top of page

Corruption Painful!

ஊழலின் வலி - சுவி. பாபு T தாமஸ்

அவரும் ஞானமுள்ளவர், அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்கள் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ் செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார். ஏசாயா : 31 ; 2.


ஊழலுக்கு வலி இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியாது, தெரிந்தால் ஊழல் செய்வார்களா என்ன. ஊழலுக்கு வலி உண்டு என்று யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஊழல் ஒரு கொடிய வியாதி என்றால் எல்லோரும் அதிசயமாய்ப் பார்ப்பார்கள். ஊழல் என்பது கொரோனா வைரஸ்சை விடக் கொடுமையானது என்றால் யாருக்கும் நம்பிக்கை வராது. தலைவலியானாலும் தனக்குன்னு வந்தால் தான் தெரியும் சேதி. இதில் இருக்கும் இன்னுமொரு பிரச்சனை என்னவென்றால், இங்கு தான் எங்கும் ஊழல் எதிலும் ஊழல், ஊழல் இல்லாத இடம் உண்டோ இப் பாரிலே என்று சொல்லும் அளவுக்கு எங்கும் நீக்கமற வியாபித்திருப்பது தான் ஊழல். ஆஸ்பித்திரி முதல் சுடுகாடு வரை என்று வேடிக்கையாய் விமர்சிப்பாரும் உண்டு. ஆதாவது பிறப்பு முதல் இறப்பு வரை ஊழல் நம் மண்ணில் மண்டிக்கிடக்கிறது என்றால் யாருக்கும் அதிசயமாய் தோன்றாது. அந்த அளவுக்கு நகமும் சதையும் போல மனித வாழ்வின் அங்கம் இந்த ஊழல். இந்த ஊழலுக்கு ஏற்ற தாழ்வு என்பது கிடையவே கிடையாது காரணம் இந்த ஊழல் கோபுரத்திலும் கும்மியடிக்கும், குப்பை மேட்டிலும் பாய் போட்டு குப்புற படுத்துக் கிடக்கும். இந்த ஊழல், படித்தவன் பாமரன், இருக்கப்பட்டவன் இல்லாதப்பட்டவன் என்ற பேதம் எல்லாம் அறவே கிடையாது. சும்மா சென்டர்லே சிம்மாசனம் போட்டு ஒய்யாரமா வீற்றிருக்கும்னா பார்த்துக்கோங்களேன், நம் மண்ணில் இந்த ஊழலுக்கு அவ்வளவு மவுசு. துணிந்தவனுக்கு துக்கமேன்பது இல்லை, இத்தனைக்கும் இது அண்டர்கிரவுண்டு டீலிங் என்று மேசைக்கடியில் நடந்தாலும் ஏனோ இதை பாவம் என்று யாரும் ஒதுக்கித் தள்ளுவதே இல்லை. ஆசை இல்லாத மனிதனே இல்லை, எல்லோருக்கும் செல்வமாய் வாழவேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை எப்படியும் நிறைவேற்றிக்கொள்ள மனிதன் கையிலெடுத்த ஆயுதம் தான் ஊழல்.

ஆசைதான் ஊழலுக்கு அடிப்படை :

பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். I தீமோத்தேயு : 6 ; 10. ஆசையோ யாரையும் விட்டப்பாடில்லை. எல்லோருக்கும் குபேரனாகவேண்டும் என்று ஆசைத்தான், ஆனால் கோத்திரம் வேண்டுமே என்று பார்த்தது, பார்க்கவைத்தது அந்தக்காலம். இப்போதெல்லாம் எல்லோருக்கும் அடைந்தால் மகாதேவி அவ்வளவு தான், அதிலும் ஒரே நாளில் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திட வேண்டும். இதற்காக எந்த எல்லைக்கும் போகத்தயார் யார் குடியையும் எடுக்கவும், கெடுக்கவும் தயார். படைப்பு ஒரு சார்புத் தத்துவம் ஆகவே ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் அந்த விதியையே தவறாகத் திரித்து ஒன்று வாழ ஒன்றை அழிப்பதில் மிதிப்பதில் தவறில்லை எனும் புதிய விதிக் கொள்கையை கையிலெடுத்து வீசி நடக்கப்பழகிக் கொண்டான். விளைவு ஊழல் இன்று உச்சத்தில், இன்னும் ஊழலை சட்டமாக்கவில்லை அவ்வளவு தான். இன்னும் போகிற போக்கில் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து சட்டமாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஊழல் என்பது சமுதாயத்திற்கு ஒரு பிரச்சனையே இல்லை என்று பேசும் அளவிற்கு மக்களின் மனநிலை மாறியிருந்தது. ஊழல் எனும் ஆணிவேர் அந்த அளவிற்கு ஆழ வேருன்றி படர்ந்து செழித்து ஓங்கி வளர ஆரம்பித்திருந்தது. எங்கும் எதிலும் ஊழல் என்பது மக்களின் தாரக மந்திரமாக உருமாற்றம் பெற்று விட்டது. இதற்கென தனி வட்டாரம் மாவட்டம் என பெரும் தலைகள் தலை தூக்க அதிகார மையங்களாய் சகல புஜ பல பராக்கிரமத்தோடு வலம் வருகிறது ஒரு கூட்டம். கொடுத்தால் சாதிக்கலாம் என்பது சமுதாயத்தின் தொன்று தொட்ட நம்பிக்கை. சத்திய வேதாகமத்தின் எச்சரிப்பாகிய பண ஆசையே சகல தீமைக்கும் வேராயிருக்கிறது எனும் கூற்றை உணராதிருப்பதினால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவது தொடர்கதை. இவைகளுக்கு மூல காரணமே ஊழலினால் விளையும் சாபம் என்பதையோ மனம் ஏற்பதே இல்லை. நாம் வாழும் மண் சாபத்தீடால் நிறைந்திருப்பதற்கு ஊழல் ஒரு முக்கியமும் மூலக்காரணமும் ஆகும். ஆனால் இம் மண்ணின் குடி மக்களோ, ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களோ இதை உணரவில்லை என்பது வருத்தமான உண்மை.

ஆசைக்கு அளவில்லை ;

மனிதன் எப்போதும் போடுவது சொத்துக்கணக்கு அது தனக்கு சொந்தம் தானா என்பதல்ல அவன் கணக்கு. எப்பாடு பட்டாவது சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதே அவன் கறார் கணக்கு. ஐசுவரியவானாக வேண்டும் என்று பிரயாசப்படாதே, சுய புத்தியைச் சாராதே. நீதிமொழிகள் : 23 : 4 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதும் என்று எண்ணுங்கள். நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதும்மில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. எபிரெயர் : 13 : 5. மனிதனுக்கு ஏனோ இவைகள் தெரிவதுமில்லை புரிவதுமில்லை. கண்ணுக்குத் தெரிந்து வந்தது என்னவோ ஒரு பங்குதான் என்றால் கண்ணுக்குத் தெரியாமல் போவது பத்து மடங்கு என்பதிலும் உணர்வில்லை, ஆனாலும் ஆசை விட்டப்பாடில்லை விட்டதையும் பிடிக்கத் துடியாய் துடிக்கிறான். இந்தப் போராட்டத்தில் மனிதன் தோற்றுக்கொண்டே இருக்கிறான், ஆனாலும் போராட்டக்கடலிலிருந்து கரையேற மட்டும் தோன்றுவதே இல்லை பாவம் மனிதன். உலகத்தை ஆதாயப்படுத்துவதில் மிகப்பெரிய ஆசை மனிதனுக்கு, இந்த உலகத்தையே ஆளும் வாய்ப்பை ஒரு பழத்துக்காக வெகு லாவகமாக இழந்துப்போனான் இந்த மனிதன். இதற்குக் காரணமும் ஆசைத்தான், என்ன ஒரு ஆசைக்காக இன்னொரு ஆசையைத் தொலைத்தான் ஆதாம். ஆசை வலியது காரணம் அது கொடியது, ஆகவே தான் எக்காலத்திலும் எல்லா ஊழலுக்குக் காரணம் ஆசை. பெரும்பாலும் அநியாய ஆசைகளே எல்லா கொடுமையான ஊழலுக்கும் வித்தாகிறது. எதோ பிழைப்பிற்காக செய்வதல்ல ஊழல், பிடுங்கிப் பிடுங்கி கொழுக்கவும், கோடி கோடியாய் கொண்டதை பாது காக்கவும் செய்வதே ஊழல். இந்த பாதகமான ஊழலுக்கு எந்நாளும் ஒழுக்கமிருந்ததில்லை எனவே ஒழுகுவதில் எங்கும் கண்ணியம் காண்பது அரிது. உலகம் இன்று ஊழல் மயம், எங்கும் எதிலும் ஊழல் புழங்குவதும், பொங்கிவடிவதும் நிதர்சனம். தன் குழந்தையின் பசிக்காக ரொட்டி திருடும் ஒருவனுக்கு இருக்கும் கூச்ச நாச்சம் கூட கோடிகளில் கொள்ளையிடும் ஊழல் வாதிகளுக்கு இருப்பதில்லை என்பது வேதனை. ஏன் ? ஊழல் தான் எல்லா மட்டத்திலும் ஆலமரமாய் பருத்து கிளைகள் விரிந்து பரவி செழுமையாய் இருப்பதும் ஒரு காரணம். இங்கு இப்போது ஊழலுக்கு எதிரானவன் தான் வெட்கித் தலை குனியவேண்டும் அல்லது வெதும்பி புழுங்க வேண்டும்.


