Woman head veil
பெண்ணின் தலைமுக்காடு - சுவி.பாபு T தாமஸ்
பெண்கள் முக்காடிட்டுக் கொள்வதைக்குறித்து வேதம் மிகத்தெளிவாக பேசுவதை நாம் கவனிக்க முடியும். பெண்கள் சபைகளில் முக்கடிட்டுக்கொள்ளுதல் ஒழுங்காகப் பார்க்கப்படுகிறது. அது அவர்களுக்கு கௌரவத்தையும் மதிப்பையும் சபைகளில் தருகிறது. இந்த ஒழுங்கை வேதம் அறுதியிட்டு உறுதிப்படுத்துகிறது. ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், தன் தலையை மூடிக் கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள். I கொரிந்தியர் : 11 : 13 என்று அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதும் நிருபத்தில் கேட்கிறார். வேதாகமத்தில் முக்காடிட்டுக் கொள்வதன் அவசியம் மிகத்தெளிவாக இருந்தாலும், முக்காடை குறித்த வியாக்கியானங்கள் அதிகம் உலா வருவதை நாம் தொடர்ந்து கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். அப்படியானால் முக்காடைக் குறித்த தெளிவு இன்னும் பெருவாரியானோருக்கு வரவில்லை என்பதே இதன் பொருள் ஆகும். எப்போதுமே ஒரு விஷயத்தில் அல்லது காரியத்தில் தெளிவு பிறக்கவில்லை என்றால் அதை செயல் படுத்துவதிலும் நமக்கு தயக்கம் இருப்பது தவிர்க்கமுடியாததே. ஆகவே நாம் முக்காடைக் குறித்தக் காரியங்களை தெளிவாக அறிந்துக் கொள்ளுவது அவசியமாகிறது. இது ஆவிக்குரிய ஜீவியத்திற்கு மிக அவசியம், காரணம் தெளிவில்லமையால் பலர் பலவிதமான நூதனம் என்னும் கோணத்தில் போதித்து வருவதும் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமமாகும். குருடன், குருடனுக்கு வழிக் காட்டுவது எத்தனை ஆபத்தை விளைவிக்குமோ அது போலவே போதிப்பவருக்கும் போதனையை கேட்டு பின்பற்றுபவருக்கும் நேரும்.
பாவத்தின் பிறப்பிடம் :
பூமியில் பாவம் பிறக்க மற்றும் பாவம் பலுக இரண்டு குறிப்புக்கள் வேதத்தில் காணப்படுகிறது. 1. ஏவாளை சர்ப்பம் வஞ்சித்தது. ஆதியாகமம் : 3 : 4
2. தேவகுமாரர் மனுஷக் குமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்கள் என்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துக்கொண்டார்கள். ஆதியாகமம் : 6 : 2
இந்த இரண்டு காரியங்கள் தான் பூமியில் பாவம் பெருகுவதற்கு காரணமாய் இருந்தது. ஆகவே தான் தேவன் மனுஷனை பூமியில் உண்டாக்கினதற்க்காக மனஸ்தாபப் பட்டார் என்று வேதம் கூறுகிறது. தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்க்காக கர்த்தர் மனஸ்தாபப் பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. ஆதியாகமம் : 6 : 6. ஆக இந்த இரண்டு காரியங்களே பாவம் பூமியில் புக காரணமாய் இருந்தது என்று உணர்வது அவசியம். இதில் வருத்தமான விசேஷம் என்னவென்றால், இந்த கொடிய பாவம் பூமியில் விளைவதற்கு ஆதாரமாக இருந்ததவர்கள் பெண்கள் என்பது தான் கொடுமை. சாத்தான் விதை என்றால் ஸ்திரீகள் விளைநிலமாக இருந்து பாவம் பெருக காரணமானார்கள் என்பது வேதனையான உண்மை. ஆகவேதான், மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, ஆதியாகமம் : 6 : 5. என்று பாவம் பூமியில் புகுந்ததையும் அதினால் விளைந்த விளைவுகளையும் ஊஜிதப்படுத்துகிறது. அப்பொழுது கர்த்தர் நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின் மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம் பண்ணுவேன். நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். ஆதியாகமம் : 6 ; 7. இதை நாம் சரியாகப் புரிந்துக்கொள்ள வேண்டுமானால் படைப்பில் இருக்கும் இரகசியத்தை தெளிவாக அறிந்துக்கொள்ளவேண்டும்.
