top of page

சத்தியத்தின் அவசியம் - சுவி.பாபு T தாமஸ்!

சத்தியத்தின் அவசியம் – சுவி.பாபு T தாமஸ்!


அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். யாக்கோபு : 1 : 22.


சத்தியம் என்பது என்ன?


அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். யோவான் : 18 : 37 – 38. இன்றைக்கும் அன்று வாழ்ந்த பிலாத்து போல் சத்தியத்தை அறியாதவர்களாய், சத்தியமாவது என்ன? என்ற கேள்வியோடு வாழ்ந்து வருகிறவர்களாய் அநேகர் இருக்கிறார்கள். அப்படியானால் சத்தியம் என்பது தான் என்ன? இந்த கேள்விக்கு நேரடியான பதில் என்ன வென்றால், உண்மை என்பது தான் அதற்குரிய பதில். சத்தியம் என்றால் உண்மை, அந்த உண்மை என்பது என்னவென்றால் நிஜம், நிஜம் என்றால் இந்த உண்மையை தவிர வேறு இல்லை என்பதே சத்தியம். நான்கு சக்கர வாகன ஓட்டுனர் பயிற்சியின் போது நான்கு சக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று Rear View Mirrors களுக்கு The Golden Triangles of Driving என்று பொருள் படும் படி சொல்லுவார்கள். Two side view mirrors மற்றும் one centre rear view mirror என்பது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் முக்கியமான அத்தியாவசிய உபகரணமாகும். ஆனால் இந்த கண்ணாடிகள் இல்லாமலோ அல்லது அக்கண்ணாடிகளை பயன் படுத்தாமலோ வாகனத்தை இயக்க முடியும். அவ்வாறு இயக்குவதென்பது சிரம்மங்கள் நிறைந்தது, பாதுகாப்பானது அல்ல என்பது தான் உண்மை. இன்னும் சிலர் கண்ணாடிகளை பயன்படுத்துபவர்களாக இருந்தாலும் கழுத்தை வளைத்தோ அல்லது மிகுந்த சிரமத்துடன் கழுத்தை திருப்பியோ பழக்கத்தின் காரணாமாக வாகனத்தை இயக்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். உண்மையில் வாகனத்தில் இந்த மூன்று Mirrors பொருத்துவதே, அந்தந்த வாகனங்களை இயக்குபவர்கள் சிரமமின்றி, பாதுகாப்போடு அவர் தம் வாகனங்களை இயங்கவேண்டும் என்பதற்காக தான், இந்த உபகரணங்களை பாதுகாப்பு விதி முறைகளை முன்னிட்டு வாகனங்களில் பொருத்தப்படுகிறது. அது போலத்தான் சத்தியமும், ஒவ்வொருவரும் எவ்வித சிரமமுமின்றி பாதுகாப்போடு மகிழ்ச்சியாக, நேர்மையாக வாழ்க்கையை நடத்தவேண்டும் என்பதற்காக சத்தியத்தை தேவன் நமக்கு தந்தார். சத்தியம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் மிக அவசியமான ஒன்றாகும்.


இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச் சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. II கொரிந்தியர் : 5 : 17. இங்கே தான் சூட்சுமம் இருக்கிறது, அது தான் சத்தியம். சத்தியம் ஒரு மனிதனை புது சிருஷ்டியாக மாற்ற முடியும். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம். கலாத்தியர் : 5 : 17 – 26. இது தான் மனிதனுக்கு சத்தியம் சொல்லும் சேதி. உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்றப்பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். ஏசாயா : 1 : 16 -17, 19. இதை தான் சத்தியம் என்கிறது பரிசுத்த வேதாகமம், மாத்திரமல்ல இன்னும் பல்வேறு ஒழுக்க முறைகளை நாம் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் எல்லா வசனங்களும் சத்திய வசனங்களாகும். அவை அனைத்தும் மனிதனின் வாழ்க்கைக்கு அவசியமானதாக கருதப்படுவதாகும்.


சத்தியத்தை உணராத யோனா :


கர்த்தர் யோனா என்னும் தீர்கதரிசியை அழைத்து அசீரியர்கள் வாழும் வடகிழக்கு பகுதியான நினிவேவுக்கு போகும்படி, அவர்களிடம் பாவம் பெருகினப்படியால் அவர்களுக்கு எச்சரிப்பின் வார்த்தைகளை கூறும்படி யோனாவிற்கு கட்டளையிட்டார். நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். யோனா : 1 : 2. ஆனால் யோனாவோ கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படியாமல் கர்த்தரையும் அவர் வார்த்தையையும் தவறாக புரிந்துக்கொண்டு மேற்குப் பகுதியான தர்ஷிசுக்கு பயணமானான். அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். யோனா : 1 : 3. கர்த்தர் யோனாவிற்கு அவனின் தவறான புரிதலை உணர்த்த விரும்பினார். கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று. அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிப்போய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான். அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது. அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான். அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள். பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று. அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி, யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது. அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப்பண்ணினார்கள். யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான். யோனா : 1 : 4 – 17.