பொதுவாக எல்லார் மனதிலும் எழும் கேள்வி ஊர் சொத்தை உலையில் போட்டவன் கொடிகட்டித்தானே பறக்கிறான் என்பார். இக்கரைக்கு எப்போதும் அக்கரை பச்சை பசெலேன்றுத் தான் தெரியும், அது பார்க்கும் கண்ணின் கோளாறு, உப்புத்தின்றவன் தண்ணீர் குடிப்பான் என்பது வரலாறு. பச்சைப்பசேல்லென தெரியும் இலைகள் கூட காய்ந்த பின் தான் சருகு அதுவரை நெருப்பும் துச்சம் தான், ஆனால் சருகுக்கோ ஒரு சிறு பொரி போதும் அனைத்தும் சாம்பலாகும். ஊழலின் வலிதெரியாத வரை தான் அதற்கும் மவுசு, கை சுட்டால் தெரியும் சேதி. நெருப்பு சுடும் என்று குழந்தைக்குத் தெரியாது, சுடும் என்று சொன்னாலும் புரியாது. கைப்பட்டால் புரியும் தலை தெறிக்க ஓடும் காத தூரம் அது போல் ஊழலுக்கு வினையுண்டு மருந்தில்லை. ஏனோ இங்கே இதை உணர்த்தத் தான் ஆளில்லை. சமுதாயமோ மதி மயங்கி மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மனம் உண்டா? இல்லையா? என்பது போன்ற ஆய்வுகளை ஆய்வதிலேயே திளைத்திருக்கிறது. தீண்டுவது நெருப்பு என்பதும் புரியவில்லை, இது உஷ்ணம் தரும் கதகதப்பின் மாயம். வீழ்ந்த சாம்ராஜ்ஜியங்களின் வரலாற்று உண்மைகள் விளங்கவில்லை, மண்ணுக்கு மண்ணாகிப் போன வல்லரசுகளின் அத்திபாரத்தை அசைத்து ஆட்டம் காணச் செய்த ஆணிவேர் ஊழல். கோபுரங்களும் கூவி விற்கப்பட்ட வரலாறு பலருக்கு நினைவில் இல்லாமலும், பலருக்கு தெரியாமலும் கூடப் போகலாம். ஆனால் அவைகளின் அகோர முடிவின் திரைக்குப்பின்னால் இருந்து ஆட்டுவித்ததும் ஊழல் தான். அதன் விஸ்வருபத்திற்க்கு ஆழமான உதாரணம் ஒன்று சத்திய வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதை காணலாம் வாருங்கள். சமாரியாவை தலைமையிடமாகக் கொண்டு இஸ்ரவேலை ஆண்ட ஆகாப் என்னும் ராஜாவின் அரண்மனை அண்டையில் ஒரு திராட்சத் தோட்டம் இருந்தது. இந்த திராட்சத் தோட்டம் யெஸ்ரயேலனாகிய நபோத்துக்கு பூர்வீக சொத்து, இந்த நிலம் இருக்கும் யெஸ்ரயேல் என்னும் இடத்தில் ராஜாவின் அரண்மனையும் இருந்தது. அந்நாளில் ஆகாப் ராஜாவிற்கு அந்த நிலத்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என்று ஆசை பிறந்தது. ஆகவே, ஆகாப் ராஜா நபோத்தோடே பேசி, உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறப்படியால், அதை கீரைக் கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்கு பதிலாக உனக்குத் தருவேன் அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான். நாபோத் ஆகாப்பை நோக்கி, நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதப்படி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான். I இராஜாக்கள் : 21 : 2 - 3.


