top of page

Two ways!

இரு வழிகள்! சுவி. பாபு T தாமஸ்


மனித வாழ்க்கை என்பது விசித்திர வினோதங்கள் ஏராளம் நிறைந்த ஓர் அபூர்வ அனுபவமாகும். இவைகளை கண்டு உணர்ந்து அனுபவித்து வாழ்ந்தவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. மனித வாழ்க்கை என்பது சாதாரணமானதன்று, அது ஒரு பிராப்தம் அல்லது பரிசு என்றும் சொல்லலாம். ஆனால் இந்த அதிசயமான மனித வாழ்க்கையை தொலைத்துவிட்டு நடைப்பிணமாய் வாழ்கிறவர்கள் இங்கு ஏராளம். படைப்பைக் குறித்த ஆச்சரியமும் இல்லாமல் படைத்தவரை குறித்த விவரமும் அறியாமல் காலத்தையும் வாய்ப்பையும் தவறவிட்டு கால ஓட்டத்தில் சிக்கி எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் நாம் ஏன் ஓடுகிறோம் என்றோ? எங்கே ஓடுகிறோம் என்றோ அறியாமலே ஓடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டே இருக்கிறோம். இலக்கு இல்லாமலே ஓடுவது இங்கே பலரது வாடிக்கை. கூட்டம் என்றால் கூடி நின்று வேடிக்கைப் பார்ப்பதும் இங்கு ஒரு வாடிக்கை தான். கூட்டத்தில் சிலர் தாக்கப்படும் போது வேடிக்கைப் பார்ப்பவர்கள் சம்பந்தமே இல்லாமல் நமது பங்கும் இருக்கட்டுமே என்று போகிற போக்கில் பொத்தம் பொதுவாக அடித்துவிட்டு போவதும் ஒரு வாடிக்கை. ஆனால் நமது விலை மதிப்பற்ற வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறது. அது சொல்லில் அடங்காத திட்டங்களும், நோக்கங்களும் தொலை தூர இலக்குகளும் பயணங்களும் என்று ஏராளமான காவியங்களை உள்ளடக்கியது தான் மனித வாழ்க்கை என்பது ஓர் நம்ப முடியாத உண்மையாகும். சாதனைகள் ஒருப்போதும் சாதாரணமாக வாய்ப்பதில்லை, அது போலவே வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள், சவால்கள், கரடு முரடான பாதைகள், இடையூறுகள், தடைகள் போன்றவை தவிர்க்க முடியாதவைகளே. வெற்றிக்கனிகள் எப்போதும் கையெட்டும் தொலைவில் இருப்பதில்லை. வைரங்களும், முத்துக்களும், பவளங்களும் மேல்பரப்பில் கிடைப்பவைகளல்ல. பிரயத்தனங்களும், பிரயாசங்களும், கடும் முயற்சிகளுமே வெற்றிகளைக் கொண்டு வரும். வாழ்வின் சூட்சுமத்தை அறிவதை பொறுத்தே, வெற்றியுள்ள மகிழ்ச்சி நிறைத்த வாழ்க்கையாக சிலருக்கு அமைகிறது.


வாழ்க்கை இருவழிப்பாதை :


வாழ்க்கை என்பது இரு வழி பாதையாகும். எப்படி ஒரு வீட்டிற்கு இரு வாசல் இருப்பது போல 1. முறை வாசல் 2. புற வாசல், நமது வாழ்க்கையிலும் இரு வழிப்பாதை உண்டு. எனவே நாம் தேர்வு செய்யும் பாதை பொறுத்தே நம் வாழ்க்கைப் பயணங்கள் அமைகிறது. இதை தான் நமக்கு பரிசுத்த வேதாகமம் உணர்த்துகிறது. தேவனாகிய கர்த்தர் ஆதாமையும், ஏவாளையும் படைத்து அவர்களை ஏதேன் எனும் தோட்டத்தில் குடி வைத்தார். அவர்கள் அந்த தோட்டத்தின் ஏகபோக உரிமையாளர்களாய் இருந்து சகலத்தையும் ஆண்டு அனுபவித்து வந்தார்கள். இது தேவன் அவர்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தின் வாழ்க்கை. ஆனால் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தையும், அதன் மேன்மையையும் உணராமல் தேர்ந்தெடுத்ததோ சாபத்தின் வாழ்க்கையை என்பதை நாம் அறிவோம். ஆகவே அவர்கள் தேவனால் தங்களுக்கென்று உருவாக்கித்தந்த தோட்டத்தையும் சுகபோகமான வாழ்வை விட்டு துரத்தப்பட்டார்கள். உணர்வில்லாமல் அவர்கள் இருவரும் எடுத்த முடிவுகளே அவர்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றியது. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். ஆதியாகமம் : 3 : 16 – 19. அப்படியானால் மனித வாழ்வில் இருவழிப் பாதை என்பது இன்றியமையாத ஒன்று என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஒருவேளை ஏவாள் சர்பத்தின் வார்த்தைக்கு செவிகொடாமலும், ஆதாம் ஏவாளின் வார்த்தைக்கு செவிகொடாமலும் இருந்திருந்தால் அவர்கள் இருவரும் தேவனுடைய வார்த்தையை மீறியிருக்க மாட்டார்கள். அப்படி ஒருவேளை நடந்திருந்தால் ஆதாமும் ஏவாளும் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டிருக்க மாட்டார்கள். தேவ திட்டத்தை முழுமையாக நீதியோடு நிறைவேற்றி இருப்பார்கள். மனித வாழ்க்கையும் ஆனந்தமாகவே தேவனோடு இணைந்ததாகவே இருந்திருக்கும்.


ஆசீர்வாதம் :


இதை தான் தேவனாகிய கர்த்தர் மோசே மூலமாக இஸ்ரவேலருக்கு சீனாய் மலையில் கட்டளையாகக் கொடுத்தார். நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர். நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால், நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும். திராட்சப்பழம் பறிக்குங்காலம்வரைக்கும் போரடிப்புக்காலம் இருக்கும்; விதைப்புக்காலம் வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங்காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள். தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை. உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன். போனவருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள். உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை. நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.


சாபம் :


நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்: நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள். நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள். இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து, உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன். உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது. நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி, உங்களுக்குள்ளே வெளியின் துஷ்டமிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகளற்றவர்களாக்கி, உங்கள் மிருகஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகப்பண்ணும், உங்கள் வழிகள் பாழாய்க்கிடக்கும். நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து, என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள். இன்னும் இவைகலெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன். உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள். நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும். நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன். நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள். ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும். நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும். உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள். துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது. புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும். உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள். லேவியராகமம் : 26 : 1 – 39.


உணர்வற்ற நாம் சீர்பொருந்தவில்லை :


