top of page

Led me in Right path

  • May 5, 2020
  • 5 min read

நேர்வழியாய் நடத்தும் தேவன் - சுவி. பாபு T தாமஸ்

தலை குனிந்து, கர்த்தரைப் பணிந்துக்கொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியைக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்தரித்தேன். ஆதியாகமம் : 24 : 48.

அழைப்பில் உண்மை :

ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார். அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டில் உள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி, நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்ளாமல், நீ என் தேசத்தக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண் கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டுக் கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின் கீழ் வை என்றான். ஆதியாகமம் : 24 : 1 - 4. ஆபிரகாம் தன் நாற்பது வயது நிரம்பிய மகனாகிய ஈசாக்கு திருமணம் செய்ய விரும்பி, அந்தப்பொறுப்பை தன் வீட்டு விசாரணை காரனாகிய தமஸ்கு ஊரானான எலியேசரிடம் கொடுத்திருந்தார். தமஸ்கு என்பது இன்றைய சிரியா தேசத்தின் தலைநகராகும். அதற்கு அந்த ஊழியக்காரன், அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்த தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டு வந்த தேசத்திற்குத் தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப் போக வேண்டுமோ என்று கேட்டான். அதற்கு ஆபிரகாம், நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதப்படிக்கு எச்சரிக்கையாயிரு. ஆதியாகமம் : 24 : 5 - 6.

ஏனெனில் தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமை தெரிந்துக்கொண்டு பிரித்தெடுத்து, கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிற படியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக.

நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன். ஆதியாகமம் : 20 : 26. ஏன் ? தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல, பரிசுத்தத்திற்க்கே அழைத்திருக்கிறார். I தெசலோனிக்கேயர் : 4 : 7. ஆனால் ஆதி மனிதனாகிய ஆதாம் தேவ திட்டத்தையும் சித்தத்தையும் உணராமல் கீழ்ப்படியாமையினால் பாவம் செய்ய, பின் தலைமுறையிலும் தொடர்ந்தது. நோவா சகல ஜனங்களைப் பார்க்கிலும் உண்மையும் உத்தமுமாயிருந்தப்படியினாலே தேவனுடைய கண்களில் கிருபைப் பெற்றார். ஜலப்பிரளயத்தில் இருந்து காக்கப்பட்டார். ஆனப்படியினாலே அவர் வழியில் வந்த ஆபிரகாமை தெரிந்துக்கொண்டு தேவனுக்கேற்ற பரிசுத்த ஜனக் கூட்டத்தை உருவாக்க பிரித்தெடுத்தார். ஆகவே, கர்த்தர் ஆபிரகாமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்குப் போ, என்றார். கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னப்படியே அவன் புறப்பட்டுப் போனான், ஆதியாகமம் : 12 : 1, 4.

ஆபிரகாம் ஆரானை விட்டு புறப்படும் போது எழுபத்தைந்து வயதுள்ளவராயிருந்தார். இந்த இடைப்பட் காலம் வரைக்கும் தேவ அழைப்பில் உண்மையாய் இருந்தப்படியினாலே தன் மகனை தன் இனத்தாரிடத்திற்கும் தான் வாழ்ந்து வளர்ந்த ஊருக்கும் அழைத்துப்போக மறுத்தார். ஆபிரகாம் சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தன் இனத்தார் வாழும் இன்றைய இராக் என்னும் மேசபோத்தொமியா விலுள்ள பட்டணமாகிய ஊர் என்னும் கல்தேயர் தேசத்திற்கு ஒட்ட்டகங்களில் உச்சிதமான பொருள்களோடு போய் ஈசாக்குக்கு பெண் கொள்ளும்படி எலியேசரை அனுப்பினர். எலியேசரிடம் ஆபிரகாம் சொன்னது, என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி அணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டு வரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார். ஆதியாகமம் : 24 : 7. ஆபிரகாமின் வார்த்தையை நம்பி, ஊழியக்காரனாகிய எலியேசர் பத்து ஒட்டகங்களில் தன் எஜமானின் ஜென்ம பூமியை நோக்கி பயணமானார்கள்.

ஆபிரகாமின் விசுவாசம் :

நீண்ட கால இடைவெளி, உறவுகளோடு எந்த தொடர்புமில்லை. ஆபிரகாம் வாழ்ந்து வந்ததோ கானன் தேசத்திலுள்ள எப்ரோன் எனும் தென்மேற்கு கரை பகுதியாகும். இது எருசலேமிற்கு தெற்க்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மிகப்பழமையான நகரம். ஆனால் ஆபிரகாமின் இனத்தார் வாழ்ந்து வந்ததாக சொல்லப்பட்ட ஊர் என்னும் கல்தேயரின் இன்றைய ஈராக் தேசமோ சுமார் 600 மைல்களுக்கு அப்பால் இருந்தது. எப்போதாவது வழிப்போக்கர்கள் மூலமாக அவர் பூர்வீகக்குடிகளின் தகவல்கள் வருவது உண்டு என்றாலும் நேரடியான தொடர்புகளுக்கு வாய்போ சாத்தியக்கூறுகளோ இருந்ததாக வேதத்தில் பதிவுகள் இல்லை. ஒருவேளை ஆபிரகமும் அவர் குடும்பமும் புலம் பெயர்ந்ததில் மன தாங்கல்கள் அவர் இனத்தார் மத்தியில் இருந்ததற்கான வாய்ப்புக்களும் அதிகம் என்பது காரணமாக இருக்கலாம். இருப்பினும் ஆபிரகாம் தேவ கட்டளையை ஏற்று ஈசாக்கை மோரியா தேசத்திலுள்ள மலைகளின் ஒன்றில் பலி செலுத்த சென்று வந்தப்பிறகு அவர் இனத்தாரை குறித்த செய்தி வந்ததாக வேதத்தில் குறிப்பு உண்டு. இந்தக்காரியங்கள் நடந்தப் பின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து மில்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல், கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள். பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான். ஆதியாகமம் : 22 : 20-22.

தன் மருமகளாகிய ரெபெக்காளை குறித்து முன்பே ஆபிரகாம் அறிந்திருந்தும், பெண் கேட்டு பெத்துவேலினிடத்தில் போக தன் ஊழியக்காரனாகிய எலியேசரையும் தன் பரிவாரங்களையும் அனுப்பாமல், நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரரனுக்குப் பெண் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டுக் கொடுக்கும்படி சொன்னார். அப்பொழுது நான் என் எஜமானனை நோக்கி : ஒரு வேளை அந்தப் பெண் என் பின்னே வராதே போனாலோ என்று கேட்டதற்கு, அவர் ; நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார். என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண் கொள்வாய். நீ என் இனத்தாரிடத்துக்குப் போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய். அவர்கள் உனக்குப் பெண் கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார். ஆதியாகமம் : 24 : 38 - 41. ஆக ஆபிரகாம் தன் தேவனை மட்டுமே முழுமையாக நம்பி தன் மகனுக்கு பெண்ணெடுக்க தலைப்பட்டார். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று வேதம் சொல்லுகிறது. ரோமர் : 10 : 11. அதன் அடிப்படையிலேயே தன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் என்ற உறுதியோடு நின்றார். கர்த்தர் அவருக்கு சகலத்தையும் ஆசீர்வதித்திருந்தார். ஆபிரகாம் வயது சென்று முதிர்ந்த வனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகலக் காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார். ஆதியாகமம் : 24 : 1.

எலியேசரின் பொருனை :

தன் எஜமானின் வழியையும் முறைமையையும் அருகில் இருந்து பார்த்து உணர்ந்த எலியேசர் எனும் ஆபிரகாமின் ஊழியக்காரன் தான் தான் பிரவேசிக்க வேண்டிய பட்டணத்திற்குள் வந்து தேவனுடைய வழி நடத்துதலுக்கு ஒப்புகொடுக்க சித்தமானான். பெத்துவேல் வாழ்ந்து வந்த ஊர் என்னும் கல்தேயர் பட்டணத்தில் பிரவேசித்த எலியேசருக்கு பெத்துவேலின் வீட்டை கண்டு பிடிப்பதில் நிச்சயம் சிரமம் இருந்திருக்காது. ஆயினும் கர்த்தர் எங்கே யாரிடத்தில் அனுப்புவாரோ அங்கே போவதே அவனின் எண்ணமாய் இருந்தது. அப்படி செய்தால் மட்டுமே தன் எஜமானுடைய குமாரனுக்கு ஏற்ற துணையை கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பினான். ஆகவே அக்கால வழக்கத்தை பயன்படுத்திக்கொள்ள உத்தேசித்து, ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால், என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும். இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மெள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும் போது, குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.

அவன் இப்படி சொல்லி முடிக்கும் முன்னே, இதோ ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள். அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள். அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள். அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்க்கொண்டோடி, உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான். அதற்கு அவள், குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக்கொடுத்தாள். கொடுத்தப் பின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்லி, சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றி விட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள். அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப் பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும் பொருட்டு மவுனமாயிருந்தான்.

ஒட்டகங்கள் குடித்து தீர்ந்தப் பின், அந்த மனிதன் அரைச் சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்து சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து, நீ யாருடைய மகள், எனக்கு சொல்லவேண்டும். நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராதங்க இடம் உண்டா என்றான். அதற்கு அவள், நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி, எங்களிடத்தில் வைக்கோலும் தீவனுமும் வேண்டிய மட்டும் இருக்கிறது. இராத் தங்க இடமும் உண்டு என்றாள். அப்பொழுது அந்த மனிதன் தலை குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை. நான் பிரயாணம்பண்ணி வருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக் கொண்டு வந்தார் என்றான்.

ஈசாக்கு - ரெபெக்காள் திருமணம் :

இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள். இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது நான் வலதுப்புறத்தையாகிலும் இடதுப் புறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான். அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக, இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக் கூடாது. இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள். கர்த்தர் சொன்னப்படியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனிவியாகும் படிக்கு, அவளை அழைத்துக்கொண்டு போம் என்றார்கள். ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரை மட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டான். அப்பொழுது அவர்கள் பெண்ணை அழைத்து, அவள் வாய்ப் பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி, ரெபெக்காளை அழைத்து, நீ இந்த மனிதனோடே கூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள் போகிறேன் என்றாள். அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து, ரெபெக்காளை வாழ்த்தி : எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக. உன் சந்ததியர் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக் கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். ஆமென் .

சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள்

 
 
 

Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by COMMUNITY CHURCH. Proudly created with Wix.com

  • Twitter Classic
  • c-facebook
bottom of page