பராமரித்து பாதுகாத்து வரும் தேவனுடைய மகத்துவங்களையும், வல்லமைகளையும், பாரக்கிரமமாகிய புண்ணியங்களையும் பேர் பிரஸ்தாபங்களையும் நினைத்து துதிப்பதுவும் அதை சாட்சியாய் அறிவிக்கிறதுவுமே நம்முடைய முழு முதலும் கடைசியுமான பொறுப்பாகும். நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துக்கொண்ட என் தாசனும் எனக்கு சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை. எனக்குப் பின் இருப்பதும் இல்லை. நான் , நானே கர்த்தர், என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.
நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன். உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை. நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாள் உண்டாகாததற்க்கு முன்னும் நானே இருக்கிறேன். என் கைக்குத் தப்புவிக்கத் தக்கவன் இல்லை. நான் செய்கிறதை தடுப்பவன் யார் ? நான் உங்களுக்காக அரண்கள் எல்லாம் இடிந்து விழவும், கல்தேயர் படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் சொல்லுகிறார். நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் இராஜாவுமானவர். சமுத்திரத்திலே வழியையும், வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி இரதங்களையும், குதிரைகளையும், இராணுவங்களையும், பராக்கிரமச் சாலிகளையும் புறப்படப் பண்ணி, அவைகள் எழுந்திராதப்படிக்கு ஒருமித்து விழுந்துக் கிடக்கவும், ஒரு திரி அணைகிறது போல் அவைகள் அணைந்து போகவும் பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது, முந்தினவைகளையும் நினைக்க வேண்டாம், பூர்வமானவைகளையும்ச் சிந்திக்கவேண்டாம். இதோ, நான் புதிய காரியங்களைச் செய்கிறேன். இப்போதே அது தோன்றும். நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். நான் தெரிந்துக்கொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்திரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளை உண்டாகுவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும் , கோட்டான் குஞ்சுகளும் என்னை கனம் பண்ணும். ஏசாயா : 10 - 20
இத்துணை பெரிய கர்த்தருக்கு மகிமையை செலுத்தி, அவர் துதியை பிரசித்தப்படுதுவதே நம் நோக்கமேனினும் நம் சுய இச்சைகளில் கவனமாய் இருந்து தேவனை மறந்து அவர் விருப்பங்களை துறந்து உலகமே வாழ்ந்தது. ஆகவே வானத்தின் கீழே ஜீவ சுவாசமுள்ள சகல மாம்ச ஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன். பூமியிலுள்ள யாவும் மாண்டுப்போம். ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நீயும், உன்னோடே கூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசியுங்கள். சகல வித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் காக்கப்படுவதற்கு பேழைக்குள் சேர்த்துக்கொள், என்றார். ஆதியாகமம் : 6 ; 19. எதற்காக நோவாவும் அவன் குடும்பமும் மாத்திரம் என்றால், நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. காரணம் நோவவின் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். ஆதியாகமம் ; 6 : 8 - 9. முழு உலகமும், உலகிலிருந்த அனைத்து ஜீவ ராசிகளும் அழிக்கப்பட்டபோதும் ஒரே ஒரு குடும்பம் மாத்திரம் பத்திரப்படுத்தப் பட்டதற்கு முக்கியக் காரணம் நோவா உத்தமனும் நீதிமானுமாக வாழ்ந்ததே ஆகும்.
காக்கும் திட்டம் : பேழை
நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு. அந்தப் பேழையிலே அறைகளை உண்டுப்பண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல் பூசு. நீ அதை பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும். நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுப்பண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்து முடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்திலே வைத்து, கீழ் அறைககளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும். ஆதியாகமம் : 6 : 14 - 16. உனக்கும் அவைகளுக்கும் ( மிருகஜீவன்கள் ) ஆகாரமாகச் சகலவித போஜன பதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார். நோவா அப்படியே செய்தான். தேவன் தனக்குக் கட்டளையிட்ட படியெல்லாம் அவன் செய்து முடித்தான். ஆதியாகமம் : 6 : 21 - 22. கர்த்தர் நோவாவை நோக்கி, நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள். இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். பூமியின் மீதேங்கும் வித்தை உயிரோடே காக்கும் பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும். ஆகாத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். இன்னும் எழுநாள் சென்ற பின், நாற்பது நாள் இரவும் பகலும் பூமியின் மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவ ஜந்துக்கள் அனைத்தையும் பூமியின் மேல் இராதப்படிக்கு நிக்கிரகம் பண்ணுவேன் என்றார். ஆதியாகமம் : 7 : 1 - 4.
ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின் மேல் உண்டானப்போது, ஜாலம் பெருகி, பேழையைக் கிளம்பப் பண்ணிற்று. அது பூமிக்கு மேல் மிதந்தது. ஆதியாகமம் : 7 : 17. அப்பொழுது, மாம்ச ஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டு மிருகங்களும், காட்டு மிருகங்களும் பூமியின் மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின் மேல் சஞ்சரிகிறவைகள் யாவும் மாண்டன. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவ சுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின் மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின. நோவாவும் அவனோடு பேழையில் இருந்த உயிரினங்கள் மாத்திரம் காக்கப்பட்டன.
