top of page

Everlasting Gospel!

பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான். வெளி : 14 : 6 -7


சுவிசேஷம் என்றால் என்ன?

சுவிசேஷம் என்றால் என்ன? சுவிசேஷம் எத்தனை வகைப்படும்? என்று கேட்டால் நம்முடைய பதில் என்னவாக இருக்கும். பொதுவாக சுவிசேஷம் என்றால் என்ன என்பதற்கு பலர் பலவிதமாக கூறினாலும், சுவிசேஷத்தின் வகையில் மட்டும் அனைவரும் ஒத்தக் கருத்தை தான் வெளிப்படுத்துவர். அது தான் சுவிசேஷம் நான்கு என்பது தான் அந்த பதில். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்களும் இதை தானே சரியான பதில் என்று கூறுவது புரிகிறது. ஆனால் அது தான் இல்லை. சரி விஷயத்திற்கு வருவோம், சுவிசேஷம் என்றால் நற்செய்தி என்று பொருள். இப்பொழுது சொல்லுங்கள் நற்செய்தி என்றால் என்ன? நற்செய்தி என்றால் நல்ல செய்தி என்று பொருள். எது நல்ல செய்தி, இந்த பூமியில் இயேசு கிறிஸ்து பிறந்தது நல்லச் செய்தி. ஏன் இயேசு கிறிஸ்து பிறப்பு நல்லச் செய்தி? இதைத் தான் நாம் இப்போது அறிந்துக் கொள்ளப்போகிறோம். இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வந்து பிறக்கபோகிறார் என்ற செய்தி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டு, எதிர்பார்க்கப்பட்ட ஒரு செய்தியாகும். 1.இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் இயேசு கிறிஸ்து இந்த பூமியில் வந்து பிறக்க வேண்டும் என்கிற திட்டமானது பூமி உருவாகும் போதே உருவான ஒரு உன்னதமான காரியமாகும். மாத்திரமல்ல ஆதாம் கீழ்ப்படியாமையின் பாவத்திற்கு உட்டபட்ட மாத்திரத்தில் வெளிப்படுத்தப் பட்ட பூர்வீக திட்டமானப்படியினால் இத்திட்டம் நற்செய்தி அந்தஸ்து பெறுகிறது. அது மாத்திரமல்ல இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரும் பூமியில் வாழ்வாங்கு வாழ்வதற்காக பிறக்கிறார்கள். அதனாலே தான் நாம் அனைவரும் பிறந்த நாளை விசேஷமான நாளாக கொண்டாடுகிறோம். 2.ஆனால் இயேசு கிறிஸ்து மாத்திரம் தான் இந்த பூமியில் மரிப்பதற்காகவே பிறந்தார் என்பதே நற்ச்செய்திக்கு கூடுதல் விசேஷமாக பார்க்கப்படுகிறது. மத்தேயுவின் சுவிசேஷம் கிறிஸ்துவின் பிறப்பை இப்படி தான் அறிவிக்கிறது, இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு : 1 : 18 - 21. 3.இப்போது நற்செய்தி என்பதற்கு மற்றுமொரு கூடுதல் விசேஷம் இருக்கிறது, அதேனென்றால் ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார் என்கிற கூடுதல், கூடுதல் பலம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் இருப்பதால் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒரு நற்ச்செய்தியாக பார்க்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் இருந்த அந்த நற்செய்திக்கான சிறப்பை இங்கே பார்க்கலாம், அதாவது பாவத்தின் சம்பளம் மரணம் அல்லது அழிவு என்பது பரிசுத்த வேதாகமம் நமக்கு தரும் விளக்கம். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் : 6 : 23. தேவனாகிய கர்த்தர் ஆதாம் - ஏவாள் ஆகிய இருவரிடத்திலும் ஒரு கட்டளையை கொடுத்திருந்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆதியாகமம் : 2 : 16 - 17. தேவனுடைய கட்டளையை நன்கு அறிந்து உணர்ந்திருந்த இருவரும் தவறிழைத்தார்கள், தேவனுடைய கட்டளையை மீறினார்கள். தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமற்ப் போனப்படியினாலே அவர்கள் தங்களுக்காக உருவாக்கப்பட்ட ஏதேன் என்னும் தோட்டத்தை விட்டே துரத்தப்பட்டார்கள். அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார். ஆதியாகமம் : 3 : 24. இது முதல் நிலை தண்டனை என்றாலும் மனிதன் தன் தவறை உணரவில்லை, பாவம் பெருகினது. வசனம் சொல்லுகிறது தேவன் மனுஷனை பூமியில் சிருஷ்டித்ததற்காக மனஸ்தாபப்பட்டார் என்று கூறுகிறது. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். ஆதியாகமம் : 6 : 5 - 7. ஆகவே தேவன் மனுஷனை பூமியோடு அழித்துப்போட தீர்மானித்தார். பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன். ஆதியாகமம் : 6 : 11 - 13. அவர் தீர்மானித்தப்படியே செய்தும் முடித்தார். நோவாவும் அவர் குடும்பம் மற்றும் மிருகஜீவன்கள் மட்டுமே உயிரோடு காக்கப்பட்டது. பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும், ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம்பண்ணுவேன் என்றார். ஆதியாகமம் : 7 : 2 - 4.


சுவிஷேசத்தின் வகைகள் :

பாவம் செய்த ஆத்துமா சாகும் என்ற நிலை நமக்கு இல்லை. பாவியான மனுஷனின் நிமித்தம் தாம் படைத்த பூமியை பெரும் மழையினால் அழித்துப் போட்டார். ஆனால் இந்த நிலை நமக்கு இல்லை, காரணம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு எனும் நற்செய்தி. இத்துணை சிறப்புக் கொண்ட சுவிசேஷமாகிய நற்செய்தி இரண்டு வகைப் படுகிறது என்று வேதம் கூறுகிறது. 1. கிறிஸ்துவின் சுவிசேஷம் என்று பெயர், இதை பரிசுத்த வேதாகமம் மேலும் இரண்டு பெயர்களால் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அழைக்கிறது. (a) கிறிஸ்துவின் சுவிசேஷம் : புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை. இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். ரோமர் : 15 : 18-19. (b) கிருபையின் சுவிசேஷம் : ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். அப்போஸ்தலர் : 20 : 24. (c) இரட்சிப்பின் சுவிசேஷம் : நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். எபேசியர் : 1 : 13. ஆக இந்த கிறிஸ்துவின் சுவிசேஷம், கிருபையின் சுவிசேஷம் மற்றும் இரட்சிப்பின் சுவிசேஷம் ஆகிய மூன்றும் சுவிசேஷங்களும் கிறிஸ்துவின் பிறப்பை அடிப்படையாய் கொண்ட சுவிசேஷங்களாகும். இந்த சுவிசேஷத்தில் அடங்கியுள்ள ஏழு காரியங்களையும் இங்கே பார்க்கலாம். 1. பிறப்பு : தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா : 2 : 10-12. 2. வாழ்வு : நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். அப்போஸ்தலர் : 10 : 38. 3.மரணம் : அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. யோவான் : 19 : 33. 4.உயிர்ப்பு : வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். மாற்கு : 16 : 9. 5. பரமேறுதல் : அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. I பேதுரு : 3 : 22. 6. வருகை : அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். மத்தேயு : 24 : 30. 7. நித்திய ஜீவன் : பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். யோவான் : 17 : 2-3.

