top of page

Pre

ஆசாரியத்துவம் - சுவி. பாபு T தாமஸ்

நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றன்றைக்கும் உண்டாயிருப்பதாக, ஆமென். வெளி : 1 : 6.

ஆசாரியத்துவமும் பணிகளும் :

ஆசாரியத்துவம் என்பது தேவன் ஒருவருக்கே ஆராதனை செய்ய ஏற்படுத்தப்பட்டதாகும். தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும் செய்வதற்காகவும், கையாளவும், பாதுகாக்கவும் உண்டான முறைமையாகும். ஒருவன் செய்யத்தகாகதென்று கர்த்தருடைய கட்டளையினால் விலக்கப்பட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட் பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தை சுமப்பான். லேவியராகமம் : 5 : 17. தவறுகளும், தவறுவது மனித இயல்பு, இதை மக்களுக்கு உணர்த்தி நிவிர்த்திசெய்கிற பொறுப்பு ஆசாரியத்துவத்திற்கு உண்டு. கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன். அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக் காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார். லேவியராகமம் : 6 : 7. அவ்வண்ணமே ஆசாரியத்துவம முறைமைகள் என்பது தேவனுடைய பிரமாணங்களையும், நியமங்களையும் பாதுகாக்கவும், மக்களுக்கு போதிக்கவும், நிலை நிறுத்தவும் ஏற்படுத்தப்பட்டது. ஆசாரியத்துவம் என்பது தேவனுக்கும் மக்களுக்குமான பாலமாக செயல் படுவதற்காகவும் தேவனுடைய நியாய விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் ஜீவியத்தை பரிசுத்தத்திற்குள் காத்து நடந்துக்கொள்ளுவதற்கு ஆதாரமாக உருவாக்கப்பட்டதாகும்.

மக்களுக்கான நியாயவிதி :

உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்ததும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம் பட்ட சேதங்களைக் குறித்தும், வழக்கு நேரிட்டு நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய், லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயதிபதியினிடத்திலும் விசாரிக்க வேண்டும். நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள். கர்த்தர் தெரிந்துக்கொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்கு விதிக்கிறப்படி செய்யக் கவனமாயிருப்பாயாக. அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலது புறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத் தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய். அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்பு செய்தால், அவன் சாகக்கடவன். இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய். உபாகமம் : 17 : 8 - 12. தேவன் இஸ்ரவேலர்களை மீட்டு இரட்சண்ணிய பாதையில் நடத்த அவ்வப்போது நியாயாதிபதிகளை ஏற்படுத்தி வழிநடத்திக்கொண்டு வந்தார். எனினும் அவர்கள் அனைவரும் தேவனுடைய பிரமாணங்களுக்கு உட்பட்டு நடவாமல் தங்கள் சுய விருபத்திற்கேற்ப செயல்பட்டார்கள் என்றே வேதம் நமக்கு சான்று பகற்கிறது.

ஆளுகிறவர்களுக்கான நியாயவிதி :

உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துக்கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய். உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உனக்கு ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய். உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது. அவன் அநேகக் குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேகக் குதிரைகளைத் தனக்கு சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப் பண்ணாமலும் இருக்கக்கடவன். இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப் போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதப்படி அவன் அநேக ஸ்திரீகளை படைக்கவேண்டாம். வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ண வேண்டாம். அவன் தன் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கும் போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர் பேரில் மேட்டிமைக் கொள்ளாமலும், கற்பனையை விட்டு வலது புறம் இடதுபுறம் சாயாமலும், இந்த நியாயப் பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும் பொருட்டு, அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப் பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக் கடவன். இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழ்வார்கள். உபாகமம் : 17 : 15 - 20. சவுல் ராஜியபாரத்தின் சரிவுக்கு காரணம் சாமுவேல் எச்சரித்தும் தேவனுடைய வார்த்தைக்கு கட்டுப்படாமல் ஜனங்களை பிரியபடுத்தி ராஜாங்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள எடுத்த விளைவாகும்.

