Evangelist
சுவிஷேசகன் - சுவி. பாபு T தாமஸ்
சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிஷேசமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி உன் தேவன் ராஜரீகம் பண்ணுகிறாரென்று சியோனுக்குச் சொல்லுகிற சுவிஷேசகனுடைய பாதங்கள் மலைகளின் மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. ஏசாயா : 52 : 7
சுவிசேஷகன் யார் ? :
சுவிசேஷகன் என்பவன் கர்த்தரால் அனுப்பப்பட்டவன் என்று பொருள். ஊழியத்தில் பல வகை உண்டு, இதில் சுவிசேஷப் பணி பிரதானமானது. தேவன் அனுப்பும் யாரும் சுவிசேஷகனாக இருக்க முடியும். கர்த்தருடையக் காரியமாய் அனுப்பப்படும் நோக்கத்தின் காரணமாக போக ஆயத்தமாய் இருப்பவனே சுவிசேஷகன். பின்பு : யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன் அதற்கு நான் , இதோ அடியேன் இருக்கிறேன், என்னை அனுப்பும் என்றேன். ஏசாயா : 6 : 8. எனவே தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமாக இருப்பவன் சுவிசேஷகன். அப்படியானால் யார் ஆயத்தமாக இருப்பார்கள் அல்லது இருக்க முடியும் என்றால் யார் ஒருவர் தமது சமூகத்தின் அவலங்கள் குறித்தும் அதின் தேவைகளை குறித்து பாரப்படுகிறாரோ, கண்ணீர் வடிக்கிறாரோ அவரே சுவிசேஷப் பணிக்கு தகுதியானவர். அவரே அனுப்பபடுவார். அனுப்பபடாவிட்டால் எப்படிப் பிரசங்கிபார்கள் ? சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருகிறதே. ரோமர் : 10 : 15.
அபோஸ்தலனாகிய பவுல் சுவிசேஷப் பணியை குறித்து வெளிப்படுத்தும்போது, மேலும் சகோதரரே என்னால் பிரசங்கிக்கப் பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின் படியானதல்ல வென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசு கிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். கலாத்தியர்: 1 : 11 - 12. அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், தம்முடைய குமாரனை புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தப்போது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைப் பண்ணாமலும், கலாத்தியர் : 15 - 16. பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான், கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எபேசியர் : 3 : 8. பவுலின் இந்த வார்த்தைகள் சுவிசேஷப் பனியின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகிறது. எனவே அழைப்பு பெற்று அனுப்பப்படுபவர்கள் சுவிசேஷகர்கள். அவர்கள் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுபவர்கள். இவர்கள் சபை பக்தி விருத்திக்கு மிகவும் அவசியமானர்கள் என்பதை எவ்வகையிலும் நாம் மறுப்பதற்க்கில்லை.
சுவிசேஷகன் என்பவன் அனுபப்படுபவன், தீர்க்கதரிசி என்பவன் அழைக்கப்படுபவன். இருவரும் ஊழியர்களே, ஆனால் தேவனால் மக்களுக்கு செய்தி சொல்ல அனுப்பபடுபவன் சுவிசேஷகன். தீர்க்கதரிசி என்பவன் மக்கள் தேவனிடத்தில் இருந்து செய்தி பெற அழைக்கப்படுபவன். அதே போல அப்போஸ்தலர் என்பவர்கள் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் என்று பொருள். ஆனால் "போதகர்" என்ற வார்த்தை இலத்தீன் பெயர்ச்சொல் pastor இல் இருந்து உருவானது. அதாவது "மேய்ப்பர்" என்று பொருள்படும் இச்சொல் மற்றொரு வினைச்சொல்லான pascere – "மேய்ச்சலுக்கு வழிவகுக்கும், உணவளிக்கும்" என்பதிலிருந்து வந்தது.[2] "போதகர்" என்பது புதிய ஏற்பாட்டின்கீழ் மூப்பரின் பாத்திரத்தையும் தொடர்புபடுத்துகிறது. பல சீர்திருத்த திருச்சபைத் தேவாலயங்கள் தங்கள் மதகுருக்களை "pastor" என்று தான் அழைக்கின்றன. எப்படி ஒரு மேய்ப்பன் தன் மந்தைக்கு பொறுப்போ அது போலவே போதகர் என்பவர் தன் சபைக்கு பொறுப்பாகிறார். தன் சபையின் நல்ல மேய்ச்சலுக்கு வேண்டிய போஷாக்கான ஆவிக்குரிய ஆகாரத்தை தேடிப்பிடித்து வழங்குவதும் மேய்ப்பனுக்கு உரிய பொறுப்பாகும். அப்பொழுது தான் சபை பக்தி விருத்தியில் மேலோங்கி சாட்சியாய் தழைத்து வளரும். சபையே மணவாட்டி. தன் மணாளனாகிய இயேசு கிறிஸ்துவின் வருகையில் பங்கடைவதற்கு எதுவாக சபை ஆயத்தப் படுத்தப்படிருக்கவேண்டும்.
சுவிசேஷகப் பணிகளின் வகைகள் :
தேவத் தூதன் அவனுக்குப் பிரதியுத்திரமாக, நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன். உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன். லூக்கா : 1 : 19. தேவ தூதன் அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள் இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். லூக்கா : 2 : 10. மனம் திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான். மத்தேயு : 3 : 2. யோவான் எல்லோருக்கும் பிரதியுத்தரமாக, நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. அவர் பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். வேறு அனேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான். லூக்கா : 3 : 16 - 18. ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோக்கியா பட்டணம் வரைக்கும் சுற்றித் திரிந்தார்கள். அவர்களில் சீப்புருதீவாரும், சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக் குறித்துப் பிரசிங்கித்தார்கள். கர்த்தருடையக் கரம் அவர்களோடு இருந்தது. அனேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். அப்போஸ்தலர் : 11 : 19 - 21. மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்துப் பிரசிங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப் பற்றிய விசேஷங்களை உபதேசித்துக் கொண்டிருந்தான்அபோஸ்தலர் : 28 : 31. இவையாவும் சுவிசேஷப்பணியின் உதாரணங்கள்.