இத்துணை விசேஷங்களும் அடங்கியது தான் கிறிஸ்துவின் சுவிசேஷம் எனும் கிருபையின் சுவிசேஷம் மற்றும் இரட்சிப்பின் சுவிசேஷமாகும். இதைதான் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் பிரசங்கித்தார்கள், அப்போஸ்தலனாகிய பவுலும் பிரசங்கித்தார். கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்ததான காரியங்கள் ஏனோக்கின் காலத்திலேயே பிரசித்தம். உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். ஆதியாகமம் : 3 : 15. இப்பொழுது இரண்டாவது சுவிசேஷத்தை குறித்து பார்ப்போம். 2. நித்திய சுவிசேஷம் : பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்களென்று கூறினான். வெளி : 14 : 6-7. இந்த சுவிசேஷத்தின் சிறப்பு என்பதே தேவனுக்கு பயப்படுங்கள் அவரை மகிமைப்படுத்துங்கள் என்பதாகும். ஏன் நாம் தேவனுக்கு பயப்படவேண்டும், ஏன் நாம் தேவனை மகிமைப்படுத்த வேண்டுமானால், அவருடைய நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்த செய்தியை பிரசித்தப்படுத்துவதேயாகும். ஆனால் நாம் எப்படி இருக்கிறோம், வேதாகமமே இதற்கும் சான்று கூறுகிறது, சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். லூக்கா : 18 : 8. நாம் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகின்றோம். நாம் மட்டுமல்ல உலகமே இன்றைக்கு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகிறது, காரணம் வியாபாரம். கிறிஸ்துவின் பிறப்பின் கொண்டாட்டத்தில் வியாபாரம் விளையாடுகிறது. ஆகவே அனைவரும் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுகிறார்கள். கிறிஸ்துவின் பிறப்பு என்பது நடந்து முடிந்த ஒரு விசேஷம். ஆனால் நிகழ இருப்பது இயேசு கிறிஸ்துவின் வருகை. இந்த வருகைக்கான ஆயத்தம் நம்மிடம் உண்டா என்கிற கேள்வியை தான் நமக்கு நித்திய சுவிசேஷம் வினவுகிறது. இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் வருகை முடிந்துவிட்டது என்று ஒரு கூட்டமும், இயேசு கிறிஸ்துவின் வருகை என்பது இல்லவே இல்லை என்று ஒரு கூட்டமும் வெகு வேகமாக கூறி அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உலகம் அழிவின் பாதையை நோக்கி போய்கொண்டிருக்கிறது. பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். மத்தேயு : 24 : 3-8.


அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். மத்தேயு : 24 : 19-25. இதோ இயேசு கிறிஸ்து அனைத்தையும் நமக்கு முன்னறிவித்திருக்கிறார். கொரோனா என்னும் கொள்ளை நோய் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. நமது இந்தியாவில் கொரோனாவின் முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் ஆறிலிருந்து எட்டு மாதங்கள். ஆயினும் ஒரு பயனும் இல்லை, ஒரு பயமும் இல்லை. நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். லூக்கா : 17 : 26-30. இதே நிலை தான் இன்றைக்கும் நடந்துக்கொண்டிருக்கிறது. நம் முன்பாக நடக்கும் துயர சம்பவங்கள் மக்களிடையே எச்சரிப்பை வளர்க்கவில்லை, மாறாக அவர்களை வலிமையுள்ளவர்களாக மாற்றி இருக்கிறது. எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களாக மாற்றி இருக்கிறது. ஆனால் தேவை எச்சரிப்பு, மனமாற்றம், தேவனிடத்தில் திரும்பும் இருதயம். இந்த நிலையை நாம் எந்திரங்களிடம் பயன் படுத்துகிறோம். ஒரு ஏந்திரம் பழுது பட்டாலோ, விபத்திற்குள்ளானாலோ அதிலிருந்து படிப்பினை பெற்று அந்த எந்திரத்திற்கு மறுவடிவம் கொடுத்து மேம்படுத்துகிறோம். ஆனால் மனிதனுக்கு மட்டும் இது பொருந்துவதில்லை ஏனோ? ஆமென்.



சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள்.


Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page