பூமியில் மனிதனின் பங்கு :

ஆதியிலே தேவன் பூமியை உருவாக்கி அதை தங்கள் மேன்மையை இழந்த தூதர்களை மகாநாளின் நியாயத் தீர்ப்பிற்கென்று அதில் தள்ளி வைத்திருந்தார். இந்த பூமியானது தள்ளப் பட்ட தூதர்களின் சிறையாக இருந்த காரணத்தினால் பூமியை பாதுகாக்க மனித இனத்தை தேவன் பூமியில் படைத்தார். தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டு விட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத் தீர்ப்புக் கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைதிருக்கிறார். யூதா: 1 : 6. ஆதாமையும் ஏவாளையும் படைத்தக் கர்த்தர் அவர்களுக்கு வானத்திலும் பூமியிலும் சமுத்திரத்திலும் அதிகாரம் கொடுத்திருந்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி, நீங்கள் பலுகி பெருகி, பூமியை நிரப்பி, அதை கீழ்ப் படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் : 1 : 28. ஆண்டவர் பூமியிலே மனிதனுக்கு சகல அதிகாரத்தை கொடுத்தவர், அவர்கள் பூமியிலே செய்யத்தக்கவையும் செய்யத்தகாகததுமான கட்டளையையும் இன்னதென்று பகுத்து கொடுத்திருந்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் : 2 : 16 -17.

மனித நோக்கத்தின் வீழ்ச்சி :

ஆதாமும் ஏவாளும் தங்கள் நோக்கத்தை மறந்து கடமையை உணராமல் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்கள். தாங்களால் ஆளப்படவேண்டியவைகளால் ஆளப்படும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்ட காரணத்தால் பூமியின்மேல் அவர்களுக்கு இருந்த அதிகாரத்தை இழந்தார்கள். அதற்கு அடையாளமாக ஆதாமும் ஏவாளும் தங்கள் வாழ்ந்து வந்த ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டார்கள். கட்டப்பட்ட தூதர்கள் தந்திரமாய் வஞ்சித்து மனித இனத்தை தங்கள் பால் ஈர்த்து பயன்படுத்திக் கொண்டப்படியால் பூமி இவர்கள் நிமித்தம் சபிக்கப்பட்டது. ஆயினும் ஆதாமின் ஏழாம் தலைமுறையான ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்து ஜனங்களை எச்சரித்தும் போதித்தும் வந்தார். ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக் குறித்து, இதோ எல்லோருக்கும் நியாயத் தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்து வந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகள் எல்லாவற்றின் நிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங் கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். யூதா : 1 : 15 - 15. இருப்பினும் பூமியில் வாழ்ந்து வந்த மக்களிடையே பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடவில்லை. எனவே தேவன் பூமியை சகல ஜீவ ராசிகளோடும் ஜலப்பிரளையத்தால் அழித்தார். நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாய் இருந்தப்படியினாலே ஏனோக்கைப் போல தேவனோடு சஞ்சரித்து வந்தார். ஆகவே தேவன் நோவாவின் குடும்பத்தை அழிவிலிருந்து காப்பற்றினார். நோவாவின் பரிசுத்த வித்தினாலே பூமியில் தம் சித்தத்தை நிறைவேற்ற எண்ணங்கொண்டார். தேவன் நோவாவின் குடும்பத்தை தெரிந்துக்கொண்டு அவர்கள் மூலமாக ஜனங்கள் பெருகும்படி ஆசீர்வதித்தார். பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும். பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்கு கையளிக்கப்பட்டன. ஆதியாகமம் : 9 : 1 - 2. இந்த ஆசீர்வாதம் அன்று ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்ததாகும்.

இஸ்ரவேலரின் எழிச்சியும் வீழ்ச்சியும் :

என்றாலும் நோவாவின் பின் சந்ததியோ தேவனுடைய வார்த்தைகளை கேட்டும் காத்தும் நடக்கவில்லை. மக்கள் முன் போல் தங்கள் தங்கள் விருப்பு வெறுப்பிற்க்கேற்ப வாழலானார்கள். தேவ பயம் என்பது காணப்படாமல் போயிற்று. எனவே உலகம் மேலும் ஒரு அழிவை சந்தித்தது. சோதோம் கொமோராவின் பாவம் வானப்பரியந்தமும் எட்டினதாக வேதம் கூறுகிறது. அக்காலத்திலே நோவாவின் பத்தாம் தலைமுறையான ஆபிரகாம் தேவனுக்கு பயந்து அவர் மீது அளவற்ற அன்பும் விசுவாசமும் கொண்ட மனுஷனாக வாழ்ந்து வந்தார். ஆகவே தேவன் அவரை அழைத்து தம் திட்டத்தை ஆபிரகாம் மூலம் செயல் படுத்த விரும்பினர். ஏனோக்குக்கு பின் மெத்தூசலா அவருக்குப்பின் லாமேக்கு போன்றோர் தேவனுடைய தொடர்பிலிருந்த காரணத்தினால் நோவாவை காப்பாற்றி அவர் குமாரர்கள் மூலமாக உண்டான சந்ததிகளால் பூமியில் ராஜாக்களும் ராஜ்யங்களும் தோன்றலாயின. ஆனால் நோவாவிற்கு தேவனோடிருந்த உறவின் ஐக்கியம் அவர் குமாரரிடத்திலும் அவர்களுக்குப் பின் தோன்றின சந்ததிகளிடத்திலும் காணப்படாமல் போயிற்று. இது தான் இன்றைய காலக்கட்டத்திலும் காணப்படும் மிகப்பெரிய மாற்றங்களுக்கு காரணங்களாக விளங்குகிறது. மூதாதையர்கள் தேவனிடத்தில் கொண்டிருந்த உறவின் தாக்கம் வழிவழியாக தொடருவதில் சிக்கல் தொடருகிறது. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்பு கூர்ந்து, என் கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன். யாத்திராகமம் : 20 : 5 - 6. எனும் தேவனுடைய தீர்மானத்தை மக்கள் இன்னும் உணரவில்லை.

