The Whole World is one Family
ஒரே குடும்பம் நம் பூமி - சுவி. பாபு T தாமஸ்
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விருத்தியாகுங்கள் என்றார். ஆதியாகமம் : 9 ; 7
பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம், காம் யாபேத் என்பவர்களே, காம் கானானியருக்கு தகப்பன். இம்மூவரும் நோவாவின் குமாரர். இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள். ஆதியாகமம் : 9 : 18 -19. ஜலப்பிரளயத்திற்குப் பின் பூமியில் இருந்தது நோவாவின் குடும்ப உறுபினர்களாகிய எட்டு பேர் மட்டுமே. அதாவது நோவாவும் அவர் மனைவியும் மற்றும் அவர்கள் பிள்ளைகள் மூவரும் அவர்கள் மனைவிகள் மட்டுமே. ஜலப்பிரளயம் முடிந்து, பேழையை விட்டு யாவரும் வெளியேறியப் பின்னர் தான் நோவாவின் குமாரர்களாகிய சேம், காம் யாபேத் ஆகிய மூவருக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள் என்று வேதம் நமக்கு கூறுகிறது. நோவாவின் குமாரராகிய சேம் , காம், யாபேத் என்பவர்களின் வம்ச வரலாறு, ஜலப்பிரளயத்துக்குப் பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள். ஆதியாகமம் : 10 : 1. இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷைகளின் படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின் படியேயும், வெவ்வேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டது. ஆதியாகமம் : 10 : 5. நாம் வாழும் நம் பூமியில் வாழும் அனைவரும் நோவாவின் பிள்ளைகளும் அவர்களின் சந்ததியினரே என்பதும் நம் மூதாதையரானா நோவா தேவனோடு சஞ்சரித்தவர்.
நோவாவின் மூதாதையரான ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்து வந்த காரணத்தினால் தேவன் அவரை எடுத்துக்கொண்டார். ஏனோக்கின் முதாதையரான சேத்தின் காலத்தில் மனுஷர் கர்த்தரை தொழுதுக்கொள்ள ஆரம்பித்தார்கள். இந்த சேத் என்னும் நம் ஆதி மூதாதையரின் பெற்றோர் யாரெனில், தேவன் தம் நாசி சுவாசத்தினால் ஜீவாத்துமாவான ஆதாமும் அவர் விலா எலும்பிலிருந்து மனுஷியாக உருவாக்கிய ஏவாள் என்பவர்களே. தேவ கோபத்தின் காரணமாக தேவனாகிய கர்த்தர் நோவாவின் குடும்பத்தை தவிர அனைத்து மனித இனத்தையும் அழித்துப் போட்டார். எனவே பூமியில் மிஞ்சியது நோவாவும் அவர் மூன்று குமாரரும் அவர்கள் மனைவிகளுமே. ஜலப் பிரளயத்திற்குப் பின்னரே நோவாவின் பிள்ளைகளுக்கு குமாரரும் குமாரத்திகளும் பிறந்தார்கள். அவர்களாலே பூமியில் மனுஷர் தோன்றினார்கள். சந்ததிகள் உருவானது, தேசங்கள் தோன்றின ராஜ்ஜியங்களின் ஆளுகைகளும் பிறந்தன. நாம் இப்போது பூமி முழுவதும் பரவி பெருகியிருக்கிற நோவாவின் சந்ததியினை பார்ப்போம்.
சேம், காம், யாபேத்தின் வம்ச வரலாறு :
யாபேத் நோவாவின் மூத்தக்குமாரன். யாபேத்துக்கு பிள்ளைகள் பிறந்தார்கள். யாபேத்தின் குமாரர், கோமார், மாகோகு, மாதாய், யாவான், துபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். ஆதியாகமம் : 10 : 2. ஆக நோவாவின் மூத்த குமாரனாகிய யாபேத்துக்கு ஏழு குமாரர் பிறந்தார்கள். கோமாரின் குமாரர் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். யாவானின் குமாரர் எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். ஆதியாகமம் : 10 : 3 - 4.
காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். கூஷீடைய குமாரர் சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா, என்பவர்கள். ராமாவின் குமாரர், சேபா, திதான், என்பவர்கள். ஆதியாகமம் : 10 ; 6 - 7. கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும், எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும், ஈவிரையும், அர்கீரியரையும், சீநியரையும், அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான். பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள். கானானியரின் எல்லை, சீதோன் முதல் கேரார் வழியாய்க் காசா மட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசா மட்டுக்கும் இருந்தது. ஆதியாகமம் : 10 : 15 - 19. மிஸ்ராயீம் லுதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும், பத்ருசியரையும், கஸ்லூகியரையும், கப்தோரியரியரையும் பெற்றான். கஸ்லூகி பெலிஸ்தயரைப் பெற்றான். I நாளாகமம் : 1 : 11 - 12.