அரசனின் அராஜகம் :

இந்த வார்த்தை ராஜாவாகிய ஆகாப்புக்கு விசனமாயிருந்தது, ஆகவே அவன் தன் அரண்மனைக்குப் போய் போஜனம் பண்ணாமல் தன் கட்டிலின் படுத்துக்கொண்டான். அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து, நீர் போஜனம் பண்ணாதப்படிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு, அவன் அவளைப் பார்த்து நான் யெஸ்ரயேலனாகிய நபோத்தோடே பேசி, உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க் கொடு அல்லது உனக்கு ராசியானால் அதற்கு பதிலாக வேறே திராட்சத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன் என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னான் என்றான். அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி, நீர் இப்போது இஸ்ரவேலின் மேல் ராஜ்யபாரம் பண்ணுகிறவர் அல்லவா ? நீர் எழுந்து போசனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும். யெஸ்ரயேலனாகிய நபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள். அதன் பின், அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும், பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள். அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால் நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப் படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன் மேல் சாட்சி சொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுப் பேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டு போய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள். அவன் பட்டணத்தில் குடியிருக்கிற மூப்பாரும், பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தப்படி செய்தார்கள். நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேள்விப்பட்டபோது, ஆகாப்பை நோக்கி நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும். நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப் போனான் என்றாள். நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டப்போது, அவன் யெஸ்ரயேலனாகிய நபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்துப் போனான்.


கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர் நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப்பைச் சந்திக்கும்படி போ. இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான். நீ அவனைப் பார்த்து, நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார். நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி, என் பகைஞனே, என்னைக் கண்டுப்பிடித்தாயா என்றான். அதற்கு அவன் கண்டு பிடித்தேன். கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப் போட்டாய். நான் உன் மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்தததியை அழித்துப்போட்டு, ஆகாப்புக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதப்படிக்கு இஸ்ரலேலில் அடைப்பட்டவனையும், விடுப்பட்டவனையும் சங்கரித்து, நீ எனக்கு கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ் செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமமாக்குவேன் என்றார் என்று சொன்னான். யேசபேலையும் குறித்துக் கர்த்தர், நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதிலருகே தின்னும். ஆகாப்பின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சகிரவனை ஆகாயத்துப் பறவைகளும் தின்னும் என்றார். I இராஜாக்கள் : 21 : 5 - 11, 15 - 23. இந்தக்காரியம் ஒன்றும் பிசகாமல் அப்படியே ஆகாப்புக்கும், அவன் மனைவியாகிய யேசபேலுக்கும் அவன் குடும்பத்துக்கும் நடந்தேறியது. இது யாவருக்கும் எச்சரிப்பாயிருக்கும்படிக்கு சாட்சியாக சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறது. எனவே இது போன்ற ஏராளமான துரோகச் சரித்திரங்களையும் அதின் எதிர் வினைகளையும் வரலாற்றில் காணமுடியும். ஆனால் எத்தனை இருந்தென்ன அத்தனையும் விழலுக்கு இரைத்த நீர் போல் விரையமாய் போனது தான் மிச்சம். யாரும் எதிலும் பாடம் கற்றுக்கொண்டதாகவே தெரியவில்லை. எல்லோரும் பட்டுத் திருந்த எத்தனிக்கும் கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்களே தவிர பட்டவர்களைக் கண்டு திருந்துவோர் எவருமில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் பட்டுப் பின் திருந்தி வாழ எத்தனிக்கும் முன் காலம் கடந்து விடுகிறது, அந்தோ பரிதாபம். வினை விதைத்தொரின் முடிவோடு எல்லோருடைய முடிவும் சங்கமமாகும் நிலையே விஞ்சி நிற்பது காலக்கொடுமை.


