தேவ சகாயம் என்னும் இயேசு கிறிஸ்துவின் சீடர் – சுவி.பாபு T தாமஸ்!
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு: 28 : 18 – 20.
18 ஆம் நூற்றாண்டில் ஒரு இரத்த சாட்சியின் சரித்திரம்:
இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று சொன்னவர் தமது அன்பினால் இந்திய துணைக்கண்டத்தில் ஒரு அற்புத சாட்சியை எழுப்பி தேவனாகிய கர்த்தரின் நாமம் மகிமைப்படச் செய்திருக்கிறார் என்பது ஒரு மகிழ்ச்சியானச் செய்தி. ஆம், இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள நட்டாலம் என்னும் கிராமத்தில் 1712ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ஆம் நாளன்று "இலாசர்" (Lazarus) என்பதற்கு நிகரான "தேவசகாயம்" பிறந்தார், இவருக்கு பெற்றோர் இட்டப் பெயர் நீலகண்டன் என்பதாகும். இவர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையான பத்மநாபபுரம் கோட்டையில் கருவூல அதிகாரியாக பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இலந்தவிளையை சார்த்த பார்கவி அம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 1741இல் குளச்சல் துறைமுகத்தைப் பிடிக்க வந்த டச்சு படைகள் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. டச்சு படைத்தலைவரான பெனடிக்டுஸ் தே டிலனாய் (Benedictus De Lennoy), ஒரு கிறிஸ்தவ நம்பிக்கையுடையவர். அவரும் அவருடைய படைகளுடன் மார்த்தாண்ட வர்மாவின் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். பின்னர் டிலன்னாய் அவர்களின் பண்பு மற்றும் போக்கு வரத்து போன்ற நடவடிகைகளால் ஈர்க்கப்பட்ட மார்த்தாண்ட வர்மா தமது படையின் ஆலோசகராக பெனடிக்டுஸ் தே டிலனாய்யை நியமித்துக்கொண்டார். மார்த்தாண்ட வர்மாவின் நம்பிக்கைக்கு உரியவராக பெனடிக்டுஸ் தே டிலனாய் மாறியதால் அங்கு அரண்மனை கோட்டையின் கருவுல அதிகாரியாக இருந்த நீலகண்டனும் பெனடிக்டுஸ் தே டிலனாய்யுடன் நட்போடு பழகி வந்தார். இந்த நட்பு இருவருக்குமிடையே நாளடைவில் நெருக்கமான நட்பாக மாறியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
கிறிஸ்தவத்தை தழுவும் ஓர் அரிய வாய்ப்பு :
நீலகண்டன் வேறொரு நம்பிக்கை, பழக்க வழக்கமுடையவராக இருந்தப் போதிலும், ஒருநாள் நீலகண்டன் அவர்கள் மிகுந்த கவலையில் மனவுளைச்சலுக்கு ஆளாகி இருந்ததைக் கண்ட டிலன்னாய், அதற்கான காரணத்தைக் அவரிடம் கேட்டார். அதற்கு நீலகண்டன், தமது குடும்பத்துக்கு சொந்தமான கால் நடைகள் இறந்து போவதும், பயிர்கள் நாசம் அடைவதும் தொடர்கதையாகி பொருளாதார ரீதியாகப் பெரும் இழப்பை சந்தித்து வருவதாகவும் இதற்கான காரணம் தெரியாமல் தவிப்பதாகத் தெரிவித்தார். அப்போது பரிசுத்த வேதாகமத்தில் உள்ள யோபுவின் சரித்திரத்தை நீலகண்டனுக்குத் டிலன்னாய் சொல்லி, அந்த வரலாற்றில் உள்ள உண்மைகளை விளக்கி ஆறுதல் கூறத்தொடங்கினார். இந்த வார்த்தைகள் நீலகண்டனுக்கு ஆறுதலாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் அமையத்தொடங்கியது. இப்படியாக இயேசு கிறிஸ்துவின் அன்பு, அவருடைய போதனைகள், இயேசு கிறிஸ்து பூமியில் பிறந்தது, பாடு மரணம், உயிர்த்தெழுதல் போன்ற அனைத்தையும் நீலகண்டனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இயேசு கிறிஸ்துவின் உண்மைத்தன்மைகளை முழுமையாக அறிந்துக்கொண்ட நீலகண்டன், பெனடிக்டுஸ் தே டிலனாய் அவர்களின் ஒழுக்கமான வாழ்கை முறையால் கவர்திழுக்கப்பட்டார். இவையனைத்தும் நீலகண்டன் அவர்கள் இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது. மாத்திரமல்ல தன் வாழ்க்கையையே இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து அவருக்கு சாட்சியாக வாழவேண்டும் என்று தீர்மானித்தார். இதன் காரணமாக தனது நடவடிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டார். தனது வழக்கமான பாரம்பரிய முறைகளையும் மாற்றிக்கொண்டு தனது நடவடிக்கைகளால் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைபடவேண்டும் என்று விரும்பி, அதேக்கேற்ப செயல் பாடத்துவங்கினார்.
