Wonder seven
இனியவைகள் ஏழு - சுவி.பாபு T தாமஸ்
நம் ஒவ்வொருவர் வாழ்க்கையும் மிகவும் விசேஷமானவைகள். நாம் அனைவரும் அதிசயமாக உருவாக்கப்பட்டவர்கள். நமக்குள் அளப்பரிய ஆற்றல் புதைந்து கிடக்கிறது. நாம் அனைவருமே அற்புதப்பிறவிகள் என்று சொன்னால் மிகை அல்ல. பல நூறாயிரம் சூப்பர் கணினிகளை விஞ்சும் அறிவும் திறனும் பலமும் ஒருங்கே கொண்டவன் தான் மனிதன். நாம் அனைவரும் மிக கவனமாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டவர்கள். வேதாகமம் நம்மைக்குறித்து பேசும்போது, நாம் தேவ சாயலிலும், ரூபத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்று சாட்சி பகருகிறது. யானை பலம் யானைக்கு தெரியாது போல மனிதனின் மகத்துவம் மனிதன் அறியான். இந்த உண்மையை அறிந்தவர்கள் மட்டும் தனக்கும் தன்னை சார்ந்தோருக்கும் அவர் சார்ந்த சமூகத்துக்கும் உப்பாகவும், வெளிச்சமாகவும் வாழ்ந்து மறைந்தோர் சில கோடி. இந்தப் பட்டியலை பல கோடிகளாக மாற்றுவது தான் இந்த தொகுப்பின் நோக்கம். நமது அநுபவப் பூர்வமான வாக்கியங்களை கவனித்து, அதை கவனமாய் கைக் கொண்டால் மெச்சும்படி நம் யாவருக்கும் நல் வாழ்வு அமையும் என்பது உண்மை.
ஒருவர் வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால் பல்வேறு பிரயத்தனங்கள் அவசியம். இங்கே ஏழு நிலைகள் கவனமாய் தேர்வு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த ஏழு நிலைகளும் ஏழு வெற்றிப்படிகள். இவைகளை நம் ஒவ்வொருவரும் கவனமாய் கையாண்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம். துன்பம் தொலையும், கண்ணீர் மறையும், கவலைகள் காத தூரம் ஓடும்.
வாழ்க்கைக்கு இனிமை தரும் இனியவை ஏழு :
1. ஜெபம் : நீங்கள் சோதனைக் குட்படாதப்படிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளது தான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மாற்கு : 14 : 38.
ஜெபம் என்பது ஆண்டவரிடத்தில் கேட்பது, பேசுவது ஜெபம். ஆக ஜெபம் என்பது ஒரு தொடர்பு கொள்ள உதவும் கருவி ஆகும். நாம் ஆண்டவரோடு தொடர்பில் இருப்பதற்கு ஒரே வழி ஜெபம். தேவனிடத்தில் பேசுவதற்கு வேறு எந்த முறைகளும் நமக்கு அருளப்படவில்லை. ஜெபத்தின் மூலமாகத் தான் நாம் நம் எண்ணங்களை, விருப்பங்களை, விண்ணப்பங்களை, மன்றாட்டை தேவனிடத்தில் தெரிவிக்க முடியும். ஜெபிப்பதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு கற்று கொடுத்திருக்கிறார். இந்த முறைமை நமக்கும் மாதிரி யாகும். ஜெபம் தான் நமக்கு ஜெயத்தை தரும். ஜெபத்தின் மூலமாக நாம் எப்போதும் தேவனோடு தொடர்பில் இருக்க முடியும். ஜெபிப்பதற்க்கென்று எந்த விதமான வரையறையும் கிடையாது. கால நேரமோ, கால அளவீடோ கிடையாது. ஆனால் தேவனை கண்டடைய தக்க சமயத்தில் அவரை தேடுவதும், முறையான ஒழுங்கோடு அவரை நோக்கி கூப்பிடுவதும் முக்கியமே. கர்த்தரைக் கண்டடைய தக்க சமையத்தில் அவரை தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். ஏசாயா : 55 : 6. தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். சங்கீதம் : 145 : 18.