ஊழலின் நீளமான பட்டியல் :

இன்றைய 21 ஆம் நூற்றாண்டு காலத்தில் ஊழலின் கோரப்பிடி என்பது பல நிலைகளில் பரிணாம வளர்ச்சிப் பெற்றிருப்பதை பார்க்கவும் உணரவும் முடிகிறது. ஒரு காலக்கட்டத்தில் ஊழல் என்பது மிக அரிதான ஒரு காரியம். அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் முகம் சுளித்த விந்தையான காலம் பூமியில் இருந்ததுண்டு. ஒரு சிறு பொயிக்கே கூனி குறுகிப்போன வரலாறுகளெல்லாம் மறைந்து போனதென்ன விந்தையோ ? அப்பழுக்கற்ற சமுதாயம் தான் தேவ திட்டம். காலத்தின் கோலம், இன்றோ திரும்பிய பக்கமெல்லாம் குமட்ட்ம் அளவுக்கு ஊழலின் கோரத்தாண்டவம் எங்கும் நீக்கமற நிரம்பி வழிகிறது என்று சொன்னால் மிகையல்ல. இந்த ஊழலுக்கு தனியார் துறை என்றோ அரசுத் துறை என்றோ வித்தியாசம் எல்லாம் கிடையாது. அதே போல கடைநிலை ஊழியன் முதல் அதிகாரப்பீடத்தில் வீற்றிருக்கும் அனைவரும் ஊழலில் சளைத்தவர்கள் அல்ல. முன்பெல்லாம் மிக எளிய வேலையில் மிக சொற்ப வருமானத்தில் ஜீவனம் பார்க்கும் எளிய மக்கள் கைநீட்டிப் பார்த்திருப்போம். அரசு பணியில் கடைநிலை ஊழியர் இனாம் எதிர்பார்ப்பார் பின்னர் காலப்போக்கில் அது கட்டாயம் என்றானது. சிறு பிராயத்தில் கடைக்குப் போனால் மளிகை கடைக்காரர் கொஞ்சம் கடலையும் வெள்ளமும் தருவார் காரணம் நாம் எப்பவும் அவர் கடைக்கே வாடிக்கையாய் வரவேண்டும் என்பதற்காக சிறுபிள்ளைகளை கவரும் யுக்தி அது. இதுவும் ஒருவகை ஊழல் தான், அதேப்போல மணியாடர் கொண்டு வரும் தபால் காரருக்கு இனாம் கொடுப்பார்கள் காரணம் சரியாக கால தாமதமின்றி, அடையாளம் கண்டு, கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் அதேநேரத்தில் ஆள் தெரியவில்ல என்று சொல்லி இழுத்தடித்த கூத்தெல்லாம் நடந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான். இப்படி தான் நாம் சிறுபிராயத்தில் ஊழலின் வடிவத்தைப் பார்த்திருப்போம். அப்புறம் இந்த இனாம் எனும் ஊழலை இரயில் பயணங்களில் இருக்கைக்காக சுமைதூக்கும் உழைப்பாளி மூலம் லஞ்சம் என்று விரிவடைந்து பயணச்சீட்டு பரிசோதகருக்கு லஞ்சம் கொடுத்தால் இருக்கையோ படுக்கை வசதியோ பெறுவதற்காக பணம் கைமாறப்பட்டது. இப்படி எளிய முறையில் துவங்கிய லஞ்ச லாவண்யம் நியாயமாய் ஒருவருக்கு கிடைக்கவேண்டிய பயணவசதி பணம் கொடுப்போருக்கே அதிலும் கூடுதலாக கொடுப்போருக்கே முதலிடம் என்ற வழக்கம் பழக்கமாய் லஞ்ச வர்த்தகம் பெரிய அளவில் நடக்கத் துவங்கியது.


இப்படியாக தலைக்காட்டத் துவங்கிய ஊழல் வர்த்தகம் மெல்ல கொலோச்சத்துவங்கியது என்று சொல்லுமளவுக்கு மின் வாரியம் துவங்கி எல்லா துறைகளிலும் நுழைந்து மின் இணைப்பு, வேலைவாய்ப்பு, வர்த்தகம், விநியோகம், அனுமதி, இடமாற்றம், பதவி உயர்வு, முன்னுரிமை என்று சகலத்திற்கும் லஞ்சம் தான் ஊழல் தான் முதற்படி. செய்த வேலைக்கான கூலிப் பெறவேண்டுமானால் கூட கட்டிங் கொடுத்தால் தான் பட்டுவாடா இல்லையேல் இன்று போய் நாளை வரவேண்டும். இப்படி ஒவ்வொரு துறையின் வாய்ப்பிற்கேற்ப ஊழல் இல்லாத இடமும் இல்லை ஊழல் இல்லாமல் காரியம் சாதித்த வரலாறும் இல்லை. இவ்வளவு ஏன் வோட்டு போடவும் காசு, சீட்டுக்கும் காசு பதவிக்கும் காசு அதிகாரத்தை தக்கவைக்கவும் காசு. ஊழலுக்கு காசு மட்டுமே பண்ட மாற்று பொருளல்ல வேறு பல இடங்களில் மண்ணும், பொன்னும், பொண்ணும் கூட பண்டமாற்று பொருளுக்கு ஈடாக கொடுத்தால் தான் காரியம் சித்திப்பெரும். இந்த அவல நிலை இன்றளவும் தொடர்ந்துக் கொண்டு நடைமுறையில் இருக்கும் தொடர்கதை ஆகும். இந்த ஊழல் வர்த்தகத்தில் ஆள் பலம், பணபலம், அதிகாரபலம் அனைத்தும் அடங்குவது மட்டுமல்ல கூட்டிக் கொடுப்பதும் குடியை கெடுப்பதும் வர்த்தகத்தின் விதிகளாகும். இங்கே ஆண்டியும் சரி, சம்சாரியும் சரி ஆன்மீகவாதியும் சரி யாவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சம்சாரியும் தவறுகிறான் ஆன்மீகவாதியும் தவறுகிறான் என்பது ஒரு கேலிக் கூத்து. ஊழல் என்பது விவேகத்தின் அணுகுமுறை என்று வீர வசனம் பேசி தங்கள் வயிற்றை மட்டும் வளர்க்காமல் தங்கள் இருப்பையும் விஸ்தரித்தவர்கள் ஏராளம். பிச்சையிலே அதிகாரமும் கவுரவமும் கலந்த மிடுக்கான பிச்சை தான் இந்த ஊழல். ஆகவே தான் அதிகார பேரங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நமது சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபேசுவது துவங்கி, அதிகாரம் யார் கைவசமாகும் வரை கட்டியம் கூ றுவதும் இந்த ஊழல் எனும் தாக்கம் தான். வேலை வேண்டுமானாலும் ஊழல், சிபாரிசு வேண்டுமானாலும் ஊழல், பிள்ளை பெற்றுக்கொள்ளுவதிலும் ஊழல் அந்த பிள்ளைக்கு கல்வி கொடுத்து, ஆளாக்கி, வேலையில் அமர்த்தி, சொத்து சுகங்கள் தந்து சமுதாய அந்தஸ்து வரை அனைத்திலும் இந்த ஊழலின் வீர தீர செயல்களின் ஆக்கிரமிப்பிற்கு வஞ்சனை இல்லை. ஆள் மாறாட்டம் செய்தேனும் தன் மகனையோ மகளையோ மருத்துவரக்கிப் பார்க்கவேண்டும் என்று ஆசைபடும் பெற்றோருக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை.


இவ்வளவு ஏன் கடுமையாக உழைத்து உண்மையாகப்படித்து நேர்மையாக தேர்வு எழுதி திறமைக்கேற்ப நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்று எண்ணங் கொள்ளாமல் கையூட்டு கொடுப்பதற்காகவே கொலையும் கொள்ளையும் செய்து சாதிக்க முயன்றவர்கள் இதற்காகவே அச்சமின்றி நம்பிக்கை துரோகங்களில் இறங்கி மனித நேயத்தை கிடப்பில் போட்ட துரோக்கச் செயல்களும் இங்கு ஏராளம். அடுத்தவரை கெடுத்து அழித்து வாழத் துணியும் வக்கிர புத்திக்கொண்ட மனித மிருகங்களுக்குக் காரணம் அவர்கள் வாழ்க்கைச் சூழல். குற்றமற்ற இரத்தம் சிந்துதலில் அச்சமில்லாத மக்கள், தான் வாழ யாரையும் எதையும் எப்படியும் எங்கேயும் அழிக்க, அபகரிக்கத் துணியும் துணிகரம். மனசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தை விட்டு அகற்றும்படி கர்த்தருடைய கட்டளையினால் அப்படி நடந்தது. அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார். II இராஜாக்கள் 24 : 3 - 4 . இங்கோ பெண்களுக்கு எதிராகவும், சிறு பிள்ளைகளுக்கு எதிராகவுமான வன்கொடுமைகள் அதன் அடிப்படையினாலான கொலைகளும் சர்வசாதாரணம். ஆகிலும், மனசே கர்த்தருக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தம் அவர் யூதாவின் மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல், நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டது போல யூதாவையும் என் முகத்தை விட்டுத் தள்ளி, நான் தெரிந்துக்கொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார். II இராஜாக்கள் : 23 : 26 - 27. மெத்தப்படித்தவர்களாவது இந்தப்பெரிய அக்கிரமச் செயல்களுக்கு எதிராக இருந்து நேர்மைக்கு வழி வகுப்பார்கள் என்று பார்த்தால், இவர்களின் பங்களிப்போ மோசத்திலும் மோசம். பெரும் கொள்ளைகளுக்கு ரூட் போடுவதும், நூதனமான முறையில் சட்டத்தை தங்கள் சட்டை பையில் வைத்துக்கொண்டு அதிலிருக்கும் ஓட்டைகள் வழியாய் தப்பிக்கும் முறையின் மூலமாய் பெரும் பங்கை ஆதாயமாகப் பெற்று உல்லாசம் அனுபவிப்பவர்கள் இவர்களே. குறைந்தப்பட்சம் பொது வாழ்வில் இருப்பவர்களாவது சத்தியவான்களா இருப்பார்களா என்று பார்த்தால் ஊழல்களுக்கு அடைக்கலமே இந்த பெரிய மனுஷன்கள் தான் என்பது கொடுமையின் உச்சம்.

வாழ்க்கையை விரையமாக்கும் ஊழல் :

ஓரின சேர்க்கையாளர்கள் உலகில் பெருகி வருவதை நாம் கண் கூடாகப் பார்த்து வருகிறோம். பெண் பெண்ணோடு சேரும் அவலட்சங்களெல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது, இது பாவம், அருவருப்பு. ஆனால் இதன் ஆரம்பம் எங்கே என்று பார்த்தால் சிறுபிள்ளைகளை அவர்கள் இளம் பிராயத்தில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதால் பெருகுகிறது. ஈவு இரக்கமற்ற கயவர்கள் சிறு பிள்ளைகளை பச்சிளம் பருவத்தில் தங்கள் இச்சைகளுக்கு உட்படுத்தப்படும் போது அந்த தாங்கொண்ணா கொடுமைகள் அவர்கள் ஆழ் மனதில் ஆறாத ரணமாக பதிந்து விடுவதால் வளர ​​​​​​​வளர இயல்பாக அவர்களின் ஈர்ப்பு பெண் பால் சார்பாக மாறிவிடுகிறது. ஒருவன் செய்யத்தகாகதென்று கர்த்தருடைய கட்டளையினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட் பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாய் இருந்து, தன் அக்கிரமத்தை சுமப்பான். லேவியராகமம் : 5 : 17. ஆக அறியாமல் செய்த பாவங்களும் பாவக்கணக்கில் சேர்க்கப்படும், அதன் விளைவோ பயங்கரமாயிருக்கும். நம்முடைய சமுகத்தில் அங்கவீன குறைப்பாடுகளோடு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் 2011 ஜனத்தொகை 2016ல் புதுப்பிக்கப் பட்ட கணக்கெடுப்பின் படி 2.68 கோடி மக்கள் அங்கவீன குறைப்படுகளோடு வாழ்கிறார்கள். அதேப்போல மூன்றாம் பாலினத்தவர் 2011 கணக்கெடுப்பின் படி 4.9 லட்சம்பேர் ஆகும். அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது, குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும், காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும், கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது. லேவியராகமம் : 21 : 18 - 20. அப்படியானால் குறைபாடுகளுக்கு பின் புலத்தில் இருப்பது பாவமும் அதினால் விளைந்த சாபம் என்பது விளங்கும். அப்படியே சாமுவேல் எனும் தீர்க்கதரிசியானவர் வாழ்ந்த காலத்தில் வயது முதிர்ந்த ஆசாரியனாகிய ஏலி இருந்தார் அவருக்கு இரண்டு பிள்ளைகள் கர்த்தருடைய பணிவிடைகளை கனவீனமாய் செய்து வந்தார்கள். அவர்கள் பலமுறை எச்சரிக்கப் பட்டும் செவிகொடாமற் போனப்படியால் தேவ கோபம் அவர்கள் குடும்பத்தின் மீது விழுந்தது. ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது உன் வீட்டாரும், உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்துக்கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக. என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன். என்னை அசட்டியாசட்டை பண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். I சாமுவேல் : 2 : 30.


அவ்வாறே தேசத்தில் காணப்படும் மழை தாழ்ச்சி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, கொள்ளை நோய், பூமியதிர்ச்சி போன்ற எல்லா பேரழிவுகளுக்கும் நம்முடைய அக்கிரமங்களும், அநீதிகளும் கொடுமைகளுமே காரணம் என்பதை நாம் மனதில் நிறுத்துவது அவசியமாகும். என்னை விட்டு விலகி நீ செய்து வருகிற உன் துர்க்கிரியகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியும் மட்டும், நீ கையிட்டு செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார். கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார். நீ அழியும் மட்டும் இவைகள் உன்னை பின்தொடரும். உபாகமம் : 28 : 20, 22. உங்களுக்குளே துஷ்ட மிருகங்களை வரவிடுவேன். அவைகள் உங்களை பிள்ளைகளற்றவர்களாக்கி, உங்கள் மிருகஜீங்களை அழித்து, உங்களைக் குறைந்து போகப் பண்ணும். உங்கள் வழிகள் பாழாய் கிடக்கும். லேவியராகமம் : 26 : 22. இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப் போட்டது போல, நீங்கள் அதை தீட்டுப் படுத்தும்போது அது உங்களையும் கக்கிப் போடாதப்படிக்கு நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்தில் பிறந்தவனானாலும், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம். லேவியராகமம் : 18 : 27 - 28. தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும், ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்த்திரமில்லாதவனுக்கு, வஸ்த்திரம் தரிப்பித்து, சிறுமையானவனுக்கு நோவுண்டாக்கதப்படிக்குத் தன் கையை விலக்கி, வட்டியையும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பாய். எசேக்கியல் : 18 : 15 - 17. இப்போதே கோடாரியனது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிக்கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான். அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி அப்படியானால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன், உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். போர்ச் சேவகரும் அவனை நோக்கி நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன் நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண் செய்யாமலும், உங்கள் சம்பளமே போதுமமென்று இருங்கள் என்றான். லூக்கா : 3 : 9 - 10, 13 -14.


இப்படியாய் நாம் நம்முடைய பாவங்களை நம்மிலிருந்து ஒழியப்பண்ணி தேசத்தில் சுகமாய் வாழ பழகுவோம், ஆமென்.


சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.

Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page