Separation is sin in life!
தனிமை நல்லதல்ல ! சுவி. பாபு T தாமஸ்
பின்பு தேவனாகிய கர்த்தர், மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். ஆதியாகமம் : 2 : 18
தேவனாகிய கர்த்தர் மனுஷனுக்கு குடும்பம் என்ற பந்தத்தை ஆதியிலே உருவாக்கிக் கொடுத்தார். அந்த பந்தத்தின் நோக்கம் மனுஷனுக்கு ஏற்ற துணையை ஏற்படுத்திக் கொடுப்பதும், ஒழுக்கமா இல்வாழ்க்கை மனிதனுக்கு அமைத்துக் கொடுப்பதுமே ஆகும். மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல ஏற்றத் துணையுடன் அவன் வாழவேண்டும் என்ற மேலான நோக்கத்தோடு தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு ஏவாள் என்னும் பெண்ணை அவனுடைய விலா எலும்பிலிருந்து உருவாக்கினார் என்று வேதம் நமக்கு தெளிவாக சொல்லுகிறது. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். ஆதியாகமம் : 1 : 21 - 22. தேவனாகிய கர்த்தர் மனுஷியை உருவாக்கும் போது ஒரு புதிய முறைமையை கையாண்டார் என்று வேதாகமம் நமக்கு சான்று பகருகிறது. இந்த முறைமை ஆதாமை உருவாக்கிய முறைமையில் இருந்து வேறு பட்டது. அப்படியானால் இதில் ஏதோவொரு சூட்சுமம், நோக்கமும் விசேஷமும் இருக்க வேண்டும். மனுஷ விலா எலும்பிகளில் ஒன்றை எடுத்து அதைக்கொண்டு தேவனாகிய கர்த்தர் மனுஷியை உண்டாக்க பெரிய காரணம் நிச்சயமாக உண்டு என்பதை நாம் உணரவேண்டும். முதலில் விலா எலும்பு குறித்த ஒரு சிறு குறிப்பை பார்ப்போம். மனிதர்களில், ஆண், பெண் இருபாலாருக்குமே 24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன. முதல் 7 இணை எலும்புகளும், மார்பு நடு எலும்புடன், அவற்றுக்குரிய தனித்தனியான குருத்தெலும்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய 5 இணை எலும்புகளும், போலி விலா எலும்புகள் எனப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்று இணைகளும், மார்பு நடு எலும்புடன் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை எலும்புகளும் மிதக்கும் விலா எலும்புகள் எனப்படுகின்றன. ஆக இந்த விலா எலும்புகள் நமக்கொரு பேருண்மையை உணர்த்துகின்றன, அதாவது இந்த விலா எலும்புகள் அனைத்தும் இணை எலும்புகள் ஜோடு எலும்புகள் எனப்படுபவையாகும். மாத்திரமல்ல இவைகள் அனைத்தும் மார்பு நடு எலும்போடும் முதுகுத்தண்டு எலும்போடும் இணைந்து நுரையீரல் மற்றும் இருதயம் ஆகிய உள்ளுறுப்புக்களை பாதுகாக்கும் வண்ணம் கூடு அமைப்புக் கொண்டதாகும். இதை உணர்த்தும் வண்ணம் ஆண் விலா எலும்பில் ஒன்றை எடுத்து பெண்ணை உருவாக்கி இந்த பந்தம் இணை பிரியாதது என்பதை நமக்கு குறிப்பால் உணர்த்துவதை கவனிக்க முடியும். ஆனால் இன்றைய நிலையோ நாம் எதிர் மறையான சூழலில் மக்களின் வாழ்வு முறை அமைந்திருக்கிறது வேதனைக்குரிய ஒன்றாகும். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதியாகமம் : 2 : 24. என்கிற தேவ திட்டத்தை மீறிய வாழ்க்கை முறையாக பல குடும்பங்கள் திகழ்கிறது.
சிதைந்த குடும்ப பந்தம் :
சிதைந்துப் போன குடும்ப உறவுகளே இன்று ஏராளம். பல திருமண உறவுகள் திருமண முறிவில் முடிவது இங்கு மிக மிக சாதாரணம் நிகழ்வாகும். அன்று திருமணம் என்பது ஒரு புனிதமான உறவாக போற்றப்பட்ட நிலையிலிருந்து வழுவி இன்று வெறும் சம்பவமாகவும், சடங்காவும் பொலிவிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டு கிடக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் திருமணத்தை குறித்த சரியான புரிதல் இல்லாதிருப்பதே. தேவ நோக்கத்தையும், திட்டத்தையும் நாம் யாரும் உணராமல் தான் தோன்றி தனமாக திருமண உறவுகளை கையாளுவதே குடும்ப சிதைவுகளுக்கு முக்கிய காரணம். வாழ்க்கையை பற்றிய அறிவு என்பது குறைந்து போனதே குழப்பத்திற்கு மூலம். அன்று திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டவைகளாகவும் திருமண பத்திரிகைகள் எனும் அழைப்பிதழ்கள் மட்டுமே இங்கு அச்சடிக்கப்பட்டதாக மக்கள் நம்பினார்கள். ஆனால் இன்றோ திருமணங்கள் இன்டர்நெட்டில் நிச்சயிக்கப்படுகிறது. அந்தஸ்து பார்த்து ஆஸ்தி கணக்கு வைத்து நடப்பவைகளாக திருமண பந்தங்கள் உருமாறிவிட்டது. இன்னும் பெரும்பாலும் பாலான உறவுகள் கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனும் குறுகிய வட்டத்தில் நடத்தப்படும் திருமணங்கள் இன்று ஏராளம். ஆள் பார்த்த உறவுகளுக்கென்ன நாளும் நட்சத்திரமும், எல்லாம் இந்த வேகமான உலகில் மவுசு குறைந்த திருமணங்களின் ஆயுள் வெறும் ஆறு மாதம் சற்றே நீண்டால் ஒரு வருடம் தான். உறவின் புனிதத்தை உணராதவர்கள் அடுத்து தேடுவது ஒரு ராசியான வழக்கறிஞர் தொடர்ந்து நிற்கும் இடமோ நீதிமன்ற வாசல். ஒற்றையர் வாழ்க்கை முறை தான் பெரும்பாலான இளம் தம்பதியர்கள் வாழ்க்கை மற்றும் அவர்கள் குடும்பங்களின் நிலை. பிள்ளைகள் பெரும்பாலும் சிங்கிள் பேரென்ட் சூழல் முறையில் வளருபவர்களாகவே இருக்கிறார்கள். இதுவே இன்றைய ஏராளமான குடும்பங்களின் அவல நிலை. இது அநேகமாக எல்லாக் குடும்ங்களிலும் தவிர்க்க முடியாத சூழலாகவே மாறிவிட்டது. ஆனால் இதன் காரணத்தை கண்டறியவோ அதற்கு தீர்வு காணவோ யாரும் தயாரில்லை. தேவ திட்டத்தின் வழியிலிருந்து விலகி வாழ்கிறோம் எனும் உணர்வு யாருக்கும் தோன்றவுமில்லை. குடும்பம் ஒரு கோயிலாக பாவித்த அனுபவங்கள் மாறி இயந்திர மயமான சுழற்சி முறை வாழ்க்கைக்கு தாவி விட்டது சமூகம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை வழுவி மருவி தனிக் குடித்தனமாச்சு இப்போதோ அந்த தனிக் குடித்தனமே சூம்பியக் கால் போல ஒற்றைக் குடித்தன முறைக்கு சுருங்கி விட்டது. இது வறுமையில் வந்த விதியல்ல அது வீம்பினால் வந்த வினை.
மாறிவரும் வாழ்க்கைமுறை :
தேவனாகிய கர்த்தர் மனுஷனுக்கு குடும்பம் எனும் பந்தத்தை ஏற்படுத்திக்கொடுத்தார், மனுஷனோ தனது தவறான அணுகுமுறையால் குடும்பம் எனும் அஸ்திபாரத்தை தகர்த்து விட்டான். ஆகவே பாதுகாப்பு ஆதாரம் இல்லாத தத்தளிப்பின் பாத்திரங்களாக குடும்பங்கள் மாறிவிட்டது. எப்படி மின்சாரமானது பாசிடிவ், நெகடிவ் (பிளஸ், மைனஸ்) மற்றும் எர்த் முலம் ஒளிருகிறதோ அவ்வாறே ஆண், பெண் மற்றும் தேவன் எனும் ஆதாரமே குடும்பம். ஆனால் இந்த அடிப்படை உறவுமுறை குடும்ப பந்தம் இன்று வேகமாக சிதைந்து வருகிறது. பல நாடுகளில் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மத்தியில் நிகழ்ந்து வருகிறது. வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில் குடும்ப நீதி மன்றங்களில் ஏராளமான விவாகரத்து வழக்குகள் தேங்கிக்கிடக்கிறது. இதன் காரணமாக மக்கள் திருமணம் செய்துக்கொள்ளாமல் இஷ்டம் போல் சேர்ந்து வாழும் வழக்கத்திற்கு தாவிவிட்டார்கள். இதிலும் சிக்கலிருப்பதை உணர்ந்த வளர்ந்த மேலை நாட்டினார் பொம்மைகளோடு தாம்பத்தியம் என்கிற வழக்கத்திற்கு மாறி, அம்முறையே பெருகி வருவதை காணமுடிகிறது. இது மனிதனுக்கும் தேவனுக்குமான இடைவெளியின் தூரத்தை நமக்கு பறைச் சாற்றுகிறது. அப்படியானால் மனிதன் மாயையான, போலியான வாழ்க்கையில் நாட்டம் கொண்டு வேதம் கூறுவது போல காலையில் பூத்து மாலையில் உதிரும் பூவுக்கு ஒத்திருக்கிறான் என்பதற்கேற்ப வேகமான உலகில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறான். தேவனுடைய நோக்கத்தை மறந்து நாம் செயல்படுவது அபத்தம். தேவன் மனிதனை ஒரு நோக்கத்தோடு உருவாக்கினார். அதற்க்கென கட்டளைகளையும், நியமங்களையும், பிரமாணங்களையும் மனிதன் கடைபிடித்து ஒழுக்க நெறியில் வாழ அவனுக்கு சத்தியத்தைக் கொடுத்தார். ஆனால் மனிதனோ அவருடைய வேதத்தை உதாசினப்படுத்தி வாழ்கிறான், விளைவு துன்பம், துக்கம், போராட்டம், தவிப்பு என்று ஏராளமான கொடுமைகளை வாழ்வில் அனுபவித்து வருகிறான். பெருபாலான கொடுமைகள் மனித சக்திக்கு மிஞ்சியே இருக்கிறது மனிதன் மூழ்கும் நிலையிலேயே இருப்பினும். உணர்வடையாத நிலையிலேயே மனிதனானவன் ஓடிக்கொண்டிருக்கிறான்.
வேதம் தரும் விளக்கம் :
தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். மல்கியா : 2 : 16 அப்படியானால் தள்ளிவிடுதல் என்பது தேவன் வெறுக்கும் காரியங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் தேவன் தள்ளிவிடுதலை குறித்து நம்மை எச்சரிக்கிறார், காரணம் அது பாவம். அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்,தள்ளிவிடப்பட்டவளை, விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிற வனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு : 19 : 3 - 5, 9. வேதம் இத்துணை தெளிவாக தள்ளிவிடுதலை குறித்துப் பேசும் போது, இவ்விஷயத்தில் நாம் நிர்விசாரமாக இருப்பது நல்லதல்ல. இதிலிருக்கும் பின் விளைவுகளையும் நாம் மனதில் கொள்ளுவது நல்லது, காரணம் பிள்ளைகள் விவாகரத்தின் காரணமாக அதிக அளவில் பாதிப்படைகிறார்கள். அவர்கள் உளவியல் ரீதியில் தாங்கள் அடைகிறார்கள் என்பதை பெற்றோர் உணராததே இதற்கு காரணம். விவாகரத்து முடிவுகள் பெரும்பாலும் உணர்ச்சிவயப்பட்டு சுயநலமாக எடுக்கப்படுகிறதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே விவாகரத்து எனும் முடிவானது குடும்பத்தை பாதிக்கிறது, வாழ்க்கையை பாதிக்கிறது, பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் காரணமாக சமுதாயம் பாதிப்புக்குள்ளாகிறது. அதோடு நில்லாமல் வேதத்தின் கூற்றுப்படி இச்செயல் விபச்சாரமாக கருதப்படுகிறது.
அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. I கொரிந்தியர் : 6 : 9 - 10. எனவே இந்த விவாகரத்தென்னும் முடிவானது எவ்வளவு பெரிய பாதிப்புக்களை ஏற்ப்படுத்துகிறது என்று உணராமல் வாழ்வதில் பயனில்லை. தனிமனித செயல்பாடுகளால் உருவாகும் தாக்கத்தை உணர்ந்துக்கொள்ளுவோம். வாழ்க்கை அனைவருக்கும் ஒரு முறைதான், அதை சரியாய் வாழ்வதில் தான் வெற்றி இருக்கிறது. எப்படியும் வாழ்வது வாழ்க்கையல்ல மாறாக இப்படித்தான் வாழவேண்டும் என்று வேதம் நமக்கு வழிகாட்டுகிறது. சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான். நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை? நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. I கொரிந்தியர் : 6 : 6 - 8. சமீபத்தில் பத்திரிகையில் வந்த செய்தி ராணுவத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வில் வந்த நடுத்தர வயது தம்பதியர் ஆனால் மறுமணத்தில் இணைந்தவர்கள். கணவர் மேஜராக இருந்தவர், மனைவி மருத்துவர் நல்ல வசதியான வடநாட்டு வாழ்க்கை. முதல் திருமணத்தில் பிறந்த பெண் பிள்ளையுடன் இரண்டாம் திருமணத்தின் மூலம் பிறந்த பிள்ளையோடு வாழ்ந்தாலும் சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாத வாழ்க்கை. இதில் இருவருக்கும் குடிபழக்கம், எனவே சேர்ந்து வீட்டில் குடிப்பதும் சண்டைப்போடுவதும் அவர்களுக்கு வாடிக்கை. அன்றும் அப்படித்தான் குடிக்க அமர்ந்தவர்களிடையே வாய்ப்பேச்சு தகராறாக மாற கைகலப்பு முற்றி டாக்டர் மனைவி கணவனை சமையல் அறையிலிருந்த கத்தியால் குத்த இராணுவ மேஜர் இரத்த வெள்ளத்தில் சரிந்தது மாண்டார். இன்று அந்த தாய் சிறையில், பிள்ளைகள் அனாதைகள். இப்படி ஏராளமானக் காட்சிகள் இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் ஒட்டுறவு இல்லாமல் வாழ்வதும், வாழ்க்கையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களாலும், சரியான வளர்ப்பின்றி வளர்ந்தவர்களாலும் சமுதாயச் சீரழிவுகள் பெருகிவருகிறது. இப்படிப்பட்ட குடும்பச் சூழல்கள் மேல்தட்டுவர்க்கங்களிலும், மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களிடம் அதிகம் காணப்படுகிறது என்றாலும் நடுத்தர குடும்பங்களிடையே வேகமாக பரவி வருகிறது.
தீர்வு ஒன்றே :
இன்னும் சிலக் குடும்பங்களில் தாயின்றி வளரும் பிள்ளைகள் மற்றும் தந்தையின்றி வளரும் பிள்ளைகள் என்ற சூழல்கள் கொடுமையானது. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ஆதியாகமம் : 1 : 27. அப்படியானால் ஒவ்வொரு பிள்ளைக்கும் தேவையான அறிவும், ஆற்றலும், பாசமும் நேசமும் தங்கள் பெற்றோர் மூலமே பிள்ளைகள் பெறுகிறார்கள். அவர்கள் தான் பிள்ளைகளின் முதல் பிரத்தியட்சமான ஆசான்கள். இவைகளை இன்றையக் கலாச்சாரம் தடுத்து அவர்களை வேறு பாதையில் பயணிக்கச் செய்கிறது. இதன் ஆபத்தை சமுதாயம் உணரவேண்டும். அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகளை ஆராய்வது தான் அழகு. பெரும்பாலும் ஆண்களுக்கு இணையாகவும், அதிகமாகவும் கல்வியில், வேலைவாய்ப்பில், தொழிலில், வருவாய் ஈட்டுவதில் கோலோச்சும் நிலை பெண்களிடம் இப்போது காணப்படுகிறது. இதுவே குடும்பம் பிளவு படுவதற்கு முழுமுதற் காரணாமாகவும் விளங்குகிறது. முற்காலத்தில் இந்நிலை அறவே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு அன்று நிலைமை அப்படி. பெண்கள் பெரும்பாலும் கணவனையும் கணவன் குடும்பத்தையும் சார்ந்தே இருந்தார்கள். குடும்ப தருமம் தழைத்தது, கணவன் தவறும் போது பெண் உறுதியாய் இருந்து உறவை பெலப் படுத்த இறுதி வரை நின்று போராடினார். கணவன் பிள்ளைகள் குடும்ப கவுரவம் என்று அனைத்தும் காக்கப்பட்டது. இவ்வகையில் கல்வியறிவு பெண்களுக்கு அசுரபலம் போன்று மேலும் அதே பாதையில் பயணித்து குடும்ப உறவுகள் காக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நிலைமை தலை கீழானது ஆணுக்கு பெண் சமம், சொந்தக்காலில் நிற்கும் தைரியம் சார்ந்து வாழும் போக்கை திசை திருப்பிவிட்டது. விளைவு குடும்பத்தின் ஆரோக்கியச் சூழல் மாறி இன்று திசை தெரியாமல் பயணித்துக்கொண்டிருக்கிறது. இது மேலும் பல பரிணாமங்களை எடுக்கும் முன் தேவனுடைய வார்த்தைகளுக்கு திரும்புவதும், அவர் சொற்படி நடக்க முனைப்புக்காட்டுவதுமே நம் முன் இருக்கும் ஒரே வழி. ஏற்ற துணை எனும் சித்தாந்தம் பிள்ளைப்பருவத்தே போதித்து வளர்ப்பதும், தெய்வ பயத்தை ஊட்டி வளர்ப்பதுமே வாழ்வு தரும் எனும் பேருண்மையை உணரச் செய்வதே இன்றைய அவசரத் தேவை. பெரும்பாலும் தவறுகளுக்கு தவறுகளே காரணமாக அமைந்து விடுகிறது. ஊரில் நடக்காததா நடந்து விட்டது என்கிற மெத்தனப்போக்கு பெரும் தவறுகளுக்கு வழிவிடுகிறது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் போற்றப்பட்ட நிலை மாறி ஒற்றையர் வாழ்க்கை, பலரோடு வாழ்க்கை, தன் பாலின வாழ்க்கை, டிஜிட்டல் வாழ்க்கை, பொம்மைகளோடு வாழ்க்கை என்று மனிதன் அறிவு பெருத்ததினால் சீரழிந்து கொண்டிருக்கிறான். திருந்துவோம், திரும்புவோம் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம், ஆமென்.
சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள்.
Like Comment Share
Comments