Sodom and Gomorrah
சோதோம் கொமோராவின் அழிவு - சுவி.பாபு T தாமஸ்
தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும் போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப் போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப் போகும்படி அனுப்பிவிட்டார். 19 : 29.
சோதோம் கொமோரா பட்டணங்களின் அழிவு :
நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம். இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது. இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். ஆதியாகமம் : 19 : 13. அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின் மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். ஆதியாகமம் ; 19 ; 24 - 25. இந்த பட்டணங்கள் அக்காலத்திலே மிகவும் செழிப்பான பட்டணங்கள். இந்தப் பட்டணங்கள் குறுநிலமன்னர்களால் ஆளப்பட்டடு வந்தது என்றும், சோதோமை பேராவு எனும் ராஜாவும், கொமோராவை பிர்சாவு எனும் ராஜாவுமாகிய குறு நில மன்னர்கள் ஆண்டு வந்ததாகவும், இவர்கள் ஏலாமின் ராஜாவாகிய கேதர்லாகோமேரை கப்பம் கட்டி சேவித்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது. இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாக்கோமேரை சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம் பண்ணினார்கள். ஆதியாகமம் : 14 ; 4. இந்தப் பட்டணங்களையும் அதில் வாசம் செய்த மக்களையும் கர்த்தர் அழித்ததற்கு காரணம் அவர்கள் செய்த பொல்லாதப் பாவம். இந்த பட்டணங்களைக் குறித்தும், பட்டணத்தின் காரியங்கள் மற்றும் அழிவின் விவரங்களை வேதாகமம் தெளிவாக ஆவியானவரால் பதிவுச் செய்யப் பட்டிருக்கிறது. இவைகள் நமக்கு பாடமாகவும், எச்சரிப்பாகவும் எழுதப்பட்டிருக்கிறது.
இந்தப்பட்டணங்கள் மிகவும் நீர் வளம் பொருந்திய செழிப்பான பட்டணங்கள். லோத்து ஆபிரகாமை விட்டு பிரிந்து போய் சோதோமிலே குடியேறினான். அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும், கொமோராவையும் அழிக்கும் முன்னே, சோவாருக்குப் போம் வழி மட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துக்கொண்டு, கிழக்கே பிரயாணப் பட்டுப் போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். ஆபிராம் கானன் தேசத்தில் குடியிருந்தான். லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம் பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான். சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும், கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாயிருந்தார்கள். ஆதியாகமம் : 13 : 10 - 14. இந்தப் பட்டணங்கள் யோர்தானுக்கு அருகாமையில் அமைந்திருந்தப்படியால் நீர் வளத்திற்கு பஞ்சமிருக்க வாய்ப்பில்லை. யோர்தான் அறுப்புக் காலம் முழுவதும் கரைபுரண்டு போம் என்று யோசுவாவின் புஸ்தகத்தில் பார்க்கிறோம். அப்படியாக நீர் வளம் மிகுந்திருந்த காரணத்தினாலே விளைச்சலும், அதினால் வர்த்தகமும் நடைபெற்ற காரணத்தினால் செல்வம் கொழித்து செழிப்பான வாழ்க்கை. இந்த வாழ்க்கையின் காரணமாக மாபாதக செயல்களும் பெருகினது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமி சந்திக்கும் அழிவுகள் :
உலகம் உண்டானது முதல் பூமி சந்திக்கும் பேரழிகளில் சோதோம் கொமோராவின் அழிவு இரண்டாவது பேரழிவாகும். ஆதாமில் துவங்கி பத்தாவது தலைமுறையான நோவாவின் காலத்தில் முழு உலகமும் சந்தித்த முதல் பேரழிவு ஜலப்பிரளயம். கர்த்தர் ஜலப் பிரளயத்தால் மக்களை அழிக்க காரணமே அவர்களின் பொல்லாத நினைவுகளும் பாவ செயல்களும் ஆகும். தேவன் தம் மக்களை ஜீவ விருட்சத்தினால் போஷித்து அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் அளித்திருந்தார். ஆனால் ஆதாமின் மீறுதலினால் வந்த பாவத்தின் காரணமாக அவரும் அவரின் பின் தலைமுறையினர் யாவரும் ஜீவ விருட்சத்தை இழந்தப்படியினால் மரணம் என்னும் சாபத்திற்கு மனுக்குலம் ஆளானது. ஆயினும் ஏனோக்கையும் லாமேக்கையும் தவிர்த்து ஆதாம் முதல் நோவாவரைக்கும் வாழ்ந்த அனைவரும் ஆயிரம் ஆண்டுகளை தொடவில்லை எனினும் எட்டு நூறு ஆண்டுகளுக்கு கீழ் போகாமல் அநேகமாக நீண்ட ஆயுளோடு வாழ்ந்தார்கள் என்று வேதம் நமக்கு விவரம் அளிக்கிறது. 1.ஆதாம் 930 வருஷம் ஆதியாகமம் : 5 : 5, 2.சேத் 912 வருஷம் ஆதியாகமம் : 5 ; 8, 3.ஏனோஸ் 905 வருஷம் ஆதியாகமம் : 5 ; 11, 4.கேனான் 910 வருஷம் ஆதியாகமம் : 5 : 14, 5.மகலாலெயேல் 895 வருஷம் ஆதியாகமம்: 5 ; 17, 6.யாரேத் 962 வருஷம் ஆதியாகமம்; 5 ; 20, 7.ஏனோக்கு 365 வருஷம் ஆதியாகமம் 5 ; 23, 8.மெத்தூசலா 969 வருஷம் ஆதியாகமம் : 5 : 27, 9.லாமேக்கு 777 வருஷம் ஆதியாகமம் 5 : 31, 10.நோவா 950 வருஷம் ஆதியாகமம்: 9 : 29.
