top of page
Search

No religious change!

மத மாற்றமா? மன மாற்றமா? சுவி. பாபு T தாமஸ்.


இயேசு : மனந்திரும்புங்கள், பரலோகரஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். மத்தேயு : 4 : 17


பல்வேறு இடங்களில் ஊழியர்கள் தாக்கப்படுகிற செய்தி வந்தவண்ணம் இருக்கிறது. சபை ஆராதனைகள் தடுத்து நிறுத்தப்படுகிறது, சபைகள் தீக்கு இரையக்கப்படுகிறது என்பது சமீப காலத்தின் தொடர்கதை. ஆனால் அதற்கானக் காரணம் மட்டும் புரியாத புதிர் என்றாலும் ஒன்று தான் பதிலாக கேட்க்கிறது, அது மதமாற்றம் எனும் அபாயக்குரல். இந்த மதமாற்றம் எனும் ஒற்றை வார்த்தை நாராசமாய் எங்கும் ஒலிப்பதை சர்வ சாதாரணமாக யாரும் கூறக் கேட்டிருப்போம். இதற்கான அடிப்படை காரணமென்னவென்று யாருக்கும்தெரியாது. மக்கள் தேவ ஊழியர்களை மிக கடுமையாக பார்ப்பதற்கும், சாடுவதற்கும், நெருப்பை கக்குவதற்கும் என்னக் காரணம் என்பதை நாம் சிந்திக்கத் தவறிவிட்டோமோ? என்று தோன்றுகிறது. சமீபத்தில் சாத்தான்குளம் காவல் விசாரணையில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம், அதை ஆதரித்து ஒரு இளம் பெண் சமூக வலைத்தளமான டுவீட்டரில் பதிவிட்ட வாசகம் கர்ணக்கொரூரமானது. " லத்திய விட்டு சொருகுவாங்கன்னு தெரிஞ்சாதான் மத மாற்றம் செய்ய மாட்டனுங்க இந்த ................" என்று மனித நேயத்தையே காலில் போட்டு மிதிக்கும் நையாண்டி வாசகம் அது. இந்த அளவிற்கு சமுதாயத்தில் புரையோடிப்போன வக்கிரத்துக்கு காரணம் தான் என்ன? உண்மையில் நடப்பது தான் என்ன ? எங்கே தவறு நடக்கிறது என்று ஆராயவேண்டியது நம் கடமை. மக்கள் வெறுக்கும் அளவிற்கு எது காரணம் ? யார் காரணம் ? என்று தெளிந்து தெளிவுப் படுத்துவது நம் கடமை. வெறுமனே ஓடி ஓடி ஊழியம் செய்வதால் ஒரு பயனுமில்லை. விரும்பி சாப்பிட்டால் தான் உண்ட உணவு கூட ஓட்டும். விரும்பாத பண்டத்தை கோடி ருபாய் கொடுத்து வீட்டில் குவித்தது வைத்தாலும் சீண்டுவதற்கு நாதியிருக்காது. கிறிஸ்துவானவர் இந்த பூமிக்கு வந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனினும் பெரும்பான்மையானவர்களை இன்னமும் நம்மால் சென்றடைய முடியவில்லை என்றால் தவறு எங்கிருக்கிறது. யதார்த்தம் யாதெனில் தவறு நம்மிடம் இருக்கிறது என்பது தான் நிதரிசனமான உண்மையாகும். அப்படியானால் உண்மையைக் கண்டு தவறுகளை களைவதே சிறப்பு. அது தான் நாம் தேவனுக்கு செய்யும் சிறப்பான தொண்டாக முடியும். நோய்க்குத் தான் மருந்தே ஒழிய, மருந்துக்காக நோயாளியை தேடுவது மருத்துவத்துக்கு நாம் செய்யும் பெரிய துரோகம். அது போலவே மருந்தைக்கண்டு ஒரு நோயாளி தலைத் தெறிக்க ஓடுவானானால் அது மருந்தின் குறையல்ல மருத்துவத்தின் குறை. இந்த இடைவெளியை நிவிர்த்தி செய்யும் வரை மருந்துக்கோ, மருத்துவத்திற்க்கோ ஏன் அந்த நோயாளிக்கும் எந்த விதப் பயனுமில்லை. அவ்வாறே இன்றைய கிறிஸ்துவத்தின் நிலையும், மக்களின் மனநிலையும், ஊழியர்களின் செயல்பாடுகளும் அடங்கும் என்று கூறுவது சற்றேறத்தாழ உண்மையே என்பது மிகையல்ல.


அன்பு ஒன்றே அடிப்படை :


அன்பின் வடிவம் தான் கிறிஸ்தவம், அன்பே வடிவானவர் தாம் இயேசு கிறிஸ்து. அன்பின் இலக்கணம் தான் கிறிஸ்துவின் போதனைகள். அவ்வன்பின் அடையாளமே இயேசுவின் சிலுவை மரணம், நமக்காகவே அவர் அடிக்கப்பட்டார். அன்பு நீடிய சந்தமும் தயவுமுள்ளது, அன்புக்குப் பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது, தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஒழிந்துப் போம், அறிவானாலும் ஒழிந்துப் போம். I கொரிந்தியர் : 13: 4 - 8. இப்படிப்பட்ட அன்பை போதித்த கிறிஸ்துவின் போதனைகளை மக்களுக்கு சொல்லும் ஊழியர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம் என்று சொன்னால் மிகையாகாது. அப்படிச் சொல்லப்படும் போதனைகளை மக்கள் ஏற்க மறுப்பதும், அதற்கு மதமாற்றம் என்றுக் கூறி மத சாயம் பூசி தவிர்ப்பதற்கும் காரணம் தான் என்ன? ஒரு புறம் காரணமில்லாமல் புகைவதற்கும் சாத்தியமில்லை தான், என்றாலும் அடிப்படையில் இயேசு கிறிஸ்து உலக இரட்சகர். உலத்திலுள்ள யாவரையும் மீட்டு இரட்சிக்க வந்தவர் தான் இயேசு கிறிஸ்து. தேவ தூதன் அவர்களை நோக்கி, பயப்படாதிருங்கள் இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். லூக்கா : 2 : 10 கிறிஸ்துவின் பிறப்பு என்பது எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷம் கொடுக்கும் ஒரு நற்செய்தியே ஆகும். ஆகவே தான் அந்தச் செய்தி எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது, இதுவே முக்கியத்துவத்தின் அடித்தளம். பொதுவாக மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம், அதாவது 1. ஆளுகிறவர்கள் - உயர் குடிமக்கள் 2. ஞானிகள் - கற்றவர்கள், அறிவு ஜீவிகள் 3. மேய்ப்பர்கள் - உழைப்பாளிகள். ஆக உலக மக்கள் யாவரும் இந்த மூன்று கூறுக்குள் அடங்குவர். எனவே தான் வேதாகமமும் இம் மூன்று வகையான மக்களுக்கும் நற்செய்தியை அறிவித்ததாக பதிவுச் செய்திருக்கிறது. ஏரோதுவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்த பொழுது, கிழக்கிலிருந்து சாஸ்த்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே ? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துக்கொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோது ராஜா அதைக் கேட்டப்பொழுது, அவனும் அவனோடேக் கூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர், ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடி வரச் செய்து, கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பார் என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார், அதேனென்றால் யூதேயாவிலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல, என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். மத்தேயு : 2 : 1 - 6. சாஸ்திரிகளுக்கு நட்சத்திரம் கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்க, சாஸ்திரிகள் மூலமாக ராஜாவும், ராஜாங்கத்தில் உள்ளவர்களும் அறிந்துக்கொள்ளுவதோடு, முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசன வாக்கியங்களைக் கொண்டு ஒப்பிட்டு உறுதியும் செய்துக்கொள்ளுகிறார்கள் என்ற தகவலை வேதாகமம் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. அதேப்போல கீழ் தட்டு மக்களுக்கோ தேவ தூதர்கள் நேரில் தோன்றி அவர்களுக்கும் அறிவிக்கிறார்கள்.


ஆக கிறிஸ்துவின் பிறப்பு அனைவருக்கும் அறிவிக்கப்படுகிறது என்பதை கூர்ந்து கவனிக்கப்படவேண்டும், காரணம் நற்செய்தி அனைவருக்குமானது என்பது அப்போது விளங்கும். அதேபோல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது முப்பத்தி மூன்றரை ஆண்டுகால வாழ்வையும் அதில் குறிப்பாக மூன்றரை ஆண்டுக்கால ஊழிய நோக்கத்தை நிறைவு செய்து பரமேறி போவதற்கு முன்பாக தம்முடைய சீஷர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு அவர் அறிவுறுத்தியதையும் நாம் நினைவுகூர்ந்தால் ஊழியத்தின் நோக்கம் புலப்படும். அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன், பரிசுத்தாவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைகொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார், ஆமென். மத்தேயு : 28 : 18 - 20. பாவத்தின் சம்பளம் மரணம், அந்த மரணத்தை ஜெயிக்கவே கிறிஸ்து பூமியில் அவதரித்தார். ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். தேவனாகிய கர்த்தர் பூமியிலே சகலத்தையும் உருவாக்கினார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி, நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப் படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின் மேல் நடமாடுகிற சகல ஜீவ ஜந்துக்களையும் ஆண்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் : 1 : 27 - 28. மனுஷர் பூமியின் மேல் பெருகத்துவங்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தப்போது, மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்க்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்திக்கு விசனமாயிருந்தது. ஆதியாகமம் : 6 : 1, 5 -6. ஆகவே தேவன் மனுஷர் முதலான சகலஜீவ ராசிகளையும் பூமியோடு சேர்த்து அழித்துப்போட்டார். இந்த அழிவில் தேவன் நோவாவையும் அவர் குடுபத்தையும் மட்டும் காப்பாற்றினார். அப்பொழுது கர்த்தர், இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை. மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிருக்கிறது. நான் இப்பொழுது செய்தது போல இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை. ஆதியாகமம் : 8 : 21. ஆகவே தான் மக்களின் பாவத்தின் நிமித்தம் நாம் யாவரும் மரணமாகிய அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்படாதப்படிக்கு, இயேசு கிறிஸ்து தாமே நம்முடைய பாவங்களுக்காகவும், நம்முடைய மீறுதல்களுக்காகவும் அவர் தாமே பாவமாகி நமக்காகவும் நம்முடைய பாவங்களிலிருந்தும் சாபங்களிலிருந்தும் மீட்டு இரட்ச்சிக்கவே இந்த பூமியில் தம் இரத்தத்தை சிந்தி மரித்தார். பின் மூன்றாம் நாளிலே வேதவாக்கியங்கள் நிறைவேறத்தக்கதாக உயிர்த்தெழுந்தார் என்று அறிந்திருக்கிறோம். இதற்கு சான்றாகத்தான் நாம் சரித்திரத்தையே இரண்டாகப் பகுத்து கிறிஸ்துவுக்கு முன் என்றும் கிறிஸ்துவுக்கு பின் என்றும் பார்க்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறோம் என்பதை நினைவுக் கூறுவதும் சாலச்சிறந்தது ஆகும். எனவே இத்துணை முக்கியத்துவம்வாய்ந்த நிகழ்வான தம்முடைய தூய இரத்தத்தினாலே நம்மை பாவங்களற சுத்திகரித்தார் என்பதை உணர்வதே பெரும் பேர் அல்லவா. இதை ஒவ்வொருவரும் அறிய வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையுமாகும்.


தேவை மனமாற்றமே :


இது தான் ஊழியத்தின் ரகசியம். இயேசு கிறிஸ்துவை ஊர் முழுக்க சகல சிருஷ்டிக்கும் அறிவிப்பதின் ரகசியமும் இது தான். நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள் என்பதை யாரும் மறுக்கவே முடியாது. ஆகவே இந்த பேருண்மையை அறிவதும் மற்றவர்கள் அறியச்செய்வதும் நம் அனைவரின் மேல் விழுந்த கடமையாகும். அவ்வாறே சுத்திகரிக்கப்பட்டவர்களாகிய நாம் அனைவரும் மீண்டும் பாவத்தில் விழுந்து பாவம் செய்வது எப்படி. ஆகவே தான் ஊழியர்கள் அனைவரும் சத்தியத்தை அறிவிக்க ஆளாய் பறக்கிறார்கள். இங்கே எங்கே வந்தது மதம் ? இயேசு கிறிஸ்து மதத்தை பரப்ப வந்தவரல்லவே. இயேசு கிறிஸ்து சொன்னார், நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் : 14 : 6. எனவே நமது தேவை மனமாற்றமே அன்றி மத மாற்றமில்லை. மதம் என்ற சொல்லாடலுக்கு இங்கே வேலையுமில்லை என்பதே உண்மை. அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்ததின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம் பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரிரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும் சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். எபேசியர் : 2 : 12 - 18. சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்ப்பைப் பிரசித்தப்படுத்தி, உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. ஏசாயா : 52 ; 7 . எனவே இந்த உண்மையை முழுமையாக யாவரும் அறிவது மிக மிக அவசியம். அதே நேரத்தில் கட்டாயமென்று எதுவுமில்லை, அறிவிக்கவேண்டியது மட்டுமே நமக்கு அருளப்பட்ட பொறுப்பு. ஏற்பதும் ஏற்க மறுப்பதும் அவரவர் உரிமை என்பதால் உரிமையில் தலையிட எவராலும் முடியாது. ஆனால் ஆபத்து என்று தெரிந்தும் எச்சரிக்காமலும், தடுக்காமலும், உணர்த்தாமலும் இருப்பது அதித அபத்தமாகும். மதமாற்றம் எனும் புலளிகளுக்கு செவி சாய்த்து வரும் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் ஏன் நழுவ விட வேண்டும். சத்தியத்தையும் அறிவீர்கள், சாத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் : 8 : 32. சத்தியமே விடுதலையை தரும், எனவே மாயைகளையும், புரளிகளையும் நம்பி வரும் நன்மைகளை போக்கடிப்பானேன். பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். யோனா : 2 ; 8. என்றும் சத்திய வேதாகமம் நம்மை எச்சரிப்பதை கவனிப்போம்.


ஊழியர்களும் தங்கள் அணுகுமுறையில் மாற்றங்கள் செய்வது மிகவும் நல்லது, அதி அவசியமும் கூட. அநேக நேரங்களில் ஊழியம் என்கிறப் பெயரில் செய்யப்படும் குளறுபடிகள் பல உபத்திரவங்களையும், சுய நலன்களையுமே வெளிப்படுத்துகிறது என்பதை யாரும் உணருவதேயில்லை. அப்படிப்பட்ட செயல்பாடுகளே மக்கள் ஊழியர்கள் மீதும் அவர்கள் செய்யும் ஊழியங்கள் மீதும் வெறுப்படைவதற்கும், உதாசீனப்படுத்துவதற்கும் காரணிகளாக அமைந்து விடுகின்றன. ஊழியம் என்பது பொது நலன் சார்ந்தது, விருப்பு வெறுப்புக்கு அப்பாற்ப்பட்டது. அது முழுக்க முழுக்க தேவனுக்காகவும், தேவனைச் சார்ந்தும் செய்யப்படவேண்டியது. அதே வேளையில் தேவனுக்கும் மக்களுக்குமான உறவின் பாலமாக விளங்குகிறவர்கள் தான் ஊழியர்கள் என்பவர்கள். அப்படியானால் தேவ சித்தத்தையும், மக்களின் தேவையையும் அறிந்து அதற்கேற்ப்பச் செயல்படுவது தான் ஊழியத்தின் மற்றும் ஊழியரின் அடிப்படைத் தன்மைகளாகும். வேதம் சொல்லுகிறது முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள், மத்தேயு 6 : 33, ஆனால் மிகப் பெரும்பாலான ஊழியங்களும், ஊழியர்களும் தங்கள் சுய ராஜ்யத்தையும், சுய நீதியையும் வளர்ப்பதையே தேவ ஊழியமாக செய்து வருகிறார்கள் என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு. நம் அனைவருக்கும் இருப்பது ஒரு வேதம், ஒரு தேவன் ஆனால் சித்தாந்தங்கள் மட்டும் வேறு வேறு. தேவ நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது ஆனால் சந்தர்ப்பச் சூழ்நிலைகளை சார்ந்த ஊழியங்கள் எப்படி தேவ நீதியை நிலை நாட்டமுடியும். லாபக்கணக்கை மையமாக கொண்ட எதுவும் வியாபாரமாக இருக்க முடியுமே தவிர தேவனுடைய ஊழியமாக இருக்கவே முடியாது. சத்தியத்தையே போதித்து சத்தியத்தில் மக்களை நடத்துவதில் மிகப் பெரிய பின்னடைவை ஊழியர்கள் சந்திக்கிறார்கள். இங்கு ஊழியத்தில் சொல்லுக்கும் செயலுக்குமான வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் போன்றது. அப்படிப்பட்ட ஊழியங்களினால் தேவன் மகிமைப்படுவும், மக்கள் சித்திப் பெறவும் முடியவே முடியாது. அதற்கு இயேசு, கலப்பையின் மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். லூக்கா : 9 : 62. ஆம்,ஆனால் எல்லோருக்கும் பணம் தான் முக்கியம், வயிற்றுக்காகவே ஊழியம். பணம் தான் பிரதானம் என்பவர்களால் தேவனுக்கு ஊழியம் என்பது எப்படி சாத்தியம். இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான் அல்லது ஒருவனைப் பற்றிக் கொண்டு, மற்றவனை அசட்டைப் பண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. மத்தேயு : 6 : 24. என்ற தேவ எச்சரிப்பை யாரும் கண்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. எனவே வேதம் கூறுவது யாதெனில், அப்பொழுது, இயேசு தம்முடைய சிஷர்களை நோக்கி, ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துப்போவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துப்போகிறவன் அதைக் கண்டடைவான். மத்தேயு : 16 : 24 -25. உலக நீரோட்டத்தோடு எல்லோரும் கலந்துவிட்டார்கள். உலக மயக்கத்தில் ஊழியர்கள் சிக்கிக் கிடக்கிறார்கள்.


மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மத்தேயு : 16 : 26. சுவி. பாபு T தாமஸ். Evg. Babu T Thomas, Our Shepherd's V​​​​​​​oice Foundation.

 
 
 
Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square

© 2023 by COMMUNITY CHURCH. Proudly created with Wix.com

  • Twitter Classic
  • c-facebook
bottom of page