ஆபிரகாமில் பிறந்த புதிய சந்ததி :

இதன் காரணமாகவே நோவாவில் தோன்றிய தலைமுறையில் இருக்க வேண்டிய மாற்றங்கள் நிகழாமல் போய் மக்கள் அவரவர் விருப்பம் போல் தேவனுக்கும் அவர் திட்டத்துக்கும் விரோதமாக வாழலாயினர். இந்த வரிசையில் வந்தவர்களில் ஆபிரகாம் தேவனுக்கு பயந்து அவர் சத்தத்தை கேட்டு செயல் படுகிறவரானப்படியினால் ஆபிரகாம் தேர்வானார். தேவன் ஆபிரகாமைக்கொண்டு புதிய சந்ததியை மாதிரியான சந்ததியை உருவாக்க சித்தம் கொண்டார் காரணம் தேவன் ஆபிரகாமில் கண்ட ஓர் உயர்வான குணம். கர்த்தர் ஆபிரகாமிக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின் வரும் தன் வீட்டாருக்கும், நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். ஆதியாகமம் : 18 : 19. இதை செய்யத் தவறுவதின் காரணமாகவே நம் பின் சந்ததிகள் வழுவி வழி விலகிப்போகும் நிலை உருவாகிறது. மாத்திரமல்லாமல் தேவனுடைய கட்டளையை பிறர் கடைபிடிக்க முயலும்போது அதை காணும் நாமும் கண்டிப்புடன் கடைபிடிப்பதில் முனைப்பு காட்டாமல் தவறும்போது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போவது மற்றுமொரு பெரிய குறைப்படாகும். மூன்றாவதான குறைப்பாடு என்பது சமயத்திற்கேற்ப அல்லது சமூகத்திற்கேற்ப்ப சித்தாந்தங்களை மாற்றிக்கொள்ளும் போக்கு வீழ்ச்சியையே தரும் என்பது திண்ணம். ஆனால் ஆபிரகாம் இதில் கறாரானவர் என்பதால் தேவன் ஆபிரகாமோடு உடன்படிக்கைப் பண்ணி வாக்குத்தத்தம் தந்தார். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, இவன் உனக்கு சுதந்திரவாளியல்ல, உன் கர்ப்பப் பிறப்பா யிருப்பவனே உனக்குச் சுதந்திரவாளியாவான் என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னால் கூடுமானால் எண்ணு என்று சொல்லி, பின்பு அவனை நோக்கி உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். பின்னும் அவர் அவனை நோக்கி இந்த தேசத்தை உனக்குச் சுதந்திரமாக கொடுக்கும் பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார். ஆதியாகமம் : 15 : 4 - 7.

ஈசாக்கினிடத்தில் உறுதிப்பட்ட வாக்குத்தத்தம் :

ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப் படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக் கொண்டப்படியினால், நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப் பண்ணி, உன் சந்த்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்த்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் : 26 : 4 - 5. ஈசாக்கு ரெபெக்காளை விவாகம் பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான். இவள் பாத்தான் அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள். மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான். கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார். அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தன. அப்பொழுது அவள், இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள். அதற்கு கர்த்தர் இரண்டு ஜாதிகள் உன் கற்பத்தில் உண்டாயிருக்கிறது. இரண்டு வித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப் பார்க்கிலும் பலத்திருப்பார்கள். மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார். பிரசவகாலம் பூரணமானப் போது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது. மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான். அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள். பின்பு அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக் கொண்டு வெளிப்பட்டான். அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள். இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான். ஆதியாகமம் : 25 : 20 - 26. தேவன் ஆபிரகாமுக்கு அளித்த வாக்கு தத்தத்தை நினைவு கூர்ந்து ஈசாக்கின் வாழ்கையில் இடைப்பட்டு அவர்களை வழிநடத்திக்கொண்டு வந்தார்.