இந்த நிலை ஜலப் பிரளையத்திற்க்குப் பின் வாழ்ந்த மனிதர்களின் வயதில் ஆச்சரியவிதமான மாற்றத்தை ஏற்படுத்தி இருந்ததை பார்க்க முடிந்தது. ஜலப்பிரளயத்திக்கு பின் நோவா தொளாயிரத்து ஐம்பது வருஷம் வாழ்ந்தாலும் அவருடைய மகனான சேம் 500 வருஷங்களே வாழ்ந்தார்,ஆதியாகமம் : 11 : 11. ஆக மனுஷர்களின் ஆயுசுக் காலம் பாதியாக குறைந்துப்போனது. இது உலக அழிவிற்கும் அதற்குப் பின்னுமாகா வாழ்ந்த மக்களிடையே காணப்பட்ட மிகப்பெரிய வித்தியாசம் ஆகும். அவரைத் தொடர்ந்து அர்பக்சாத் 403 வருஷங்கள், ஆதியாகமம் : 11 : 13. சாலா 403 வருஷங்கள், ஆதியாகமம் : 11 : 15. ஏபேர் 430 வருஷங்கள், ஆதியாகமம் : 11 : 17. இவர்களுக்குப்பின் மீண்டும் மனிதர்களின் வயதில் மாற்றம் ஏற்பட்டு ஆயுசின் காலம் பாதியாகக் குறைந்தது. எனவே ஏபேரின் மகனான பேலேகு 209 வருஷங்களே வாழ்ந்தார். ஆதியாகமம் : 11 : 19. ரெகூ 207 வருஷங்கள், ஆதியாகமம் : 11 ; 21. செரூகு 200 வருஷங்கள், ஆதியாகமம் : 11 : 23. நாகோர் 119 வருஷங்கள், ஆதியாகமம் : 11 : 25, தேராகு 250 வருஷங்கள், ஆதியாகமம் : 11 ; 32. ஆபிரகாம் வாழ்ந்த காலமோ 175 வருஷங்கள் மட்டுமே. ஆதியாகமம் : 25 ; 7. எனவே மனிதனுடைய ஆயுசுக் காலம் ஆயிரம் வருஷத்தை தோடும் நிலையிலிருந்து பாதிப் பாதியாக சரிந்து இருபதாவது தலைமுறையில் இருநூறு வருஷங்களுக்கும் கீழாக குறைந்துப்போனது. அதேபோல் இன்றைய காலக்கட்டத்தில் மேலும் பாதியாக மாறி இருக்கிறது என்பது நாம் அறிந்த உண்மை, என்றாலும் ஒரு தலைமுறையின் காலத்தை நூறு வருஷமாக வேதம் பதிவுச் செய்வதையே நாம் கணக்கில் கொள்ளுகிறோம்.