புதிய உதயம் :
தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்.தேவன் பூமியின் மேல் காற்றை வீசப்பண்ணினார். அப்பொழுது ஜலம் அமர்ந்தது. ஆதியாகமம் : 8 : 1. பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசிர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும் ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும். பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும் உங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன. ஆதியாகமம் : 9 : 1-2. இதே ஆசிர்வாதத்தை தான் தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கூறியிருந்தார். ஆனால் ஆதாமோ அவர் தலைமுறையினரோ தேவன் கூறியிருந்த ஆசிர்வாதத்தை சுவிகரிக்காமல் இழந்துப் போனார்கள். காரணம் ஆதாமுக்கு கையளிப்பபட்டிருந்த சர்ப்பத்தை அவர்கள் ஆண்டுக் கொள்ளாமல் அந்த சர்ப்பத்தினால் ஆளப்பட்டப்படியினால் தேவ மகிமையை இழந்து அவர்கள் மேன்மையிலிருந்து தள்ளப்பட்டு துரத்தப்பட்டார்கள். ஆதாமின் தலைமுறையினரோ தேவ உறவை புதுப்பித்துக்கொள்ள முயற்சியாமல் மேலும் பிளவுபட காயின் காரணமானான். அதன் காரணமாக காயினுக்குப்பின் ஐந்தாம் தலைமுறையான லாமேக்கோடு குடும்பவேர் பட்டுப்போனது.
ஆதாமின் பாவம் - காயினின் சாபம் :
காயின் தன் சகோதரனாகிய ஆபேலை கொன்றதின் இரத்தப்பழி நிமித்தம் சாபத்திற்கு ஆளானான். இப்பொழுதும் உன் சகோதரனின் இரத்தத்தை உன் கையிலே வாங்கிக் கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நிலத்தைப் பயிரிடும் போது அது தன் பலனை இனி உனக்கு கொடாது. நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாய் இருப்பாய் என்றார். அப்பொழுது கர்த்தரை நோக்கி, எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்க முடியாது. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்தி விடுகிறீர். நான் உமது சமூகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனயிருப்பேன். என்னை கண்டு பிடிக்கிறவன் எவனும் என்னை கொன்று போடுவானே என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி, காயினைக்கொல்லுகிறவன் எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி, காயினை கண்டு பிடிக்கிறவன் எவனும் அவனை கொன்று போடாதப்படிக்கு கர்த்தர் அவன் மேல் மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். எனினும் காயினின் இரத்தப்பழி லாமேக்கின் பிள்ளைகளில் வந்தது விடிந்தது. லாமேக்குக்கு ஆதாள், சில்லாள் எனும் இரண்டு மனைவிகள் இருந்தார்கள். ஆதாள் யாபாலையும், யுபாலையும் பெற்றாள். அப்படியே சில்லாள் லாமேக்குக்கு துபால் காயினையும் மற்றும் நாமாள் என்பவளையும் பெற்றிருந்தும் தலைமுறை முற்றுப்பெற்றது. லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து, ஆதாளே, சில்லாளே நான் சொல்வதைக் கேளுங்கள். லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்கு செவி கொடுங்கள். எனக்கு காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன். எனக்கு தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன். காயினுக்காக ஏழு பழி சுமருமானால், லமேக்குகாக எழுபதுத் தேழு பழி சுமரும் என்றான். ஆதியாகமம் : 4 : 23 - 24.
சேத்தின் வேரில் நோவா :
பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான். அவள் ஒரு குமாரனைப் பெற்று, காயின் கொலை செய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான். அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள். ஆதியாகமம் : 4 : 25 - 26. மக்கள் தேவனை தொளுதுக்கொள்ளத் துவங்கினப்படியினாலே சேத்துக்கு பின் அவன் வித்தில் வந்த ஐந்தாம் தலைமுறையான ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்தான். ஏனோக்கு அறுபத்தைந்து வயதானப்போது, மெத்தூசலாவைப்பெற்றப்பின், முந்நூறு வருஷம் தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற் போனான். தேவன் அவனை எடுத்துக்கொண்டார். ஆதியாகமம் ; 5 : 21 - 23. ஏனோக்கின் பேரானான நோவா அன்று ஆதாம் பெற்ற அதே ஆசிர்வாதத்தை, அதிகாரத்தை, ஆளுமையை ஜலப் பிரளயத்திற்கு பின் பெறக்காரணம் அவர் நீதிமானாக தேவனாலே சாட்சி பெற்றது தான், ஆனப்படியினலே நீதிமாய் இருப்பது நமக்கும் நம் பின் சந்ததிக்கும் பாதுகாப்பு கவசம் என்பது உண்மையே,ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.