பொதுவாக அதிகாலை நேரம் தேவனோடு தரித்திருப்பதற்க்கு சிறந்த நேரமாக கருதப்படுகிறது. கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருள்வீர், காலையிலே உமக்கே நேரே வந்து ஆயத்தமாகி காத்திருப்பேன். சங்கீதம் ; 5 : 3. அதே சங்கீதக்காரன் சொல்லுகிறான், அந்தி சந்தி மத்தியான வேளையிலும் நான் தியானம் பண்ணி முறையிடுவேன், அவர் என் சத்தத்தைக் கேட்ப்பார் : சங்கீதம் : 55 : 17. அதே நேரத்தில் நாம் இடைவிடாமல் ஜெபம் பண்ணுவதும் அவசியமாகிறது. இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். கொலோசெயர் : 4 : 2. என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எரேமியா : 33 : 3. நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விருப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் : 4 : 6. மேலும் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு : 21 : 22. ஜெபத்தில் இரண்டு வகையுண்டு ஒன்று தனித்து ஜெபிப்பது மற்றொன்று கூடி ஜெபிப்பது.
தனி ஜெபம் : ஒவ்வொருவரின் வாழ்விலும் தனி ஜெப அனுபவம் என்பது மிகவும் இன்றியமையாதது. தனி ஜெபவேளை என்பது தேவனோடு தனித் திருக்கும் ஒரு உன்னத அனுபவமாகும். நமக்கும் தேவனுக்கும் இடையில் ஒருவரும் இல்லாத சூழல், நம் உள்ளக்குமுறல்களை கொட்டி ஆறுதல் பெறுவதற்கு சிறந்த நேரம். தனிஜெபத் திற்க்கென்று எந்த வரையறையும் கிடையாது. மாறாக நினைத்த நேரத்தில் எந்த சூழ்நிலையிலும் கூப்பிடும் வாய்ப்பு
தனி ஜெபத்திற்க்கே உண்டு.
கூடி ஜெபிப்பது அல்லது குடும்பஜெபம் : குடும்பஜெபம் இல்லாத வீடு கூரையில்லாத வீடு போன்றது. குடும்பஜெபத்தில் குடும்ப உறுப்பினர்களிடையில் நல்ல ஐக்கியமும் அந்யோன்யமும் பெருகும், அன்பு தழைக்கும். பல்வேறு அனுகூலங்கள் உண்டாகும். குடும்பஜெபத்தின் வாயிலாகவே குடும்பத்தில் ஆசீர்வாதங்கள் பெருகும். தேவன் குடும்பத்தில் தலையாய் இருந்து பாதுகாத்து வழிநடத்துவார் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
பொதுவாக ஜெபத்தின் தன்மைகளைப் பார்க்கும் போது அவைகளை 7 பிரிவுகளாக பகுக்க முடியும். அவையாவன : 1. ஒரு மன ஜெபம் அல்லது ஒப்புரவாகுதல் ஜெபம் 2. விண்ணப்ப ஜெபம் 3. மன்றாட்டு ஜெபம் 4. ஆவிக்குரிய போராட்ட ஜெபம் 5. உடன்படிக்கை ஜெபம் அல்லது பொருத்தனை ஜெபம் 6. காத்திருப்பு ஜெபம் 7. நன்றி ஜெபம் ஆகியவைகளே. ஜெபிக்கிறவர்கள் உபவாசம் இருந்து போராடி ஜெபிக்க விரும்புகிறவர்களுக்கு கூடுதல் அனுகூலங்கள் பல உண்டு.
2. வேத வாசிப்பு - வேத தியானம் : கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் ; சங்கீதம் : 1 : 2 . கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால் தானே. உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். கர்த்தருடைய வசனம் கிடைப்பதற்கரிய பொக்கிஷம். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன். நாள் முழுதும் அது என் தியானம், நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர். அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் : 119 : 1,9, 18, 97 - 98, 105. வேதம் நமக்கு வெளிச்சம் தரும் ஆகவே நாம் எவ்வளவு அதிகம் சத்திய வேதாகமத்தை நம்முடைய தியானமாய் மாற்றுகிறோமோ அவ்வளவுக்கு அதிகமாய் நன்மைகள் உண்டாகும். நாம் தேவனைத் தொடர்புக்கொள்ள நமக்கு எப்படி ஜெபம் ஒரு வழியோ அதேபோல ஆண்டவர் நம்மைத் தொடர்புக்கொள்ள வேத வசனம் ஒரு பொது முறையாகும். தேவனாகிய கர்த்தர் நம்மை தொடர்புக்கொள்ள அவருக்கு ஆயிரம் வழிகள் இருந்தாலும் ஒரு பொதுவான முறை வேதாகமம்.
