காணாமல் விசுவாசிக்கிறவர்களே பாக்கியவான்கள் - சுவி.பாபு T தாமஸ்!
காணாமல் விசுவாசிக்கிறவர்களே பாக்கியவான்கள் – சுவி.பாபு T தாமஸ்!
அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். யோவான் : 20 : 29.
விசுவாசம் :
நம்பிக்கையே விசுவாசம், அதே தருணத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கையோடு, எவ்வித சந்தேகமும் இல்லாமல் உறுதியான நம்பிக்கையே விசுவாசமாகும். யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். யோவான் : 3 : 1 – 2. மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான். இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். யோவான் : 2 : 1 – 11. இயேசு கிறிஸ்து தனது தாயாருக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. தனது தாயாரால் அனுப்பப்பட்ட வேலைக்காரகளை அதிகம் அலட்டவில்லை. மிக மிக எளிமையான வகையில் இயேசு கிறிஸ்து தனது முதலாம் அற்புதத்தை நிகழ்த்தினார். கானாவூர் கல்யாணா விருந்தில் திராட்சரசம் குறைவு பட்டபோது தண்ணீரை ருசியுள்ள நல்ல திராட்சரசமாக மாற்றிய அற்புதம் தான் அது. இது எப்படி சாத்தியமாயிற்று என்று சற்றே சிந்திப்போமானால் இந்த அற்புதம் வெளிப்படுவதற்கான காரணத்தை நன்கு உணரலாம்.
வசனத்தை உறுதிப்படுத்தவே அற்புதங்கள் :
முதலாவது இயேசு கிறிஸ்துவின் மீது அவரது தாயாருக்கு இருந்த அசைக்க முடியாத அபார நம்பிக்கை. இரண்டாவது இயேசுவின் தாயார் வேலைக்காரரை அழைத்து, அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதன் படி செய்யுங்கள் என்று பணித்தது. மூன்றாவது அந்த வேலைக்காரர்கள் இயேசு கிறிஸ்து சொன்னதையெல்லாம் எவ்வித முறுமுறுப்பில்லாமல் அவர் சொல் படி செய்து முடித்தது. ஆக மேற்கூரிய அந்த மூன்று காரணிகள் தான் அற்புதத்திற்கான அடிப்படையாகும். ஆண்டவர் சொல்லுகிறார் கண்டு விசுவாசிப்பவர்களை காட்டிலும் காணாமல் விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள் என்கிறார். ஆனால் இன்றைக்கு மக்களின் நிலை என்ன? கண்டு தான் விசுவாசிப்பது என்ற நிலை நிலவுகிறது என்பதே நிதர்சனமான உண்மை. கர்த்தருடைய வசனம் சொல்லுவது என்ன வென்றால் வசனத்தை உறுதிப்படுத்தவே அற்புதங்களும் அடையாளங்களும் என்று பரிசுத்த வேதாகமம் நமக்கு தெளிவு படுத்துகிறது. அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென். மாற்கு : 16 : 20.அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.அப்போஸ்தலர் : 14 : 3. இயேசு கிறிஸ்து நடந்து போகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்ற யோவான் ஸ்நானகனே, அவரிடத்தில் தன்னுடைய சீஷரில் இரண்டு பேரை அனுப்பி வருகிறவர் நீர் தானா? என்று கேட்கும் அளவிற்கு இயேசு கிறிஸ்துவினால் அற்புதங்கள் நடைபெற்றதை பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று. இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து, நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள். அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். லூக்கா : 7 : 11 – 23.
இயேசுவும் அற்புதங்களை வெளியரங்கமாய் செய்யத் தயங்கினார் :
இயேசு கிறிஸ்துவும் தம் மூலமாக அற்புதங்களை செய்யப் படுவதற்கு தயங்கினார் அல்லது தவிர்த்தார் என்று வேத வசனங்கள் வாயிலாக அறிய முடிகிறது. குறிப்பாக அற்புதத்தை பெற்று கொண்டவர்களிடம் இதை ஒருவருக்கும் சொல்லாதப்படி அவர்களை எச்சரித்தார் என்று பெருபாலான வசனங்கள் நமக்கு உணர்த்துகிறது. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். மத்தேயு : 9 : 27 – 30. இது மட்டுமல்லாமல் அற்புதத்தையே பிரதானமாகக் கொண்டு செயல்படுகிறவர்களையும் ஆண்டவர் எச்சரிக்கத் தவறவில்லை. ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். மத்தேயு : 7 : 20 – 24.
தேவனாகிய கர்த்தரின் எதிர்பார்ப்பு :
சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி. தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள். நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள். இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள். மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்? அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும். கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய். என் பரிசுத்த நாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. எசாயா : 58 : 1 – 14.
நாம் செய்வது என்ன?
இன்றைக்கு நமது பக்தி சடங்காகவும் சம்பரதாயமாகவும் மாறிவிட்டது. தேவனுடைய கட்டளைக்கும், நீதி நியமங்களுக்கும் விரோதமாக நமது ஆராதனை முறைகள் மாறிவிட்டது. தேவன் நம்மிடத்தில் எதிர்பாப்பது வேறு நாம் செய்வது வேறு என்றாகிவிட்டது. ஒருசிலர் தேவாலய படிக்கட்டுகளில் முழங்காலிலேயே ஏறிச்சென்று தன் பக்தியை வெளிப்படுத்த விரும்புகிறார், இன்னும் சிலர் தலையை மொட்டையிட விரும்புகிறார். சிலர் ஜெபமாலை போன்ற கருவிக்கொண்டு ஜெபம் செய்ய பழகியிருக்கிறார். இப்படி ஏராளமான யுத்திகளை கையாண்டு தேவனுக்கு தனது பக்தி வைராக்கியத்தை பாரட்டவிரும்புகிறார்கள். பக்தி பாராட்டுவதில் எந்த தவறுமில்லை, குறிப்பாக அவரவர் விருப்பம் போல் தேவனிடத்தில் தனது அன்பின் மிகுதியால் செய்யப்படும் முறைகளில் தலையிட ஒருவருக்கும் உரிமை இல்லை தான். அது அவரவர் விருப்பம் பொறுத்தது. ஆனால் முதலில் நாம் கவனிக்கவேண்டியது வசனம் எனக்கு என்ன போதிக்கிறது, ஆண்டவர் எதை என்னிடத்தில் எதிர்பார்க்கிறார் என்பது தான் முதலும் முக்கியமுமாகும். அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். மத்தேயு : 6 : 5 – 18.
நாம் நமது நடைகளை காத்துக்கொள்ளவேண்டும், ஆண்டவர் வரப்போகிறார். அவர் வருவதற்கு முன்பாக நாம் நம்மை ஆயத்தப்படுத்தவேண்டும். மாத்திரமல்ல நம் சகோதரரை, உறவுகளை, அயலாகத்தாரை என்று ஒரு பெரும் கூட்டத்தை ஆயத்தப்படுத்தவேண்டும். ஆயத்தப்படுத்துவது என்றால் எப்படி? வேத வசனங்கள் நமக்கு இவைகளை போதிக்கிறது. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். ஜீவவிருட்சத்தின் மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.வெளி : 22 : 12 – 14. ஆகவே ஆண்டவருடைய வார்த்தையில் கவனம் வைப்போம், அவரை அவர் சொல்லுகிற வண்ணம் ஆராதிப்போம், விசுவாசத்தை காத்துக்கொள்வோம். ஆமென்.
சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை. Evg.Babu T Thomas, Our Shepherd’s Voice Foundation, Ranipet – Tamil Nadu, India. https://ourshepherdsvoice.wixsite.com/mysite
Comments