காரணம் இல்லாமல் காரியம் இல்லை :
ஆண்டவர் ஆபிரகாமினிடத்தில் சற்றேறக்குறைய 600 வருடங்களுக்குய் பின் நடக்கப்போகும் சம்பவத்தை வெளிப்படுத்தி ஆபிரகாமிற்கு தேவன் தந்த வாக்குதத்ததினை உறுதி படுத்துகிற வகையில் இஸ்ரவேல் மக்கள் 400 வருஷமாகிய நாலு தலைமுறைகள் எகிப்திலே அடிமைகளாக இருந்து பின் பாலும் தேனும் ஓடுகிறதான கானானை சுதந்தரிப்பார்கள் என்றார். சூரியன் அஸ்தமிக்கும் போது, ஆபிரகாமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது. திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. அப்பொழுது அவர் ஆபிரகாமை நோக்கி, உன் சந்ததியார் தங்களுடைய தல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத் தேசத்தார்களைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானுறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயத் தீர்ப்பேன். பின்பு மிகுந்தப் பொருட்களுடனே புறப்பட்டு வருவார்கள். நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய். நல்ல முதிர்வயதிலே அடக்கம் பண்ணப்படுவாய். நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள். ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். ஆதியாகமம் : 15 : 12 - 16. இங்கே நாம் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் நமக்குள் ஒரு கேள்வி எழவேண்டும், ஏன் ஆண்டவர் வேறொரு சந்ததியாருக்கு உரிய தேசத்தை இஸ்ரவேலர்களுக்கு தரவேண்டும் என்பதே அந்தக் கேள்வியாகும். அந்நாளிலே கர்த்தர் ஆபிரகாமோடே உடன்படிக்கைப் பண்ணி, எகிப்தின் நதி தொடங்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதி மட்டுமுள்ளதும், கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்த தேசத்தை உன் சந்ததிக்கு கொடுத்தேன் என்றார். அத்தியாகம் : 15 : 18 -21.
நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தாருடைய செய்கைகளின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும் இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப் படுத்தாதிருங்கள். நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப் படுத்தியிருக்கிறார்கள். தேசமும் தீட்டுப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன். தேசம் தன் குடிகளை கக்கிப் போடும். இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்கு முன் இருந்த அந்த தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று. இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப் போட்டது போல, நீங்கள் அதை தீட்டுப் படுத்தும்போது அது உங்களையும் கக்கிப் போடாதப்படிக்கு, நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக் கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புக்களில் ஒன்றையும் செய்யவேண்டாம். இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றையும் யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதப்படிக்கு அருப்புண்டுப் போவார்கள். ஆகையால் உங்களுக்கு முன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றையும் நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப் படுத்திக்கொள்ளாதப்படிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். லேவியராகமம் : 18 : 3, 24 - 30.
சோதோம் கற்றுத்தரும் பாடம் :
அப்பொழுது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும் செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே, ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும், சிநேயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும், எலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம் பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள். அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். ஆபிரகாமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தப்படியால், அவனையும் அவன் பொருள்களையும் கொண்டுப் போய்விட்டார்கள். ஆதியாகமம் : 14 : 8 - 12. தன் சகோதரன் சிறையாகக் கொண்டு போகப்பட்டதை ஆபிரகாம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே இறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர் மட்டும் அவர்களைத் தொடர்ந்து, இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள் மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஒபாமட்டும் துரத்தி, சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டு வந்தான். தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டு வந்தான். ஆதியாகமம் : 14 : 14 -16.
இதற்குப் பிறகும் சோதோம் கொமோராவின் மக்கள் மனம் திரும்பவில்லை. பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூகுரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடியதயிருப்பதினாலும் நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். ஆதியாகமம் : 18 : 20 -21. அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலில் உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரை மட்டும் குனிந்து, ஆண்டவர்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத் தங்கி காலையில் எழுந்து பிரயாணப் பட்டு போகலாம் என்றான். அதற்கு அவர்கள் அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான், அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு அவர்களுக்கு விருந்து பண்ணினான், அவர்கள் புசித்தார்கள். அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர் மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துக்கொண்டு லோத்தைக் கூப்பிட்டு, இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள்.
அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்கு பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய், சகோதரரே இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு. அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன். அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள். இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தப்படியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்ய வேண்டாம் என்றான். அதற்கு அவர்கள், அப்பாலே போ பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுதும் அவர்களுக்கு செய்வதைப் பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி, தெரு வாசலில் இருந்த சிறியோரும், பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப் பண்ணினார்கள். அப்பொழுது அவர்கள்வாசலைத் தேடித் தேடி அலுத்துப் போனார்கள். பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி, இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருகிறார்கள் ? உன் குமாரத்திகளாவது பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப் போகிறோம். இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது. இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். ஆதியாகமம் : 19 ; 1 - 13.
இந்த சம்பவகள் அனைத்தும் நமக்கு எச்சரிப்பை தரும் வெளிப்பாடுகளாகும். தேசம் தொடர்ந்து பல்வேறு விதமான அழிவுகளை சந்தித்த வண்ணம் இருக்கிறது. ஆனாலும் மக்கள் உணர்வடையாமல் இருப்பது வருத்தத்திற்குரிய காரியங்களாகும். இனியும் காலம் தாழ்த்தாமல் மனம் மாறுவோம், தேவனை நோக்குவோம். உன்னதமான வாழ்வை பெறுவோம், ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.