யாக்கோபு எனும் இஸ்ரவேல் :

ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், எழுந்துப் புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரரத்திகளுக்குள் பெண் கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான். சர்வ வல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக் கூட்டமாகும் படி உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக் கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருள்வாராக என்று சொல்லி, ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான். யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, ஒரு இடத்தில் வந்து, சூரியன் அஸ்தமித்தப்படியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக்கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின் கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான். அங்கே அவன் ஒரு சொப்பனங் கண்டான். இதோ ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவத் தூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். அதற்கு மேலாக கர்த்தர் நின்று, நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர். நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப் போலிருக்கும். நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். ஆதியாகமம் : 28 : 1 - 5, 10 - 15.

கானான் திரும்பிய யாக்கோபு :

கர்த்தர் யாக்கோபை நோக்கி, உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடதிற்க்கும் நீ திரும்பிப் போ. நான் உன்னோடே கூட இருப்பேன் என்றார். அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்களின் மேல் ஏற்றி, தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு,கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போக புறப்பட்டான். ஆதியாகமம் : 31 : 3, 17 - 18. யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில், தேவ தூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். யாக்கோபு அவர்களைக் கண்டப்போது இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான். யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான். அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச் சந்தைத் தொட்டார். அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச் சந்து சுளுக்கிற்று. அவர் நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன் நீர் என்னை ஆசீர்வத்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். அவர் உன் பேர் என்ன என்று கேட்டார். யாக்கோபு என்றான். அப்பொழுது அவர் உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் எனப்படும். தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். ஆதியாகமம் : 32 : 1 - 2, 24 - 28.

தேவன் யாக்கோபை நோக்கி, நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசா வின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிற போது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார். யாக்கோபும் அவனோடே கூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள். யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்த பின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து, இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார். பின்னும் தேவன் அவனை நோக்கி, நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக. ஒரு ஜாதியும், பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும். ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள். நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன். உனக்குப் பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி, தேவன் அவனோடு பேசின ஸ்தலத்திலிருந்து அவனை விட்டு எழுந்தருளிப்போனார். ஆதியாகமம் : 35 ; 1, 6, 9 - 13. தேவன் அன்று ஆபிரகாமுக்கு பெயர் தந்தார். இனி உன் பேர் ஆபிராம் என்னபப்டாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். ஆதியாகமம் : 17 ; 5.

எகிப்தின் அதிபதியான யோசேப்பு :

யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானன் தேசத்திலே குடியிருந்தான். இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டப் போது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள். அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி, உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா ? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகிறேன் வா என்றான். அவன் இதோ போகிறேன் என்றான். அப்பொழுது அவன் நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான். அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான். அவர்கள் அவனைத் தூரத்தில் வரக் கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வரும் முன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனை பண்ணி, ஒருவரை ஒருவர் நோக்கி, இதோ சொப்பனக்காரன் வருகிறான். நாம் அவனைக்கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்ட மிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள். அவனுடைய சொப்பனம் எப்படி முடியும் என்று பார்ப்போம் என்றார்கள்.

அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி, நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று. அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன ? அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப் போடுவோம் வாருங்கள். நமது கை அவன் மேல் படாதிருப்பதாக. அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள். அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துப் போகிற போது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கி எடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றுப் போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு போனார்கள். இவ்விதமாக யோசேப்பு எகிப்திற்குப் போனான். அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். ஆதியாகமம் : 37 : 1, 3 - 4, 12 -14, 18 - 20, 26 - 28, 36. கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான். அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். ஆதியாகமம் : 39 : 2. இரண்டு வருஷம் சென்ற பின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான். அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுக்கொண்டிருந்தான். அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது. அவைகளின் பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறி வந்து, நதி ஓரத்தில் மற்ற பசுக்களண்டையிலே நின்றது. அவலட்சணமும் கேவலமுமான ஏழு பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப் போட்டது. இப்படி பார்வோன் கண்டு விழித்துகொண்டான். மறுபடியும் அவன் நித்திரை செய்து, இரண்டாம் விசை ஒரு சொப்பனம் கண்டான். நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது. பின்பு, சாவியானதும் கீழ்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது. சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கத்ரிகளையும் விழுங்கிப்போட்டது. அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்துக்கொண்டான். காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது. அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும், சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான். ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற் போயிற்று.

அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான். அவனைத் தீவிரமாய்க் காவல் கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம் பண்ணிக் கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். பார்வோன் யோசேப்பை நோக்கி, ஒரு சொப்பனம் கண்டேன். அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை. நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்றுஉன்னைக்குறித்து கேள்விப்பட்டேன் என்றான். அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக, நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச் செய்வார் என்றான். மேலும் பார்வோன் யோசேப்பினிடத்தில் தான் கண்ட கனவை விவரித்தான். அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி, பார்வோனின் சொப்பனம் ஒன்று தான். தேவன் தாம் செய்யப்போகிறது இன்னது என்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார். எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் எழுவருஷம் வரும். அதன் பின் பஞ்சமுண்டாயிருக்கும் எழுவருஷம் வரும். அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரண மெல்லாம் மறக்கப்பட்டு போம். அந்தப் பஞ்சம் தேசத்தை பாழாக்கும். வரப் போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரண மெல்லாம் ஒழிந்து போம். இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதை சீக்கிரத்தில் செய்வார் என்பதை குறிக்கும் பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது. ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத்தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.

அப்பொழுது பார்வோன் தன் ஊழியக் காரரை நோக்கி, தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப் போல வேறொருவன் உண்டோ என்றான். பின்பு பார்வோன் யோசேப்பை நோக்கி, தேவன் இவை எல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறப் படியால், உன்னைப் போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய். உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக் கடவர்கள். சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி, பார், எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி , பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்தில் தரித்து, தன்னுடைய இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்து தேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான். பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி, நான் பார்வோன் ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையாவது, தன் காலையாவது அசைக்கக் கூடாது என்றான். இப்படியாக தேவன் யோசேப்புக்கு சொப்பனத்தில் தன்னுடைய பதினேழாவது வயதில் வெளிப்படுத்திய காரியத்தை அவருடைய முப்பதாவது வயதில் நிறைவேற்றினார். யோசேப்பு சொல்லியப்படியே ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது. சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று, ஆனாலும் எகிப்து தேசமெங்கும் ஆகாரம் இருந்தது. தேசமெங்கும் பஞ்சம் உண்டானப் படியால், யோசேப்பு களஞ்சியங்களை யெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான். பஞ்சம் எகிப்து தேசத்தில் வர வரக் கொடிதாயிற்று. சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தப்படியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள். ஆதியாகமம் : 41 : 1 - 8, 14 - 16, 25, 29 - 33, 38 - 44, 53, 56 - 57.

எகிப்த்தில் குடியேறிய இஸ்ரவேல் குடும்பம் :

அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லோருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல் யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. அவன் சத்தமிட்டு அழுதான். அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்ட போனார்கள், அப்பொழுது அவன் நீங்கள் எகிப்துக்கு போகிறவர்களிடத்தில் விற்றுப் போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான். என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப் போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம். ஜீவ ரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது. இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமல் இருக்க உங்களை ஆதரிக்கிறதற்க்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்.

பார்வோன் யோசேப்பை நோக்கி, நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், உங்கள் கழுதைகளின் மேல் பொதியேற்றிக் கொண்டு புறப்பட்டு, கானான் தேசத்துக்குப் போய், உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு எகிப்து தேசத்தின் நன்மையைத் தருவேன். தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காவும், உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்து தேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டு வாருங்கள். உங்கள் தட்முட்டுகளைக் குறித்துக் கவலைப்படவேண்டாம். எகிப்து தேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச் சொல்லி, நான் உனக்கு இட்ட கட்டளைப்படி செய் என்றான். ஆதியாகமம் : 45 : 1 -2, 4 - 8, 17 - 20. இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான். அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்கு தரிசனமாகி, யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார், அவன் இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர், நான் தேவன், உன் தகப்பனுடைய தேவன். நீ எகிப்து தேசத்துக்குப் போக பயப்படவேண்டாம். அங்கே உன்னை பெரிய ஜாதியாக்குவேன். நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன். நான் உன்னை திரும்பவும் வரப்பண்ணுவேன். யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார். யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறு பேர். யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டு பேர். ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபது பேர். ஆதியாகமம் : 46 : 1 - 4, 26 - 27.