வார்த்தைகளைக் கொண்டு தேவன் நம்மோடு பேச முடியும். நாம் புரிந்துக்கொள்ளுவதும் மிகவும் எளிதாகும். ஆகவே வேதாகமத்தையும் அதிலுள்ள வார்த்தைகளையும் நாம் ஆழமாய் தியானிப்பது மிகவும் அவசியம். வேதாகமத்தை தியானிக்கையில் பரிசுத்தாவியானவரின் ஒத்தாசையோடு தியானிப்பது முக்கியம். அப்பொழுது தேவனுடைய சித்தத்தையும், வார்த்தைகளில் உள்ள நோக்கத்தையும் அதின் வியாக்கியானத்தையும் சரியாகவும், தெளிவாகவும் புரிந்துக்கொள்ள முடியும். வேத வார்த்தைகளில் உள்ள கருகலான காரியங்களுக்கு ஆழமான போதக சிட்சையே நல் விளக்கத்திற்கு வழியாகும். வேதத்தை சரியாய் புரிந்துக்கொள்ள ஆர்வமாய் விழையும் போது வாசல்கள் தானாய் திறக்கும். கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.
3. தேவனை ஆராதித்தல் : தேவன் ஆவியாயிருக்கிறார் அவரைத் தொழுதுக்கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுக்கொள்ள வேண்டும் என்றார். யோவான் : 4 : 24. நாம் தேவனை உண்மையாய் ஆராதிக்க வேண்டும். நமதாண்டவரை தொழுதுக்கொள்ளுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நாம் பூமியில் மனிதனாய் பிறந்திருப்பதே பெரும் பாக்கியம். நாம் பூமியில் வாழ்வதோடு அந்த பூமி நமக்கு வாழ்வாதாரமாக கொடுக்கப்பட்டிருப்பதும் பேறுகளில் பெரும் பேறு. சுவாசிக்க பிராணவாயுவும், குடிக்க சுத்தமான தண்ணீரும், உண்ண பூமியில் விளையும் ஆகாரமும் உடுக்க உடை மற்றும் இருக்க இடம் அனைத்தும் தேவன் நமக்கு கொடையாய் கொடுத்தது. இவை அனைத்துக்கும் மேலாக பாவத்தில் இருந்த நம்மை பாவத்தின் சம்பளமாம் மரணத்திற்கு நம்மை ஒப்புக்கொடாமல், நம்மை மீட்கும் இரட்சகராய் பூமியில் மனிதனாய் இறங்கி வந்த தேவனை ஆராதிப்பது சாலவும் சிறந்ததாகும். நம்மை மீட்கும் திட்டத்தில் இருந்த ஏழு உன்னத செயல்களை நாம் எண்ணி எண்ணி தேவனை ஆராதிப்பது நன்றிகளை எறேடுப்பதும் நம் ஒவ்வொருவரின் கடனாகும்.
1. பிறப்பு : தேவதூதன் அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள். இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா : 2 : 10 - 12. நம்மை மீட்பதற்காக தேவன் தம்முடைய மேலான மேன்மைகளை எல்லாம் துறந்து தாழ்மை கோலம் பூண்டு சத்திரத்தில் இடமில்லாமல் மாட்டு தொழுவத்தில் அவதரித்தார்.
2. வாழ்வு : நமது, நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார். தேவன் அவருடனேகூட இருந்தப் படியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார். அப்போஸ்தலர் : 10 : 38. நான் உங்களுக்குச் செய்ததுப் போல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தார். யோவான் : 13 : 15. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமியில் யாவருக்கும் நன்மையே செய்து நம் எல்லோருக்கும் மாதிரியை காண்பித்தார். அவருடைய வாழ்க்கை நமக்கு கற்று தரும் பாடம், நாம் அனைவரும் அவரை போல் வாழவேண்டும் என்பதே.
3. இறப்பு : இயேசு கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டார். அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன் பின்பு அவருடைய வஸ்திரங்களைப் ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக் கொள்ளும்படி அவைகளைக் குறித்துச் சீட்டுப் போட்டார்கள். அவரைச் சிலுவையில் அறைந்த போது மூன்றாம் மணி வேளையாயிருந்தது. அல்லாமலும், அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடே கூடச் சிலுவையில் அறைந்தார்கள். அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினாலே நிறைவேறிற்று. இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். மாற்கு : 15 : 24, 27 - 28, 37. நம்முடைய மீறுதகளுக்காக அவர் காயப்பட்டு நொறுக்கபட்டார். அவருடைய தழும்புகளாலே நாம் விடுதலையானோம்.
