top of page

ஆபிரகாம் - சுவி.பாபு T தாமஸ்!

ஆபிரகாம் – சுவி.பாபு T தாமஸ்!


இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். ஆதியாகமம் : 17 : 5.


ஆபிரகாம் திரளான தேசங்களுக்கு ( ஜாதிகளுக்கு ) தகப்பன் :


இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார். ஆதியாகமம் : 15 : 1 – 7. ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன். சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள். தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான்தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள். ஆதியாகமம் : 11 : 29 – 31. தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமைக் கொண்டு தனக்கென்று ஒரு பரிசுத்த கூட்டத்தை உருவாக்க விரும்பினார். ஆதியிலே தேவன் ஆதாம் – எவாளைக்கொண்டு ஒரு பரிசுத்த ஜனத்தை உருவாக்க விரும்பினார். ஏன்னென்றால், இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். இது தான் தேவனுடைய நோக்கம், ஆனால் இந்த நோக்கம் தொடர் தோல்வியில் முடிந்தது. ஆதாம் – ஏவாளுக்குப் பின் ஏனோக்கு, நோவாவுக்குப் பின் தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமின் மூலமாக தமக்கென்று ஜனத்தை உருவாக்க விரும்பினார்.


இதற்கு ஏற்றப் பாத்திரமாக ஆபிரகாம் காணப்பட்டபடியினாலே அவனை தெரிந்துக்கொண்டார். ஆபிரகாமினிடத்தில் அடிப்படையில் பல நல்ல குணநலன்கள் இருந்தது. 1. விசுவாசம் 2. விட்டுக்கொடுத்தல் 3. பொருளாசை இல்லாமை 4. தேவனோடு போராடும் குணம் 5. வேண்டுதல் செய்யும் குணம் 6. கீழ்ப்படிதல் 7. கொண்டக் கொள்கையில் உறுதி போன்ற நற்ப் பண்புகள் பல அடிப்படையில் ஆபிரகாமினிடத்தில் காணப்பட்டப்படியினால் தேவன் ஆபிரகாமை ஆசீர்வதிக்க விரும்பினார். ஆகவே தேவன் தன் எண்ணங்களை, சூழ்நிலைகளை ஆபிரகாமுக்கு தெரிவித்தார். என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். யாத்திராகமம் : 20 : 6. இதன் காரணமாக தேவனாகிய கர்த்தர் தனது தொலை நோக்கு பார்வையினால் ஆபிரகாமுக்கும் அவன் தலைமுறை தலைமுறையான பின் சந்ததியில் நடைபெறும் காரியங்கள் அனைத்தையும் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தினார். சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். சூரியன் அஸ்தமித்து காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார். ஆதியாகமம் : 15 : 12 – 21.


விசுவாசம் :


கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான்தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான்தேசத்தில் சேர்ந்தார்கள். ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள். கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆதியாகமம் : 12 : 1 – 7. நம்பிக்கை தான் விசுவாசம் என்பது, ஒருவருக்கு ஒருவர் மீது நம்பிக்கை எப்படி வரும்? அவரைக் குறித்து அனைத்தும் அறிந்தால் வரும். அப்படியாக முழுவதுமாக அறிந்த ஆபிரகாம் தேவனாகிய கர்த்தரின் ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசித்தான். ஆகவே அவரின் வார்த்தையில் பிழறாமல், அவற்றை அப்படியே கைக்கொண்டு நடந்தான் என்று பரிசுத்த வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது.


விட்டுக் கொடுத்தல் :


விட்டுக் கொடுப்பது என்பது சாதாரனமானது அல்ல. இதில் ஆபிரகாமின் தன்மை வேற level என்று சொல்லும் அளவிற்கு இருக்கும் என்பது தான் உண்மை. ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான். அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத்தொழுது கொண்டான். ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக் கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று. ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள். ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான். அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப் போலவும் இருந்தது. ஆதியாகமம் : 13 : 2 – 10. ஆபிரகாமும் லோத்தும் ஒன்றாய் இருக்கையில் அவர்கள் இவருடைய மந்தை மேய்ப்பர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. ஆனால் ஆபிரகாமோ இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள நினையாமல் தனது சகோதரன் மகன் லோத்தின் நலனையே பெரிதாக நினைக்கிறான். அது மாத்திரமல்ல தேவனாகிய கர்த்தர் ஆபிரகாமை தான் அழைத்தார், ஆனால் அவர்களோடு இருந்த லோத்தும் ஆபிராகாமோடு பயணிக்க விரும்பினான், அதற்காக தேவன் லோத்தையும் ஆசீர்வதித்தார். இந்நிலையை உணர்ந்திருந்தால் லோத்து தான் முதலாவது பேசியிருக்கவேண்டும், நீர் சொல்லும் இடத்துக்கு நான் போவேன் என்று ஆபிராகாமை முதன்மைப்படுத்தி பேசியிருக்கவேண்டும். ஆனால் ஆபிரகாமோ தான் தன் தேவனிடத்தில் கொண்டிருந்த நம்பிக்கையின் காரணாமாக முடிவை லோத்தின் பக்கம் விட்டுவிடுகிறான். நலமானது எதுவானாலும் உனது முடிவுக்கே நான் கட்டுபடுகிறேன் என்று ஆபிரகாம் நின்றான். நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான். இது தான் ஆபிரகாம்.


பொருளாசை இன்மை :


சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்; அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள். இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள். இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள். பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும், சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து, திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள். அப்பொழுது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும், செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே, ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள். அந்தச் சித்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள். அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள். தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான். தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து, இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி, சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான். அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான். அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான். அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன். வாலிபர் சாப்பிட்டது போக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான். ஆதியாகமம் : 14 : 1 – 24.


நீதிமானுக்காக தேவனிடத்தில் போராடும் குணம் :


பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம்விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான். ஆதியாகமம் : 18 : 20 – 33.


தேவனிடத்தில் மன்றாடும் குணம் :


ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான். அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான். தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார். அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ? இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான். அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார். அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள். அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான். பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான். அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன். அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள். என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான். அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான். பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு என்று சொன்னான். பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள். ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின்நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால், ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார். ஆதியாகமம் : 20 : 1 – 18.


கீழ்ப்படிதல் :


இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான். ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள். அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக் கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. ஆதியாகமம் : 22 : 1 – 14.


கொண்டக் கொள்கையில் உறுதி / மாதிரியின் ஜீவியம் :


ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார். அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான். அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான். அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார். பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான். அப்பொழுது அந்த ஊழியக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து, ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும். இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான். அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள். அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள். அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான். அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்லி; சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள். அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான். ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து, நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான். அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி, எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு என்றாள்.

அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு, என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார் என்றான். ஆதியாகமம் : 24 : 1 : 27.


தேவன் ஆபிரகாமுக்கு அளித்த ஆசீர்வாதங்கள் :


1.ஆபிராகமுக்குச் சொல்லாமல் எதுவும் செய்யமாட்டார்: அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். ஆதியாகமம் : 18 : 17 – 19.


2.ஆபிரகாமை சிநேகிதனாகப் பாவித்தார் : அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். யாக்கோபு : 2 : 23.


3.ஆபிரகாமை பெருக்கமாய் ஆசீர்வதித்தார் : கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ஆதியாகமம் : 22 : 15 – 18.


சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை. Evg.Babu T Thomas, Our Shepherd’s Voice Foundation, Ranipet – Tamil Nadu, India. https://ourshepherdsvoice.wixsite.com/mysite







Comentários


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page