Seek First!
முதல் தேடல்! சுவி. பாபு T தாமஸ்
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத்தேயு : 6 : 33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் எனும் வாசகமானது மிக முக்கியமான வார்த்தைகளாகும். இதை நாம் கிறிஸ்தவ அடிப்படைகளின் மூல மந்திரமாகவும் பார்க்க முடியும் அதே நேரத்தில் சகலத்தையும் உள்ளடக்கிய கட்டளையாகவும் இவ் வசனம் இருப்பதை உணரமுடியும். இத்துடன் நில்லாமல் வாழ்வில் வெற்றிப்பெற விரும்பும் ஒருவருக்கான வெற்றியின் ரகசியமாகவும் இந்த வசனம் வெளிப்படுகிறது. அப்படியானால் இந்த வசனம் ஓர் பேருண்மையை தன்னகத்தே கொண்டுள்ளதாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டுவதில்லை. இந்த வசனத்திற்கு ஆதாரமான கரு என்னவென்றால், ஆண்டவர் சொல்லுகிறார் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். அதாவது ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளான, உணவு மற்றும் உடையைக் குறித்துப் பேசுகிறார். பொதுவாக அடிப்படை தேவை என்பது உணவு, உடை உறைவிடம் என்று சொல்லப்படும். ஆனால் ஆண்டவர் மிக முக்கியமான அடிப்படை தேவையை முதன்மைப்படுத்துகிறதை இங்கே பார்க்க முடியும். ஒருவேளை உறைவிடமாக ஒரு மரத்தடி நிழலில் தஞ்சம் கொண்டு உறங்க முடியும், ஆனால் உணவு மற்றும் உடுப்பு இல்லாமல் வாழமுடியாது. அதோடு நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள், நாளையத் தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப் படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் என்று கூறுகிறார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. எனவே உணவு உடை என்பதோடு நில்லாமல் வாழ்விற்கு தேவையான அனைத்தும் என்று பொருள் படும் வண்ணமாக, இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் என்றார். இத்துணை பெரிய வசனத்தை நாம் எவ்வளவாய் அறிந்திருக்கிறோம் என்பது பெரிய கேள்விக்குறி. அதே வேளையில் வசனத்தின் அர்த்தத்தை அறிந்திருந்தால் மாத்திரமே அதை பயன் படுத்தவும் முடியும். அந்த வகையில் இவ் வசனம் பலரிடம் ஏட்டளவில் இருப்பதும், ஒரு சிலரில் உதட்டளவில் இருப்பதும் வேதனையான ஒன்று. பொதுவாச் சொல்வதனால் வேதவசனங்கள் உயிருள்ளவைகள் என்பதாகக் கருதப்படுபவைகளாகும். வேதாகமத்தில் காணப்படும் ஒவ்வொரு வசனமும், இன்னும் சுருங்கச் சொல்வதனால் ஒவ்வொரு எழுத்தும் எழுத்தின் உறுப்புக்கும் உயிரோட்டம் உள்ளதென்பதை உணரமுடியும். ஆகவே தான் ஆண்டவர் சொல்லுகிறார், வானமும் பூமியும் ஒழிந்து போம் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை என்கிறார். மத்தேயு : 24 : 35.
இதற்கு வேதாகமம் சொல்லும் காரணம் அற்புதம். மாரியும், உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும். அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். ஏசாயா : 55 : 10 - 11. ஆண்டவர் தம்முடைய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் மிக கவனமாக வெளிப்படுத்தியிருக்கிறார், அவைகளுக்கு ஜீவனிருக்கிறது மாத்திரமல்ல அவைகள் தம் நோக்கத்தை நிறைவேற்றுவதில் கவனமாயிருகிறது என்பது இங்கே தெளிவு. அப்படியாக தேவன் நாம் கடைபிடிக்க வேண்டிய யாவையையும் தம்முடைய வேதாகமத்தில் சத்திய ஆவியானவர் மூலமாக பதிவு செய்து சகல சத்தியத்திற்குள்ளும் நடத்திவருகிறார். அகவே நாம் வார்த்தைகளில் கவனமாயிருப்பது மிக மிக அவசியமாகும். இன்றைய கால கட்டத்தில் நாம் பல்வேறு இன்னல்களை சந்திப்பதற்கும், வழிவிலகி வீழ்ச்சியை காண்பதற்கும் சத்தியத்தின் பால் கொண்டுள்ள அறியாமையேயாகும். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று யோவான் எழுதின சுவிசேஷத்தில் எட்டாம் அதிகாரம் முப்பத்திரண்டாம் வசனம் கூறுகிறது. நாம் சத்தியத்தை அறிந்தால் மட்டுமே விடுதலை என்பதை தெரிவிக்கிறது. அப்படியானால் நாம் முதலாவது செய்ய வேண்டியவை யாதெனில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவது அவசியம் என்பதாக வேதம் அறிவுறுத்துகிறது. அப்படி செய்யும் பட்சத்தில் எவைகளெல்லாம் நாம் எதிர் நோக்கி இருக்கிறோமோ அல்லது எவைகளெல்லாம் நம்முடைய தேவைகளாக இருக்கிறதோ அவை அனைத்தும் கூடுதலாக நமக்குக் கொடுக்கப்படும் என்று வேதம் சாட்சிப் பகருகிறது. அதே நேரத்தில் இவ்வசனம் மறைமுகமாக ஒரு உண்மையையும் நமக்கு சொல்ல தவறவில்லை என்பதும் இதில் கவனித்தால் புரியும். இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன், இவர்கள் என் துதியை சொல்லி வருவார்கள். ஏசாயா : 43 : 21. நமது படைப்பு அல்லது அழைப்பின் நோக்கம் என்பது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதாகும். அது தான் நம் அனைவரின் பிரதான நோக்கம். அந்நோக்கத்தின் வாயிலாக நம்முடைய வாழ்க்கைப் பயணத்திற்கான சகலமும் நமக்குக்கிடைக்கும் என்று வேதம் கூறுகிறது. இந்த தெளிவோடு நாம் பயணித்தால் நம் வாழ்வில் ரம்மியமான சூழல் தவழும் என்பது திண்ணம்.
தேவனுடைய ராஜ்யமும் அவருடைய நீதியும் :
வசனத்தில் குறிப்பிட்டுள்ளப்படி தேவனுடைய ராஜ்யமும் அவருடைய நீதியும் என்றால் என்ன ? அவைகளை நாம் தேடுவது எப்படி? தேவனுடைய ராஜ்ஜியம் என்பது அவருடைய ஆளுமையை குறிக்கிறது. நாம் அவருடைய ஆளுமையை அறிய வேண்டுமானால் முதலாவது தேவனை அறிகிறவர்களாக மாறவேண்டும். தேவனை அறியும் அறிவு வேண்டும் என்று வேத வசனம் நமக்கு வலியுறுத்துகிறது. அப்படி நாம் தேவனை அறியும் போது அவருடைய வல்லமைகளையும் மாட்சிமைகளையும் மகத்துவங்களையும் அறிந்துக் கொள்ளுகிறோம். அவறே வானத்துக்கும் பூமிக்கும் அதிபதியாகிய தேவனுடைய வல்லமைகளின் ஆற்றலையும் புரிந்துக் கொள்ளுவதற்கு தேவ அறிவு அவசியமாகிறது. அவ்வாற்றலின் வெளிப்பாடாக நாம் காண்பது அவரின் படைப்புக்களே ஆகும். இவ்வாறாக படைப்பையும் அவைகளின் இயக்கத்தையும் அறிவதின் மூலமாக தேவனுடைய ராஜ்யத்தின் ரகசியத்தை அறிவோம் என்பது விளங்கும். இவையனைத்தும் தேவனின் மீதான பற்றுறுதியை நமக்குள் உறுதிபடுத்தும் என்பதில் சந்தகம் இல்லை. தேவனை நாம் அறிந்தால் மாத்திரமே தேவனிடத்தில் அன்பு கூற முடியும். நம் புறக்கண்களால் காணாத தேவனிடத்தில் அன்பு கூறுவதென்பது சாத்தியமற்றதென்றாலும், கிரியைகளாகிய அவருடைய படைப்புக்கள் அவரை நமக்கு வெளிப்படுத்தி அவரிடத்தில் அன்பு கூறுவதை சாத்தியப்படுத்துகிறது. இதற்கு ஆதாரமாக இருப்பது நமது கரங்களில் இருக்கும் வேதாகமம் மட்டுமே. நம் கரங்களில் இருக்கும் சத்திய வேதாகமம் நமக்கு தேவனையும், அவருடைய படைப்பைப் பற்றியும் அதே நேரத்தில் அவருடைய கிரியைகள் எனும் செயல்களையும் நமக்கு சாட்சியாக வெளிபடுத்துகிறது. மற்றுமொரு முக்கிய காரியம் என்னவெனில் நாம் அனைவரும் அவருடைய சாயலிலும், ரூபத்திலும் சிருஷ்டிக்கப்பட்டிருகிறோம் என்று ஆதியாகமம் : 1 : 26 தெரிவிக்கிறது. எனவே நாம் தேவனை அறியும் அறிவை அல்லது ஆர்வத்தை பெற்றிருப்பது அவசியமாகிறது. இதை தான் மேலே குறிக்கப்பட்டுள்ள தேவனுடைய ராஜ்யத்திற்கான அர்த்தமாகும். அடுத்ததாக வேதம் வலியுறுத்தும் மிக முக்கியமான காரியம் யாதெனில் அவருடைய நீதி. தேவனை அறிவதோடு நில்லாமல் அவருடைய நீதியில் நிலைத்திருப்பது முக்கியம். எனவே நீதிகளை அறிந்து அந்த நீதிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுவது அல்லது வாழ்வது என்பது தான் மேன்மை தரும். இதை தான் வசனம் நமக்கு முக்கியப்படுத்துகிறது. அவ்வாறு கடைப்பிடித்து நடப்பவர்களுக்கு சகலமும் கைக்கூடும் எனும் நம்பிக்கையை வசனம் தருகிறது. ஆபிரகாம் தேவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்த தேவ மனிதன். ஆகவேதான் தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குதத்தத்தை ஒன்று விடாமல் நிறைவேற்றினார். ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டப்படியினால் , நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப் பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் : 26 : 4 - 5.
தேவனுடைய நீதிகள் யாவை :
தேவனுடைய நீதிகள் எவை என்பதை அறியாமல் அவைகளை கடைப்பிடித்து நடப்பது என்பது அறியாத ஊருக்கு வழி சொல்லுவது போலாகும். நாம் தேவனை அறிவது அவருடைய நீதி நியாயங்களை அறிந்து ஒழுகுவது ஒவ்வொருவரின் தலையாயக் கடமையாகும், என்றாலும் அதற்கான பாலா பலன்களோ ஏராளம். இதை அறியாமல் தான் பலர் தங்கள் வாழ்கையை வீணாக்கியும், விரையமாக்கியும் வாழ்ந்து மறைந்தோர் பலபல கோடி. இன்னும் இதற்கான விடை காணாது தோல்வியில் உழல்வோர் ஏராளம் ஏராளம். நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் : 14 : 6. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார் சத்தியமும் நானே, அந்த சத்தியத்தை அறியும் வழியும் நானே, அதனால் கிடைக்கும் ஜீவனும் நானே என்கிறார். ஆகவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நம்மெல்லாருக்கும் நீதியாக இருக்கிறார். ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். யோவான் : 17 : 3. இதை ஆபிரகாம் விசுவாதித்தப்படியினாலே அவருக்கு அது நீதியாக எண்ணப்பட்டது. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். ஆதியாகமம் : 15 : 6. தேவன் தமது நீதியை கட்டளைகளாகவும், பிரமாணங்களாகவும், நியமங்களாகவும் கொடுத்திருக்கிறார். இவைகள் அனைத்தும் மக்கள் தம் வாழ்வில் கடைப்பிடித்து ஒழுக்க நெறியுடன் வாழவேண்டும் என்பது தேவனுடைய விருப்பம், காரணம் வேதம் சொல்லுகிறது 'யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள், பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. எபிரெயர் : 12 : 14. எனவே வேதாகமம் நமக்கு எதை உண்ணவேண்டும், எப்படி உடுத்தவேண்டும், சிகையலங்காரம் ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி இருக்கவேண்டும். ஓய்வு நாளை ஏன் ஆசரிக்கவேண்டும், எப்படி ஆசரிக்கவேண்டும், திருமணம், உறவுகளை கையாளும் முறை, வழக்கு, தண்டனை, சொத்து சுகம் நிலம் புலம் அனைத்தையும் ஒன்று விடாமல் வேதம் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. இவைகளை நாம் கருத்தாய் கடைப்பிடிக்கும்போது நமது உள்ளம் தூய்மையடைகிறது. ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் என்று இவையனைத்தும் நமக்கு ஒருங்கே கிடைக்கும். கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் எழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக் கொப்பான சுத்தச் சொற்க்களாயிருக்கிறது. சங்கீதம் : 12 : 6. ஆகவே தான் நாம் கர்த்தருடைய வேதத்தில் அனுதின தியானமாகவும் கொள்ளவேண்டும் என்று சத்தியவேதாகமம் நமக்கு வலியுறுத்துகிறது. கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். சங்கீதம் : 1 : 2
தேவ நீதிகளும் உண்மைகளும் :
நீதி 1 : தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சதின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் : 1 : 16 -17
தேவனாகிய கர்த்தர் ஆதி மனுஷனாகிய ஆதாம் - ஏவாள் ஆகிய இருவருக்கும் கொடுத்த முதல் முழு கட்டளை அல்லது நீதி இது தான். இந்த ஒரு கட்டளை அல்லது நீதியில் முழு வேதாகமமும் அடங்கியிருக்கிறது. இது தான் கிறிஸ்துவத்தின் அல்லது கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களின் அடிப்படை சத்தியமாகும்.
நீதி 2 : அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி : நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப் பண்ணுவேன். ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமட்டார்களோ என்று அவர்களை சோதிப்பேன். ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள் தோறும் சேர்க்கிறதைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம் பண்ணி வைக்கக்கடவர்கள் என்றார். யாத்திராகமம் : 16 : 4 - 5
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு சொல்லிக்கொடுத்த ஜெபமும் இந்த நீதியின் அடிப்படையிலானதே. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும். மத்தேயு : 6 : 11.
நீதி 3 : என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். யாத்திராகமம் : 20 : 3 - 4
வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும் அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது, நான் கர்த்தர், இது என் நாமம் : என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். ஏசாயா : 42 : 5, 8.
நீதி 4 : ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. எழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வு நாள். அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக் காரனானாலும், வேலைக் காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசலில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். ஆறு நாளும் நீ வேலைச் செய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. கர்த்தர் ஆறுநாளைக் குள்ளே வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, எலாம் நாளிலே ஒய்ந்திருந்தார். ஆகையால், கர்த்தர் ஓய்வு நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.யாத்திராகமம்: 20 : 8 - 11.
நீதி 5 : முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்த தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக. யாத்திராகமம் : 22 : 29.
என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள். நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும், தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துக்கொண்டார் என்றான். II நாளாகமம் : 29 : 11
நீதி 6 : கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது. இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறை தோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார். லேவியராகமம் : 3 : 17
மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது, நான் அதை உங்களுக்குப் பலிப்பிடத்தின் மேல் உங்கள் ஆத்துமாவுக்காகப் பாவநிவிர்த்தி செய்யுபடிக்குக் கட்டளையிட்டேன். ஆத்துமாவிற்க்காக பாவநிவிர்த்தி செய்கிறதும் இரத்தமே. லேவியராகமம் : 17 : 11.
நீதி 7 : சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம் பண்ணும் பொருட்டு, மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீரில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின் எல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார். லேவியராகமம் : 11 : 46 -47.
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர், ஆகையால் தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தமாயிருப்பீர்களாக. லேவியராகமம் : 11 : 44.
நீதி 8 : பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறது போல ஆணோடு சம்யோகம் பண்ணவேண்டாம், அது அருவருப்பானது. லேவியராகமம் : 18 : 22
இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள். நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள். தேசமும் தீட்டுப்பட்டிருக்கிறது. ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன். தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும். லேவியராகமம் : 18 : 24 - 25.
நீதி 9 : உங்களில் அவனவன் தன் தன் தாய்க்கும் த் தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள் நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம் பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக, நான் கர்த்தர். லேவியராகமம் : 19 : 3, 32.
என் மகனே கேள், என் வார்த்தைகளை ஏற்றுக் கொள், அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். நீதிமொழிகள் : 4 : 10.
நீதி 10 : அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிச்சொல் சொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள். அவர்களாலே தீட்டுப்படவேண்டாம். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். லேவியராகமம் : 19 : 31.
நீதி 11 : உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும், செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள் மேல் குத்திக்கொள்ளமலும் இருப்பீர்களாக, நான் கர்த்தர். லேவியராகமம் : 19 : 27 - 28.
அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமாலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள். எசேக்கியேல் : 44 : 20.
நீதி 12 : உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும், ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார் . எண்ணாகமம் : 15 : 16.
நீதி 13 : நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதியாதே. உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார். அது உனக்கு பாவமாகும். உபாகமம் : 23 : 21
நீதி 14 : உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக.
அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும். உபாகமம் : 24 : 14 - 15. துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். நீதிமொழிகள் : 17 : 15.
நீதி 15 : மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள். உபாகமம் 25 : 1
நீதி 16 : உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, குறையற்ற சுமுத்திரையான நிறைகல்லும், குறையற்ற சுமுத்திரையான படியும் உன்னிடத்திலிருக்கவேண்டும்.இவைமுதலான அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவன். உபாகமம் 25 : 15 - 16.
என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைகொண்டு அவைகளின்படி நடக்கக் கடவீர்கள். அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள். லேவியராகமம் : 25 : 18. ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை.