top of page

Ecuminical !

மத நல்லிணக்கம்!


இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.மத்தேயு : 22 : 37 – 40


எது நல்லிணக்கம்:


அனைவரையும் சகோதரர்களாக பாவிப்பது. அவர்கள் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பது. அவர்கள் இன்ப துன்பங்களில் பங்கு பெறுவது. அவர்கள் உயர்வில் மகிழ்வதும், அவர்கள் தாழ்வில் உதவி செய்வதுமே நல்லிணக்கமாகும். இதில் ஒருவருக்கும் தீங்கோ, குறைவோ காணப்படாதப்படி பார்த்துக்கொள்ளுவது நமது தலையாயக் கடமையாகும். இந்த நல்லிணக்க நடைமுறையில் பங்கம் வாராமல் நமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இதற்கு பெயர் தான் நல்லிணக்கம். இந்த நல்லிணக்கம் தான் சமுதாய மறு மலர்ச்சிக்கு வழி வகுக்கும். இதில் எந்த குறைவும் காணப்படாமல் நம் பின் சந்ததியை வளர்க்க வேண்டும். இது அவசியம் முக்கியம், ஆனால் அதே வேளையில் நம் நம்பிக்கையில் சமரசம் இல்லாமல் கொண்ட நம்பிக்கையில் உறுதியாய் நிலைத்திருப்பது மிகவும் அவசியம். இதை தான் மேற் குறிப்பிட்டிருக்கிற வசனம் நமக்கு உணர்த்துகிறது. இதில் நாம் தெளிவாக இருக்கவேண்டியது முக்கியமாகும். நம் சமூகம் மற்றப் பிற நம்பிக்கைகளை ஒருங்கே கொண்டிருக்கிற பரந்த சமுதாய அடிப்படையை கொண்டதாகும். ஆகவே அனைவரின் சமூக நம்பிக்கை உணர்வுகளுக்கு மதிப்பளித்து வாழ்வது அவசியமும் தேவையும் ஆகும். இதை தான் நல்லிணக்கம் என்கிறோம். இதை வலியுறுத்தியே பல உதாரண புருஷர்கள் பூமியில் தோன்றி மறைந்திருக்கிறார்கள். இதையே சமூகம் நம்மிடத்திலும் எதிர் பார்க்கிறது, அதை ஒரு குறைவும் இல்லாமல் நாம் நம் சமுகத்திற்கு அளிக்கும் பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் உண்டு, இதில் ஒரு சந்தேகமும் நமக்கு வேண்டுவதில்லை.


கொண்ட நம்பிக்கையில் உறுதி:


அதே வேளையில் நாம் கொண்ட நம்பிக்கை என்ன? நம் அழைப்பு என்ன? என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல் படுவது மிக மிக முக்கியம். இயேசு கிறிஸ்து யார்? ஏன் இந்த பூமிக்கு வந்தார்? அவரின் தியாக மரணம் எதை நிறைவேற்றியது என்ற உணர்வு எந்நிலையிலும் சமரசம் கொள்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கர்த்தரின் அன்பை மற்றவருக்கு அறிவிப்பது நம் பொறுப்பு. நம் கரத்தில் இருப்பது சத்தியம், சத்திய ஆவியானவர் நம்மை ஆள்கிறார். ஆகவே இந்த உணர்வில் மாறுபாடு இல்லாமல் நம் நோக்கத்தை நோக்கிய பயணம் தடைபடாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். இயேசு கிறிஸ்துவின் போதனையும், தியாகமும் அனைவருக்குமானது. ஒருவேளை மற்ற நம்பிக்கையுள்ளவர்கள் அதை உணராமல் இருக்கலாம், புறக்கணிக்கலாம். அது அவர்கள் தவறல்ல. சத்தியத்தை அறிந்த நாம் தான் ஜாக்கிரதையாய் இருந்து அறியாத மக்களுக்கு மிகுந்த பொறுமையோடும், பொறுப்போடும் அறிவிக்க கடன் பட்டிருக்கிறோம். அதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் நம் அழைப்பை உதாசீனப்படுத்த முடியாது. எவ்வகையிலும் கிறிஸ்து அறிவிக்கப்படவேண்டும், சுவிசேஷம் பிரஸ்தாபம் பண்ணப்படவேண்டும். இதுவே அனைவருக்கும் ஜீவன் என்பதை உணர்ந்த நாம் சமரசம் கொள்வோமானால் கிறிஸ்துவை எப்படி உலகத்திற்கு அறிவிப்போம்? எச்சரிக்கை கொள்ளுவோம். இதில் பணமோ, பொருளோ, பதிவியோ, அதிகாரமோ எதற்கும் இணங்காமல் நல்மனசாட்சியோடு நம் கடமையை நிறைவேற்ற பாடுபடவேண்டும். இதையே இயேசு கிறிஸ்து நம்மிடத்தில் எதிர்பார்த்து உதவி செய்ய காத்திருக்கிறார்.


நம்மை எதிர் நோக்கியுள்ள ஆபத்து:


அமேரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகள் இந்த வித்தியாசத்தை உணராததினால் பெரும் ஆபத்தில் அந்நாடும் மக்களும் சிக்கி இருக்கிறார்கள் என்பதை நாம் உணராமல் இருக்கலாமா? ஆண்டவருடைய சீஷர்களில் ஒருவரான தோமா அவர்கள் சுவிசேஷத்தை முந்தி நமக்கு அறிவித்திருந்தாலும் ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களுமே சுவிசேஷத்தை உரமிட்டு வளர்த்தார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் அறிவித்த அவர்கள் நிலை இன்று என்ன என்பதும் நமக்கு நன்றாக தெரியும். இதற்கு முழுமுதற் காரணம் சமரச கொள்கையே. இதே தவறை நாமும் செய்து அழிவின் ஆக்கினைக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நம் அனைவரின் கடமை. சமரச கொள்கையில் இரண்டு பெரிய ஆபத்திருக்கிறது 1. நம் பின் சந்ததியினர் விசுவாசத்தில் வலுவிழப்பார்கள் 2. ஆத்துமா அறுவடையில் தொய்வு மித மிஞ்சி இருக்கும். ஆகவே எதிர் வரும் இப்பிரச்சனைகளை கருத்தில் கொண்டு நாம் நம் யுக்திகளை வரையறுப்பது முக்கியம். ஊழியம் என்பது தியாகங்களை உள்ளடக்கியது. உலக ஓட்டத்தையும், கண்களின் இச்சைகளையும், சுக போக வாழ்க்கையையும் முதன்மை படுத்துவோமானால் இது போன்ற இடையூறுகளுக்கு இடம் கொடுக்க வேண்டி இருக்கும். எனவே கிறிஸ்துவின் வழியில் பயணித்து, அவரின் சத்தியத்தில் உறுதியாய் இருந்தால், நித்திய ஜீவனில் பங்கடைவோம் என்று நம்புவோம். கிறிஸ்து அனைவருக்கும் ஜீவன் என்பதை பறைசாற்றுவதே நமது ஆதாயம் என்று பயணிப்போம், தேவன் நம்மை ஆசீர்வதிப்பார், ஆமென்.


சுவி. பாபு T தாமஸ்,

Evg. Babu T Thomas, Our Shepherd’s Voice Foundation, Ranipet – Tamil Nadu

My Voice online Radio link : voice09.caster.fm

evg babu t Thomas Babu T Thomas

Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page