4. உயிர்ப்பு : அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலது பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள். அவன் அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள் சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிர்தெழுந்தார். அவர் இங்கே இல்லை, இதோ அவரை வைத்த இடம். மாற்கு ; 16 : 5 -6. நமக்காகவே மரித்தார், ஆனால் சாவை வென்றவர் உயிரோடு எழுந்து இன்றும் ஜீவனோடு இருக்கிறார்.
5. பரமேறுதல் : இயேசு சொன்னார், பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். இவைகளை அவர் சொன்னப் பின்பு, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அப்போஸ்தலர் : 1 : 8 - 9. அவர் பரலோகத்திற்குப் போய் தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார். தேவத்தூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 1 பேதுரு : 3 : 22.
6. வருகை : இதோ, சீக்கிரமாய் வருகிறேன். ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதப் படிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. வெளி : 3 : 11. இதோ, சீக்கிரமாய் வருகிறேன். அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது. வெளி : 22 : 12. அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்தியம். ஆண்டவர் சொல்லுகிறார், வானமும் பூமியும் ஒழிந்து போம் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. மத்தேயு : 24 : 35.
7. நித்திய ஜீவன் : தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுபோகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் : 3 : 16. நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 1 யோவான் : 2 : 25. யுக யுக மாய் நாம் தேவனோடு வாழும் பாக்கியம் உண்டு என்பதை நித்திய ஜீவன் தரும் உண்மை.
4. சபைகூடுதலும் அப்பம் பிட்குதலும்: சபை கூடுதல் மிகவும் விசேஷம் நிறைந்த காரியம் மேலும், அன்புக்கும் நற்கிரியைக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடி வருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டு விடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ, அவ்வளவாய்ப் புத்தி சொல்லவேண்டும். எபிரெயர் : 10 : 24 - 25. அவ்வாறே அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, நீங்கள் இதை வாங்கி உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்ளுங்கள். தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம் பண்ணுவதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்து, இது உங்களுக்காக கொடுக்கப் படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம் பண்ணின பின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து., இந்த பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். லூக்கா : 22 : 17 - 20. ஆகவே அப்பத்தையும் இரசத்தையும் உட்கொள்ளுவத்தின் மூலம் கிறிஸ்துவினால் உண்டான மீட்பை நாம் உறுதிப்படுத்துகிறோம்.
5. கொடுங்கள் : கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும். அமுகிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். லூக்கா : 6 : 38. இந்தக் கொடுத்தலில் கர்த்தருக்கு கொடுப்பதும், அயலானுக்கும், இல்லாதவனுக்கும் கொடுப்பதும் அடங்கும். ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள் ; 19 ; 17. இச் செயல் இயல்பாய் சாத்தியப் படவேண்டுமானால் நாம் நம்மைப்போல் பிறரை நேசித்தால் கைக் கூடும். அவன் பிரதியுத்தரமாக உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்பு கூர்ந்து, உன்னிடத்தில் அன்பு கூர்வதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூர்வாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நோக்கி, நிதானமாய் உத்தரவு சொன்னாய். அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். லூக்கா : 10 : 27 -28. ஆக நம்மை பிழைக்கவும் செழிக்கவும் செய்யும் கொடுத்தல் எனும் பண்பு.
6. மகிமைப்படுத்தல் : கர்த்தரை நம்பும் ஒவ்வொருவருக்கும் இயல்பான வெளிப்பாடு என்பது தேவனை மகிமைப்படுத்தும் உணர்வாகும். கர்த்தருக்கு கனத்தை செலுத்துவதென்பது அவரை மற்றவருக்கு அறிவிப்பதே நாம் கர்த்தருக்கு செலுத்தும் மகிமையாகும். யாவரையும் தேவனுடைய சொந்தங்களாக மாற்றிப்பார்ப்பதே நாம் தேவனிடத்தில் காட்டும் அன்பின் அடையாளம். ஆகையால், நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். மத்தேயு : 28 : 19 -20.
7. கீழ்ப்படிதல் : எல்லா வற்றிலும், எல்லாக் காலத்திலும், எல்லாக் காரியத்திலும் கர்த்தருக்கு கீழ்படிந்து வாழ்வதே நம் தலையாய கடனும் பொறுப்புமாகும். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம். யோவான் ; 14 : 23. இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின் படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். உபாகமம் : 28 : 1.
தேவன் தாமே உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.