கொண்டக் கொள்கையில் உறுதி:
இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், அதாவது பெனடிக்டுஸ் தே டிலனாய் இயேசு கிறிஸ்துவை அறிமுகப் படுத்தினதினால் நீலகண்டன் ஏற்றுக்கொண்டாரா? என்றால் இல்லை. மாறாக பெனடிக்டுஸ் தே டிலனாய் சொல்வதுப்போல் அவர் வாழ்க்கை இருந்ததினால் நீலகண்டன் அவர் சொல்லும் சத்தியத்தின் படி தன்னுடைய வாழ்க்கையும் இருக்கவேண்டும் என்று விரும்பி ஏற்றுக்கொண்டார் என்பது தான் உண்மை, வசனமும் இதையே தான் நமக்கு உணர்த்துகிறது. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இந்த வாக்கியத்தினுடைய அழ்ந்த அர்த்தம் என்னவெனில் வெறுமனே போய் பிதா, குமாரன், பரிசுத்தாவியின் பேரால் ஒருவனுக்கு ஞானஸ்தானம் கொடுக்க சொல்லவில்லை மாறாக இயேசு கிறிஸ்து நமக்கு எவைகளை போதித்தாரோ அவைகளையே அவர்களுக்கும் போதிக்க வேண்டும். அப்படி போதித்தால் ஒருவர் ஏற்றுக்கொள்வாரா என்றால் இல்லை, அவ்வாறு ஒருவர் போதிக்கிறப்படியே வாழ்கிறார் என்றால் ஏற்றுக்கொள்ளுவார் என்பதே உண்மை. அப்படித்தான் யோவான் ஸ்நானகன் ஞானஸ்தானம் கொடுக்கும் போதும் நடந்தது என்று நமக்கு பரிசுத்த வேதாகமம் கூறுகிறது. மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான். அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான். ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான். லூக்கா : 3 : 8 - 14.
பெனடிக்டுஸ் தே டிலனாய் அவர்கள் தனக்கு போதிக்கப்பட்ட பிரகாரம் அவர் தன் வாழ்கையில் கடைபிடித்து வாழ்ந்தார். அதையே நீலகண்டன் அவர்களுக்கு போதித்தார், சத்தியத்தை கேட்ட நீலகண்டன் அவ்வாறே பெனடிக்டுஸ் தே டிலனாய் வாழ்வதைப் பார்த்து அப்படியே தன் வாழ்க்கையையும் அமைத்துக்கொள்வேன் என்று உறுதியாய் கடைபிடித்தார். இன்று பார்புகழும் புனிதராக தேவ சகாயம் அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சாட்சியாக திகழ்ந்துக்கொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்துவின் சீடராக 18 ஆம் நூற்றாண்டில் ஒருவர் வாழ்ந்து மறைந்திருப்பது எத்தனை ஆச்சரியம். மூதலாம் நூற்றாண்டில் கிறிஸ்துவின் சீஷர்கள் வாழ்ந்தார்கள், மறைந்தார்கள் என்று பரிசுத்த வேதாகமம் சான்று பகருகிறது. அவ்வாறே 18 ஆம் நூற்றாண்டிலும் ஒருவர் தோன்றி மறைந்தார் என்பது நம் எல்லோருக்கும் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் தருகிறதாக அமைந்திருக்கிறதல்லவா? நாமும் நம்முடைய வாழ்வில் இப்படியொரு வாழ்கையை வாழ்ந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையை சேர்ப்போம் என்று உறுதி பூணுவோம். இயேசு கிறிஸ்துவுக்கே எல்லா மகிமையும், கனமும், புகழும் உண்டாவதாக, ஆமென்.
சுவி.பாபு T தாமஸ், நமது மேய்ப்பரின் குரல் ஊழியங்கள், இராணிப்பேட்டை. Evg.Babu T Thomas, Our Shepherd’s Voice Foundation, Ranipet – Tamil Nadu, India https://ourshepherdsvoice.wixsite.com/mysite
Comments