மோசே :

யோசேப்பு தன் சகோதரரை நோக்கி, நான் மரணமடையப் போகிறேன். ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி, தேவன் உங்களை சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டு போவீர்களாக என்றும் சொல்லி, யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக் கொண்டான். யோசேப்பு நூற்றுப் பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஓரு பெட்டியிலே வைத்து வைத்தார்கள். ஆதியாகமம் : 50 : 24 - 26. மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவ பர்வதமாகிய ஒரேப் மட்டும் வந்தான். அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார்.அப்பொழுது அவன் உற்றுப் பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்து போகாமல் இருந்தது. அப்பொழுது கர்த்தர் எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும், ஏத்தியரும், எமோரியரும், பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். இப்போதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது. எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். ஆதியாகமம் : 3 : 1 - 2, 7 - 10.

கானானை நோக்கி புறப்பட்ட இஸ்ரவேலர் :

மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள். கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான். ஜனங்கள் விசுவாசித்தார்கள். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டப்போது, தலை குனிந்துத் தொழுதுக் கொண்டார்கள். யாத்திராகமம் : 4 : 29 - 31. கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தர்ர்கள். இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள். இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள். அவர்கள் பிள்ளைகள் தவிர ஆறு லட்சம் புருஷராயிருந்தார்கள். அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்று முப்பது வருஷம். நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றையதினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது. யாத்திராகமம் : 12 ; 36 - 38, 40 - 41. இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்தில் சேர்ந்தார்கள். அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்திரத்தில் சேர்ந்து, அந்த வனாந்திரத்தில் பாளயமிறங்கினார்கள்.மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான். கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு, நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால், நான் எகிப்தியருக்கு செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின் மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக் கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள். பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டிய வார்த்தைகள் என்றார். யாத்திராகமம் : 19 : 1 - 6.

கர்த்தர் கொடுத்த கட்டளைகளும் பிரமாணங்களும் :

மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான். அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய், கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின் படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதி வைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிப்பிடத்தைக் கட்டி, இஸ்ரவேலருடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின் படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான். இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான். அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதான பலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் வார்த்து, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான். அவர்கள் கர்த்தர் சொன்னப்படி எல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின் மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங் குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, நீ மலையின் மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார். யாத்திராகமம் : 24 : 3 - 8, 12. அவர்கள் நடுவிலே நான் வாசம் பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக. கிருபாசனத்தைப் பெட்டியின் மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை வைப்பாயாக. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன். கிருபாசனத்தின் மீதிலும் சாட்சிப் பெட்டியின் மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளை யெல்லாம் உன்னோடே சொல்லுவேன். யாத்திராகமம் : 25 : 8 - 9, 21 - 22. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும் படிக்கு, நீ ஆரோனையும் அவனோடே கூட அவன் குமாரனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக. யாத்திராகமம் : 28 : 1.

மெல்கிசேதேக்கின் முறைமையில் இயேசு கிறிஸ்து :

இவ்விதமாக தேவன் அன்று ஆசாரியத்துவத்தை உருவாக்கினார். தேவன் ஆபிரகாமை தெரிந்துக்கொண்டு அவர் மூலமாய் உண்டாகும் சந்ததியினாலே உலகத்தாருக்கு சாட்சியாக இஸ்ரவேலர்களை தெரிந்துக்கொண்டார். ஆயினும் இஸ்ரவேலர்களின் தெரிந்து கொள்ளுதலை அவர்கள் உணராமற் போனதினாலே தேவன் தாமே உலகத்தை மீட்கும் பொருளாக வெளிபட்டார். நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின் படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வளமையின்படியே ஆசாரியரானார். இவரோ, என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியால், மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். மேலும் தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். அவர் பிரதான ஆசாரியர்களைப் போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை. ஏனெனில் தம்மை தாமே பலியிட்டதினாலே இதை ஒரே தரம் செய்து முடித்தார். எபிரெயர் : 7 : 17, 24 - 27. ஆமென்.

சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page