மேலே சொல்லப்பட்ட பூர்வாங்க முடிவுகளாகிய வார்த்தைகள் நமக்கு உணர்த்துவதை புரிந்துக்கொள்ளமுடியும். அதாவது இருவழிப் பாதைகளாகிய வலது இடது என்பது ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் குறிக்கிறதாயிருக்கிறது. தேவ கட்டளைகளுக்கு கீழ்பட்டு அதன் வழியில் நடக்கிறவர்கள் சுபிட்சத்தையும், தேவ கட்டளைகளை உதாசீனப்படுத்தி வாழும் வாழ்க்கை கண்ணீரும் கவலைகளையுமே தருகிறது என்பதை உணர்ந்து செயல்படும் பொறுப்பு நம்மிடத்திலேயே இருக்கிறது. ஆனால் இந்த சத்தியத்தை இன்னமும் உணரவேயில்லை என்பது வருத்தமான உண்மை. உண்மையில் பரிசுத்த வேதாகமம் இந்த சத்தியத்தை உணர்த்தவே முயல்கிறது. நாம் வேதாகமத்தை கூர்ந்து கவனித்தால் இது நன்கு புரியும். 1. ஆதாம் + ஏவாள் : முதலில் தேவன் இந்த தார்ப்பரியத்தை ஆதாம் ஏவாள் ஆகிய இருவரைக்கொண்டு செயல் படுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் கர்த்தருடைய வார்த்தையில் நிலைத்து நிற்கவில்லை. அவர்கள் விழுந்தார்கள், எனவே அவர்கள் தேவனைவிட்டும் தேவ ராஜ்ஜியமாகிய தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டார்கள். 2. நோவா : இரண்டாவதாக தேவனாகிய கர்த்தர் அதே திட்டத்தை நோவாவைக் கொண்டு செயல்படுத்தினார். அதுவும் பிரளயத்திற்குப் பின்னால் தோல்வியிலேயே முடிந்தது. நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சரசத்தைக் குடித்து, வெறித்து வஸ்திரம் விலகி தன் மகிமையை இழந்தான். அவன் குமாரரும் வழிவிலகிப் போனார்கள். நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து: கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான். ஆதியாகமம் : 9 : 20 – 27.


ஆபிரகாமை தெரிந்துக்கொண்ட கர்த்தர் :


தேவ சித்தத்தை நிறைவேற்றுவதில் தனக்கு ஏற்ற துணையாக கொடுத்த ஏவாளின் காரணமாக ஆதாம் வீழ்ச்சிக்கண்டார். அதைத் தொடர்ந்து ஆதாமுக்கு பின் பத்தாவது தலைமுறையான நோவாவைக்கொண்டு தேவன் தம் திட்டத்தை நிறைவேற்ற விரும்பினார். தேவனோடு சஞ்சரித்த நோவாவும் அவர் பிள்ளைகளும் கடைசிவரை நிலைத்திருக்கவில்லை. எனவே தேவன் நோவாவுக்கு பேரனான சேமுடைய வழி தோன்றலும் ஆதாமுக்கு இருபதாவது தலைமுறையான ஆபிராம் என்னும் ஆபிரகாமை தெரிந்துக்கொண்டு தேவன் தம் திட்டத்தை செயல் படுத்த விரும்பினார். ஆனால் அவர் சந்ததியில் வந்த இஸ்ரவேலர்களோ வணங்கா கழுத்தும் முரட்டாட்டமுள்ள ஜனமானப்படியால் மூன்றாவது முறையாக தேவ திட்டமானது தோல்வியில் முடிந்தது. எனினும் தேவன் தொடர்ந்து கிரியை செய்தப்படியால். தமது ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாக உலகத்தையே எழுப்பிவிட சித்தங்கொண்டு உலங்கமெங்கும் போய் சுவிசேஷம் அறிவிக்கச் செய்தார். அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு : 28 : 18 – 20. அல்லாமலும் தேவன் தமது தீர்க்கதரிசியாகிய யோவேலைக் கொண்டும் தமது வாக்கை உறுதிப்படுத்தினார். அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். யோவேல் : 2 : 28 – 29.


இப்பொழுது நான்காவது முறையாக தமது திட்டத்தை உலகெங்கும் உள்ள ஊழியர்களாகிய நம்மைக் கொண்டு தேவ தமது திட்டத்தை நிறைவேற்ற விரும்பி நம் அனைவரையும் அபிஷேகித்து எழுப்பி இருக்கிறார். நாம் அனைவரும் அவருடைய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஊழியத்தை கொடுத்திருக்கிறார். ஆகவே வசனத்தின் உணர்த்துதலுக்கு செவிகொடுப்போம், தேவ திட்டத்தை நிறைவேற்றுவோம் வாழ்வாங்கு வாழுவோம், ஆமென்.


சுவி. பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள்.

Comments


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page