படைப்பின் இரகசியம் :
தேவன் மனிதனை பூமியில் உண்டாக்கினத்தின் நோக்கம் என்பது பெரியது. ஆதியிலே தேவன் இரு வேறு சமூகத்தை உண்டாக்கினார். 1. தேவ தூதர்கள், இவர்கள் தேவனோடிருந்து அவர் பணிகளை செய்பவர்கள். இவர்கள் பரலோகத்தில் வாசம் செய்பவர்கள். 2. தேவ சாயலிலும், தேவ ரூபத்திலும் படைக்கப்பட்ட மனித இனம். இந்த மனிதனோடு தேவன் இருப்பார். இவர்கள் பூமியில் இருந்து தேவனுடைய பணிகளை செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்த இரண்டு சமூகத்துக்கும் நோக்கம் ஒன்றே, அது தேவனுடைய பணியை செய்வது மட்டுமே. நீர் அவனைத் தேவத் தூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர். மகிமையினாலும், கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின் மேல் நீர் அவனுக்கு ஆளுகைத் தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்கு கீழ்ப்படுத்தினீர். ஆடு மாடுகள் எல்லாவற்றையும், காட்டு மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். சங்கீதம் ; 8 ; 5 - 8. இங்கே மனுஷனை தேவத் தூதரிலும் சற்று சிறியவனாய் உண்டாக்கினார் என்று சொல்லியிருக்க, அபோஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதும் நிருபத்தில், தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போம் என்று அறியீர்களா? I கொரிந்தியர் : 6 : 3. என்ற கேள்வியை நம்முன் வைக்கிறாரே, இது எப்படி சாத்தியம்.
ஆனால் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தேவ தூதர்கள் பாவத்தின் நிமித்தம் பூமியில் தள்ளப்பட்டவர்கள். இவர்களை குறித்தக் காரியங்களைத்தான் பவுல் இங்கே குறிப்பிட்டிருக்கிறார். இவர்களுக்குக் களுக்காதத் தான் பூமியை தேவன் உண்டாக்கினார். இந்த தள்ளப்பட்ட தூதர்களின் சிறையிருப்பிற்காகத் தான் பூமி படைக்கப்பட்டது. இவர்கள் சிறையிருப்புக்காக படைக்கப்பட்ட பூமியை ஆண்டுக்கொள்ளவும், பாராமரிக்கவுமே தேவன் மனுஷனை பூமியில் உண்டாக்கினார். ஆதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே ! ஜாதிகளை ஈனப்படுதினவனே. நீ தரையில் விழ வெட்டப்பட்டாயே ! ஏசாயா : 14 : 12. என்று தங்கள் மேன்மையிலிருந்து தள்ளப்பட்ட தூதனையும் அவனோடு கூட தள்ளப்பட்டவர்களின் விசரிப்பைக் குறித்து தான் பவுல் பேசுகிறார். ஆனால் இந்த தள்ளப்பட்ட தேவக்குமாரர்கள் தந்திரமாய் மனுஷ குமாரரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார்கள். தங்கள் ஆளுமையை மனுஷர் மேல் செலுத்தி மனுஷனை மோசம் போக்கி வருகிறார்கள். தேவனாகிய கர்த்தர் மனுஷனிடத்தில் பூமியின் மேல் அனைத்து அதிகாரத்தையும் கொடுத்திருந்தார். ஆனால் ஆளப்பட வேண்டியவைகளினால் மனுஷன் ஆளப்படும் துரதஷ்டத்திற்கு தள்ளப்பட்டான். இதற்கு காரணமாக அல்லது சாதகமாக இருந்தவர்கள் பெண்கள் என்பது வேதம் நமக்குத் தரும் வெளிச்சம். ஆகவே தான் பவுல் ஸ்திரீகளுக்கு ஆலோசனைகளை கொடுத்தார்.
பவுலின் ஆலோசனைகள் :
ஆலோசனை 1 : ஸ்திரீகள் தூதர்கள் நிமித்தம் தலை முக்காடிட்டுக்கொள்ளுதல்
ஜெபம் பண்ணுகிறப்போதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறப்போதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள். அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக் கொள்ளவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப் போடக்கடவள். தலைமயிர் கத்தரித்துப் போடப்படுகிறதும், சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக்கடவள். புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டியதில்லை. ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையுமாயிருக்கிறாள். புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப் பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள். ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டுக் கொள்ளவேண்டும். I கொரிந்தியர் : 5 : 10
ஆலோசனை 2 : சபைகளில் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள் :
சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள். பேசும் படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்க வேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக் கடவர்கள். ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. I கொரிந்தியர் : 14 : 34 - 35. ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளகடவள். உபதேசம் பண்ணவும், புருஷன் மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான். பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும் ஆதாம் வஞ்சிக்கப்டவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைக் கொண்டிருந்தால், பிள்ளைப் பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள். I தீமோத்தேயு : 2 : 11- 15.
வேத வார்த்தைகள் நமக்கு எச்சரிப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. அவைகளை நாம் சரியாக புரிந்துக்கொண்டு கடைப்பிடித்து நடந்தால் நாம் அனைவரும் அழிவிலிருந்து காக்கப்படுவோம் என்பது உண்மை. மாறாக நம் விருப்பு வெறுப்பை முன்னிட்டு சாத்திமானவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு சாத்தியமில்லாதவைகளுக்கு சாக்கு போக்கு சொல்லி தவிர்ப்போமானால் விளைவுகள் தவிர்க்கமுடியாதவையே. இதோடு நில்லாமல் சுயநலத்தோடு தனிமனித மற்றும் சூழ்நிலை சார்ந்த செயல் பாடுகளால் ஆவியானவரை துக்கப்படுத்துவதோடு நமக்கு நாமே ஆக்கினையை வருவித்துக் கொள்ளுவதோடு அனைவரையும் படுகுழியில் விழப் பண்ணுகிறோம் என்பதை உணர்வது மிக மிக அவசியம். ஆமென்.
சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை .