Stand at the gap!
திறப்பில் நில்லாமை – சுவி. பாபு T தாமஸ்
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் : 8:32
நல்லக் குடுப்பம் ஒன்று இப்படி வீணாய் போனது அதிர்ச்சியையும், வேதனையையும் மனதிற்கு மிகுந்த வலியையும் தருகிறதாயிருக்கிறது. ஆனால் இதை விதியென்று சொல்லி ஒதுக்கி விட முடியாது. மக்கள் இப்படி தான் தங்கள் வாழ்க்கையை விரையமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற சம்பவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான அசம்பாவிதங்கள் நாட்டில் நடந்த வண்ணம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளுவதில்லை, அது தான் கொடுமையிலும் கொடுமை. இது எதோ எதேர்ச்சையாக நடந்த ஒரு சம்பவமாக நாம் விட்டு விடக் கூடாது. சபைக்கும், ஊழியர்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறது. சமுதாய வீழ்ச்சியில் நமக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதை நாம் முதலாவது உணரவேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடந்து விட கூடாது என்பதில் ஊழியர்கள், திருசபைகள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஆனால் இங்கு சமுதாயம் தடையாக இருக்கிறது என்பதும் அதற்கு சில ஊழியர்களின் செயல் பாடுகளே காரணம் எனபது மறுப்பதற்கில்லை என்பது நிஜமானாலும், இதை சரி செய்ய வேண்டியது நமது பிரதான பொறுப்பு. நாம் இதை எவ்வகையிலும் தட்டி கழிக்க முடியாது. இதை தான் ஆண்டவர் எசேக்கியேல் தீர்க்கதரிசன புஸ்தகத்தில் இப்படியாக கூறுகிறார், நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். எசேக்கியேல் : 22 : 30. அப்படியானால் தேசம் அழிவதற்கு யார் காரணம் என்பதை நாம் உணராமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். இது உண்மையில் ஒவ்வொரு குடும்பத்தின் பொறுப்பு. சத்தியத்தை அறிந்தவர்களே இதன் முக்கியத்துவத்தை உணராமல் இருக்கிறார்கள். எனவே சத்தியத்தை அறியாதவர்களின் நிலை சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதை தெரியச் செய்வது சபையின் கடமை.
இது ஒவ்வொரு குடும்பமும் கவனத்தில் கொண்டு செய்யவேண்டிய ஒரு காரியம். ஆனால் பாபு ரெட்டிக்கு இது தெரியாத காரணத்தினாலே இதன் முக்கியத்துவத்தை தெரியப்படுத்தவும் அல்லது அவருக்கு தெரிய வரும் வரையிலும் ஊழியரும் திருசபையும் அவர்கள் சார்பாக திறப்பிலே நின்று அழிவிலிருந்து காத்திருக்கவேண்டிய பொறுப்பு ஊழியர்களையே சாருகிறது. இது தான் ஊழியம் என்று சபையும் அறியவில்லை, சபையின் பொறுப்பு இது தான் என்றும் அதற்காகத் தான் அவர்கள் மெனகெடுகிறார்கள் என்று சமுதாயமும் உணரவில்லை. இந்த உண்மையான பந்தத்தை சபையும், ஊழியரும், சமுதாயமும் உணரும் பட்சத்தில் இவ்வளவு பெரிய அழிவுகள் தவிர்க்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை ஆகும். இது நாம் சிந்திக்கும் காலம் என்று உணருவோம். ஒரு வேளை இந்த கட்டுரையை வாசிக்கிறவர்கள் ஏளனமாக நகைக்கவும் வாய்ப்பிருக்கிறது. வேதத்தில் ஒரு சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது, ஆண்டவர் யோனாவை நோக்கி, நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி, அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். யோனா : 1 : 2 அப்படியானால் பாவத்திற்கும் அதினால் எழும் தேவ கோபத்திற்கும் அதன் காரணமாக வரும் அழிவிற்கும் சம்பந்தம் இருப்பதை இந்தப்பகுதி நமக்கு உணர்த்துவதற்கு காரணம் இருக்கிறது. பாவத்தினால் வரும் அழிவென்றாலும் அதை தேவன் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யாமல், மக்களை தம்முடைய ஊழியர்கள் மூலமாக எச்சரிக்கை செய்கிறார். மனம் வருந்தி திருந்தினால் தேவன் அந்த அழிவை அனுமதிப்பதில்லை. இப்போது அதே யோனாவின் புஸ்தகம் 4 ஆம் அதிகாரம் 11 ஆம் வசனத்தில், வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருக ஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.
அப்படியானால் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்த பாபு ரெட்டி குடும்பத்தை மட்டும் ஆண்டவர் எப்படி விட்டு விட்டார். பாபு தன் மகள் ஸ்வேதாவின் திருமணம் சாப்ட் வேர் பொறியாளரான சுரேஷ் குமாரோடு இனிதே நடந்தேறியது. ஆனால் புது மண தம்பதியர் இடையே பூசல் ஆரம்பமாகி இறுக்கிறது. இடையே மருமகன் சுரேஷ் குமார் குடி பழக்கத்திற்கு ஆளாகி மனைவியை அடிக்கடி துன்புறுத்தி இருக்கிறார், வரதட்சனை கேட்டு அச்சுறுத்தியுமிருக்கிறார். இத்தனைக்கும் பாபு என்பவர் தன் மகளுக்கு ருபாய் 16 இலட்சம் வரதட்சணையாக செலவு செய்தே திருமணத்தை நடத்தி இருக்கிறார். இத்தனைக்கு பிறகும் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லையே என்று எண்ணி பாபு என்பவர் மனமுடைந்து தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொள்ளவே, தன் தந்தை தற்கொலை செய்து கொண்டதினிமித்தமாக ஸ்வேதாவும்( 26 ) அவர் சகோதரி சாயி (20 ) ஆகிய இருவரும் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ள அவர்கள் தாய் விஜய பாரதி என்பவர் புத்தி பேதளித்தவராய் மாறிவிட்டார். இப்படி அடுத்தடுத்து ஒரே குடும்பத்தில் இத்துணை பெரிய அசம்பாவிதத்திற்க்கும் எதோ ஒரு பெரிய காரணம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை. இந்த உண்மையை ஆய்ந்து தெளிவது மிக அவசியம். தேவனுக்கு பதில் சொல்லும் இடத்தில் தேவனுடைய ஊழியர்களும், திரு சபைகளும் இருக்கிறது குறிப்பாக ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்த ஊழியர்களுக்கு பொறுப்பு அதிகம்.
அதிலும் அதிகப்படியான பொறுப்பு சமுதாயத்திற்கு இருக்கிறது. மத மாற்றம் செய்கிறார்கள் என்று சொல்லி போலியான மாயையில் விழாமல் இனியாவது சமுதாயம் விழித்துக்கொள்ள வேண்டும். ஊழியர் மற்றும் திருசபைகளின் உண்மையான பணி மத மாற்றம் அல்ல, மன மாற்றமே என்பதை சமுதாயம் உணர்வது மிக மிக அவசியம். அதற்கேற்ப்ப ஊழியர்கள் மற்றும் திருசபைகளின் பணி அமைவது அவசியம். ஊழியம் என்பது அழைப்பு என்றும் அந்த ஊழியம் தேவனுடையது என்பதை ஒவ்வொரு ஊழியனும் உணரவேண்டும். அப்படி உணர்ந்த ஊழியர்களால் மட்டுமே தேவனை சார்ந்து வாழமுடியும். அப்படி வாழ நினைப்பவர்கள் பொருளாசை எனும் இச்சையில் விழாமல் தப்பித்து உண்மையாய் தேவ ஊழியத்தை பாரத்தோடு நிறைவேற்ற முடியும். அப்படிப்பட்ட ஊழியர்களை சமுதாயம் நிச்சயம் அங்கிகரிக்கும் ஏற்றுக்கொள்ளும். தேவ ஊழியம் என்பது வியாபாரமல்ல அது சேவை. உண்மையான சேவை என்பது அன்பின் பிரதிபலிப்பாகும். அப்படிப்பட்ட சேவையில் ஆசை இருக்காது, அதிகாரமிருக்காது, பட்ச பாதமிருக்காது, எதிர்பார்ப்பிருக்காது. இப்படிப்பட்ட ஊழியத்தால் மட்டுமே சமுதாய மீட்சி சாத்தியம். ஆகவே இந்த கொடிய சம்பவத்தை மனதில் கொள்ளுவோம், தேவ அன்பை சரியாய் சமுதயத்தில் கொண்டு சேர்ப்போம். இனி இது போன்றதொரு சம்பவம் நாட்டில் நடவாதப்படி பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு என்பதை உணருவோம். உண்மையோடு ஊழியம் செய்வோம், தேவனுக்கு மகிமையாய் வாழுவோம், ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள்.