Vegetarian or Non Vegetarian
சைவமா? அசைவமா ? - சுவி.பாபு T தாமஸ்
தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது, ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்ப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. I தீமோத்தேயு : 4 : 4
கர்த்தர் படைத்ததெல்லாம் நல்லவையே. தேவனாகிய கர்த்தர் தாம் படைத்த யாவற்றையும் பார்த்தார், நல்லது என்று கண்டார் என்று வேதம் சொல்லுகிறது. சகலமும் நன்மைகேதுவாய் நடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம், என்றாலும் நம் அடிமனதில் இருக்கும் ஒரு கேள்வி நாம் சைவமா அல்லது அசைவமா என்பது தான். பொதுவாக சைவம் என்ற வார்த்தை மரக்கறி உணவு மட்டும் உண்ணும் பழக்கமுடையவரை குறிப்பதற்கும் அவ்வாறே அசைவம் என்பது புலால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்களை குறிக்கும் சொற்றொடராகும். மரக்கறி உணவு போல் புல்லால் உணவும் பெருவாரியாக பழக்கத்தில் இருக்கும் உணவு முறை என்பது யாவரும் அறிந்ததே. அதேபோல் சீதோஷன நிலைகளை சார்ந்தே உணவு முறைகளும் மாறுப்படுகிறது என்பதும் உண்மை. பெரும்பாலான உணவுகள் தாவரங்களில் இருந்து தோன்றுகின்றன. சில உணவுகள் நேரடியாக தாவரங்களிடமிருந்தும் சில உணவுகள் மறைமுகமாகத் தாவரங்களைச் சார்ந்தும் பெறப்படுகின்றன. உணவு ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்ற விலங்குகள் கூட தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவை உண்ணுவதன் மூலம் வளர்கின்றன. தானிய வகை தானியங்கள் ஒரு முக்கிய உணவுவகை ஆகும், இவையே உலகளாவிய அளவில் எந்தவொரு வகை பயிரையும் விட ஆற்றலை அதிகமாக வழங்குகின்றன. உணவுக்கான உரிமை என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அனைத்துலக உடன்படிக்கையிலிருந்து பெறப்பட்ட ஒரு மனித உரிமையாகும், போதுமான வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான பசிதீர்க்க போதுமான உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது.
சைவ - அசைவ உணவு குறித்த வேதாகமத்தின் மெய் விளக்கம் :
ஆதி மனிதர்களாகிய ஆதாமும் ஏவாளும் மரக்கறி வகைகளை உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள் என்பதற்கு வேதத்தில் சான்றுகள் உண்டு. ஆதி மனித இனம் என்பது சைவ வகையை சார்ந்தது என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து தேவையில்லை. தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவ விருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். ஆதியாகமம் : 2 ; 8 - 9. இவ் வசனம் நமக்கு மிகத்தெளிவாக சில விளக்கங்களை தருவதை நாம் பார்க்கமுடியும்.
1. ஆதி மனிதனாகிய ஆதாமும் ஏவாளும் காட்டில் சுற்றித் திரிகிறவர்களாக அவர்கள் காட்டு வாசிகளாக வாழவில்லை மாறாக கட்டுக்கோப்பாக ஒழுக்க நெறி முறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்தார்கள் என்பதற்கு சான்றாக தேவன் அவர்களை தோட்டத்தில் வைத்திருந்தார். தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கென்று ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கினார் என்றும் அதிலே தேவன் மனிதனை உருவாக்கி வைத்தார் என்று வேதம் நமக்கு தெளிவுப்படுத்துகிறது.
2. மனிதன் புசிப்பதற்காகவே தேவனாகிய கர்த்தர் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித மரம் செடி கொடிகளையும் அவைகளில் விளைந்த காய் கனிகளையும் மனிதன் புசித்தான் என்பது மற்றுமொரு ஆதாரமாகும். மனிதன் பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமானதையே உண்டு வாழ்ந்தான் என்று சாட்சிப் பகருகிறது. அதே நேரம் யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷத்தில் இதற்கு இணையான திருஷ்டாந்தமான வெளிப்பாட்டை பார்க்கமுடியும். நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இரு கரையிலும், பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும் ஜீவ விருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும். அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கிய மடைவதற்கு ஏதுவானவைகள். வெளி : 22 : 2.
தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆதியாகமம் : 2 : 15 - 16. அப்படியானால் ஆதிமனிதனின் தொழில் விவசாயம் என்பதும், அவன் புசித்து வாழ்ந்தது பூமியிலிருந்து விளைந்த்ததையே என்பதும் நமக்குத் தெளிவாகிறது. தேவன் மனிதனை சாத் வீக மனநிலையிலே வாழும் வகையில் வைத்திருந்தார். எனவே சகலமும் அவனுக்கு கீழ்ப் பட்டிருந்தது.
சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறிய மனிதன் :
நடமாடுகிற ஜீவ ஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக. பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்தது போல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். அத்தியாகமம் : 9 : 3. இது தேவன் நோவாவின் சந்ததியாருக்கு அதாவது நோவாவும் அவர் குமாரரும் அவர்கள் மனைவிகளும் ஜலப் பிரளயத்திற்குப் பின்பு பேழையை விட்டு இறங்கினப் போது தேவன் அவர்களுக்கு சொன்ன வார்த்தையாகும். தேவன் அது வரை மனிதன் அசைவ முறைக்கு மாறும் அதிகாரத்தை தரவில்லை. ஆனால் மனிதன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்ட பின்னால் அவர்களின் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் வேதத்தில் இருக்கிறது. முதலாவதாக ஆதாமும் ஏவாளும் தங்களுடைய கீழ்ப் படியாமையின் காரணமாக பாவம் செய்ததினால் ஏதேன் தோட்டதிலிருந்தும், தேவ சமூகத்தை விட்டும் துரத்தப்பட்டார்கள். அப்படி அவர்களை துரத்துகையில் தேவன் அவர்களை சபித்தார். பின்பு அவர் ஆதாமை நோக்கி, நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவி கொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தப்படியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும். நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும். வெளியின் பயிர் வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். ஆதியாகமம் : 3 : 17 - 19.
மனிதனுக்கான தேவனுடைய சாபத்திலும், நாம் இரண்டு காரியங்களை நன்கு உணர்ந்துக்கொள்ள முடியும். 1. தேவன் மனிதனை பூமியின் பயிர் வகைகளையே புசிக்கும்படி கூறுகிறார், அதாவது பூமியிலிருந்து விளையும் விளைச்சலே அவனுக்கு ஆகாரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். 2. பூமி மனிதனின் பாவத்தின் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கிற படியால் அதின் விளைச்சல் அவனுக்கு போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் நமக்கு விளங்குகிறது. ஆகவே ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இரண்டு குமாரர் பிறக்கிறார்கள் ஒருவன் காயீன் மற்றவன் பேர் ஆபேல். இதில் மூத்தவனான காயீன் தன் தந்தையின் தொழிலான விவசாயத்தையே தன் தொழிலாகவும் தெரிந்துக்கொள்ளுகிறான். ஆனால் ஆபேலோ புதியத் தொழிலாக ஆடு வளர்ப்பை மேற்கொண்டான். ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான். அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். ஆதியாகமம் : 4 : 1 - 2. இவர்கள் இருவரும் கர்த்தருக்கு தங்கள் முதற்பலனை காணிக்கையாக கொண்டுவந்தார்கள். ஆனால் தேவன் சபிக்கப்பட்ட பூமியின் விளைச்சலிருந்து கொண்டுவந்த காயீனையும் அவன் காணிக்கையையும் அங்கீகரிக்கவில்லை. ஆபேலையும் அவன் காணிக்கையையும் அங்கீகரித்தார். சில நாள் சென்ற பின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் அங்கீகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கீகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி அவன் முக நாடி வேறுபட்டது.
அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி, உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று ? உன் முக நாடி ஏன் வேறு பட்டது. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றி யிருக்கும். நீ அவனை ஆண்டுக் கொள்ளுவாய் என்றார். ஆதியாகமம் : 4 : 3 - 7. இது சாபத்தில் விளைந்த வினை என்று காயீன் அறியாமல் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரிக்கப்பட்டதால் அவனைக் கொன்று மேலும் சாபத்தை சேர்த்துக்கொண்டான் காயீன். இது தான் இன்றும் மக்களிடம் தொடர்கதையாய் தொடர்கிறது. நாம் காரணத்தை உணராமல், அறியாமல் காரியத்தை நொந்து நோகடிக்கபடுவதே வாடிக்கையாய் உலகம் வீழ்ந்து கிடக்கிறது. இப்போதும் உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். நீ நீலத்தை பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது. நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார். ஆதியாகமம் : 4 : 11 - 12. இது தான் இன்றைய நம் நிலையும் கூட, அன்று காயீன் செய்த அதே தவறு. காயீன் தேவனிடத்தில் தன்னை அற்பணித்திருக்கவேண்டும். முதலில் ஆதாமும் ஏவாளும் இதை செய்யவில்லை, அவர்கள் செய்யத் தவறிய அதே தவறை காயீனும் செய்தான். விளைவு இரத்தப்பழியினால் வந்த சாபத்தையும் கூட்டிக்கொண்டான். பூமியில் கீழ்ப் படியாமையினால் பெற்ற சாபத்தோடு இரத்தப்பழியின் சாபத்தையும் சேர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை கெடுத்துக் கொண்டப்படியால் மனுஷர் சைவ முறையிலிருந்து அசைவ முறைக்கு மாறக் காரணமாயிற்று. இதற்கான சாப விமோசனத்தை ஒருவரும் தேடாமல் போனார்கள், என்றாலும் கடைசியாக ஆதாமின் ஒன்பதாம் தலைமுறையான லாமேக்கு இதை உணர்ந்தார். ஆகவே லாமேக்கு தன் குமரனுக்கு நோவா என்று பேரிட்டார். கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மை தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான். ஆதியாகமம் : 5 : 29.
