Father of Believers
விசுவாசிகளின் தகப்பன் - சுவி. பாபு T தாமஸ்
ஆபிரகாம் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆதியாகமம் : 15 : 6
கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசிர்வதித்து, உன் பேரைப் பெருமைபடுத்துவேன். நீ ஆசிர்வதமாய் இருப்பாய். உன்னை ஆசிர்வதிக்கிறவர்களை ஆசிர்வதிப்பேன், உன்னை சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசிர்வதிக்கப்படும் என்றார். கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னப்படியே அவன் புறப்பட்டுப் போனான். லோத்தும் அவனோடே கூடப் போனான். ஆபிராம் ஆரானை விட்டுப் புறப்பட்ட போது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத் தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டு போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள். ஆபிராம் அந்த தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமி மட்டும் வந்தான். அக்காலத்திலே கானானியர் அத் தேசத்தில் இருந்தார்கள். கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி, உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்கு தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிப்பீடத்தைக் கட்டினான்.ஆதியாகமம் ; 12 ; 1 - 7.
ஆபிராம் என்னும் ஆபிரகாம் யார் :
ஆபிராம் நோவாவின் மகனான சேம் வழியில் வந்த தலைமுறையான நாகோருக்குப் பிறந்த தோராகின் மகன். இவர்கள் ஊர் என்னும் கல்தேயர் பட்டணத்தில் வாழ்ந்து வந்தவர்கள். ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயர் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர். அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக் கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கை பண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர். நீர் நீதியுள்ளவர். நெகேமியா: 9 : 7 - 8. ஆபிராம் ஆகிய ஆபிரகாம் என்பவர் ஆதாமுக்குப் பின் வந்த இருபதாவது தலைமுறையும், நோவாவிற்குப் பின் வந்த பத்தாவது தலைமுறையானவர். ஆபிரகாமுடைய முற்ப்பிதாக்கள் யாரென்றால் ஆதாம், சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத், ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, நோவா, I நாளாகமம் : 1 : 1-4. சேம், அர்பக்சாத், சாலா, எபேர், பேலேகு, ரெகூ, செரூகு, நாகோர், தேராகு, I நாளாகமம் : 1 : 24 - 26. கர்த்தர் ஆபிரகாமைத் தெரிந்துக்கொண்டார் காரணம் நோவாவைப் போல இவரும் தேவனுக்கு முன்பாக உண்மையுள்ளவராயிருந்தார். அதற்கான சான்றுகளை பார்ப்போம்.
கர்த்தர் ஆபிரகாமை ஏன் தெரிந்துக்கொண்டார் ?
1. கீழ்ப்படித்தல் : தேவனாகிய கர்த்தர் ஆபிராகமுக்கு சொன்னதை அவர் அப்படியே கேட்டார். கர்த்தர், ஆபிராமுக்கு சொன்னப்படியே அவன் புறப்பட்டு போனான். லோத்தும் அவனோடு கூடப் போனான். ஆபிராம் அரானை விட்டுப் புறப்பட்டப் போது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். ஆதியாகமம் ; 12 ; 4. ஆபிரகாம் தன் வயதையோ, சூழ்நிலையையோ, வசதி வாய்ப்புக்களையோ பொருட் படுத்தியதாகவே தெரியவில்லை. மாறாக கர்த்தருடைய வார்த்தைக்கு அப்படியே கீழ்ப்படிய வேண்டும் என்பதே அவர் பிரதான நோக்கம்.
2. விசுவாசம் : நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். இனி உன் பேர் ஆபிராம் எனப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினப்படியால், உன் பேர் ஆபிரகாம் எனப்படும். உன்னை அதிகமாய்ப் பலுகப் பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன். உன்னிலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். உனக்கும் உனக்குப் பின் வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறைத் தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானன் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்திரமாகத் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார்.ஆதியாகமம் : 17 : 4 - 8. இத்தனைக்கும் ஆபிரகாமுக்கும் சாரளுக்கும் பிள்ளையில்லாதிருந்தது, என்றாலும் கர்த்தருடைய வார்த்தையை ஆபிரகாம் அப்படியே விசுவாசித்தார்.
3. விட்டுக்கொடுத்தல் ; ஆபிராம் மிருகஜீவன்களும், வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான். அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல் மட்டும், பெதேல்லுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம் போட்டதும், தான் முதன் முதல் ஒரு பலிப்பீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான். அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுக்கொண்டான். ஆபிரகாமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்த பூமி அவர்களைத் தாங்கக் கூடாதிருந்தது. அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம் பண்ண ஏதுவில்லாமற் போயிற்று. ஆபிராமுடைய மந்தை மேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்கு வாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிராம் லோத்தை நோக்கி, எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம். நாம் சகோதரர். இந்த தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது அல்லவா? நீ என்னை விட்டு பிரிந்துப் போகலாம். நீ இடது புறம் போனால் நான் வலதுபுறம் போகிறேன் . நீ வலதுபுறம் போனால் நான் இடதுபுறம் போகிறேன் என்றான். ஆதியாகமம் ; 13 : 2 - 9. ஆபிரகாம் தேவன் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக எதையும் விட்டுக்கொடுக்க துணிந்தார் என்பதற்கு இது ஒரு பெரிய சான்று. லோத்து ஆபிரகாமின் சகோதரன் மகன், மாத்திரமல்ல லோத்தின் ஆசிர்வாதம் ஆபிரகமினால் வந்தது எனினும் அவர் லோத்துக்கே முதல் வாய்ப்பை கொடுத்தார்.
இம்மூன்று விசேஷங்களோடு மற்றுமொரு உன்னத குணத்தை தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமில் கண்டார். கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப்பின் வரும் தன் வீட்டாருக்கும், நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். ஆதியாகமம் : 18 : 19. இதுவே அன்றும் இன்றும் மக்களிடையே இருக்கிற மிகப்பெரிய குறையாகும். நீதியாய் நடந்தவர்கள் அதை தம் பின் சந்ததி கடைப்பிடித்து நடக்கச் செய்வதில் தோல்வி யுற்றார்கள் என்பது ஓர் சரித்திர உண்மையாகும். அதோடு நில்லாமல் நீதி நியாயங்களை வலியுறுத்துவது பெரிய விஷயமல்ல, நீதி நியாயங்களை செய்து கடைப்பிடித்து யாவரையும் கடைப்பிடிக்க செய்வதே மிகப்பெரிய விஷயம். இதை ஆபிரகாமினிடத்தில் கர்த்தர் காண்டார். அப்பொழுது கர்த்தர், ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப் படுவதினாலும், நான் செய்ப்போகிறத்தை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? ஆதியாகமம் : 18 : 17 - 18. பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப் போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறர்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். ஆதியாகமம் : 18 : 20 -21.
ஆபிரகாமுக்கு கிடைத்த பெரிய சலுகை : கர்த்தருக்கும் ஆபிரகாமுக்கும் நடந்த சம்பாஷனை
அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பிரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள். அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்கு தூரமாயிருப்பதாக. நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக. சர்வலோக நியாயாதிபதி நீதிச் செய்யாதிருப்பாரோ என்றான். அதற்கு கர்த்தர், நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுவதையும் இரட்சிப்பேன் என்றார். அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்திரமாக, இதோ தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத் துணிந்தேன். ஒரு வேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்து பேர் குறைந்திருப்பார்கள். அந்த ஐந்து பேர் நிமித்தம் பட்டணம் முழுவதையும் அழிப்பிரோ என்றான். அதற்கு அவர் நான் நாற்பத்தைந்து நீதிமான்களை கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். அவன் பின்னும் அவரோடே பேசி, நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர் நாற்பது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
அப்பொழுது அவன், நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக. முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர் நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன் இதோ, ஆண்டவரோடே பேசத் துணிந்தேன். இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர் இருபது நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன், ஆண்டவருக்குக் கோபம் வாராதிருப்பதாக. நான் இன்னும் இந்த ஒருவிசை மாத்திரம் பேசுகிறேன். பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர், பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். ஆதியாகமம் : 18 : 23 - 32.
சோதனையில் வென்ற ஆபிரகாம் :
ஆகவே கர்த்தருக்கும் ஆபிரகாமுக்குமான உறவு ஒரு சிநேகிதனுக்கான உறவு போன்றது காரணம் ஆபிரகாம் தேவன் மீது வைத்த விசுவாசம். கர்த்தர் ஆபிரகாமை சோதித்தார், எப்படியெனில் பிள்ளை இல்லாதிருந்த ஆபிரகாமுக்கும் சாரளுக்கும் அவர்கள் முதிர் வயதில் அதாவது ஆபிரகாமின் நூறாவது வயதில் ஈசாக்கை பெற்றெடுத்தார்கள். தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தப்போது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.ஆதியாகமம்:21:5. அப்பொழுது அவர், உன் புத்திரனும் உன் ஏக சுதனும் உன் நேசக்குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆதியாகமம் : 22 : 2. கர்த்தர் தனக்கு சொன்னபடியே ஆபிரகாம் செய்ய துணிகையில் கர்த்தர் இடைப்பட்டு அதை தடுத்தார். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார், அவன் இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர் பிள்ளையாண்டான் மேல் உன் கையைப் போடாதே, நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தப்படியினால் நீ தேவனுக்கு பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆதியாகமம் : 22 : 11- 12.
நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிப்பீடத்தின் மேல் செலுத்தின போது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானக்கப்ப்பட்டான். விசுவாசம் அவனுடைய கிரியைகளோடே முயற்சி செய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. அப்படியே, ஆபிரகாம் தேவனை விசுவிசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று. அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலே மாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. யாக்கோபு : 2 : 21 - 24. ஆகவே ஆபிரகாமின் வாழ்க்கை விசுவாசிகளான நம் எல்லோருக்கும் முன் மாதிரியான நிதர்சனமான ஜீவியமாகும், ஆமென்.
சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.