இயேசு கிறிஸ்துவும் அனுப்பப்பட்டவரே :
கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார், தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் படி என்னை அபிஷேகம் பண்ணினார். இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப் பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும் என்னை அனுப்பினார். லூக்கா : 4 : 18 - 19. காலம் நிறைவேறிற்று, தேவனுடைய இராஜ்யம் சமீபமாயிற்று. மனம் திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். மாற்கு : 1 : 15. பின்பு அவர் பட்டணங்கள் தோறும், கிராமங்கள் தோறும் பிரயாணம் பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்து வந்தார். பன்னிருவரும் அவருடனே கூட இருந்தார்கள். லூக்கா: 8 : 1. உதயமானப்போது, அவர் புறப்பட்டு, வனாந்திரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக் கொண்டார்கள். அவரோ அவர்களை நோக்கி, நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்கவேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். லூக்கா : 4 : 42 - 43. அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். லூக்கா : 9 : 1 -2. அப்பொழுது பிலிப்பு பேசத் தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துப் போகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி, இதோ தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடை என்ன என்றான். அதற்குப் பிலிப்பு, நீர் முழு இருதயத் தோடும் விசுவாசித்தால் தடையில்லை என்றான். அப்பொழுது அவன் இயேசு கிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, இரதத்தை நிறுத்தச் சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான். அப்போஸ்தலர் : 8 : 35 - 38.
சபையில் சுவிசேஷகனின் பங்கு :
பரிசுத்தவான்கள் சீர்போருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர் சிலரை அபோஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுவிசேஷகர்களாகவும், சிலரை மேய்ப்பர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். எபேசியர் : 4 : 12 - 13. சபை என்பது ஒரு குடும்பம், அதில் போதகர் என்பவர் குடும்பத்தலைவர் போன்றவர். ஆகவே பல சந்தர்ப்பங்களில் சபை மக்களை மெதுவாயும், அரவணைத்தும் நடத்திச்செல்லும் கட்டாயமும் அவசியமும் ஏற்படுவது உண்டு. ஆனால் அதே நேரத்தில் சபை மக்களை வேத வசனத்தின் அடிப்படையில் கண்டிப்போடும் கராரோடும் சபையோரை நடத்த வேண்டியதும் அதி முக்கியம். இவ்விரண்டு நிலைப்பாட்டையும் ஒருங்கே நடைமுறைப் படுத்துவது பெரும்பாலும் சாத்தியமில்லாத காரியம். இச் சூழலுக்கு ஒத்தாசையாகவே தேவன் சுவிசேஷகர்களை ஏற்படுத்தியிருகிறார். இதை சரியாகப் புரிந்துக்கொள்ள வேண்டுமானால், உதாரணத்திற்கு சபை போதகர்கள் என்பவர்கள் பள்ளி ஆசிரியர்கள் போல பாவித்துக்கொண்டால், புரிந்துக்கொள்ளுவது இலகுவாகும். எப்படி ஒரு பள்ளியில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் கல்விக்கான பல்வேறு சூழல்கள் நிறைய இருந்தாலும் மாணவ,மாணவியர்களின் கூடுதல் மதிப்பெண்களுக்கு டியுஷன் ஆசிரியர் என்பவர் தேவையோ அது போல சபைகளை சந்திக்க சுவிசேஷகன் அவசியம். சுவிசேஷகனுடைய பணி என்பது வெறும் இயேசுவை அறியாதவர்களுக்கு போதிப்பது மட்டுமல்ல இயேசுவை அறிந்தவர்களை பாதுகாப்பதும் சுவிசேஷகனுடைய கடமை. ஆகவேதான் ஊழியத்தை பலவகையில் பிரித்து கொடுத்திருக்கிறார். இவை அனைத்தும் சபை வளர்ச்சிக்காக என்பதை சபை மறந்து விட்ட காரணத்தினால் இன்றைக்கு சபை மூடப்பட்டு கிடக்கிறது. எச்சரிப்பின் வார்த்தைகளை போதகரை விட சுவிசேஷகனே ஆழமாய் சொல்லமுடியும். எப்படி பிள்ளைக்கு பெற்றோரரின் கண்டிப்பை விட ஆசிரியரின் கண்டிப்பு பலம் வாய்ந்தததோ, அது போலவே சபைக்கு முக தாட்சணியம் இல்லாமல் போதிக்கும் வரம் சுவிஷேசகனையே சாரும்.
சுவிசேஷகனா இரு :
இதோடு நில்லாமல் சுவிசேஷகன் சபை போதகரைப் போலில்லாமல் பல்வேறு சபைகள், மொழிகள், மக்கள், காலாசாரம் என்று சந்திப்பதால் இவர்களை இணைத்து சபையாகிய மணவாட்டி சந்திக்கும் அச்சுறுத்தல்களை களைவதற்கும் சுவிஷேசப்பணி வழிவகுக்கிறது ஒரு கூடுதல் நன்மையாகும். உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்து வைக்கவில்லை. உமது சத்தியத்தையும், உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன். உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதப்படிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை. சங்கீதம் : 40 : 10. பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். I நாளாகமம் : 16 : 23 - 24. ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல், இராணிப்பேட்டை.