சேமுடைய குமாரார், எலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், என்பவர்கள். ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேதெர், மாஸ் என்பவர்கள். அர்பக்சாத் சாலாவைப் பெற்றான். சாலா ஏபேரைப் பெற்றான். ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள். ஒருவனுக்கு பேலேகு என்று பேர், ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது. அவனுடைய சகோதரன் பேர் யொக்தான். யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான். இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
தேசங்கள் உருவான வரலாறு :
தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவின் குமாரரின் வம்சங்கள் இவைகளே. ஜலப்பிரளயத்திற்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன. ஆதியாகமம்:10:32. இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷைகளின்படியேயும், அவரவர்கள் கோத்திரங்களின்படியேயும், ஜாதிகளின்படியேயும் வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன. ஆதியாகமம் 10 ; 5. ஜனங்கள் கிழக்கிலிருந்து பிரயாணம் பண்ணுகையில், சிநேயார் தேசத்திலே சம பூமியைக் கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.ஆதியாகமம்:11:2. பின்னும் அவர்கள், நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப் போகாதப்படிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாக்குவோம் வாருங்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். அப்பொழுது கர்த்தர், இதோ ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது. அவர்கள் இதைச் செய்யத் தொடங்கினார்கள். இப்பொழுதும் தங்கள் நினைத்தது ஒன்றும் தடைப் பட மாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய் ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதப் படிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப் பண்ணினார். அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள். பூமி எங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறு மாறாக்கின படியால், அதின் பேர் பாபேல் எனப்பட்டது. கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப் போகப்பண்ணினார். ஆதியாகம் : 11 : 4 - 9. இவ்வாறு மனுஷர் இன்று இருக்கிறது போல பூமியின் பல்வேறு பகுதிகளுக்கு சிதறிப் போக காரணமாயிற்று. மேலும் மக்கள் அங்குள்ள சீதோஷன தட்பவெப்ப நிலைகளுக்கும் மற்றும் நீர்வளம், கனிம வளங்களின் அடிப்படையின் காரணமாகவும் மக்கள் கண்டம்விட்டு கண்டம் பரவினார்கள் என்றும் அறிகிறோம்.
காமின் பேரன் நிம்ரோத் ராஜ்ஜியம் :
கூஷ் நிரோத்தைப் பெற்றான். இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான். ஆகையால் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோத்தைப் போல என்னும் வழக்கச் சொல் உண்டாயிற்று. சிநேயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே, என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதிஸ்தானங்கள். ஆதியாகமம் : 10 ; 8 - 10.
நோவாவின் பேரனும் சேமின் மகனுமான அசுரின் ராஜ்ஜியம் :
அந்த தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டு போய், நினிவயையும், ரெகோபோத் பட்டணத்தையும், கலாகையும், நினிவேக்கும் காலகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான். இது பெரியப் பட்டணம். ஆதியாகமம் : 10 : 11-12. இப்படி ஆதி மக்கள் பட்டணத்தை கட்டி வாழ்ந்தார்கள் என்று வேதம் வெளிப்படுத்துகிறது. மேலும் நோவாவின் சந்ததியார் உலகத்தில் பரவிப் போனதை உலக வரைப்படம் தெளிவுப்படுத்துகிறது.
இவ்வாறு நோவாவின் வம்சம் சிறுசிறு குழுக்களாக பிரிந்து பட்டணங்களை கட்டி எழுப்பி உலகமெங்கும் பரவினார்கள். இவர்கள் தங்கள் நாமங்களை தாங்கள் கட்டிய பட்டணங்களுக்கு சூட்டி பரவினார்கள். இன்று தேசம் நோவாவின் வம்சத்தால் நிரம்பியிருக்கிறது. அன்றைய காலப் பெயர்கள் காலப்போக்கில் வழுவி மருவி மாற்றம் பெற்று இப்போது இருப்பது போல் இன்றைய தேசங்களின் மாற்றுப் பெயர்கள் நமக்கு உணர்த்துகிறது என்பதை நாம் புரிந்துக்கொள்ள ஆதாரமாக மேலே உள்ள இந்த உலகப்படம் உதவும்.
உலகமே தேவனோடு சஞ்சரித்த தேவ மனுஷனாகி நோவாவின் வித்தில் உருவான சந்ததியாக இருந்தாலும் பூமியிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தேவனை அறியாதவர்களாகவும் ஒரு படி மேலே போய் தேவனை தூஷிக்கிறவர்களாகவும், மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பது வேதனையான காரியமாகும். இந்நிலையில் உலகம் விக்கிரக வணக்கத்துக்கு அடிமைப்பட்டு கிடப்பது துரதஷ்டம். வேதம் சொல்லுகிறது, நான் கர்த்தர், இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். ஏசாயா : 42 : 8. ஆக இந்த உண்மையை மக்கள் உணரும் நாளிலே ஆரோக்கியமடைவதும், செழிப்பதும், வெற்றிப்பெறுவதும் நடக்கும். மொத்தத்தில் தேசம் சமாதானத்தோடு சுகித்திருக்கும், ஆமென்.
சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.