முதல் வேட்டைக்காரன் நிம்ரோத் :
ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேறிய மனிதனின் பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஆதாமின் சந்ததியார் தங்கள் பழைய வழக்கமாகிய மரக்கறி உணவு வழக்கத்திலிருந்து முற்றிலும் மாறுப்பட்ட உணவு பழக்கமான புலால் உணவு முறைக்கு மாறியிருந்தார்கள். ஆகவே கர்த்தர் பூமியை மறுசீர்றமைக்கையில் புலால் உண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள அனுமதி அளித்தார். ஆகவே நோவாவின் குமாரனாகிய காமின் குமாரனாகிய கூஷின் மகனான நிம்ரோத் பெரிய வேட்டைக் காரனாக உருவெடுத்திருந்தான். கூஷ் நிம்ரோத்தைப் பெற்றான். இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான். ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிரோத்தைப் போல என்னும் வழக்கச் சொல் உண்டாயிற்று. ஆதியாகமம் : 10 : 8 - 9. இவர்கள் வழியில் ஆபிராகாமின் மகனான ஈசாக்கின் மகன் ஏசா பெரிய வேட்டைக்காரனாயிருந்தான். பிரசவக்காலம் பூரணமானப் போது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது. மூதத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும், சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான். அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள். பின்பு அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக் கொண்டு வெளிப்பட்டான். அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள். இவர்களை அவள் பெற்றப்போது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான். இந்தப்பிள்ளைகள் பெரியவர்களானப்போது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான். யாக்கோபு குணசாலியும் கூடார வாசியுமாய் இருந்தான். ஆதியாகமம் : 25 : 24 - 27.
தேவ தூதர்களும் சைவமே :
ஆபிரகாமின் காணிக்கை : ஆபிரகாம் வெண்ணையையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுக்கொண்டிருந்தான். அவர்கள் புசித்தார்கள். ஆதியாகமம்: 18: 8.
லோத்தின் காணிக்கை : அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான். அப்பொழுது அவனிடத்திற்கு திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்து பண்ணினான். அவர்கள் புசித்தார்கள். ஆதியாகமம் : 19 : 3
வனாந்திரத்தில் இஸ்ரவேலருக்காக பொழிந்த மன்னா என்னும் அப்பம் : அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான். அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். சங்கீதம் : 78 : 23 - 25. இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள். அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும் வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள். யாத்திராகமம் : 16 : 35.
கிதியோனின் காணிக்கை : அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி, நீ இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து இந்த கற்பாறையின் மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார். அவன் அப்படியே செய்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார். அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது. கர்த்தரின் தூதானோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்துபோனார். நியாயாதிபதிகள் : 6 : 20 - 21.
மனோவாவின் காணிக்கை : அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி, நாங்கள் ஒரு வெள்ளட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டு வருமட்டும் தரித்திரும் என்றான். கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி, நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன். நீ சர்வாங்க தகனபலி இட வேண்டுமானால், அதை நீ கர்த்தருக்கு செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான். நியாயாதிபதிகள் : 13 : 15 - 16.
எலியாவை போஷித்த கர்த்தர் : காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். I இராஜாக்கள் : 17 : 6. ஒரு சூரைச் செடியின் கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைப் பண்ணினான். அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி எழுந்திரு போசனம்பண்ணு என்றான். அவன் விழித்துப் பார்க்கிற போது இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலை மாட்டில் இருந்தது. அப்பொழுது அவன் புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான். I இராஜாக்கள் : 19 : 5 - 6.
சைவத்திலிருந்து மனிதன் அசைவத்திற்கு மாறினாலும் பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் புசிக்கத்தக்க ஜீவஜந்துக்கள் யாவை என்பதையும் அவைகள் எவை என்பதையும் பட்டியலிட்டிருக்கிறார். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர். ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப் படுத்தாமல் உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக. சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத் தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம் பண்ணும் பொருட்டு, மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவ ஜந்துக்களுக்கும், பூமியின் மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார். லேவியராகமம் : 11 : 44, 46 - 47. ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள்