கிறிஸ்தவம் மதமல்ல - சுவி.பாபு T தாமஸ் !
அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் : 14 : 6.
கிறிஸ்தவம் ஒரு மதம்:
கிறிஸ்தவம் மதமா? இல்லை கிறிஸ்தவம் என்பது வாழ்வியல். மனிதனுக்கு வாழ்கையை கற்றுத்தர உதித்தது தான் கிறிஸ்தவம். மனித வாழ்க்கைக்கு ஒளி ஊட்டவே, வெளிச்சம் கொடுக்கவே கிறிஸ்தவம் உதயமானது, இது தான் உண்மை. இந்த உண்மையை நிலைநாட்டவும், உறுதிபடுத்தவும் வேளை வந்தது, காரணம் பெரும்பாலனவர்கள் இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் 90% க்கும் அதிகமானவர்கள் கிறிஸ்தவம் ஒரு மதம் என்றே கருதி வழிபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அதை பார்க்கிறவர்களும் அப்படியே கிறிஸ்தவம் ஒரு மதம் என்கிற கோணத்திலே பார்க்கவும் செய்கிறார்கள். இது வழிவழியாக வந்த கோளாறின் வெளிபாடு அல்லாமல் வேறு அல்ல. உண்மையில் கிறிஸ்தவம் மதம் என்கிற ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிற்கக்கூடிய வழிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. இவற்றையெல்லாம் கடந்து மனிதனுக்கு வாழ்க்கையையும் அதின் நோக்கத்தையும் உணர்த்த வந்தது தான் கிறிஸ்தவம். ஒருவன் வாழ்க்கையை ரம்மியமாக வாழவிரும்புவானானால் அவன் தேர்வு செய்யவேண்டிய வழி கிறிஸ்தவம். ஒரு மனிதன் பிறக்கிறான், ஆனால் ஏன் ஒரு மனிதன் பூமியில் பிறந்தான்? பிறந்த அந்த மனிதன் ஒரு நாள் இறக்கிறான், ஏன் இறக்கிறான்? இறந்த மனிதன் எங்கே போகிறான்? எதுவும் தெரியாது அல்லது தீர்க்கமான பதில் இல்லை. ஆனால் இவை அனைத்திற்குமான பதிலை தான் நமக்கு கிறிஸ்தவம் சொல்லிக்கொடுக்கிறது. அதற்காகத்தான் கிறிஸ்தவம் பூமியில் உதயமானது. இந்த சூட்சுமங்கள் அனைத்தையும் பரிசுத்த வேதாகமமாகிய சத்திய வேதாகமம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதை உலகிற்கு சொல்லத்தான் கிறிஸ்துவும் பூமியில் அவதரித்தார், சத்தியமும் இதை வெளிப்படுத்தவே பிரயாசப்படுகிறது. இதை உணராத மனிதன் கிறிஸ்தவத்திற்கு மத சாயம் பூசி கட்டம் கட்டி ஒரு சாராருக்கு உரியது போன்ற மாயையை உருவாக்கிவிட்டான். கிறிஸ்தவமும் கானல் நீர் போன்ற தோற்றத்தோடு மக்கள் கடந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள்.
கிறிஸ்துவின் வழியில் கிறிஸ்தவம்:
இயேசு கிறிஸ்துவை முன்னிட்டே கிறிஸ்தவம் பூமியில் உதயமானது. கிறிஸ்துவை பின் பற்றி நடப்பவர்களை கிறிஸ்தவர்கள் என்றார்கள் என்று வேதாகமம் நமக்கு தெரிவிக்கிறது. அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று. அப்போஸ்தலர்: 11 : 26. இந்த அடிப்படை தான் பின்னாளில் கிறிஸ்தவம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. அப்படியானால் இயேசு கிறிஸ்து ஏன் இந்த பூமியில் பிறந்தார்? கிறிஸ்தவம் ஏன் பூமியில் தோற்றுவிக்கப்பட்டது என்கிற கேள்வி இயல்பாக அனைவருக்கும் எழுவதில் வியப்பு ஏதுமில்லை. இயேசு கிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசு கிறிஸ்து உலகத்தை மீட்டு இரட்சிக்கப் பிறந்தார். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா : 2 : 10 – 12. கிறிஸ்துவின் பிறப்பை குறித்து தேவ தூதர்கள் இராத்திரியில் தங்கள் மந்தையை வயல்வெளியில் காத்துகொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு அறிவித்தார்கள் என்று பரிசுத்த வேதாகமம் சொல்லுகிறது. இங்கே நமக்கு இரண்டு கேள்விகள் எழவேண்டும் ஒன்று ஏன் மேய்ப்பர்களுக்கு அறிவிக்கவேண்டும்? இரண்டாவது இயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தி ஏன் எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கவேண்டும்? அவ்வளவு விசேஷமான பிறப்பா கிறிஸ்து பிறந்த செய்தி? போன்ற கேள்விகள் எழுவது இயல்பு.