யோனாவின் மனமாற்றம் :


தேவனாகிய கர்த்தர் அழிவை எப்போதும் மனிதர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவதில்லை, மாறாக அதை அவர் மனிதர்களுக்கு வாய்ப்பாகவே பயன்படுத்த விரும்புகிறார். இந்த உண்மையை யோனா உணராததினால் அவனே ஆபத்தில் சிக்கும் சூழலில் அகப்பட்டுக் கொண்டான். பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் யோனாவின் சரித்திரத்தின் மூலமாக இரண்டு உண்மைகளை நாம் கற்றுக்கொள்ள முடியும், 1. ஒருவர் யாராக இருந்தாலும் முழு மனதோடு தேவனை தேடுனால் அது எவ்வளவு பெரிய ஆபத்திருந்தாலும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கிறார், 2. தேவனாகிய கர்த்தரிடத்தில் உயிர்களுக்கான மதிப்பு அதிகம் என்ற உண்மையே அது என்பதாகும். இதுவும் சத்தியம் நமக்கு உணர்த்தும் மற்றுமொரு உண்மையாகும். பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். யோனா : 2 : 8 ல் குறிப்பிட்டது படி யோனா தனது பொய்யான மாயையில் சிக்குண்டதினால் மீன் வயிற்றிலிருந்து கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். அப்போது கர்த்தர் யோனாவை நினைத்தருளி பின் மீனுக்கு கட்டளையிட்டார், அது அவனை கரைக்கு கொண்டுவந்து கக்கி விட்டது. என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது. நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன். தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான். யோனா : 2 : 2 – 7, 9. மீண்டும் கர்த்தர் யோனாவோடு பேசினார் அப்பொழுது யோனா நினிவேவுக்கு புறப்பட்டுப்போய் நினிவேயில் வாசம் செய்யும் மக்களுக்கு பிரசங்கித்தான்.


கர்த்தருடைய வார்த்தையின் வல்லமையும், மக்கள் மீது கொண்ட அன்பும் :


இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது. யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான். அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான். அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார். யோனா : 3 : 1 – 10. இந்த காரியம் யோனாவின் மனதிற்கு விசனமாயிருந்தது. ஆகவே யோனா கர்த்தரிடத்தில் மனதாங்கலாகி கோபங்கொண்டு தன் பிராணனை விடுவதற்கு தயாரானான். இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான்.யோனா : 4 : 3. யோனாவின் மனதாங்கலுக்கும், கோபத்திற்கும் காரணம் கர்த்தர் இரக்கமுள்ளவராக இருப்பது தான் என்று யோனா நினைத்தான். அது மாத்திரமல்ல, தான் நினிவேவுக்கு போகாமல் தர்ஷிசுக்கு பயணம் மேற்கொண்டதற்கும் காரணம் என்று அவனே சொல்லுவதை நாம் வாசிக்க முடியும். யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன். யோனா : 4 : 1 – 2.


இப்படி தான் நாமும் யோனாவைப் போல பல வேளைகளில் தேவனுடைய சித்தத்தை வேறு வகையில் புரிந்துக்கொண்டு செயல் படுகிறோம். யோனாவின் எண்ணம் என்னவென்றால், கர்த்தர் தன்னை நினிவேவுக்கு எச்சரிப்பின் செய்தியை சொல்ல அனுப்பினார், அது அவ்வாறே நடந்தேற வேண்டும் அவ்வளவு தான். இது தான் அவருடைய உள்ளார்ந்த மனதின் எண்ணத்தை அறியாதவர்கள் செய்யும் செயலாகும். கர்த்தர் இதை யோனாவிற்கு ஒரு உவமானத்தின் மூலம் விளங்கச் செய்தார். அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார். பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்துக்குக் கிழக்கே போய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்துக்குச் சம்பவிக்கப்போகிறதைத் தான் பார்க்குமட்டும் அதின் கீழ் நிழலில் உட்கார்ந்திருந்தான். யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். மறுநாளிலோ கிழக்குவெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோயிற்று. சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான்.

அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார். யோனா : 4 : 4 – 11. ஆம் பிரியமானவர்களே, இது தான் கர்த்தர், கர்த்தருடைய உள்ளம். இதையே வசனமும் நமக்கு போதிக்கிறது. நம்மை உளப்பூர்வமாக நேசிக்கும் கர்த்தரை இறுக பற்றிக்கொளுவோம், அவர் நிழலில் வாழ்வாங்கு வாழ்வோம். சத்தியத்தின் அவசியத்தை உணர்ந்துக் கொள்ளுவோம். சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். யோவான் : 8 : 32. ஆமென்.


சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை. Evg.Babu T Thomas, Our Shepherd’s Voice Foundation, Ranipet – Tamil Nadu, India. https://ourshepherdsvoice.wixsite.com/mysite







Comentários


Featured Posts
Check back soon
Once posts are published, you’ll see them here.
Recent Posts
Archive
Search By Tags
No tags yet.
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page