கிறிஸ்து பிறப்பின் செய்தி அனைவருக்குமானது :
இயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தி மேய்ப்பர்களுக்கு மட்டுமா அறிவிக்கப்பட்டது என்றால் இல்லை, எல்லாத் தரப்பினருக்கும் கிறிஸ்து பிறப்பின் செய்தி அறிவிக்கப்பட்டதாக பரிசுத்த வேதாகமம் நமக்கு சான்று பகருகிறது. உலகில் மூன்று வகையான மக்கள் வாழ்கிறார்கள் அல்லது பகுத்துக் கொள்ள முடியும், 1. மேல்தட்டு மக்கள் அதாவது ஆளுகிறவர்கள், அதிகாரம் மிக்கவர்கள் 2. நடுத்தட்டு மக்கள் அதாவது ஞானிகள், படித்தவர்கள் 3. கீழ்த்தட்டு மக்கள் அதாவது உழைப்பாளிகள், பாமரர்கள் என்று பொதுவான பிரிவு உலக வழக்கத்தில் உண்டு. இந்த அடிப்படையில் தான் இயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தியும் அக்காலத்திலே அறிவிக்கப்பட்டது. மேய்ப்பர்களுக்கு தேவத் தூதர்கள் தோன்றி நற்செய்தியை அறிவித்தார்கள், ஞானிகளுக்கு வானத்திலே உதித்த நட்சத்திரம் செய்தியை உணர்த்தியது, ஞானிகள் அல்லது சாஸ்திரிகள் ராஜாவுக்கு இதை அறிவித்தார்கள். ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். மத்தேயு : 2 : 1 – 6. இப்போது புரிகிறதா இயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தி அனைவருக்கு சொல்லப்பட்டது தானே. இங்கேயும் ஒரு கேள்வி நமக்கு தோன்றும் அதாவது இயேசு கிறிஸ்து யூதேயாவிலுள்ள பெத்லகேமில் தானே பிறந்தார் பின்னே எப்படி உலகத்துக்கு செய்தியாக முடியும் என்றால், இதற்கும் பரிசுத்த வேதாகமம் பதில் சொல்லுகிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு : 28 : 19 – 20.
கிறிஸ்து பிறப்பு ஏன் நற்செய்தி – மிகுந்த சந்தோஷம்:
உலக மக்கள் அனைவருக்கும் அறிவிக்கப்பட்ட அல்லது அறிவிக்க வேண்டிய ஒரே ஒரு செய்தி என்றால் அது இயேசு கிறிஸ்து பிறப்பின் செய்தி என்பதை பார்த்தோம். இப்போது ஏன் அது நற்செய்தி அல்லது மிகுந்த சந்தோஷத்தை தரும் செய்தி என்று சொல்லப்படுகிறது என்றால் மனிதனின் விடை தெரியாத அல்லது விடை தேடும் கேள்விக்கான பதிலாக அமைத்திருக்கிறது அவருடைய பிறப்பு என்பது தான் இதற்கு பதில். இயேசு கிறிஸ்துவானவரை வேறுஒரு வடிவிலும் நமக்கு பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்துகிறது. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் : 1 : 1 – 4. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் : 1 : 9 – 14.
கிறிஸ்தவம் ஒரு மார்க்கம் :
இப்போது சொல்லுங்கள் கிறிஸ்தவம் என்பது மதமா? அல்லது மார்க்கமா? கிறிஸ்தவத்தை அறிவிக்கையில் அதை புரிந்துக் கொள்வதில் ஏற்பட்ட மாற்றங்களே தடைகளாக மாறியிருக்கிறதே ஒழிய உண்மையில் கிறிஸ்தவம் அனைவருக்குமான ஒரே மார்க்கம் என்பதில் யாருக்கும் ஐயம் வேண்டுவதே இல்லை. இன்று உலகம் ஒரு பேர் அழிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த அழிவிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டுமானால் அல்லது மனிதன் வாழ்வின் பயனை அடைய வேண்டுமானால் கிறிஸ்தவம் மட்டுமே ஒரே வழி. பரிசுத்த வேதாகமமும் கிறிஸ்தவத்தை மார்க்கமேன்றே சொல்லுகிறது. இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: சேனாபதியாகிய லீசியா வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி; பவுலைக் காவல்பண்ணவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு ஊழியஞ்செய்கிறதற்கும் அவனைக் கண்டுகொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனுஷர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூற்றுக்கு அதிபதியானவனுக்குக் கட்டளையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படிசெய்தான். அப்போஸ்தலர் : 24 : 22 - 23. நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. மத்தேயு : 5 : 14 – 16. இதற்காகவே நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம். ஆகவே அழைப்பை உணர்ந்து செயல் படவேண்டிய தருணமிது, ஆமென்.
Comentarios